May 7, 2017

தூதர் வழியில் தூய ஹஜ்

தூதர் வழியில் தூய ஹஜ்

ஹாஜிகள் மக்காவை நோக்கிப் பயணப்படுகின்ற ஹஜ் காலம். இதையொட்டி ஹாஜிகளுக்காக ஆங்காங்கே ஹஜ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் மத்ஹபுச் சட்ட அடிப்படையில் அமைந்தவையாகும்.

தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் ஷாபி, ஹனபி என்று கூறுபோட்டது போன்று ஹஜ்ஜிலும் ஷாபி, ஹனபி என்று கூறு போட்டு மார்க்கத்தைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் நடத்துகின்ற இந்தப் பயிற்சி வகுப்புகளில், தவாஃப் செய்யும் போது, ஷாபி மத்ஹபினர் ஹனபியாக மத்ஹப் மாறிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

காரணம், ஷாபி மத்ஹபில் சம்சாரம் ஒரு மின்சாரம் என்பதால் தான். ஷாபி மத்ஹபில் மனைவியைத் திரையின்றி தொட்டு விட்டால் உளூ முறிந்து விடும். மில்லியன் கணக்கான முஸ்லிம்கள், பிரம்மாண்டமான அரவை எந்திரத்தில் உருள்கின்ற மாவுத் துளிகளாக வலம் வருவார்கள்.

இந்தக் கூட்டத்தில் அருகில் வரும் மனைவியைத் தொட்டால் உளூ முறிந்து விடும் என்று உதறி விட்டால் அவ்வளவு தான். மனைவியைத் தேடி அலைய வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் அடுத்தடுத்துத் தொடர வேண்டிய வணக்கங்கள் தடைப்பட்டு, தடங்கலாகி விடும்.

இந்த இக்கட்டை விட்டுத் தப்பிப்பதற்காகவே ஷாபி மத்ஹபிலிருந்து ஹனபி மத்ஹபுக்கு மதம் மாற்றும் படலத்தை அவலத்தை இந்த ஆலிம்கள் அரங்கேற்றுகின்றனர்.

மத்ஹபு அடிப்படையில் நடத்தப்படும் ஹஜ் வகுப்புகளில் நடைபெறும் கூத்துக்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

"உங்களது ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வழிமுறையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல்: முஸ்லிம் 2286

ஹஜ் என்பது பெரும்பாலானோருக்கு வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கின்ற வணக்கமாகும். இது ஓர் அருட்கொடை. இந்த அருட்கொடையைப் பெற்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று, அவர்கள் காட்டிய வழியில் ஹஜ் செய்து அதற்குரிய பாக்கியத்தையும் பலனையும் பெறுவதற்குப் பதிலாக மத்ஹபு என்ற பெயரில் செயல்பட்டுத் தங்கள் வணக்கத்தைப் பாழாக்கிக் கொள்கின்றனர்.

இது மட்டுமின்றி, வழிகாட்டிகளாகச் செல்லும் ஆலிம்கள், அவரவர்கள் மனதிற்குத் தக்கபடி அடித்து விடுகின்ற, அளந்து விடுகின்ற தீர்ப்புகளைக் கேட்டு, அதன்படி செயல்பட்டு வாழ்நாளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வணக்கத்தைப் பாழடித்துப் பயனற்றதாக்கி விடுகின்றனர்.

இந்த அறியைôமையைப் போக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் தத்தமது பகுதிகளில், "நபிவழியில் நம் ஹஜ்' என்ற பெயரில் ஹஜ் விளக்க வகுப்புகள் நடத்தி, ஹஜ் செய்முறையை விளக்கி வருகின்றனர். இதில் சுன்னத் வல்ஜமாஅத்தில் உள்ளவர்களும் பலர் பங்கெடுத்துப் பயனடைகின்றனர்.

நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜை இஸ்லாமிய சமுதாயத்திற்கு அறிமுகம் செய்து, அமுல்படுத்தும் விதமாக ஏகத்துவம் மாத இதழ், நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜை பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டுள்ளது.


இதில் மற்றொரு மைல் கல்லாக, தூதர் வழியில் தூய ஹஜ் என்ற தலைப்பில், ஹஜ்ஜின் நிரல்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளை இந்த இதழில் வழங்கியிருக்கின்றோம். இதைப் பயன்படுத்திப் பயன்பெறுமாறு ஹாஜிகளையும், மற்றவர்கள் இதை ஹாஜிகளுக்குப் பரிசளித்துப் பரப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

EGATHUVAM OCT 2012