சிலை கலாச்சாரம் சீரழியும் பொருளாதாரம்
இந்தியாவில் 1995லிருந்து 2010 வரை 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.
இந்தியாவில் மிக வளமான மாநிலம் மகாராஷ்ட்ரா ஆகும். இந்த மாநிலத்தில் மேற்கண்ட காலகட்டத்தில்
தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரம்.
இந்திய அளவில் 1995 முதல் 2002 வரை 1,21,157 விவசாயிகளும், 2003 முதல் 2010 வரை 1,35,756 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர். இது 1995-2002 காலத்தில் நடந்த தற்கொலை சராசரியை விட அதிகம்.
இந்தப் புள்ளி விவரத்தை தேசிய குற்ற ஆவணத் துறை தருகின்றது.
இதை நாம் ஏன் இங்கு பார்க்கிறோம்?
இதற்கு விடை காண பிப்ரவரி 12, 2014 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வெளியான Memorial Excesses - நினைவுச் சின்ன விரயங்கள் என்ற தலையங்கத்தின் ஒரு பகுதியைப்
பார்ப்போம்.
மகாராஷ்டிரத்தில் மறைந்த மன்னன் சத்ரபதி சிவாஜிக்காக நரிமன்பாயிண்டிலிருந்து
2.5 கி.மீ. தூரத்தில் அரபிக் கடலில் ஒரு பெரிய நினைவுத் தீவை அமைப்பதற்காக
நூறு கோடி ரூபாய் அளித்துள்ள அம்மாநில அரசு, 2009ம்
ஆண்டு இதற்கான அனுமதி வழங்கி வரைவுத் திட்டத்தையும் கோரியிருந்தது. இதற்காக 350 கோடி ரூபாய் செலவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின்
அந்தத் திட்டம் கிடப்பில் கிடந்தது. இப்போது மீண்டும் அத்திட்டத்திற்கு அரசு உயிர்
கொடுத்திருக்கின்றது.
இத்திட்டத்திற்கு மகாராஷ்ட்ரா அரசு மீண்டும் உயிர் கொடுப்பதற்கு
முதல் காரணம் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்றால், பக்கத்து மாநிலமான குஜராத்தின் மோடி அரசு 182 அடி உயரத்தில் வல்லபாய் படேலுக்கு சிலை செய்ய ஏற்பாடு செய்தது
மற்றொரு காரணம் ஆகும்.
உலகத்திலேயே மிக உயரமான வல்லபாய் படேலின் சிலையை மோடி தலைமையிலான
பிஜேபி அரசு நிறுவும் போது, மகாராஷ்ட்ரா காங்கிரஸ் அரசு
சும்மா இருக்க முடியுமா?
ஏற்கனவே 94 அடி உயரத்தில் சிவாஜி சிலை
அமைக்க அந்த அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது அதன் உயரத்தை அதை விட அதிகமாக்க முடிவு
செய்துள்ளது.
படேல் சிலைக்கு குஜராத் அரசு 2063 கோடி ரூபாய் செலவு செய்யத் தீர்மானித்துள்ளது. மகாராஷ்ட்ரா
அரசு சிவாஜி சிலைக்குத் தொகை எதையும் நிர்ணயிக்காவிட்டாலும் மோடிக்குப் போட்டியாக அதற்கு
இணையான தொகையை ஒதுக்கத் தயாராக உள்ளது. எது எப்படியோ? வீணும் விரயமும் ஆகப் போவது பொதுமக்களின் வரிப்பணமும் பொது நிலமும்
தான்.
நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் நகரங்களில் கண்மூடித்தனமாக சிலைகளை
நிறுவியுள்ளனர். சாலைகளின் சந்திப்புகள், போக்குவரத்துப்
பகுதிகள், நடைபாதைகள் அத்தனை இடங்களிலும் மக்களின் பாதுகாப்புக்கு சவால்
விடுக்கும் வகையில் இந்தச் சிலைகள் ஆக்கிரமித்திருக்கின்றன.
கடந்த ஜனவரி, 2013ல்
போக்குவரத்தைப் பாதிக்கின்ற வகையில் இனியும் நினைவுச் சின்னங்களை அமைக்கக்கூடாது என்று
மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கின்றது.
இவ்வாறு இந்து ஆங்கில நாளேட்டின் தலையங்கம் தெரிவிக்கின்றது.
மேலே துவக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி
விவசாயிகள் தங்கள் கடன்களை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு சாகின்றார்கள்.
அவர்களுடைய கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் மராட்டிய அரசு கற்சிலைகளிலும் நினைவுச் சின்னங்களிலும்
பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த அநியாயத்தைச் சுட்டிக்காட்டவே அந்த
மேற்கோளைக் குறிப்பிட்டிருக்கிறோம்.
மராட்டியத்தில் இந்த அவல நிலை என்றால் தமிழகத்தின் நிலை என்ன?
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னி குவிக்கின்
செயலைப் பாராட்டி நினைவு கூறும் வகையில், கர்னல் ஜான்
பென்னிகுவிக் நினைவு மண்டபத்தை, தேனி மாவட்டம் லோயர் கேம்பில்
1.25 கோடியில் தமிழக அரசு கட்டியுள்ளது. இதை 2013ம் வருடம் ஜனவரி 15ம் தேதி பென்னி
குவிக்கின் பிறந்த நாள் அன்று தமிழக முதல்வர் ஜெயலிலதா திறந்து வைத்தார்.
"அமெரிக்க நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும்
வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின்
நாகரீகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத் திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும்' என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதே போன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள
முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா நான்கு
கோடி ரூபாய் மதிப்புள்ள 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை
அணிவித்துள்ளார்.
மார்ஷல் நேசமணிக்கு 49 லட்ச ரூபாய்
செலவில் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு 27.02.2014 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
பென்னி குவிக், நேசமணி, தமிழ்த்தாய் (?) ஆகியோருக்கு
அரசாங்கத்தின் பொதுப் பணமும், தேவர் சிலைக்கு தனியார் பணமும்
வாரியிறைக்கப்படுகின்றது.
உத்தரபிரதேசத்தில் மாயாவதி ஆட்சியில் இருந்த போது சிலைகள் அமைப்பதற்காக
1400 கோடி ரூபாய் அரசாங்கப் பணம் சுருட்டப்பட்டது என்ற விபரத்தை
லோக் ஆயுக்தா கடந்த மே, 20, 2013 அன்று வெளிச்சத்திற்குக்
கொண்டு வந்தது. தன் தலைவர் கன்ஷிராமுக்கும், தனக்கும், தனது கட்சியின் சின்னமான யானைக்கும் சிலை வைத்து பொருளாதாரத்தைச்
சீரழித்ததில் மாயாவதிக்குப் பெரும் பங்குண்டு.
இந்தியாவில் அன்றாடம் எத்தனையோ பேர் தங்கள் குடும்பம், குழந்தை குட்டிகளுடன் தற்கொலை செய்து தங்கள் உயிர்களை மாய்த்துக்
கொள்கின்றனர். குறிப்பாக விவசாயிகள் கடன்களுடன் சேர்த்து வட்டியும் கட்ட முடியாமல்
தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களுக்குக் கடனையும் வட்டியையும் தள்ளுபடி செய்யலாம்.
வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஏராளமான குடும்பங்கள் தங்கள்
அன்றாட அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் அல்லலுறுகின்றனர். இந்த மக்களுக்கு
இந்தப் பொருளாதாரத்தைச் செலவு செய்தால் அவர்களது வறுமை தீரும்; உள்ளங்கள் வாழ்த்தும்.
படிக்க வாய்ப்பிருந்தும் வசதியில்லாமல், பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகப் படிப்பை பாதியிலேயே
நிறுத்தி விட்டு வேலைக்குச் செல்லும் மாணவர்கள் பலர் இருக்கின்றர். அவர்களுக்கு உதவி
செய்து படிக்க வைக்கலாம்.
வீடில்லாமல் வானமே கூரையாய் வீதிகளில் கிடக்கும் ஏழைகளுக்கு
வீடு வழங்கலாம்.
ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டலாம்.
கணவனை இழந்த பெண்களுக்கு மறுவாழ்வுக்காக உதவலாம்.
இப்படி எத்தனையோ வழிகளில் பணத்தைச் செலவு செய்யவேண்டிய தேவை
இருக்கும் போது சிலைகளுக்கும், நினைவு மண்டபங்களுக்கும் மக்களின்
வரிப்பணத்தை வாரியிறைக்கின்றனர்.
இந்தியாவில் ஏராளமான கிராமங்கள் இன்றளவும் நகரங்களுடன் இணைக்கப்படாமல்
துண்டிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இதற்குக் காரணம் அங்கு சாலை வசதி, பாலங்கள் ஏற்படுத்தாதது தான். இதனால் அவர்கள் ஆறுகளில் ஒரு கரையில்
இறங்கி, மறு கரைக்கு வந்து, பிறகு நகரத்தை
அடையவேண்டிய நிலை. இவ்வாறு கடக்கும் போது திடீர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்கள்
பலர்.
இருக்கின்ற சாலைகளும் பழுது பார்க்கப்படாமல் குண்டும் குழியுமாய்
கிடக்கின்றன. இதனால் வாகனங்களின் இரும்புப் பாகங்கள் தேய்கின்றனவோ இல்லையோ, மனிதர்களின் எலும்புப் பாகங்கள் தேய்மானம் ஆகின்றன. நாடு இப்படி
ஒரு கேடுகெட்ட நிலையில் இருக்கும் போது தான் சிலைகளுக்குச் செலவு செய்யும் அநியாயம்
நடக்கின்றது.
இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர வேறு எந்த நெறியும் இந்த சிலை கலாச்சாரத்தைக்
கண்டிக்கவில்லை.
அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ
அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச்
சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட)
உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1609
ஒவ்வொரு உயர்ந்த இடத்திலும் வீணாக சின்னங்களை எழுப்புகிறீர்களா? நிரந்தரமாக இருப்பதற்காக வலிமையான கட்டடங்களை உருவாக்குகிறீர்களா? நீங்கள் பிடிக்கும் போது அடக்குமுறை செய்வோராகப் பிடிக்கிறீர்கள்.
எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! (என்று ஹூத் நபி கூறினார்)
அல்குர்ஆன் 26:128-131
அனாச்சாரமாக, அநியாயமாக, ஆடம்பரமாக எழுப்புகின்ற இந்த நினைவுச் சின்னங்களை திருக்குர்ஆன்
மட்டுமே வன்மையாகக் கண்டிக்கிறது.
பொருளாதாரத்தை உரிய வழியில் செலவு செய்வதன் மூலம் மக்களை தற்கொலைச்
சாவிலிருந்து காப்பதுடன், வறுமையிலிருந்தும் அவர்களைக்
காக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இஸ்லாம் மட்டும் தான்.
EGATHUVAM MAR 2014