May 30, 2017

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

அஸ்மா பின்த் உமைஸ்

அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியக மாணவியர்

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணிகளில் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் ஒருவர். கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த இவர் ஜஃபர் இப்னு அபீதாலிபின் மனைவியாவார்.

இஸ்லாமிய வரலாற்றில் மக்காவிலிருந்து ஹபஷாவை நோக்கி ஒரு பயணம், மதீனாவை நோக்கி ஒரு பயணம் ஆகிய இரு ஹிஜ்ரத்கள் நடைபெற்றன. இவற்றில் இரண்டாவது ஹிஜ்ரத் தான் வரலாற்றில் பிரபலமானதாகத் திகழ்கின்றது.

ஆயினும் சத்திய அழைப்பின் வரலாற்றில் இரண்டும்  முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்த இரு ஹிஜ்ரத்களின் மூலமும் அஸ்மா (ரலி) அவர்கள் வரலாற்றில் சிறந்த பெண்மணியாகத் திகழ்கின்றார்கள்.

ஈமானை இழந்து, இணைவைப்பை ஆதரித்துத் தான் மக்காவில் உயிர் வாழவேண்டுமென்றால் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை தமக்குத் தேவையில்லை என்று கருதி இணைவைப்புக் கொள்கையை எதிர்ப்பதில் ஒரு வீரியமிக்க பெண்மணியாக அஸ்மா (ரலி) இருந்தார்கள்.

நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் தொடங்கி ஆறாம் ஆண்டின் துவக்கம் வரை நூற்றிற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஹபஷா நாட்டில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்களில் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும், அவர்களின் கணவர் ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்களும் அடங்குவார்கள்.

இவ்வாறே ஹபஷா நாட்டிற்குச் சென்ற முஸ்லிம்கள் ஏறத்தாழ 14 ஆண்டுகள் வரை அந்நியர்களாய் அங்கு வாழ்ந்து வந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் நபிகளாரும் முஸ்லிம்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அங்கு சென்ற முஸ்லிம்கள் பல யுத்தங்களைச் சந்தித்தார்கள். பத்ர், உஹத், அஹ்ஸாப் போன்ற போர்களை மேற்கொண்டார்கள். ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு கைபர் யுத்தமும் நடந்தது. இந்த நேரத்தில் தான் அபீசினியாவில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் மதீனாவிற்கு (இரண்டாம்) ஹிஜ்ரத் செய்தார்கள். கைபர் போரில் வெற்றியடைந்ததால் ஏற்கனவே மகிழ்ச்சியுடன் இருந்த முஸ்லிம்களுக்கு தங்கள் சகோதரர்கள் அபீசினியாவிலிருந்து மதீனா வந்து சேர்ந்ததால் மேலும் அளவிலா மகிழ்ச்சியை அடைந்தார்கள்.

அபூபுர்தா ஆமிர் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அவர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூருஹ்ம் ஆவார். நான்தான் அவர்களில் இளையவன் ஆவேன்’’ என்று கூறிவிட்டு, “என் (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடன் அல்லது ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்‘’ என்று (அபூமூசா (ரலி) அவர்கள்) கூறினார்கள். பிறகு பின்வருமாறும் குறிப்பிட்டார்கள்:

நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனாவை நோக்கி)பயணம் செய்தோம். எங்கள் கப்பல் (திசை மாறி) அபிசீனியாவின் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை இறக்கிவிட்டது. அங்கு ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும் அவர்களுடைய சகாக்களையும் நஜாஷீக்கு அருகில் சந்திக்க நேர்ந்தது. (ஏற்கெனவே அவர்கள் மக்காவிலிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்தனர்.)

அப்போது ஜஅஃபர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அனுப்பி (இங்கு) தங்கியிருக்கும்படி உத்தரவிட்டார்கள். நீங்களும் எங்களுடன் (இங்கேயே) தங்கிவிடுங்கள்’’ என்று கூறினார்கள்.

ஆகவே, நாங்களும் அவர்களுடன் (அபிசீனியாவில்) தங்கினோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட சந்தர்ப்பத்தில் நாங்கள் அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் (கைபர் போரில் கிடைத்த செல்வங்களில்) எங்களுக்கும் பங்கு கொடுத்தார்கள். கைபர் போரில் கலந்துகொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தரவில்லை; தம்முடன் அதில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே பங்கிட்டுத் தந்தார்கள்.

ஆனால், ஜஅஃபர் (ரலி) அவர்களுடனும் அவர்களுடைய சகாக்களுடனும் எங்களது கப்பலில் வந்தவர்களுக்கு மட்டும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

அப்போது மக்களில் சிலர் கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, “உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்து விட்டோம்’’ என்று கூறலானார்கள்.

-எங்களுடன் (மதீனாவுக்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார்.

ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு அருகில் அஸ்மா (ரலி) அவர்கள் இருந்தபோது, அங்கு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அஸ்மாவைக் கண்டபோது இவர் யார்?’’ என்று (தம் மகள்) ஹஃப்ஸாவிடம் கேட்டார்கள். இவர் அஸ்மா பின்த் உமைஸ்’’ என்று ஹஃப்ஸா பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “இவர் அபிசீனிய (ஹிஜ்ரத் கார)ரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள் ஆம்’’ என்று பதிலளித்தார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்துவிட்டோம். ஆகவே, உங்களைவிட நாங்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் (நெருக்கமானவர்கள்)’’ என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு அஸ்மா (ரலி) அவர்கள் கோபப்பட்டு, ஏதோ சொல்லிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: உமரே! நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (நீங்கள் கூறியதைப் போன்று) இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்களுக்கு அருகிலேயே) இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவருக்கு அவர்கள் அறிவூட்டினார்கள்.

நாங்களோ உறவிலும் மார்க்கத்திலும் வெகு தொலைவிலிருக்கும் அபிசீனிய நாட்டில் இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இவ்வாறு செய்தோம். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சொன்னதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்காமல் நான் எதையும் உண்ணவோ, பருகவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப் பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம்.

நான் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி அவர்களிடம் (நியாயம்) கேட்கப் போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன். திரித்துப் பேசவும் மாட்டேன்; நீங்கள் சொன்னதை விடக் கூட்டிச் சொல்லவும் மாட்டேன்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உமர் (ரலி) அவர்கள் இப்படி இப்படிச் சொன்னார்கள்’’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர், உங்களை விட எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவருடைய சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு)தான் உண்டு. (அபிசீனியாவிலிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவுக்கு ஒன்றும், மதீனாவுக்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு’’ என்று கூறினார்கள்.

அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூமூசாவும் அவர்களுடைய கப்பல் தோழர்களும் கூட்டம் கூட்டமாக என்னிடம் வந்து, இந்த ஹதீஸ் குறித்துக் கேட்பார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இந்தப் புகழுரையைவிட இந்த உலகத்தில் வேறெதுவும் அவர்களின் மகிழ்ச்சிக்குரியதாகவோ அவர்களின் மனதில் பெருமிதத்துக்குரியதாகவோ இருக்கவில்லை.

என்னிடம் அபூமூசா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

நூல்: முஸ்லிம் 4915

அந்நிய நாட்டில் அகதிகளாய் வாழ்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை ஒரு கணம் பெண் வர்க்கம் சிந்தித்து பார்க்க வேண்டும். தமது சொந்தத் தேவைகளுக்காகவோ, பொருளாதார இழப்பின் காரணமாகவோ அவர்கள் இந்நிலைக்கு ஆளாகவில்லை.

இறைநிராகரிப்பு, இணைவைப்பு என்ற படுபாதக செயலை விட்டு விலகி, ஏகன் ஒருவனே என ஏற்று, அவனைக் கலப்பற்ற முறையில் வணங்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே அவர்கள் ஹிஜ்ரத்தை (நாடு துறத்தலை) மேற்கொண்டார்கள்.

ஒரு ஆண் ஒரு ஊருக்குப் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் அவர்களுக்கென்று பெரிய அளவில் (லக்கேஜ்) ஏற்பாடுகள் தேவைப்படாது. உடுத்த உடையுடனே அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடலாம்.

ஆனால் இவ்வாறு பெண்கள் எடுத்த எடுப்பிலேயே எங்கும் செல்ல முடியாது. பல பிரச்சனைகளில் தவிக்க வேண்டிய சூழ்நிலைகள் அவர்களுக்கு ஏற்படும்.    உண்ண உணவு, உடுத்த உடை, தங்குவதற்கு பாதுகாப்பான இருப்பிடம் இவையனைத்தும் அவர்களுக்கு அவசியம்.

இவற்றையெல்லாம் எதிர்பார்த்தோ அல்லது அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டோ அவர்கள் ஹபஷாவிற்குச் செல்லவில்லை. எவ்வித அடிப்படையான வசதிகளும் இல்லாமல் தான் அவர்கள் ஹபஷாவிற்குச் சென்றார்கள்.

இருக்கின்ற வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு மாறும் போது அதிகம் எரிச்சலடைபவர்கள் பெண்களே! சமையலறை முதல் வீட்டு வாசல் வரை தொட்டதற்கெல்லாம் குறை காண்பவர்களும் பெண்கள் தான்.


இப்படி உலக விஷயங்களிலிலேயே தியாகம் செய்ய முன்வராத பெண்களுக்கு மத்தியில் மார்க்கத்திற்காக இரு முறை ஹிஜ்ரத் செய்த அஸ்மா பின்த் உமைஸிடமிருந்து இன்றைய இஸ்லாமியப் பெண்கள், மார்க்கத்திற்காக எதையும் தியாகம் செய்ய தயார் என்ற பாடத்தைக் கற்க வேண்டும். 

EGATHUVAM DEC 2016