இடையூறு அளிக்காத இனிய மார்க்கம்
மனித சமுதாயத்திற்கு வழியைக் காட்டி, மனிதனைத் தீமையில் விழாமல் காப்பது தான் மதமாகும். அது தான்
மதம் மனிதனுக்குச் செய்கின்ற உதவியாகும். மனிதனுக்கு இந்த உதவியைச் செய்யாவிட்டால்
கூடப் பரவாயில்லை; உபத்திரம் செய்யாமல் இருக்க
வேண்டும்.
ஜனவரி 14, தை மாதம் முதல் நாள் பொங்கல்
பண்டிகை கொண்டாடப்பட்டது. நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காக பூமிக்கும், பூமிக்கு ஒளி கொடுத்த சூரியனுக்கும் வணக்கம் செலுத்துகின்ற நாள்
தான் பொங்கல் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
பொங்கல் வந்தது; பொங்கினார்கள்; புசித்தார்கள் என்றால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.
அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் செயல்படுகிறார்கள். அதைத் தடுக்க யாருக்கும்
உரிமையில்லை.
பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை! பழையன கழிதலும் புதியன
புகுதலும் என்ற பெயரில் பழைய பொருட்கள் அனைத்தையும் தீயிட்டுப் பொசுக்குகின்றார்கள்.
அதனால் எழுகின்ற புகை மூட்டம் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி, சுற்றி வாழ்கின்ற மனிதர்களின், இன்னபிற உயிர்களின் சுவாசக் குழாயைப் பாதிக்கச் செய்கின்றது.
அவர்களை சுகாதாரக் கேட்டில் விழச் செய்கின்றது.
பழைய டயர்களைப் போட்டுக் கொளுத்தும் போது ஏற்படுகின்ற புகை சுற்றுச்சூழலில்
மிகப் பெரிய மாசை ஏற்படுத்துகின்றது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்
என இந்த நாட்களில் வெடிக்கப்படும் பட்டாசு சப்தம் மனிதர்களையும் கால்நடைகளையும் பறவைகளையும்
பாதிக்கச் செய்கின்றது. பொங்கலை அடுத்து வரும் நாள் மாட்டுப் பொங்கல். வயற்காட்டில்
ஏரு பூட்டி,
உணவு விளைச்சலுக்குக் காரணமாக இருந்த மாட்டிற்கு நன்றிக்கடன்
செலுத்துவதற்காக மாட்டை வணங்கும் நாள் தான் மாட்டுப் பொங்கல் எனப்படுகின்றது.
ஓரிறை என்பதைத் தாண்டி வணங்க ஆரம்பித்து விட்டால் கல்லையும், மண்ணையும், மரத்தையும், மாட்டையும் வணங்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி வணங்குவதோடு
நிறுத்தி விட்டால் அது அவர்களுடன் போய்விடுகின்றது.
பதம் பார்க்கும் மதப் பண்டிகை
மாட்டுப் பொங்கல் நாளிலும் அதைத் தொடர்ந்து வரும் நாட்களிலும்
ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அந்த மாடுகளை வதைக்கின்றனர். மாடுகளுக்கு போதைப் பொருளைக்
கொடுத்து வெறியேற்றி அனுப்புகின்றனர். இதைத் தடுப்பதற்காகப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில்
போடப்பட்டு,
நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகளுடன் இந்தக் கொடுமையை அனுமதித்துள்ளது.
மனிதனின் உணவு மற்றும் இதர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இறைவனால்
படைக்கப்பட்ட மாட்டை, உணவுக்காக அறுப்பதைக் குறை சொல்பவர்கள், அதே மாட்டை இப்படி அணு அணுவாகச் சித்ரவதை செய்வது நகைப்பிற்குரிய முரண்!
இதே போன்று பொங்கலை முன்னிட்டு சேவல் சண்டை நடத்துவதும் பரவலாக
நடைபெற்று வருகின்றது. இரண்டு சேவல்களை மோத விட்டு, வெற்றி
பெறும் சேவலின் சொந்தக்காரருக்குப் பரிசுகள் வழங்குகின்றனர். இதையொட்டி பந்தயம் கட்டி
சூதாட்டமும் நடைபெறுகின்றது. இதற்காகவும் சேவல்களுக்கு போதைப் பொருள் கொடுக்கப்படுவதாகக்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் மோதும் சேவல்களுக்குக் கடுமையான காயம் ஏற்படுவதும், இரண்டு சேவல்களில் ஏதேனும் ஒன்று உயிரிழக்கும் அநியாயமும் நடக்கின்றது.
இந்த அடிப்படையில் பொங்கல் என்ற பெயரில் மனித இனத்தைத் தாண்டி
விலங்கினங்களுக்கும் இடையூறு செய்கின்றனர். இப்படி மனிதர்களையும் பிற உயிரினங்களையும்
பதம் பார்ப்பது தான் மதப் பண்டிகையா? பாதிப்பை ஏற்படுத்துவது
தான் பண்டிகை நாளா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இஸ்லாம் ஒரு மதமல்ல, மார்க்கம்.
அது ஓர் இயற்கை மார்க்கமாகும். அந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இரண்டு பண்டிகைகளை
வழங்கியுள்ளது. ஒன்று ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள். இந்த நாளில் ஏழைகளுக்கு
உணவுப் பொருட்களை வழங்கி அவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கின்றது.
இன்னொரு பெருநாளான ஈதுல் அழ்ஹா அன்று ஆடு, மாடுகளை அறுத்துப்
பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வினியோகிக்கச் செய்கின்றது.
அன்றைய தினம் ஏழைகளுக்கு உணவு வழங்குவதன் மூலம் ஏழைகளை அடையாளம்
கண்டு, அவர்களுக்கு ஜகாத் போன்ற உதவிகளை வழங்குவதற்கு வகை செய்கின்றது.
மதம், மார்க்கம் என்றால் அதன் பண்டிகைகள் இப்படிப் பிறருக்கு உதவும்
வகையில் அமைய வேண்டும்.
EGATHUVAM FEB 2014