May 10, 2017

திருமண விருந்து

திருமண விருந்து

அப்துந் நாசிர்

திருமண விருந்திற்குரிய அளவு என்ன? இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்துள்ளார்களா? நமக்கு வசதி இருந்தால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் திருமண விருந்து அளிக்கலாமா?

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது யாரையும் விட்டு வைக்காத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்களுக்குத் திருமண விருந்து அளித்ததாக ஹதீஸ்களில் வந்துள்ளதே! இதற்கான விளக்கம் என்ன?

திருமண விருந்து தொடர்பாக இப்படிப் பல்வேறு கேள்விகளை சகோதரர்கள் எழுப்பி வருவதைப் பார்க்கிறோம். அதற்கான விளக்கங்களை அளிப்பதற்காக இந்தக் கட்டுரை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமண விருந்தின் உச்சக்கட்டம் என்பதற்கு எவ்வித அளவு கோலையும் நிர்ணயம் செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) எதற்கு உச்ச வரம்பை நிர்ணயிக்கவில்லையோ அதற்கு நாம் எந்த எல்லையையும் நிர்ணயிக்க முடியாது.

அதே நேரத்தில் திருமண விருந்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு நபியவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

நபியவர்கள் வழங்கிய அனைத்து திருமண விருந்துகளையும் மிக மிக எளிமையாகத் தான் வழங்கி நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)

நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டைத் திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் இதுதான் பெரிய விருந்தாகும்.

ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் திருமணம் என்ற காரியத்தில் விருந்தளிக்கும் போது நபியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு குறைந்த செலவில் விருந்தளிப்பது தான் மிகச் சிறந்ததாகும்.

நபியவர்கள் எதனை முன்மாதிரியாக வழிகாட்டிச் சென்றுள்ளார்களோ அதில்தான் இச்சமுதாயத்திற்கு நன்மை இருக்கிறது. எனவே அதைத் தான் நாம் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும், வலியுறுத்த வேண்டும் என்பதே நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அதிகம் செல்வ வசதியுடையவர் திருமணம் அல்லாத காரியங்களில், மார்க்கத்தின் வரம்புகளை மீறாமல், வீண்விரையம் இல்லாமல் அதிகமானவர்களுக்கு விருந்தளித்தால் அதனை நாம் தவறு என்று கூறமாட்டோம்.

ஆனால் திருமண விருந்தில் நபியவர்கள் எளிமையைக் கடைப்பிடித்துள்ளதால் அதையே செல்வந்தரும், ஏழைகளும் கடைப்பிடித்து நபிவழியை நிலைநாட்ட வேண்டும் என்றே நாம் கூறுகிறோம்.

எவ்வளவு வசதியிருந்தாலும் செல்வந்தர்கள் எந்த விருந்தும் கொடுப்பதே கூடாது என்பது நமது நிலைப்பாடல்ல. மாறாக செல்வந்தராக இருந்தாலும் திருமண விருந்தில் எளிமையைக் கடைப்பிடித்து நபிவழியில் மிகச் சிறந்த முறையை சமுதாயத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதே நம்முடைய ஆவல்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமண விருந்து

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிகப் பெரிய அளவில் திருமண விருந்து அளிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது நடந்த சம்பவங்களை நாம் தெளிவாக அறிந்து கொண்டால் அவர்களின் கருத்திற்கு அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது இரண்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

1. நபியவர்கள் வலீமா விருந்தாக ஒரு ஆட்டை அறுத்து, அத்துடன் ரொட்டியையும் அளித்தார்கள்.

2. உம்மு சுலைம் அவர்கள் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய "ஹைஸ்'' என்ற பலகாரத்தின் மூலம் நபியவர்கள் செய்த அற்புதம்.

உம்மு சுலைம் நபியவர்களுக்காக மட்டும் சிறிதளவு அன்பளிப்பாக வழங்கிய "ஹைஸ்'' என்ற பலகாரத்தில் இறைவனுடைய ஆற்றலினால் நபியவர்கள் நிகழ்த்திய அற்புதத்தில் தான் நூற்றுக்கணக்கான நபித்தோழர்கள் உணவருந்திருனார்கள். இது வலீமா விருந்து அல்ல. நபியவர்கள் கொடுத்த வலீமா விருந்து மிகவும் எளிமையாகத் தான் நடைபெற்றது.

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிக எளிமையாகத் தான் வலீமா விருந்த வைத்தார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5168, 5171, 7421

அதே நேரத்தில் நபியவர்கள், ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த நாளன்று மற்றொரு அற்புதம் நடக்கிறது. அதில் தான் முன்னூறுக்கும் அதிகமான ஸஹாபாக்கள் விருந்து சாப்பிட்டார்கள். அதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை) மணமுடித்து, தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.

அப்போது என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் "ஹைஸ்' எனும் பலகாரத்தைச் செய்து, அதை ஒரு (கல்) பாத்திரத்தில் வைத்து, "அனஸே! இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, இதை என் தாயார் உங்களுக்காகக் கொடுத்தனுப்பியுள்ளார். அவர் உங்களுக்கு சலாம் சொல்லச் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் (முடிந்த) சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்றும் கூறினார் எனச் சொல்'' என்றார்கள்.

அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்று, "என் தாயார் உங்களுக்கு சலாம் கூறுகிறார். அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்று கூறினார்'' என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (ஓரிடத்தில்) வை'' என்று கூறிவிட்டு, "நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!'' என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும், நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன்.

-இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு, "ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்'' என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.-

(தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு'' என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். (வீட்டின்) திண்ணையும் அறையும் நிரம்பியது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பத்துப் பத்துப் பேராக வட்டமாக அமர்ந்து, ஒவ்வொருவரும் தமது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து (எடுத்து) உண்ணட்டும்'' என்றார்கள். அவ்வாறே அவர்கள் (பத்துப் பேர் வந்து) வயிறு நிரம்ப உண்டனர்.

ஒரு குழுவினர் சாப்பிட்டுவிட்டுச் சென்றதும் மற்றொரு குழுவினர் வந்தனர். இவ்வாறு அவர்கள் அனைவரும் உண்டனர்.

அப்போது, "அனஸ்! அந்தப் பாத்திரத்தைத் தூக்கு'' என்றார்கள். நான் அந்தப் பாத்திரத்தைத் தூக்கியபோது, நான் அதைக் கீழே வைத்த நேரத்தில் அதிகமாக இருந்ததா, அல்லது தூக்கிய நேரத்தில் அதிகமாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை.

நூல் முஸ்லிம் (2803)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் "ஹைஸ்' எனும் பலகாரத்தை வைத்து அதை (என்னிடம் கொடுத்து) நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள்.

(அவ்வாறே நான் கொண்டுசென்று கொடுத்தேன்.)

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சென்று, நீ சந்திக்கின்ற முஸ்லிம்களை எனக்காக அழை(த்து வா)'' என்றார்கள். அவ்வாறே நான் சந்தித்தவர்களை அழைத்(து வந்)தேன்.

அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது கையை அந்தப் பலகாரத்தின் மீது வைத்துப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனையை அவர்கள் கூறினார்கள்.

நான் சந்தித்த அனைவரையும் ஒருவர் விடாமல் அழைத்தேன். அவர்கள் அனைவரும் (வந்து) வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.

நூல்: முஸ்லிம் (2804)

நூற்றுக்கணக்கான ஸஹாபாக்கள் சாப்பிட்டது வலீமா விருந்தில் அல்ல. மாறாக நபியவர்கள் "ஹைஸ்'' என்ற பலகாரத்தின் மூலம் நிகழ்த்திய அற்புதத்தில் தான்.

"ஹைஸ்'' என்பது கெட்டியான பால், பேரீத்தம் பழம் மற்றும் நெய் மூலம் தயாரிக்கப்படும் உணவாகும்.

பல அறிவிப்புகளில் வலீமா விருந்து சம்பவமும், ஹைஸ் என்ற அற்புத உணவு விருந்து சம்பவமும் கலந்து வந்துள்ளதால் அதிகமானவர்கள் கலந்து கொண்டது வலீமா விருந்து தான் என்ற குழப்பம் ஏற்பட்டதற்கு காரணமாகும்.

நாம் இரண்டு நிகழ்வுகளையும் பிரித்து விளங்கிக் கொண்டால் எவ்வித குழப்பமும் இல்லை.

நபியவர்கள் அற்புதம் அல்லாத முறைகளில் இருந்து நமக்கு மார்க்கமாக வழிகாட்டியவை தான் நமக்கு முன்மாதிரியாகும்.

அது போன்று நபியவர்களுக்கு மட்டும் இறைவன் பிரத்யேகமாக வழங்கிய சட்டங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள முடியாது.

நபியவர்கள் அற்புதங்களாகச் செய்தவை மக்கள் தம்முடைய இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காகத் தானே தவிர அதிலிருந்து நடைமுறை வாழ்க்க்கைக்குச் சட்டம் எடுப்பது கூடாது.

ஒரு வாதத்திற்கு அப்படி எடுக்கலாம் என்றால் நபியவர்கள் எப்படி ஒரு சிறிய அளவு உணவிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவளித்தார்களோ அது போன்று நாமும் சிறிய அளவிலிருந்து உணவளிக்க வேண்டும்.

அவ்வாறு நாம் செய்வது சாத்தியமா?

நான் அற்புதத்தின் போது இருந்த மக்களின் எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொள்வேன். உணவின் அளவை கவனத்தில் கொள்ளமாட்டேன் என்பது மடமைத்தனம் ஆகும்.

அற்புதம் என்பது இறைவனின் உதவியால் செய்வதாகும். அதில் இறைத்தூதர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.  (அல்குர்ஆன் 13:38)

எனவே 300 பேருக்கு நபியவர்கள் உணவளித்தது இறைக்கட்டளைப்படி நபியவர்கள் செய்ததாகும். அல்லாஹ் இலட்சம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று அந்த அற்புதத்தின் போது கட்டளையிட்டிருந்தால் நபியவர்கள் இலட்சம் பேருக்கு அளித்திருப்பார்கள்.

நபியவர்கள் செய்த அற்புதங்களில் நாம் பின்பற்றுவதற்குரிய முன்மாதிரியை எடுப்பது கூடாது. அற்புதம் என்பது அதைக் காணும் மக்கள் நம்பிக்கை கொள்வதற்காகத் தான்.

அற்புதங்களிலிருந்து பின்பற்றுவதற்குரிய சட்டங்களை எடுத்தால்...

ஒரு கோப்பை பாலில் 70 பேருக்குப் புகட்ட வேண்டும். இது நம்மால் சாத்தியமா?

விரலிலிருந்து தண்ணீரை ஓடச் செய்து நூற்றுக்கணக்கானவர்கள் உளூச் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது நம்மால் முடியுமா?

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனவே நபியவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்து வைத்தது தான் வலீமா விருந்தாகும். அதில் தான் நமக்கு முன்மாதிரி உள்ளது.

எனவே நபியவர்கள் காட்டித் தந்த முறைப்படி நமது திருமணங்களையும், திருமண விருந்தையும் அமைத்துக் கொள்வோமாக! அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!


மனோ இச்சைகளை மார்க்கமாக்குவதிலிருந்தும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

EGATHUVAM MAY 2013