May 7, 2017

இரவுத் தொழுகையில் இரவல் ஹாபிழ்

இரவுத் தொழுகையில் இரவல் ஹாபிழ்

பொதுவாக இன்று தமிழகத்தில் அரபி மதரஸாக்களில் பயில்வதற்கு அதிகமான மாணவர்கள் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற பெரும் பெரும் மதரஸாக்களில் இன்று பத்து, இருபது தேறுவதே அரிதாகி விட்டது. இதற்கு முதல் முக்கியக் காரணம், ஆலிம்கள் அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது தான்.

* ஆலிம்களை பள்ளியில் வேலைக்குச் சேர்க்கும் போதே, "சம்பளம் 2000 ரூபாய், உங்களுக்கு மேற்படி நிறைய வருவாய் கிடைக்கும்' என்று முத்தவல்லி தெரிவிப்பார். வீடு வீடாகச் சென்று கத்தம் பாத்திஹா ஓதுவது, கல்யாணம், கருமாதி நடத்தி வைப்பவது போன்ற சடங்கு சம்பிரதாயங்களில் சம்பாதிக்கும் ஓர் ஈனப் பிழைப்பு!

* இந்த ஆலிம்களுக்குப் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் நிலைமை படுமோசம் ஆகி விடும். வரதட்சணையின்றி பெண்ணை வாழ வைக்க முடியாது. அதனால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சென்று, குமர்கள் இருக்கின்றன என்று கையேந்தும் யாசக நிலைமை.

* மதரஸாக்களில் படிக்கும் போதே அந்த மாணவர்களுக்கு மொட்டை அடித்து, ஜிப்பாக்கள் போட்டு, சமுதாயத்தில் ஏதோ ஓர் அப்பிராணியாக, அற்பப் பிராணியாக அவர்களை நடமாட விட்டது.

* அரபு நாடுகளில் வேலைவாய்புகள் கிடைத்து கணிசமான ஆலிம்கள் நல்ல கண்ணியமான வருவாய் பெற்றனர். இது அவர்களுடைய வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றியது. தங்களை மதரஸாக்களில் படித்த ஆலிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள மறுக்கும் நிலை தோன்றியது. நாங்களும் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்ற மன திருப்தியை அடைய வைத்தது. காலமெல்லாம் தலை குனிந்த நாங்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றோம் என்று அவர்களை எண்ண வைத்தது.

* அரபு நாடு சென்று ஆடு மேய்த்தவர்கள், அடுப்படி வேலை பார்த்தவர்கள், ஓட்டுனர்களாக, உணவு விடுதிப் பணியாளர்களாக, அரபிகளின் பிள்ளைகளுக்கு ஆயாவாக வேலை பார்த்தவர்கள் அத்தனை பேரும் "உலகக் கல்வி படித்தால் தான் வாழ்க்கை' என்ற பாடத்தை உணர்ந்தனர். அதன் தாக்கம், தங்கள் பிள்ளைகளை ஒரேயடியாகப் பள்ளிக்கூடங்களுக்கு வெள்ளமாய் பாய வைத்தனர்.

* தவ்ஹீது ஜமாஅத்தின் அக்னி பறக்கும் ஆவேசப் பிரச்சாரம், இந்த உலகின் அற்ப லாபங்களுக்காக மார்க்கத்தையும் மறுமையையும் விற்கின்ற உலமாக்களின் நடவடிக்கைகளைத் தோலுரித்துக் காட்டிய அந்த அனல் பிரச்சாரம் ஆலிம்கள் மீது வெறுப்பு ஏற்பட முக்கிய, முதன்மைக் காரணமாகும்.

* தவ்ஹீத் ஜமாஅத் முன்வைத்த இட ஒதுக்கீட்டுக்கான போர் முழக்கம், உலகக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தது.

மதரஸாக்களில் மாணவர் பலம் குன்றியதற்கும் குறைந்ததற்கும் இவையெல்லாம் முக்கியக் காரணங்களாகும். இது போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலை என்றால், நம்முடைய நிலை மிகவும் பரிதாபகரமான நிலையாகும்.

நாம் இப்போது தான் தமிழகத்தில் காலூன்றி இருக்கின்றோம். தளத்தில் தடம் பதித்திருக்கின்றோம். ஆலிம்கள் பற்றாக்குறை! அழைப்பாளர்கள் தட்டுப்பாடு! ஏற்கனவே வந்த அழைப்பாளர்கள் கூட நம்முடைய ஜமாஅத்தின் கட்டுச் சிட்டான, கண்டிப்பான கட்டுப்பாட்டு வடிகட்டியில் பின்னுக்குப் போய் விடுகின்றனர். இதனால் எஞ்சியதும் மிஞ்சியதும் மிகச் சொற்பமே!

தாயீக்களைத் தேடும் கிளைகள்

அவசர நிலையைச் சமாளிக்க, தவ்ஹீத் ஜமாஅத் தலைமை ஓராண்டு கல்வித் திட்டத்தில் அழைப்பாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. அதுவும் பற்றவில்லை. இது மற்ற நேரத்தில் நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பை விட ரமளானில் ஏற்படுத்தும் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு தான் ரமளானில் வெளிநாடுகளுக்குச் சென்று மார்க்கப் பிரச்சாரம் செய்த தாயீக்களை தலைமை உடனே நிறுத்தியது. வெளிநாடுகளுக்கு தாயீக்கள் சென்றது தங்களது பொருளாதார வேட்டைக்காக அல்ல! ஜமாஅத்தின் பொருளாதார நலனைக் கருத்திக் கொண்டு தான். ரமளான் மாதத்தில் அங்கு செல்லும் தாயீக்களைக் கொண்டு, அங்குள்ள மண்டல மர்கஸ்கள், அழைப்பு மையங்கள் ஜமாஅத்திற்குரிய நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதாவது, அங்கு வசிக்கும் நமது தமிழ் மக்களிடம் சந்தாக்கள், நன்கொடைகள் திரட்டுவதற்கு இது உபயோகமாக இருந்தது.

தற்போது அந்த வாசலும் அடைக்கப்பட்டு விட்டது. இந்தப் பொருளாதாரப் பாதிப்பு வெளிநாட்டு மண்டலங்களுக்கு அல்ல. மாநிலத் தலைமைக்குத் தான். இந்தச் சோதனைகள் அத்தனையையும் தலைமை சகித்துக் கொள்வதற்குக் காரணம், இருக்கின்ற தாயீக்கள் தமிழகத்திற்குப் பயன்படட்டுமே என்ற நோக்கத்தில் தான்.

சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே!

சில ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழகமெங்கும் பல்வேறு மதரஸாக்களிலிருந்து இரவுத் தொழுகைக்காக இரவல் தாயீக்களைத் தருவித்தனர். இதையும் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை வேண்டாம் என்று சொன்னது. ஏன்? நமது ஜமாஅத், குர்ஆன் ஹதீஸ் என்று மூல அஸ்திவாரங்களில் நிலைகொண்ட ஜமாஅத்தாகும்.

வாயளவில் இதைச் சொல்லி விட்டு, ஏட்டளவில் இதை எழுதி விட்டு செயல்பாட்டளவில் இதற்கு நேர் மாற்றமாக நடக்க மாட்டோம். இன்று இந்த இயக்கத்தைத் தவிர, குர்ஆன் ஹதீஸ் இயக்கம் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்ற அனைத்து இயக்கங்களும், பெயரளவில் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மூல ஆதாரங்கள் என்று சொல்லி விட்டு, செயல்பாட்டில் ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அடிப்படையையும் நிறுவுகின்றனர்.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 5:45

இந்த வசனத்திலும் இதற்குப் பின்னால் இடம் பெறுகின்ற 5:46 முதல் 5:50 வரையிலான வசனங்களிலும், இறைச்செய்தியைத் தவிர்த்து வேறெதையும் பின்பற்றக் கூடாது என்று திருக்குர்ஆன் நெற்றியடியாக அடிக்கின்றது.

ஆனால் இவர்களோ ஸஹாபாக்கள் என்ற மூன்றாம் அடிப்படையை எடுத்து, ஸஹபாக்களுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் இருப்பதாக நம்புகின்றனர். இது பக்கா இணை வைப்பாகும்.

இரவுத் தொழுகைக்கு இரவலாக வரக்கூடிய ஹாபிழ்கள் இதுபோன்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களாகத் தான் இருக்கின்றனர்.

ஜாக் மர்கஸ்களில் தொழுதால் அதற்குத் தக்கவும், நமது மர்கஸ்களில் தொழுதால் நமது கொள்கைக்குத் தக்கவும் தொழுது கொள்கின்றனர். பொதுவாகவே இதுபோன்ற ஹாபிழ்கள் சகலத்துக்கும் பொருந்துகின்ற அகல டப்பாக்கள் தான். ஷாஃபி மத்ஹபானாலும் சரி! ஹனபி மத்ஹபானாலும் சரி! எல்லாவற்றுக்கும் ஏற்றவாறு செல்கின்ற அவர்களை எப்படிப் பின்பற்றித் தொழ முடியும்?

அதனால் தான் இதுபோன்று இரவலுக்கு ஆள் பிடிக்க வேண்டாம் என்று தலைமை கூறியுள்ளது. இந்த வகையில் கிளைகளுக்குச் சிரமம் தான். இதைத் தவிர்ப்பதற்கு வழி என்ன? வகை என்ன?


இதற்கான விடையை, இதே இதழில் இடம் பெற்றுள்ள "மாண்புமிகு குர்ஆனை மனனம் செய்வோம்!'' என்ற தலைப்பில் காண்போம்.

EGATHUVAM JUL 2012