விபரீதம் நிறைந்த வார்த்தைகள்
முன் பின் விளைவைப் பற்றி துளியளவும் சிந்திக்காமல் ஒரு மனிதன்
பேசும் வார்த்தைகளின் உச்சகட்டம் அவனை நரகப்படுகுழியில் தள்ளிவிடுகின்றது
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய
ஓரு வார்த்தையை சர்வ சாதாரணமாகப் பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை
உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக
(அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய்
விழுகிறார்
நூல் : புகாரி 6478
மிகப்பெரும் அருட்கொடையான நாவின் மூலம் நம்மை அறியாமல் கூட தீமைகளை
செய்து நரகப்படுகுழியில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே “நல்லதைப் பேசு! இல்லையேல் வாய்மூடி இரு” என்று நம் மார்க்கம் நமக்குக்
கட்டளையிடுகின்றது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும்
மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்.
நூல் ; புகாரி 6475
மனிதனின் பார்வையில் மனிதர்கள்
ஒரு மனிதன் சமூகத்தின் பார்வையில் சிறந்தவனாகப் பார்க்கப்படுகின்றான்
ஆனால் அல்லாஹ்விடத்திலோ அந்தஸ்தில் இழிவானவனாக இருக்கின்றான். ஒரு மனிதன் சமூகத்தின்
கண்ணோட்டத்தில் இழிந்தவனாகக் கருதப்படுகின்றான். ஆனால் அல்லாஹ்விடத்தில் அவனது அந்தஸ்தோ
உயர்ந்து நிற்கின்றது.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள்,
"மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின்
செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில்
ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச்
செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில்
ஒருவராக இருப்பார்'' என்று கூறினார்கள்
நூல் : புகாரி 4203
மனிதனுடைய பார்வையோ வெளித்தோற்றத்தை மட்டுமே பார்க்கின்றது.
அவ்வளவு தான் பார்க்க இயலும். ஆனால் வல்ல நாயனோ அவனது உள்ளத்தையும் செயல்பாடுகளையும்
மட்டுமே பார்க்கின்றான். அவன் அனைத்து பொருட்களையும் சூழ்ந்தறிபவன், ஞானமிக்கவன்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
நூல் : முஸ்லிம் 5012
எனவே நம் பார்வைக்கு நல்லவன் அல்லது கெட்டவன் என்று தோன்றுவதையெல்லாம்
நாம் சரி என்று கருதி அவனைப் பற்றி தவறாகப் பேசக் கூடாது என்றே மார்க்கம் நமக்கு கட்டளையிடுகின்றது.
அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப்
பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "உமக்கு நாசம்தான்! உன்
சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே'' என்று பலமுறை கூறினார்கள். பிறகு, "உங்களில் ஒருவர் தம் நண்பரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், "இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்' என்று (மட்டும்) கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை
(செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர்
என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு கருதுகிறேன் என்றுகூட, அவர் அவ்வாறு இருக்கிறார் என அறிந்தால் மட்டுமே கூறட்டும்.
நூல் : முஸ்லிம் 5727
EGATHUVAM AUG 2016