உம்மு ஹராம் சம்பவம் - உண்மை நிலையும் உளறல்களுக்கு விளக்கமும்
எஸ். அப்பாஸ் அலீ
அன்சாரி குலத்தைச் சார்ந்த உம்மு ஹராம் (ரலி) என்ற நபித்தோழியரின்
வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் சென்று வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழியருக்கு
அருகில் உறங்கினார்கள். அந்த நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் தலையில் பேன் பார்ப்பார்கள்; உணவளிப்பார்கள் என்று ஒரு செய்தி புகாரி, முஸ்லிம் இன்னும் பல ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இது புகாரியில்
2789, 2800, 2895,
2924, 6282 7002 ஆகிய எண்களில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கூறப்படும் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அனஸ்
(ரலி) அவர்களின் சின்னம்மா ஆவார். அதாவது அனஸ் (ரலி) அவர்களின் தாயாரான உம்மு சுலைம்
(ரலி) அவர்களின் சகோதரி ஆவார்.
நபி (ஸல்) அவர்கள் குரைஷி குலத்தைச் சார்ந்தவர்கள். இந்த பெண்மணி
அன்சாரி குலத்தைச் சார்ந்தவர்கள். எனவே வம்சாவழி உறவு அடிப்படையில் பார்த்தால் இந்தப்
நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினராக இருக்க முடியாது. இவர் நபி (ஸல்)
அவர்களுக்கு அந்நியப் பெண் ஆவார்.
ஒரு ஆண் மஹ்ரமில்லாத அந்நியப் பெண்ணிருக்கும் இடத்திற்குச் செல்வதும், அவருக்கு அருகில் படுப்பதும், அவருக்குப்
பேன் பார்த்து விடுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்த ஹராமான விஷயங்களாகும்.
அப்படியிருக்க இந்த விதிமுறைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் நடக்கமாட்டார்கள் என்பதை
விளக்க வேண்டிய அவசியமில்லை.
மேற்கண்ட செய்தி நபி (ஸல்) அவர்களின் நற்குணத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும்
ஆண் பெண்ணுக்கு மத்தியில் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும் மாற்றமாக
இருப்பதால் இந்தத் தகவல் புகாரியில் இடம்பெற்றிருந்தாலும் இதை ஏற்க முடியாது என்று
நாம் கூறினோம்.
புகாரியில் இடம்பெற்ற எந்தச் செய்தியும் தவறானது இல்லை. தவறான
கருத்து தரும் செய்திகளைக் கூட எப்படியாவது சரிசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோய்
சிலருக்குப் பிடித்திருக்கின்றது. நீண்ட காலம் நமது ஆதாரங்களுக்கு பதில் சொல்லாத இவர்கள்
தற்போது சில அரைவேக்காடுகளை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகக் களம் இறக்கி விட்டிருக்கின்றார்கள்.
இருப்பதைக் கூறி இந்த அரைவேக்காடுகள் நம்மை விமர்சித்தால் அந்த
விமர்சனம் வரவேற்கப்படும். ஆனால் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி நம்மை மக்களுக்கு
மத்தியில் விகாரமாகச் சித்தரிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
புகாரியின் விரிவுரையான பத்ஹுல்பாரியில், உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால் குடி
உறவின் மூலமாக சின்னம்மா உறவு உள்ளவர். எனவே இவர் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினர்
என்று இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தவ்ஹீத் ஜமாத்தினர்
அநியாயமாக உம்மு ஹராம் (ரலி) அவர்களை அந்நியப் பெண்ணாகக் கூறி இந்தச் செய்தியை மறுக்கின்றனர்
எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்வதில் இவர்களுக்கும் நமக்கும் இடையே
முரண்பாடு இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் அந்நியப் பெண்ணுடன் இது போன்று நடக்க மாட்டார்கள்
என்பதில் உடன்பாடு உள்ளது. எனவே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான
உறவினரா? இல்லையா? என்பதை முடிவு செய்துவிட்டால்
இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளலாமா? கூடாதா? என்பது தெளிவாகிவிடும்.
பிரச்சனைக்குரிய செய்தி
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் தொடர்பாக புகாரியில் இடம்பெற்றுள்ள
இந்தச் செய்தியை இன்றைக்கு நாம் மட்டுமே பிரச்சனையாகக் கருதுவது போன்ற பொய்யான தோற்றத்தை
நம்மை விமர்சிப்பவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.
ஆனால் இந்தச் செய்தி நமக்கு முன்பே காலம் காலமாக பிரச்சனைக்குரியதாகவே
வரலாற்றைக் கடந்து வந்துள்ளது. இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் இந்த விஷயத்தைப் பின்வருமாறு
குறிப்பிடுகிறார்.
இந்த செய்தி பலருக்கு பிரச்சனையாகிவிட்டது.
நூல்: பத்ஹுல் பாரீ, பாகம்: 11, பக்கம்: 78
உம்மு ஹராம் (ரலி) பால்குடி சிற்றன்னையா?
நபி (ஸல்) அவர்கள் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போது அவர்களுக்குப்
பாலூட்டியவர்கள் யார் என்ற விபரம் வரலாற்று நூற்களில் இடம்பெற்றுள்ளது. சுவைபா, ஹலீமதுஸ் சஃதிய்யா ஆகிய இருவரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார்கள்
என்ற தகவல் வரலாற்று நூற்களில் பதிவாகியுள்ளது.
இந்த நூற்களில் எந்த ஒரு இடத்திலும் உம்மு ஹராம் (ரலி) அவர்கள்
நபி (ஸல்) அவர்களுக்குப் பலூட்டிய தாயாகவோ அல்லது அந்த உறவின் மூலம் மஹ்ரமானவர் என்றோ
கூறப்படவில்லை.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடி
மூலம் மஹ்ரமான உறவு உள்ளவர் என்ற விளக்கத்தை யார் சொல்கிறார்கள் என்று பார்த்தால் இப்படி
சொல்பவர்கள் சஹாபியோ அல்லது உம்மு ஹராம் (ரலி) அவர்களை நேரில் கண்ட தாபியோ கிடையாது.
மாறாக, குறித்த ஹதீஸில் உள்ள பிரச்சனையை
நீக்குவதற்காக சில அறிஞர்கள் தன் புறத்திலிருந்து சுய விளக்கமாகவே இந்தத் தகவலைக் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு பிரச்சனையிலும் அறிஞர்கள் பலவாறு கருத்து கூறுவார்கள். அவர்கள் கூறுவதில் எது
சரி? எது தவறு? என்பதைப் பார்த்துத் தான் ஏற்க
வேண்டும்.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடி
உறவு மூலம் சின்னம்மா என்ற கருத்தை இப்னு அப்தில் பர் என்ற அறிஞர் தான் முன்வைக்கின்றார்.
அவர் கூறிய வாசகத்தைக் கவனித்தாலே இது வெறும் யூகம் தான் என்பதைத் தெளிவாக அறியலாம்.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப்
பால்புகட்டியிருப்பார்கள். அல்லது அவருடைய சகோதரி உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பால்
புகட்டியிருப்பார்கள் என்றே நான் யூகிக்கின்றேன். எனவே இவ்விருவரில் ஒருவர் நபி (ஸல்)
அவர்களுக்குப் பால்குடித் தாயாகவோ அல்லது சின்னம்மாவாகவோ இருப்பார்கள். எனவே தான் நபி
(ஸல்) அவர்கள் இவர்களிடத்தில் சென்று உறங்கக்கூடியவராக இருந்தார்கள்.
நூல்: பத்ஹுல் பாரீ (பாகம் 11, பக்கம் 78)
நான் யூகிக்கின்றேன் என இப்னு அப்தில் பர் கூறுவது கவனிக்கத்தக்கது.
மேலும் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்புகட்டியிருப்பார்கள்.
அல்லது சின்னம்மாவாக இருப்பார்கள் என்று இப்னு அப்தில் பர் சந்தேகத்துடன் கூறுவதும்
கவனிக்கத்தக்கது.
இந்தச் செய்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவே
இப்னு அப்தில் பர் தன்னுடைய யூகத்தைக் கூறியுள்ளார். இதற்கு எந்தச் சான்றும் இல்லை
என்பதை இதிலிருந்து அறியலாம்.
இப்னு அப்தில் பர் கூறியதைப் போன்று அவருக்கு முன்னால் யஹ்யா
பின் இப்ராஹீம் என்பவரும் இப்னு வஹபும் இதே விளக்கத்தைக் கூறியுள்ளனர். இவர்களும் இந்தக்
கருத்தை தங்களுடைய சுய விளக்கமாகவே கூறுகின்றனர். இவர்கள் நபித்தோழர்களோ நபித்தோழர்களைக்
கண்ட தாபியீன்களோ கிடையாது.
இந்தச் செய்தியில் உள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தன் புறத்திலிருந்து
இவர்கள் கூறிய விளக்கமே இவை. எனவே தான் இந்த விளக்கத்தைக் கூறிய இப்னு வஹப் இந்த நிகழ்வு
ஹிஜாபுடைய சட்டம் வருவதற்கு முன்னால் நடந்திருக்கலாம் என்ற கருத்தையும் கூறியுள்ளார்.
ஆனால் இப்னு ஹஜர் (ரலி) அவர்கள் இந்தக் கருத்து தவறானது. இந்த நிகழ்வு ஹிஜாபிற்குப்
பிறகு தான் நடந்தது என்பதை உறுதிசெய்கிறார்கள்.
இந்த சம்பவம் ஹிஜாபுக்கு முன்னால் நடந்திருக்க வாய்ப்புள்ளது
என்று இப்னு வஹப் கூறியுள்ளார். ஆனால் இது ஹிஜாபுக்குப் பிறகு தான் நடந்தது என்பது
உறுதியான தகவல் என்பதால் இந்தக் கூற்று மறுக்கப்படுகின்றது.
நூல்: பத்ஹுல் பாரீ (பாகம் 11, பக்கம் 78)
உண்மையை உடைத்துச் சொன்ன அறிஞர் திம்யாதீ
உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையே
மஹ்ரமான (திருமணம் செய்யத் தடை என்ற அளவுக்குள்ள) உறவு இருந்தது என்று கருத்தை திம்யாதீ
என்ற அறிஞர் ஆணித்தரமாக மறுக்கின்றார்.
மஹ்ரமான உறவு உள்ளது என்று கூறுபவர்களுக்கு எதிராக திம்யாதீ
கடுமையாக மறுப்புத் தெரிவித்துள்ளார். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு
வம்சாவழியின் மூலமாகவோ, அல்லது பால்குடி உறவின் மூலமாகவோ
சின்னம்மா ஆவார் என்று யார் கூறுகிறாரோ அவர் தவறிழைத்துவிட்டார். மேலும் மஹ்ரமான உறவு
உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் தவறிழைக்கின்றனர். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின்
வம்சாவழித் தாய்மார்களும் பாலூட்டிய தாய்மார்கள் யார் யார் என்பது அறியப்பட்டிருக்கின்றது.
இவர்களில் உம்மு அப்தில் முத்தலிப் என்பவரைத் தவிர அன்சாரிகளில் ஒருவர் கூட கிடையாது.
நூல்: பத்ஹுல் பாரீ (பாகம் 11, பக்கம் 78)
இப்னு ஹஜர் அஸ்கலானீயின் கருத்து
மேலே நாம் சொன்ன விபரங்களையும் இன்னும் பல தகவல்களையும் ஒன்றுதிரட்டிய
இப்னு ஹஜர் அஸ்கலானீ அவர்கள் கூட இவர்கள் கூறுகின்ற இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சின்னம்மா
ஆவார் என்ற கருத்து சரியானதாக ஆதாரப்பூர்வமானதாக இருந்தால் இதை இப்னு ஹஜர் ஏற்றிருப்பார்.
இது வெறும் சிலர்களின் யூகம் என்பதால் இதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் இந்தச் செய்திக்கு
வேறொரு விளக்கத்தைக் கூறுகிறார்.
இப்னு ஹஜர் அஸ்கலானீ கூறுகிறார்:
அந்நியப் பெண்ணாக இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டது
அவர்களுக்கு மாத்திரம் பிரத்யேகமானது என்ற வாதம் தான் இந்தச் செய்திக்குரிய சிறந்த
பதிலாகும்.
நூல்: பத்ஹுல் பாரீ (பாகம் 11, பக்கம் 78)
இப்னு ஹஜர் அஸ்கலானீ கூறுகிறார்:
அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பதும், பார்ப்பதும் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அனுமதிக்கப்பட்ட
விஷயம் என்பது வலுவான ஆதாரங்கள் மூலம் நமக்குத் தெளிவாகியுள்ளது.
நபி (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் இடையே
மஹ்ரமான உறவோ மனைவி என்ற உறவோ இல்லாத நிலையில் அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம்
சென்றது அவர்களுக்கு அருகில் உறங்கியது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின்
தலையில் பேன் பார்த்து விட்டது தொடர்பாக வரும் சம்பவத்திற்கு இது நபிக்கு மட்டும் உரிய
பிரத்யேகமான விஷயம் என்பதே சரியான பதிலாகும்.
நூல் : பத்குல் பாரீ (பாகம் 9 பக்கம்
203)
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மனைவியோ மஹ்ரமான
உறவோ இல்லை என தெள்ளத் தெளிவாக இப்னு ஹஜர் தெளிவுபடுத்தியுள்ளார். இதைச் சரியாக படிக்காத
சில அரைவேக்காடுகள் உம்மு ஹராம், நபியின் சின்னம்மா என்று இப்னு
ஹஜர் கூறியதாகப் பொய்யான தகவலைக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இப்னு ஹஜர் இவர்களுக்கு
எதிரான கருத்தையே கூறியுள்ளார்.
இங்கே ஒரு விஷயத்தை நாம் சுட்டிக்காட்டுகிறோம். உம்மு ஹராம்
(ரலி), நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினர் இல்லை என இப்னு ஹஜர்
கூறினார் என்ற தகவலுக்காகவே இப்னு ஹஜர் அவர்களின் இந்தக் கூற்றை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
அந்நியப் பெண்ணாக இருந்தாலும் நபி மட்டும் இது போன்று நடந்து
கொள்ளலாம் என்று அவர் கூறிய கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை. இந்தக் கருத்தைப் பொறுத்தவரை
உம்மு ஹராம் (ரலி), நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான
உறவினராக இருந்தார் என்று கூறுபவரின் கூற்றை விட மோசமானதாகவே நாம் கருதுகிறோம்.
ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் நபி (ஸல்) அவர்கள் மற்ற மனிதர்களை
விட மிகவும் பேணுதலாக வாழ்ந்தவர்கள். அவர்கள் ஒழுக்கமாகவும் நெறிமுறைகளைப் பேணியும்
வாழ்ந்ததைப் போல் வேறு யாரும் வாழ முடியாது. அப்படியிருக்க இந்த விஷயத்தில் நபி (ஸல்)
அவர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை என்ற கூற்றுக்கு இடமே இல்லை.
அறிஞர் ஐனீ
புகாரிக்கு இன்னொரு விரிவுரை எழுதிய அறிஞர் ஐனீ என்பவரும் உம்மு
ஹராம் (ரலி) தொடர்பான இந்தச் செய்திக்கு, “அந்நியப் பெண்ணாக
இருந்தாலும் இது போன்று நடந்து கொள்வது நபிக்கு மட்டும் உரிய சிறப்புச் சலுகை’ என்று பதிலளித்துள்ளார்.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள், நபி
(ஸல்) அவர்களுக்கு மஹ்ரமானவர் என்ற கூற்றை இவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காகவே
இந்தத் தகவலைக் குறிப்பிடுகின்றோம்.
நபி (ஸல்) அவர்களுக்கும், உம்மு
ஹராம் (ரலி) அவர்களுக்கும் இடையே மஹ்ரமான உறவோ, மனைவி என்ற
உறவோ இல்லாத நிலையில் அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றது அவர்களுக்கு அருகில்
உறங்கியது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தலையில் பேன் பார்த்து விட்டது
தொடர்பாக வரும் சம்பவத்திற்கு, “இது நபிக்கு மட்டும் உரிய பிரத்யேகமான
விஷயம்’ என்பதே சரியான
பதிலாகும்.
நூல்: உம்ததுல் காரிஃ, (பாகம் 29, பக்கம் 332)
வம்சாவழியை அறிந்தவர்கள் சொல்வதென்ன?
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வம்சாவழி மூலமாகவோ
பால் குடி உறவின் மூலமாகவோ சின்னம்மாவாக இருந்தார்கள் என்ற கருத்தை இப்னுல் முலக்கன்
என்ற அறிஞரும் வலுவாக மறுத்துள்ளார்.
நபி (ஸல்) அவர்களின் வம்சாவழியையும் உம்மு ஹராம் (ரலி) அவர்களின்
வம்சாவழியையும் அறிந்தவர் இப்படிச் சொல்ல முடியாது. இந்த அறிவு இல்லாதவரே இவ்வாறு கூறுவார்
என இந்த அறிஞர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நபி (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும்
இடையே மஹ்ரமான உறவு இருக்கலாம் எனக் கூறிய இப்னு அப்தில் பர் அவர்களின் கூற்றை எடுத்து
சுட்டிக்காட்டி விட்டு இதற்கு மறுப்பாகவே இவ்வாறு இந்த அறிஞர் கூறுகிறார்.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினராக
இருந்தார்கள் என்பதில் ஏகோபித்த கருத்து உள்ளது என்ற கூற்று ஆட்சேபணைக்குரியது. நபி
(ஸல்) அவர்களின் வம்சாவழியையும் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வம்சா வழியையும் முழுமையாக
அறிந்தவர் இவ்விருவருக்கிடையே எந்த மஹ்ரமான உறவும் இல்லை என்பதை அறிவார்.
நூல்: காயத்துல் சவ்ல் (பாகம் 1, பக்கம் 51)
எனவே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான
உறவினர் என்ற கருத்து இந்த தவறான ஹதீஸை நியாயப்படுத்துவதற்காகத் தரப்பட்ட ஆதாரமற்ற
சுயக் கருத்தாகும். இதனடிப்படையில் குறித்த செய்தியை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
மடியில் படுத்தார்களா?
அடுத்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மடியில்
படுத்ததாக எந்த ஹதீஸிலும் வரவில்லை. ஹதீஸில் இல்லாததை நாம் இட்டுக்கட்டுவதாக விமர்சனம்
செய்கிறார்கள்.
இங்கே இவர்களின் முரண்பாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
உம்மு ஹராம் (ரலி) அவர்களின் நபி (ஸல்) அவர்களுக்கு சின்னம்மா வேண்டும் என்பதற்கு இவர்கள்
எந்த அறிஞரின் கூற்றை சுட்டிக் காட்டினார்களோ அதே அறிஞர் தான் நபி (ஸல்) அவர்கள் உம்மு
ஹராம் (ரலி) அவர்களின் மடியில் தலை வைத்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
இப்னு அப்தில் பர், இப்னு வஹப்
மற்றும் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ ஆகியோர் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின்
மடியில் படுத்தார்கள் என்ற கருத்தை கூறியுள்ளனர்.
இப்னு வஹப் கூறுகிறார்:
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடி
உறவின் மூலம் சின்னம்மா ஆவார். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு
அருகில் உறங்கக்கூடியவராகவும் அவர்களின் மடியில் உறங்கக்கூடியவராகவும் இருந்தார்கள்.
உம்மு ஹராம் (ரலி) நபிக்கு பேன் பார்த்தும் விட்டார்கள்.
நூல்: பத்ஹுல் பாரீ, பாகம் 11, பக்கம் : 78
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ கூறுகிறார் :
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் செல்லும் போது
அங்கே அவர்களுடன் பணியாள், குழந்தை, கணவன் இவர்கள் யாராவது இருந்திருக்கலாம் என்று சிலர் விளக்கம்
தருகின்றார்கள். இந்த விளக்கம் இந்த ஹதீஸில் உள்ள பிரச்சனையை முழுமையாக நீக்காது. ஏனென்றால்
பேன் பார்க்கும் போதும் மடியில் படுக்கும் போதும் ஒருவரையொருவர் உரசும் நிலை இருந்துள்ளது.
நூல்: பத்ஹுல் பாரீ, பாகம் 11 பக்கம் : 78
எனவே இந்த அறிஞர்கள் ஹதீஸில் இல்லாததைத் துணிந்து இட்டுக்கட்டி
விட்டார்கள் என்று இந்த அரைவேக்காடுகள் நம்மை விமர்சனம் செய்தது போல் இவர்களையும் விமர்சனம்
செய்வார்களா?
புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்களில்
இடம்பெற்ற அறிவிப்புக்களில் மடியில் படுத்தார்கள் என்ற வாசகம் நேரடியாக வராவிட்டாலும்
இந்தக் கருத்து தொணிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் படுத்தார்கள்
என்று புகாரியில் 2800வது செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் 3875வது அறிவிப்பில் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் தன் தலையை
வைத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பல அறிவிப்புக்களில் அவர்கள் நபி (ஸல்)
அவர்களுக்கு பேன் பார்த்து விட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் தலை வைத்தார்கள், உம்மு ஹராம் (ரலி) பேன் பார்த்தார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டே
இந்த அறிஞர்கள்,
நபியவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் மடியில் தலை வைத்தார்கள்
என்று கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மடியில் தலை வைத்தார்கள் என்ற தகவலுக்கு நேரடியாக
ஆதாரம் இல்லை என்றாலும் இதனால் இந்த ஹதீஸை நியாயப்படுத்த முடியாது. அந்நியப் பெண்ணுக்கு
அருகில் படுக்கலாமா? அந்நியப் பெண் பேன் பார்த்து
விடலாமா? அந்நியப் பெண் இருக்கும் இடத்திற்குச் செல்லலாமா? ஆகிய கேள்விகளுக்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.
உம்மு ஹராம் (ரலி) தொடர்பாக வரும் ஹதீஸில் குர்ஆனுக்கு முரணில்லாத
வேறு பல செய்திகளும் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் மறுக்கவில்லை. உம்மு ஹராம் (ரலி)
அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு இவ்வாறு பழகினார்கள் என்ற தகவலை மட்டுமே மறுக்கின்றோம்.
அந்தச் செய்தியில் வரும் மற்ற தகவல்களை ஏற்றுக் கொள்வதில் நமக்கு எந்த மறுப்பும் இல்லை.
உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மஹ்ரமான
உறவு கிடையாது என்கிற போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் இப்படி
நடந்தார்கள் என்று கூறினால் இது நபி (ஸல்) அவர்களுக்கு இழுக்கில்லையா? நபி (ஸல்) அவர்கள் இந்தக் காரியத்தை செய்திருப்பார்களா? என்று யோசிக்க வேண்டும்.
மேலும் இந்தத் தகவலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் சொல்வதால்
சமுதாயத்திற்கு என்ன நன்மை ஏற்படப் போகின்றது? இதைப் படித்த
பின் மக்களுக்கு ஈமானும் இறையச்சமும் கூடப்போகின்றதா? அல்லது இதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏதேனும் மார்க்கச் சட்டம்
இருக்கின்றதா?
அல்லது மறுமையில் அல்லாஹ் நம்மிடம் உம்மு ஹராம் (ரலி), நபி (ஸல்) அவர்களுக்குப் பேன் பார்த்து விட்டதையும் அவர்களுக்கு
அருகில் உறங்கியதையும் ஏன் நம்பவில்லை என்று கேள்வி கேட்பானா?
தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வார்த்தையில் கூறுவதை
விட்டுவிட்டு இதை நியாயப்படுத்துவதற்காக தங்களுடைய ஆற்றலை செலவழித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
நபியின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும், ஒரு நன்மையும் இல்லாத கருத்தை புகாரியில் இருந்தாலும் நாம் நம்ப
முடியாது. இமாம் புகாரியின் கண்ணியத்தை விட நபி (ஸல்) அவர்களின் கண்ணியம் மலையளவு உயர்ந்தது.
ஹதீஸ் துறை அறிஞர்கள் இதை தவறுதலாகப் பதிவு செய்துவிட்டார்கள்
என்று சொல்வதால் இந்த அறிஞர்களின் கண்ணியம் சற்றும் குறையாது. காரணம் அவர்களின் முயற்சியால்
இந்த சமுதாயத்திற்குக் கிடைத்த நன்மை அளப்பெரியது. மனிதர்கள் எல்லாம் தவறிழைப்பவர்களே!
நமக்குத் தவறு என்று தெரிவதை தயுவு தாட்சணையமின்றி தவறு என்று
சுட்டிக்காட்டுவோம். மற்றவர்களின் மீது குருட்டு நம்பிக்கை வைக்கமாட்டோம். இது தான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏன் இதுபோன்ற செய்திகளை மறுக்கிறார்கள்
என்பதை மக்கள் புரிந்துகொண்டால் நிச்சயம் இதை ஒரு குறையாக யாரும் கூறமாட்டார்கள். நிறையாகவே
பார்ப்பார்கள். அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
EGATHUVAM JUL 2014