May 16, 2017

பராஅத் இரவு - பொய்யான ஆதாரங்களும் புதிய விளக்கங்களும்

பராஅத் இரவு - பொய்யான ஆதாரங்களும் புதிய விளக்கங்களும்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

முஸ்லிம் சமுதாயம் ஷஃபான் மாதம் 15ம் நாள் இரவில் பராஅத் இரவு என்ற பெயரில் நோன்பிருப்பது, சிறப்புத் தொழுகை தொழுவது என பலவாறான வணக்கங்களைச் செய்து வருவதைப் பார்க்கிறோம்.

பராஅத் இரவு இஸ்லாத்தில் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது எனவும் இந்த நாளில் நோன்பு, இரவுத் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளைச் செய்யுமாறு அல்லாஹ்வும் அவனது தூதரும் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள் எனவும் ஒரு பிரிவினர் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களின் பார்வையில் பராஅத் இரவு அது பாவம் போக்கும் ஓர் மகத்தான இரவு என்பதே. இதற்கென சிறப்பு பயான்கள் ஏற்பாடு செய்து பராஅத் இரவின் புகழைப் பாடிவருகின்றனர்.

அதற்குக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் என்ன? அவற்றின் உண்மை நிலை என்ன? என்பதைப் பல வருடங்களுக்கு முன்னரே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். உண்மையில் பராஅத் இரவு ஓர் தெளிவான வழிகேடு, இஸ்லாத்திற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நபிகள் நாயகம் காட்டித்தராத காரியங்களை அதில் செய்தால் அது நம் பாவத்தைப் போக்காது; நம்மைப் பாவியாக்கி விடும் என்பதை அதில் விரிவாக விளக்கியுள்ளோம். அதை அறிய இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.

ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/க்ஷண்க்ஹற்ட்/க்ஷஹழ்ஹற்ட்ஜண்ழ்ஹஸ்ன்/-.ம6ட்ஃர5நநஷ்ர்ர்

இப்போது மீண்டும் மக்களை ஏமாற்றும் விதமாக பராஅத் இரவு தொடர்பான பொய்யான தகவல்களை பரேலவிகள் மக்களிடம் பரப்புகின்றனர். இந்த ஆண்டு ஷஅபானில் பராஅத் இரவுக்கென வெளியிடப்பட்ட சிறப்பு பிரசுரங்களில் நாம் ஏற்கனவே பதிலளித்துள்ள செய்திகளுடன் புதிய சில பலவீனமான செய்திகளையும் ஆதாரம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். எனவே இவற்றுக்கும் நாம் பதிலளிப்பது கடமை என்ற அடிப்படையில் இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.

பரேலவிகளின் விசேஷ குணம், அவர்களின் வாதத்திற்கு நாம் என்ன மறுப்பளிக்கிறோம் என்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளமாட்டார்கள். தாங்கள் கூறியதையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருப்பார்கள். அது தான் இப்போதும் வெளிப்பட்டிருக்கின்றது.

தாங்கள் சத்தியவாதிகள் என்ற எண்ணம் உண்மையில் இந்த பரேலவிகளுக்கிருந்தால் நாம் எழுதிய மறுப்புகளுக்கும் அவர்கள் உரிய முறையில் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் இது போன்ற ஆக்கப்பூர்வ செயலை கப்ரு வணங்கிகளிடம் நாம் எதிர்பார்க்க முடியாது என்பதை மீண்டும் அவர்கள் நிருபித்திருக்கிறார்கள்.

அவர்கள் குறிப்பிடும் பல செய்திகளின் உண்மை நிலையை முன்னரே நாம் விளக்கியிருந்தாலும் புதிய ஆதாரங்கள் சிலவற்றையும் (உண்மையில் அவை ஆதாரமல்ல) அவர்கள் முன்வைப்பதால் அது தொடர்பான விளக்கத்தை இப்போது அறியத் தருகிறோம்.

ஆதாரம்: 1

ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணைவைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.

இச்செய்தி முஆத் (ரலி) அவர்களின் அறிவிப்பாக இப்னுஹிப்பான் (5665), தப்ரானீ (6776) ஆகிய நூல்களிலும், அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களின் அறிவிப்பாக இப்னுமாஜா (1380) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூமூஸா (ரலி) அறிவிப்பு

அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களின் அறிவிப்பில் இடம் பெறும் ளஹ்ஹாக் பின் அய்மன் என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இவர் யாரென்று அறியப்படாதவர் என இமாம் தஹபீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

யாரென்று அறியப்படாத அறிவிப்பாளரின் அறிவிப்பு ஏற்கப்படாது என்ற அடிப்படையில் இது பலவீனமான அறிவிப்பாகும்.

மேலும் இந்த அறிவிப்பில் இப்னு லஹீஆ என்பாரும் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்

(பார்க்க மீஸானுல் இஃதிதால் பாகம்: 2, பக்கம்: 475)

முஆத் (ரலி) அறிவிப்பு

முஆத் (ரலி) அவர்களின் அறிவிப்பில் மக்ஹூல் என்பார் மாலிக் பின் யுகாமிர் என்பார் வழியாக அறிவிப்பதாக உள்ளது.

ஆனால் மக்ஹூல் என்பவர் மாலிக் அவர்களைச் சந்திக்கவில்லை என இமாம் தஹபீ கூறியதாக இப்னுல் முஹிப்பு எனும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

(ஸிஃபாது ரப்பில் ஆலமீன், பாகம்: 2, பக்கம்: 129)

ஆகவே அவ்விருவருக்கிடையில் விடுபட்டுள்ள அறிவிப்பாளர் யாரென்று அறியப்படாத காரணத்தால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

எனவே ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான் என்பதற்கு ஏற்கத்தக்க எந்தச் செய்தியும் இல்லை.

ஆதாரம்: 2

ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் இறைவன் தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரைத் தவிர மற்ற எல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1. பகைமை பாராட்டுபவன் 2. கொலைசெய்தவன்.

அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலி)

அஹ்மத் 6642

இந்தச் செய்தியில் இப்னு லஹீஆ என்பார் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளோம். மேலும் இச்செய்தியில் இடம் பெறும் ஹூயய் பின் அப்துல்லாஹ் என்பவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள் இவரது செய்திகள் மறுக்கப்படவேண்டியது என்றும் இமாம் புகாரி அவர்கள் (பலவீனமானவரை குறிக்கும் இமாம் புகாரியின் வார்த்தையான) இவர் விஷயத்தில் ஆய்வு உள்ளது என்றும் நஸாயீ அவர்கள், இவர் பலமானவர் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

தஹ்தீபுல் கமால் பாகம் 7 பக்கம் 488

எனவே இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமான செய்தியல்ல.

ஆதாரம்: 3

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதி இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அந்த இரவில் அப்படி என்ன இருக்கின்றது! என்று நான் கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்தவருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்கள் எழுதப்படுகின்றது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: மிஷ்காத் 1305

இந்தச் செய்தியை இவ்வாறு குறிப்பிட்டு அவர்கள் ஆதாரமாக முன்வைத்துள்ளனர். இதில் நாம் கவனிக்க வேண்டியது மிஷ்காத் என்பது ஒரு தொகுப்பு நூலாகும்.

புகாரி, முஸ்லிம், அபூதாவூத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் அந்த இமாம்கள் நேரடியாகப் பெற்று பதிவு செய்த செய்திகளை இவர் தனது நூலில் தொகுத்து பதிவு செய்திருப்பார். மிஷ்காத் நூலில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்கள் அவரே நேரடியாக பெற்ற ஹதீஸ்கள் அல்ல என்பதை கவனித்தல் அவசியம்.

இதன் அடிப்படையில் இச்செய்தி மிஷ்காத் நூலில் உள்ளது என்றால் அவர் எந்த நூலிலிருந்து இந்த ஹதீஸை எடுத்தெழுதியுள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு குறிப்பிடவில்லை.

எனினும் நாம் இந்தச் செய்தியை ஆய்வு செய்ததில் இமாம் பைஹகீ அவர்களின் அத்தஃவாதுல் கபீர் (ஹதீஸ் எண் 530,) மற்றும் ஃபழாயிலுல் அவ்காத் (ஹதீஸ் எண் 26) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளத் தகுதியான செய்தியல்ல.

ஏனெனில் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நள்ர் பின் கஸீர் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.

இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவர் என்றும் எந்நிலையிலும் இவரை ஆதாரமாகக் கொள்வது கூடாது எனவும் இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்.

அல்மஜ்ரூஹீன், பாகம்: 3, பக்கம்: 49

இவரிடம் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என்று இமாம் புகாரி அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 262

இன்னும் அஹ்மத், அபூதாவூத், உகைலீ, தாரகுத்னீ, இப்னுல் ஜூனைத், அத்தூலாபி போன்ற பல அறிஞர்களும் இவரை விமர்சித்துள்ளனர்.

எனவே இந்த செய்தி மிகவும் பலவீனமான செய்தி என்பது உறுதியாகிறது.

ஆதாரம்: 4

நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு வைப்பார்கள். மாதங்களில் ஷஃபானில் மட்டும் நீங்கள் நோன்பு பிடிக்க மிகவும் விரும்புவதேன்? என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதில் தான் அல்லாஹ் அந்த வருடம் மரணிப்பவர்களை தீர்மானிக்கின்றான். என்னைப் பற்றிய தீர்மானம் வரும்போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்னது அபீயஃலா 4911

பராஅத் இரவின் மகிமையை (?) நிலைநாட்ட இந்த ஹதீஸையும் ஆதாரமாக முன்வைத்து எழுதியுள்ளார்கள்.

இந்த ஹதீஸின் தரத்தை பற்றி அறியும் முன் இதில் பராஅத் இரவில் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதா என்பதை தயவு செய்து கூர்ந்து கவனியுங்கள்.

பொதுவாக ஷஃபானுடைய மாதம் என்று தான் வருகிறதே தவிர பராஅத் இரவு என்ற வாசகம் இந்த ஹதீஸில் இல்லை என்பது முதல் விஷயம். இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்தால் கூட பராஅத் இரவின் இல்லாத சிறப்பை (?) நிலைநாட்ட இது ஆதாரமாகாது.

எனினும் இது கூட ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள முஸ்லிம் பின் காலித் என்பவரை இமாம் புகாரி அவர்கள் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

தாரீகுல் கபீர், பாகம்: 7, பக்கம்: 260

இப்னு மயீன் மற்றும் அபூதாவூத் ஆகிய அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்றும் அபூஹாதம் அவர்கள் இவரை ஆதாராமாக கொள்ளக் கூடாது என்றும் விமர்சித்துள்ளனர்.

மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 102

ஆதலால் தான் இமாம் ஹைஸமீ அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்து விட்டு இவரிடம் விமர்சனம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மஜ்மஉஸ் ஜவாயித், பாகம்: 3, பக்கம்: 248

ஆகவே இதுவும் ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

ஆதாரம்: 5

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

அல்குர்ஆன் 44:2-4

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.

(அல்குர்ஆன் 97:1)

அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

(அல்குர்ஆன்2:185)

இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

ஆதாரம்: 6

ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆதாரம்: 7

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: திர்மிதி 670

இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

ஆதாரம்: 8

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான்.

அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,

ஃபலாயிலுர் ரமளான் இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8

இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பாக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பாக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.

ஆதாரம்: 9

ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ

நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129) குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில், இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர், ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)

முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள், “பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.

நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12

பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நூல்: முஸ்லிம் 3243

எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.

அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.

இவர்கள் ஆதாரமாக முன்வைக்கும் செய்திகள் அனைத்தும் தவறான கொள்கையில் இருந்த இவர்களது முன்னோர்கள் முன்வைத்த செய்திகள் தாம்.

இவர்கள் முன்வைத்த ஹதீஸ்கள் எதுவும் ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல என்பதை அல்லாஹ்வின் அருளால் தூய இஸ்லாத்திற்காகப் பாடுபட்ட பல நல்லறிஞர்கள் மக்களுக்கு விளக்கியுள்ளார்கள்.

மனோ இச்சையின் அடிப்படையில் தாங்கள் செய்து வரும் அனாச்சாரத்தை இஸ்லாமிய மார்க்க சாயம் பூசுவதற்காக இவர்கள் எண்ணற்ற ஆதாரங்களைப் பட்டியலிட்டாலும் அது சத்தியமல்ல என்பதை அல்லாஹ் தனது அடியார்கள் மூலம் நிலைநாட்டிடுவான்.


அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தராததை, பொய்யான ஹதீஸ்களின் அடிப்படையில் ஒருவர் செய்து வருவாரேயானால் அது அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரிய செயல் என்பதை விளங்கி பராஅத் இரவு என்ற பெயரில் அனாச்சாரங்கள் செய்வதை விட்டும் விலகி கொள்ள வேண்டும்.

EGATHUVAM JUL 2014