பாஜக ஆட்சியும் படைத்தவனின் சூழ்ச்சியும்
முன்னேற்ற குஜராத்! முன்மாதிரி மோடி!
பொருளாதார வளர்ச்சி! பொன்னான ஆட்சி!
ஊழலற்ற அரசு! உன்னத நாடு!
இதுபோன்ற பொய்யான கோஷங்களைப் போட்டு, போலி வேஷங்கள் போட்டு பாஜக இன்று ஆட்சியைப் பிடித்திருக்கின்றது.
2004, 2009 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக செய்த சூழ்ச்சிகள்
பலிக்காமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதனால் இந்தமுறை அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது
என்று கங்கணம் கட்டி, தனது ஆசான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன்
சேர்ந்து களத்தில் இறங்கியது.
மோடியின் உயிருக்கு ஆபத்து, இந்தியன்
முஜாஹிதீன் சதித் திட்டம் என்று உளவுத்துறை தன் பங்குக்கு மோடிக்கு அனுபதாபத்தை ஏற்படுத்திக்
கொடுத்தது.
மோடி நடத்தும் கூட்டங்களில் மாலேகான், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் பாணியில் சங்பரிவார் குண்டுவெடிப்புகளை
நடத்தி, மக்கள் கவனத்தை மோடியின் பக்கம் திருப்பி விட்டது.
ஊடகத்துறை மோடியின் பிம்பத்தை பலமுனை பரிமாணங்களில் பிரம்மாண்டமாக்கிக்
காட்டியது.
உண்மையில் பல்வேறு துறைகளில் புள்ளி விபரங்களின் அடிப்படையில்
குஜராத், தமிழ்நாட்டை விடவும் கேரளாவை விடவும் மகாராஷ்ட்ராவை விடவும்
பின்தங்கிய நிலையில் 9வது,10வது இடத்தில் தான் உள்ளது. எனவே குஜராத் முன்மாதிரி, முன்னோடி என்பதெல்லாம் பக்கா மோசடியாகும்.
ஊழலை ஒழிப்பதில் உத்தமபுத்திரன் மோடி என்பதும் கடைந்தெடுத்த
பொய்யே! காரணம்,
ஊழல் பெருச்சாளியான எடியூரப்பாவையெல்லாம் மோடி தன் வலையில் இழுத்துப்
போட்டுக் கொண்டதன் மூலம் இந்தப் பொய் அம்பலமானது. ஆனால் இதையெல்லாம் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல்
காசுக்கு விலை போயின. மோடியை எப்படியும் ஆட்சிக் கட்டிலில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்
என்பதில் ஆர்.எஸ்.எஸ். மிகவும் நுட்பமாகச் செயல்பட்டது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்குக்
காரணமாக இருந்த நரேந்திர மோடி, தனது அடியாள் அமீத்ஷாவை உத்தரபிரதேசத்தில்
களமிறக்கி,
கைவரிசையைக் காட்டினார். இந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள்
கற்பழிப்பது போன்ற பொய்யான வீடியோக்களை உ.பி.யில் பரவ விட்டதன் எதிரொலியாக, அதுவரை இணக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மற்றும் ஜாட் இன
மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்பட்டது.
உ.பி. அரசாங்கத்தை மட்டுமல்லாது, மத்தியிலும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்த உ.பி.
முஸ்லிம்கள் மற்றும் ஜாட் இன மக்கள் திட்டமிட்டு வன்முறைக் களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள்.
கலவரம், வன்முறை வெடித்தது. முஸஃப்பர் நகர் முஸ்லிம்கள், ஜாட் இனத்தவரால் துவைத்து எடுக்கப்பட்டனர்; கொன்று குவிக்கப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். முஸ்லிம்களின்
சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சொந்த வீடுகளை விட்டும் விரட்டியடிக்கப்பட்டனர்.
சொந்த நாட்டிலேயே ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் அகதிகளான சோகமும் நிகழ்ந்தது.
மவ்லானா முலாயம் என்று அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ், முஸ்லிம்களின் முதுகில் குத்தினார். கொலைகாரக் கும்பல் மீது
ஒரு கொலை வழக்குக் கூட பதிவு செய்யாமல் ஜாட் இன மக்களை ஜாக்கிரதையாகக் காப்பாற்றி விட்டார்.
இதன் எதிர்விளைவு, நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யிலுள்ள
80 இடங்களில் 73 இடங்களை பாஜக
அறுவடை செய்தது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது.
இப்போது முஸ்லிம்கள் அச்ச உணர்ச்சியிலும், அபயமற்ற மனநிலையிலும் இருக்கின்றனர். இப்படியொரு தேர்தல் முடிவு
வந்துவிடக்கூடாது என முஸ்லிம்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இறைவனை இருகரம் ஏந்தி
இறைஞ்சிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக நரேந்திர மோடி
ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.
இப்போது முஸ்லிம்கள் இந்த இறை விதியை சகித்துக் கொண்டாக வேண்டும்.
இறை நாட்டத்தின் முடிவு என்ன என்பதற்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்; பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.
மோடியின் ஆட்சியில் கீழ்க்கண்ட விஷயங்கள் நடக்கலாம்.
1. எல்லாம் வல்ல அல்லாஹ் உள்ளங்களைப் புரட்டுகின்ற ஆற்றல் உள்ளவன்.
இத்தனை சிரமப்பட்டு ஆட்சியைப் பிடித்து விட்டோம்; அதைத்
தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் முஸ்லிம்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள வேண்டும்
என்று மோடியின் உள்ளத்தில் சிந்தனையை ஏற்டுத்தினால் அதன் மூலம் முஸ்லிம்களிடம் ஓர்
இணக்கமான போக்கைக் கைக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும் என்பதற்காக தங்கள் இந்துத்துவக் கொள்கையில் சமரசம் செய்து அதை நீர்த்துப்
போகச் செய்யலாம்.
2. ஒருவேளை மோடியோ அல்லது அவரது சங்பரிவாரோ முஸ்லிம்களுக்கு எதிராக
அடக்குமுறையை ஏவிவிட்டால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இஸ்லாம் காட்டுத்தீயாகப் பரவுகின்ற
வாய்ப்பு கிடைக்கும்.
3. எல்லாம் வல்ல அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன்.
தரையில் வைத்து ஒருவனின் கதையை முடிக்காமல் உச்சிக்குக் கொண்டு போய் உருட்டி விடுவது
போல், மோடியை ஆட்சிக்குக் கொண்டு வந்து ஒரேயடியாக உருட்டிவிடலாம்.
என்னையும், இச்செய்தியைப் பொய்யெனக் கருதுபவனையும்
விட்டு விடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களை விட்டுப் பிடிப்போம். அவர்களுக்கு
அவகாசம் அளிப்பேன். எனது சூழ்ச்சி உறுதியானது.
அல்குர்ஆன் 68:44, 45
இந்த வசனத்தில் கூறுவது போன்று அல்லாஹ் விட்டுப் பிடிக்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு
விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்'' என்று கூறிவிட்டு, பிறகு, "அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும் போது இவ்வாறே உமது இறைவன்
பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தருவது; கடினமானது'' எனும் (12:102வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
நூல்: புகாரி 4686
ஒரேயடியாக மோடியையும் அவரது பரிவாரத்தையும் ஓய்ப்பதற்கு அல்லாஹ்
அளித்திருக்கும் அவகாசமாக இந்த ஆட்சியதிகாரத்தை வழங்கியிருக்கலாம். இவற்றில் எதை அல்லாஹ்
நிகழ்த்தப் போகின்றான் என்பதை நாம் அறிய மாட்டோம். அவனே அறிவான். அதனால் நாம் இதற்காகக்
கலக்கமோ, கலவரமோ, கவலையோ அடையத் தேவையில்லை. பாஜக
ஆட்சி படைத்தவனின் சூழ்ச்சியே என்று எண்ணி அவனது இறுதி முடிவுக்காகக் காத்திருப்போமாக!
பரேலவிஷ பயங்கரவாதம்
இறைத்தூதர் இறக்கவில்லையாம்
நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்பதற்குக் கூறுகெட்ட குருட்டு
பரேலவிஷ சிந்தனைவாதிகள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரத்தைப் பார்ப்போம்.
உங்களுக்குப் பிடித்தமான பெண்ணை மணந்து கொள்ளுங்கள். இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ, ஆனால் நீங்கள் இவர்களிடையே நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால்
ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)
அல்குர்ஆன் 4:3
நம்மில் ஒருவருக்கு வசதியும் நீதமும் எவ்வளவு தான் அளவு கடந்து
இருந்தாலும் நான்கு பெண்களுக்கு மேல் திருமணம் செய்யக்கூடாது.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே கட்டத்தில் 9 மனைவியருக்குக் கணவராக இருந்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
இவ்வுலகை விட்டும் மறைந்த போது அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இதுதான் பரேலவிகளின் ஆதாரம்.
நாம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்ய
முடியாது. ஆனால் நபி (ஸல்) அவர்களோ இந்த வரம்பைத் தாண்டி திருமணம் முடிக்கலாம். இந்தச்
சிறப்பை, இறை நம்பிக்கை கொண்ட எவரும் மறுக்க முடியாது. அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களுக்குரிய தனிச் சலுகை, தனிச் சிறப்பு!
இதை நாம் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் இதை வைத்து நபி (ஸல்) அவர்களை
மனித நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாற்றம் செய்வதைத் தான் நாம் மறுக்கிறோம். அதாவது
நபி (ஸல்) அவர்களை இதன் மூலம் கடவுள் நிலைக்கு உயர்த்துவதைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இங்கு தான் இவர்கள் புத்தி சுவாதீனத்துடன் பேசுகிறார்களா? அல்லது புத்தி பேதலித்துப் பேசுகிறார்களா? என்று கேட்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் 9 மனைவியரைத்
திருமணம் முடித்தது அவர்களின் மனிதத் தன்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றது. நபி (ஸல்)
அவர்கள் ஒன்பது பேரையல்ல! ஒன்பதாயிரம் பேரை மணம் முடித்தாலும் அது அவர்களுக்குரிய சிறப்பு
என்றாலும்,
சலுகை என்றாலும் அது அவர்களின் மனிதத் தன்மையை பக்காவாகவும்
பலமாகவும் நிரூபிக்கின்றது. இப்படித் தான் கொஞ்ச நஞ்ச புத்தியுள்ளவர் புரிந்து கொள்வார்.
ஆனால் இந்த பரேலவிகளோ அல்லாஹ் சொல்கின்ற கால்நடைகள் என்ற நிலையில் உள்ளவர்கள். இன்னும்
அதைவிடக் கீழானவர்கள்; கேவலமானவர்கள்.
நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை
விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள்.
நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை
அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக்
கருதியதும்,
அவற்றை அலட்சியப்படுத்தியதும் இதற்குக் காரணம்.
(அல்குர்ஆன் 7:146)
ஜின்களிலும், மனிதர்களிலும்
நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம்
அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள்
பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை.
அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம்
செய்தவர்கள்.
(அல்குர்ஆன் 7:179)
எதை மனிதத் தன்மைக்கு இலக்கணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை
இவர்கள் கடவுள் தன்மைக்கு இலக்கணமாக ஆக்கிக் கொண்டு தங்களை அறிவிலிகள் என்பதை நிரூபித்துக்
காட்டியுள்ளார்கள்.
அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு இப்படி
ஒரு சலுகையைக் கொடுத்ததே அந்த மாமனிதரை, மக்கள் கடவுள்
நிலைக்கு உயர்த்திவிடக் கூடாது என்பதற்காகத் தான். இஸ்லாத்தின் எதிரிகளால் கடுமையாக
விமர்சிக்கப்படும் இந்த ஒரு சலுகையை அல்லாஹ் வழங்கியதே நபியவர்களின் மனிதத் தன்மையை
நிரூபிப்பதற்காகத் தான் என்ற அளவுக்குள்ள ஒரு இலக்கணத்தை இவர்கள் தலைகீழாகப் புரிந்து
கொள்கின்றார்கள்.
திருமணத்தில் சாட்சி
நம்மில் திருமண நிகழ்ச்சி நடைபெறுமிடத்தில் இரண்டு சாட்சிகள்
கட்டாயம் இருக்க வேண்டும். அப்போது தான் திருமணம் நிறைவேறும். நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் சொன்னார்கள்: சாட்சிகள் இல்லாத திருமணம் செல்லாது. (நூல்: தாரகுத்னீ) ஆனால்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய திருமணம் சாட்சிகள் இல்லாமலேயே நிறைவேறிவிடும்.
அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, யா ரசூலுல்லாஹ், உங்களை நான்
திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். திருமணத்தின் மூலம் தங்களுக்கு என்னை அர்ப்பணம்
செய்து விட்டேன் என்று சொல்லி, இதற்குச் சம்மதம் தெரிவித்து
விட்டால் திருமணம் நிறைவேறிவிடும். சாட்சிகள் தேவையில்லை.
முஃமினான ஒரு பெண் நபி (ஸல்) அவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக்
கொள்ள விரும்பினால் (திருமணம் நிறைவேறிவிடும். நபியே! இது) உமக்கு மட்டும் (வழங்கப்பட்ட)
உரிமை. மற்ற முஃமின்களுக்கு அல்ல.
(அல்குர்ஆன் 33:50
உங்களுக்கு மட்டும் தான் மற்ற முஃமின்களுக்கல்ல என்று சொன்னதின்
மூலம் அல்லாஹ் ஒரு கருத்தைத் தெளிவாக்கிக் காட்டுகிறான். அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
மற்றவர்களைப் போல் அல்ல.
நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்பதற்கு பரேலவிகள் எடுத்து
வைக்கும் அடுத்த ஆதாரம், "நபி (ஸல்) அவர்கள் திருமணம்
முடிப்பதற்கு சாட்சி தேவையில்லை' என்பதாகும்.
திருமணத்தில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்படுவதால் கீழ்க்கண்ட
வசனங்களின் அடிப்படையில் சாட்சி அவசியம் என்று சொல்கிறோம்.
உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 2:282)
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி அவர்
மரண சாசனம் செய்தால் உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் அதற்குச் சாட்சிகளாக இருக்க
வேண்டும்.
(அல்குர்ஆன் 5:106)
33:50 வசனத்தின்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருமணத்திற்கு
அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். இந்தச் சிறப்பை நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஸைனப்
(ரலி) அவர்களை நபியவர்களுக்கு அல்லாஹ்வே திருமணம் முடித்து வைத்ததாகக் கூறுகின்றான்.
ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச்
செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம்.
(அல்குர்ஆன் 33:37)
இப்படி சாட்சி இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்ததால்
அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்றாகிவிடுமா? ஆதம்
நபிக்கும் ஹவ்வா அவர்களுக்கும் அல்லாஹ் தான் திருமணம் முடித்து வைத்தான்.
அதனால் ஆதம் நபி உயிருடன் இருக்கின்றார்கள் என்று இவர்கள் வாதிடுவார்களா?
நபிமார்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதும் இந்தப்
பரேலவிகளின் நம்பிக்கையாகும். ஆதம் நபியும் உயிருடன் இருக்கிறார்கள் என்று இந்தக் கூட்டம்
வாதிடுமானால் நபி (ஸல்) அவர்களுக்கு உரிய தனிச்சிறப்பு இங்கு அடிபட்டுப் போய்விடுகின்றது
என்பதை இந்த நேரத்தில் பதிய வைத்துக் கொள்கிறோம்.
EGATHUVAM JUN 2014