நபி மீது பொய் நரகமே தங்குமிடம்! - பொய்யான ஹதீஸுக்கு புகாரி முத்திரை
நபி மீது பொய் கூறினால் நரகமே தங்குமிடம் என்ற கருத்தில் புகாரி
உள்ளிட்ட ஏராளமான நூற்களில் இடம்பெற்றுள்ள நபி (ஸல்) அவர்களின் ஹதீஸையே தலைப்பாகக்
கொண்ட இப்பகுதியில் பொய்யான ஹதீஸ்களை அடையாளம் காட்டி வருகின்றோம்.
அந்தப் பொய்யான ஹதீஸ்களை ஏடுகளில் பதிவு செய்வோரையும் அடையாளம்
காட்டி வருகின்றோம். அந்த அடிப்படையில் ஷரீஅத் இஸ்லாமியா என்ற ஒரு மாத இதழில் திண்டுக்கல்
பி. ஜமால் முஹம்மது ஆலிம் உலவி என்பவர், "முஹம்மத்
என்ற பெயரின் முத்தான சிறப்பு' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில்
இரண்டு பொய்யான ஹதீஸ்களை இடம்பெறச் செய்துள்ளார். அவற்றை இங்கு பார்ப்போம்.
பெயர்களுக்கு ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அப்பெயருக்குரிய
குணமும், பரக்கத்தும் உண்டு. நபிமார்கள், ஸஹாபாக்கள், இறைநேசர்களின்
பெயர் வைப்பதால் அவர்களின் பெயரைக் கொண்டு பரக்கத் இருக்கின்றது. பெயர்களில் சிறந்த
பெயரையே இறைவன் நபிமார்களுக்கு வைத்துள்ளான். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும்
எல்லாப் பெயர்களையும் விட உயர்ந்த பெயரை இறைவன், முஹம்மத்
என்று வைத்துள்ளான். முஹம்மத் என்ற பெயர் யாருக்கு வைக்கப்பட்டுள்ளதோ அந்தப் பெயருடையவரை
கண்ணியப்படுத்தவும். ஏனெனில் இந்தப் பெயர் நபி (ஸல்) அவர்களின் பெயராக இருக்கின்றது.
முஹம்மத் என்ற பெயரை வைத்திருப்பவரும் தன் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. மேலும் இந்த முஹம்மத் என்னும் பெயருக்கு அதிகமான சிறப்புகள்
இருக்கின்றன. மறுமை நாளில் இறைவன் மனிதப் படைப்பைப் பார்த்து நபி (ஸல்) அவர்களின் பெயரான
முஹம்மத் என்ற பெயரை யார் வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் சுவனத்தில் நுழைந்து கொள்ளுங்கள்
என்று கூறுவார்கள்.
(ஹதீஸே குத்ஸி)
மேலும் யாருடைய வீட்டில் முஹம்மத் என்ற பெயர் இருக்கின்றதோ அந்த
வீட்டில் வறுமை உண்டாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரி
ஹதீஸே குத்ஸி என்று இந்தப் பொய்யான ஹதீசுக்கு ஒரு நீண்ட பெயரையும்
சூட்டியிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் முன்னிலையில் இரண்டு அடியார்கள் நிறுத்தப்படுவார்கள்.
இவ்விருவரையும் நோக்கி சுவனத்திற்குச் செல்லுங்கள் என்று அவன் சொல்வான். "எங்கள்
இறைவா! நாங்கள் சுவனத்தில் நுழைவதற்கு என்ன தகுதி இருக்கின்றது? சுவனத்தை எங்களுக்குக் கூலியாக நீ அளிப்பதற்கு நாங்கள் எந்த
ஒரு அமலையும் செய்யவில்லையே!'' என்று கேட்பார்கள். "என்னுடைய
இவ்விரு அடியார்களையும் (சுவனத்தில்) நுழையுங்கள். அஹ்மது, முஹம்மது பெயரைக் கொண்டவர்கள் நரகத்தில் நுழையலாகாது என்று எனக்கு
நானே சத்தியம் செய்து கொண்டேன்'' என்று அல்லாஹ் சொல்கின்றான்.
இப்படி ஒரு பொய்யான செய்தி, ஹதீஸ்
குத்ஸீ என்ற பெயரில் நூற்களிலும் ஆலிம்களின் நாவுகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றது.
இமாம் சுயூத்தி, தமது நூலான
அல்லஆலீ மஸ்னுஅத் ஃபில் அஹாதீஸில் மவ்லூஆத் (புனையப்பட்ட பொன்மணிகளில் இணைக்கப்பட்ட
போலி முத்துக்கள்) என்ற நூலில் பதிவு செய்து இந்தச் செய்தியை இனம் காட்டுகின்றார்.
இதில் உள்ள அபாயமும் ஆபத்தும் இதை அறிவிக்கின்ற இப்னு புகைர்
என்பவரின் ஆசிரியரிடத்தில் அடங்கியிருக்கின்றது. அவர் பெயர் அஹ்மத் பின் அப்துல்லாஹ்
தர்ராஃ. இவர் ஒரு பொய்யர். இதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பாளர் ஸதகா பின் மூஸா
என்பவர் நம்பத்தகுந்தவர் அல்லர்; செய்திகளில் புரட்டு செய்பவர்
என்று தஹபீ அவர்கள் குறிப்பிட்டதாக இமாம் சுயூத்தி குறிப்பிடுகின்றார்கள்.
முஹம்மது என்று பெயர் வைப்பதைச் சிறப்பித்து நபி (ஸல்) அவர்கள்
சொன்னதாக வருகின்ற ஹதீஸ்கள் எதுவுமே உருப்படியானதல்ல. அவற்றில் எதுவும் சரியான ஹதீஸ்
அல்ல என்ற கருத்தில் அபூஹாத்தம் அர்ராஸி, இப்னுல் ஜவ்ஸி, இப்னுல் கய்யூம் ஆகிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
நரகத்தை விட்டும் ஈடேற்றம் பெறுவதற்கும் சுவனம் செல்வதற்கும்
காரணமாக அமைவது ஈமானும் நல்ல அமல்களும் தான். முஹம்மது, அஹ்மத் என்ற பெயர்கள் அல்ல. அத்துடன் இது இஸ்லாமிய மார்க்கத்திற்கு
நேர்முரணான கொள்கையாகும் என்று இப்னுல் கய்யூம் அவர்கள் அல்மனாருல் முனீஃப் என்ற நூலில்
குறிப்பிடுகின்றார்கள்.
எனவே மேற்கண்ட விபரம் நமக்குத் தெளிவாகத் தெரிவிப்பது ஒன்றே
ஒன்றைத் தான். முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சுவர்க்கம் செல்வார்; நரகம் செல்ல மாட்டார் என்று எவர் சொன்னாலும் அவர் சொன்ன செய்திக்கு
நம்பகமான அறிவிப்பாளர் வரிசையைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தின்
அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளுக்கு நேர் எதிரானது
என்ற அடிப்படையில் இந்தச் செய்தி முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.
ஒருவன் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள வேண்டியதில்லை; இறைவனுக்கு இணை கற்பிக்கலாம்; எப்படி
வேண்டுமானாலும் வாழலாம்; அவனுக்கு சுவர்க்கம் கிடைக்கும்
என்றால் அது குர்ஆனுக்கு நேர்எதிரான கருத்தாகும். ஏனெனில் அல்லாஹ் தனது அருள்மறையில்
கூறுகின்றான்:
"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள்
உள்ளன'' என்று நற்செய்தி கூறுவீராக!
அல்குர்ஆன் 2:25
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் தாம் சொர்க்கவாசிகள்.
அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2:82
இன்னும் அதிகமான இடங்களில் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்தவர்களுக்குத்
தான் சுவனம் என்று கூறுகின்றான். அத்துடன் இறைமறுப்பாளர்களுக்கு சுவனம் தடை என்றும்
அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது.
ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.
அல்குர்ஆன் 7:40
இதையெல்லாம் தாண்டி முஹம்மத் அல்லது அஹ்மத் என்று ஒருவர் தனக்குப்
பெயர் சூட்டிக் கொண்டால் அவர் சுவனம் செல்வார் என்பது குர்ஆன் வசனத்தைக் கேலிக்கூத்தாக
ஆக்குவதாகும். தன்னை நபியென்று வாதிட்ட பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனும் இவர்களது
பார்வையில் சொர்க்கவாதி என்றாகி விடும்.
அடுத்து, இந்தக் கட்டுரையாளர் குறிப்பிடும்
இரண்டாவது ஹதீஸைப் பார்ப்போம்.
யாருடைய வீட்டில் முஹம்மத் என்ற பெயர் இருக்கின்றதோ அந்த வீட்டில்
வறுமை உண்டாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: புகாரி
கொஞ்சம் கூட அல்லாஹ்வின் பயமில்லாமல், நபி (ஸல்) அவர்களின் நரக எச்சரிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல்
நெஞ்சழுத்தத்துடன், அதிலும் பொய்யான, பலவீனமான ஹதீஸ்கள் தன்னுடைய நூலில் பதிவாகி விடக்கூடாது என்பதில்
கண்ணும் கருத்துமாக இருந்த இமாம் புகாரி அவர்களின் பெயரைப் போட்டு பொய்யான ஹதீஸைப்
பதிவு செய்துள்ளனர்.
இந்த ஹதீஸை (?) இந்தக் கட்டுரையாளர்
புகாரியிலிருந்து ஒருபோதும் எடுத்துக் காட்ட முடியாது. காரணம் இப்படி ஒரு ஹதீஸ் புகாரியில்
பதிவாகவே இல்லை.
இந்த ஹதீஸை இமாம் சுயூத்தி அவர்கள் தம்முடைய அல்லஆலீ மஸ்னுஅத்
ஃபில் அஹாதீஸில் மவ்லூஆத் என்ற நூலில் பதிவு செய்து, இது
இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை இனங்காட்டுகிறார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறுகின்ற
உஸ்மான் என்பார் ஹதீஸ் கலை அறிஞர்களால் குறை சொல்லப்பட்டவர். அவருடைய ஆசிரியர் முஹம்மது
பின் மாலிக் என்பார் ஹதீஸை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று விவரிக்கின்றார்கள்.
இந்தப் போலி ஹதீஸைத் தான் புகாரியில் இருப்பதாகக் கதை அளக்கின்றனர்.
இன்று அல்லாஹ்வின் அருளால் இந்த சுன்னத் வல்ஜமாஅத்தினரால் அவாம்கள்
- பாமரர்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்கள் புகாரியின் தமிழாக்கமும் கையுமாக அலைகின்ற
இந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு பொய்யான செய்தியை அரங்கேற்றுகின்றார் இந்தக் கட்டுரையாளர்.
நபி (ஸல்) அவர்களின் ஒட்டுமொத்த மதீனா வாழ்க்கையும் வறுமையின்
கோரப்பிடியில் சிக்கியிருந்தது என்பதை எல்லோரும் சர்வ சாதாரணமாக அறிவார்கள். எடுத்துக்காட்டாக
புகாரியில் உள்ள கீழ்க்கண்ட செய்தியைப் பார்த்தாலே நபியவர்களின் வறுமையைப் பற்றி அறிந்து
கொள்ளலாம்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும்
பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்கüல் மூன்று
முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின்
தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது'' என்று கூறினார்கள். நான், "என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர் தவிர, அல்லாஹ்வின்
தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்கüடம் சில அன்பüப்பு ஒட்டகங்கள்
(மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக்
கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற)
தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு
அருந்தக் கொடுப்பார்கள்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 2567
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப்
பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்கüடம் வாற்கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும்
கொண்டு சென்றேன். "முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள்
ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர, காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.
நூல்: புகாரி 2508
முஹம்மது என்ற பெயரில் உள்ள அவர்களையே வறுமை வாட்டி எடுத்திருக்கும்
போது அவர்களது பெயரை வைத்து விட்டால் வறுமை வராது என்று எந்த அடிப்படையில் சொல்ல முடியும்
என்று கடுகளவு சிந்தனை கூட இல்லாமல் இப்படிச் சரடு விடுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் அவர்களின் எச்சரிக்கையைக் கவனத்தில்
கொண்டு இனிமேலாவது இதுபோன்ற பொய்யான ஹதீஸ்களை விட்டும் விலகிக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போமாக!
அல்லாஹ்வின் தூதர் மீதே பொய் சொல்லத் துணிந்தவர்கள், மற்றவர்கள் பெயரால் அடித்து விடுவதற்குக் கேட்கவா வேண்டும்? ஆலம்கீர் என்ற நூலில் இடம்பெற்ற ஒரு கதையையும் இந்தக் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளார். நமது ஏகத்துவம் இதழில் நகைச்சுவைப் பகுதி இல்லை. அதை நிறைவு செய்யும்
வகையில் இந்த ஆலம்கீர் ஜோக்கை ரசித்துக் கொள்ளுங்கள்.
மாமன்னர் ஔரங்கசீப் அவர்களிடம் ஒரு அடிமை வேலை பார்த்து வந்தார்.
அவரது பெயர் முஹம்மத் கல்லீ என்பதாகும். எப்போதும் அவரை மன்னர் முழுப்பெயருடனே அழைப்பார்.
ஒருமுறை மன்னர் ஔரங்கசீப் அவர்கள் அந்த அடிமைப் பணியாளரை முஹம்மத் கல்லீ என்ற முழுப்
பெயருடன் அழைக்காமல், "கல்லீ, தண்ணீர் கொண்டு வாரும்' என்று கூறினார்.
இச்செயல் அந்த அடிமைக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியது.
அந்த அடிமையும் மன்னருக்குத் தண்ணீர் கொடுத்து சிறிது நேரம்
கழித்து, "மன்னா, தாங்கள் என்னை எப்போதும் முழுப்
பெயருடன் தானே அழைப்பீர்கள். ஆனால் இப்போது வழமைக்கு மாறாக கல்லீ என்று மட்டும் அழைத்தீர்கள்.
இதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார்.
அதற்கு மன்னர், "உன்
பெயருடன் நபி (ஸல்) அவர்களின் பெயரான முஹம்மத் என்ற பெயர் உள்ளது. நான் நபி (ஸல்) அவர்களின்
பெயரை உளூ இல்லாமல் உச்சரிப்பதில்லை. இப்போது நான் உன்னை அழைக்கும் போது உளூ இல்லை.
ஆகவே தான் கல்லீ என்று அழைத்தேன்'' என்று கூறினார். (நூல்: ஆலம்கீர்)
இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? முஹம்மது என்ற பெயரை யாருக்கு வைத்தாலும் அதனுடன் கல்லீ என்றோ, சல்லீ என்றோ சேர்த்துத் தான் வைக்க வேண்டும் என்று கூறுகின்றார்களா? அல்லது முஹம்மது என்ற பெயரைக் கூற வேண்டுமானால் உளூச் செய்து
விட்டுத் தான் சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்களா?
ஒரு பக்கம் முஹம்மது என்ற பெயர் வைத்தாலே சொர்க்கம் கிடைக்கும்
என்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளார்கள். மறுபக்கம் முஹம்மது என்ற பெயர் வைப்பதையே
தடுக்கும் விதமாக, உளூ இல்லாமல் முஹம்மது என்ற
பெயரை உச்சரிக்கக் கூடாது என்ற கதையை வெளியிடுகின்றார்கள். இவர்கள் மார்க்கத்தை எந்த
அளவுக்குக் கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டார்கள் என்பதற்கு இந்தக் கதைகள் ஓர் உதாரணம்.
EGATHUVAM JUN 2013