புகாரியின் அறிவிப்பாளர்கள் பற்றிய அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பார்வை
ஹெச். முஹம்மது அலீ
ஏ. சபீர் அலீ
இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள்
தமிழ் பேசும் உலகிற்கு மத்தியில் ஏகத்துவ ஜோதி அல்லாஹ்வின் உதவியைக்
கொண்டு ஏற்றப்பட்ட பிறகு அது பட்டிதொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்து, தரம் கெட்ட தரீக்காக்களையும், மக்களை
மயக்கிய மத்ஹபுகளையும், அவர்களை மழுங்கடிக்கச் செய்த மண்ணறை வழிபாட்டையும், சீறிப் பாய்ந்த ஷியாயிசத்தையும், எகிறி வந்த காதியானியிசத்தையும் துவம்சம் செய்து மக்கிப் போன
சாம்பலாக மண்ணோடு மண்ணாக ஆக்கியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இறைவனுடைய உதவியும்
இறைவன் இறக்கிய ஆதாரங்களும் தான்.
ஆம்! கப்ரிலும், மத்ஹபிலும், தரீக்காவிலும், ஷியாயிசத்திலும், அஹ்லே குர்ஆனிலும், காதியானியிசத்திலும்
கலந்திருந்த சமுதாயத்தை ஏகத்துவத்தின் பக்கமும் தூதுத்துவத்தின் பக்கமும் சாய வைத்தது
திருமறைக்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும் தான்.
இத்தகைய மாபெரும் மாற்றத்தைத் தந்தவற்றில் அருள்மறைக்குப் பிறகு
உள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தொகுப்புகளில் மிகச் சிறந்து விளங்குவது ஸஹீஹுல் புகாரி
ஆகும்.
மிகப்பெரிய உழைப்பையும் தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியையும்
தியாகம் செய்த இமாம் புகாரி அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!.
உண்மையில், இந்தத் தொகுப்பை இயற்றுவதற்கு
அவர் மிகப்பெரிய முயற்சியையும், சிரமங்களையும் சுமந்தார் என்பதில்
எந்த ஓர் இறை நம்பிக்கையாளனுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால், உலகத்தில் எந்த மனிதன் இயற்றிய
புத்தகமாக இருந்தாலும் அதில் எந்தவொரு தவறுமே இருக்காது என்று வாதிட்டால் அது இறைவனுடைய
தன்மை அவருக்கு இருக்கிறது என்று வாதிடுவது போன்றாகிவிடும். ஏனென்றால் மறதிக்கும் தவறுக்கும்
அப்பாற்பட்டவன் இறைவன் மாத்திரம்தான்.
என்னுடைய இறைவன் மறக்கவும் மாட்டான் தவறிழைக்கவும் மாட்டான்.
(திருக்குர்ஆன் 20:52)
இம்மார்க்கத்தை இவ்வுலகிற்கு இறுதியாக எடுத்துரைக்க வந்த நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மறதி, தவறையெல்லாம் இறைவன் வைத்திருந்தான்.
அதைத் தமது தோழர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வுடைய தூதரே பிரகடனப்பத்தினார்கள்.
நான் உங்களைப் போன்ற மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்றே நானும்
மறக்கின்றேன்.
(நூல்: புகாரி 386)
அதே சமயம் அவர்கள் மறதியாகச் செய்தால் அதை இறைவன் தெளிவுப்புடுத்தி
விடுவான்.
அல்லாஹ்வின் தூதரே மறக்கக்கூடியவர்கள், தவறிவிடக்கூடியவர்கள் என்றால் ஏனைய மனிதர்களின் நிலை எங்கே?
அப்படியிருக்க, இன்று பெரும்பான்மையான
அறிஞர்கள் ஸஹீஹ் புகாரியில் அறிவிப்பாளர்கள் ரீதியில் எந்த பலவீனமும் இல்லை என்று நம்புவதை
நாம் பார்க்கின்றோம். இது இமாம் புகாரி அவர்களை மனிதத்தன்மையை விட்டு உயர்த்திவிடும்
பயங்கரமான செயலாகும்.
ஹதீஸ்களைப் பொறுத்தவரை திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போன்று
ஒட்டு மொத்த சமுதாயத்தாலும் சாட்சி சொல்லப்பட்டதன்று.
மாறாக, ஓரிரு அல்லது ஒரு சில நபித்தோழர்களால்
எடுத்து சொல்லப்பட்டவைகளாகும். நபித்தோழர்கள் என்பவர்கள் ஒருவராக இருந்தாலும் அவர்
சொல்லும் செய்தி சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் அந்த நபித்தோழரிடமிருந்து ஹதீஸைத் தொகுத்த இமாம் வரை
(உதாரணமாக புகாரி வரை) வருகின்ற அறிவிப்பாளர்களை எடை போட்டு பார்த்துவிட்டுத் தான்
அதை ஏற்க முடியும்.
நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு
இடமில்லை. ஆனால் அதற்கு அடுத்து வரக்கூடிய அறிவிப்பாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் கண்டிப்பாக
ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவர்களே.
இது போன்ற அறிவிப்பாளர்களைத் தம்மால் இயன்ற அளவு எடைபோட்டு, நல்லவர்கள் என்று தமக்கு உறுதியானவர்களைத் தான் புகாரி தம்முடைய
ஸஹீஹ் புகாரியில் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், அவரையும் அறியாமல் ஒரு சில அறிவிப்பாளர்களில்
சரியானவர் என்ற தகுதி இல்லாதவரையும் கொண்டு வந்திருக்கிறார்.
இது போன்ற அறிவிப்பாளர்களை ஹதீஸ் கலையில் தேர்ச்சிபெற்ற சில
இமாம்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஒருவர் ஒரு துறையில் எவ்வளவு பெரிய விற்பன்னராக
இருந்தாலும் சில இடங்களில் அவருக்கும் தவறுகள் நிகழ்ந்து விடும் என்பதே இயற்கையின்
நியதி. அதை விட்டு இமாம் புகாரியை மட்டும் விதிவிலக்காக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.
ஆகவே, புகாரியில் பதிவு செய்யப்பட்ட
ஒரு சில அறிவிப்பாளர்களை, ஹதீஸ் துறையில் தேர்ச்சி பெற்ற, இமாம் புகாரிக்கு முன்னோடியாக இருந்த சில இமாம்கள் தக்க காரணங்களோடு
விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
இவர்கள் இமாம் புகாரியின் அறிவிப்பாளர் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு
முன்பே அந்த அறிஞர்கள்கள் அவ்வாறு விமர்சனம் செய்திருக்கிறார்கள் என்பது யாராலும் மறுக்க
முடியாத உண்மை.
இது ஹதீஸ் கலை பற்றிய அறிவுள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்ககூடிய
விஷயமாகும்.
இமாம் புகாரி ஸஹீஹுல் புகாரியைத் தொகுத்தவுடன் ஹதீஸ் கலையில்
தலைசிறந்த இமாம்களான அஹ்மது இப்னு ஹம்பல், யஹ்யா இப்னு
மயீன், அலீ இப்னு மதீனீ ஆகிய ஹதீஸ் கலை விறபன்னர்களிடம் தன்னுடைய தொகுப்பை
எடுத்துக்காட்டி சரிபார்க்குமாறு வேண்டியபோது அவர்கள் அதில் நான்கு ஹதீஸ்களை விமர்சனம்
செய்தார்கள். (பார்க்க: ஃபத்ஹுல் பாரி முன்னுரை, பாகம்
1, பக்கம் 5)
இங்கு புகாரி இமாமிடத்திலேயே அவருடைய அறிவிப்பாளர்கள் விமர்சிக்கப்பட்டுள்ளார்கள்
என்ற உண்மையை நாம் காண்கிறோம்
அந்த அடிப்படையில் தற்காலத்தில் ஹதீஸ் துறையில் தேர்ச்சி பெற்றவரான
அறிஞர் அல்பானீ அவர்களும் இமாம் புகாரியின் சில அறிவிப்பாளர்கள் மீது ஹதீஸ்துறை விமர்சகர்களால்
எடுத்துச் சொல்லப்பட்ட விமர்சனங்களை ஆதாரமாகக் கொண்டு, அவர்கள் தனியாக அறிவிக்கும் பட்சத்தில் அவர்கள் பலவீனமானவர்கள்
என்ற ஆய்வை தக்க சான்றுகளோடு நம்முன் வைக்கின்றார்.
அறிஞர் அல்பானீ அவர்களால் இங்கே எடுத்துச் சொல்லப்படும் அனைத்து
விமர்சனங்களும் சரியானது தான் என்பது நமது நிலைபாடாக இல்லையென்றாலும் ஹதீஸ்துறையில்
பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புகாரியின் அறிவிப்பாளர்களில்
பலவீனமானவர்களும் இருக்கிறார்கள் என்பதை உறுதியாகச் சொல்கிறார் என்பதை மக்களுக்கு எடுத்துச்
சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறிஞர் அல்பானீ அவர்கள் விமர்சனம் செய்த புகாரியின் அறிவிப்பாளர்களில்
உதாரணத்திற்கு ஒருவரை இப்போது பார்ப்போம்.
அப்துர்ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு தீனார்
புகாரியில் 694, 1403, 2159, 2887, 2892 உட்பட இன்னும் சில இடங்களிலும் இவருடைய அறிவிப்பு இடம்பெறுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப் பற்றி அல்பானீயால் எடுத்துச் சொல்லப்பட்ட விமர்சனங்கள்:
"கண்ணில் காணாததை கண்டதாகக் கூறுவது மிகப்பெரும் பொய்யில் உள்ளதாகும்'' என்று நபியவர்கள் கூறியதாக புகாரி (7043) மற்றும் அஹ்மதில் (5453) பதிவுசெய்யப்பட்ட
ஹதீஸை விமர்சனம் செய்யும் போது அதில் உள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர்ரஹ்மான்
பின் அப்துல்லாஹ் பின் தீனாரைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
இந்த அப்துர்ரஹ்மான் என்பவர் புகாரியுடைய அறிவிப்பாளராக இருந்தாலும்
அவருடைய மனனத்தன்மையில் பலஹீனம் இருக்கிறது.
இந்த ஹதீஸைக் கூறியதற்குப் பிறகு ஹாஃபீழ் இப்னு ஹஜர் தனது ஃபத்ஹுல்
பாரி எனும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
இவர் மீது மாறுபட்ட விமர்சனம் உள்ளது.
"இவர் உண்மையாளர்'' என இப்னு மதீனீ
கூறுகிறார்.
"என்னுடைய கருத்துபடி இவருடைய ஹதீஸில் பலவீனம் இருக்கிறது'' என இப்னு மயீன் கூறுகிறார்.
"இவர் விஷயத்தில் புகாரி மற்ற அறிஞர்களுக்கு மாறுபடுகிறார். இவர்
விடப்படக்கூடியவராக இல்லை'' என தாரகுத்னீ கூறுகிறார்.
(என்னுடைய கருத்துப்படி இவருடைய ஹதீஸில் பலவீனம் இருக்கிறது)
என்ற தனது விமர்சனத்தை இப்னு மயீன் தெளிவுப்படுத்தவில்லை என்றும் இதன் மூலம் அவர் ஏதாவது
குறிப்பான ஒரு ஹதீஸை நாடியிருக்கலாம் எனறும் இப்னு ஹஜர் தெரிவிக்கிறார்.
மேலும் இமாம் புகாரி இவரை துனைச் சான்றாகத் தான் கொண்டு வந்திருக்கிறார்
என்றும் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்.
(அல்பானி கூறுகிறார்:) ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இத்துடன் மட்டும்
நிற்காமல் அதற்குரிய துணைச் சான்றைக் கொண்டு அதை வைத்து அந்த ஹதீஸையும் வலுப்படுத்துகிறார்.
அவ்வாறு துணைச் சான்றை அவர் கொண்டு வந்திருக்காவிட்டால் இப்னு ஹஜர் இமாம் புகாரிக்கு
முட்டுக் கொடுப்பது போதுமானதாக இருந்திருக்காது. இது விஷயத்தில் இமாம் புகாரிக்கு வரிந்து
கட்டிக் கொண்டு இப்னு ஹஜர் சார்ந்து நிற்பது மிக வெளிப்படையாகவே தெரிகிறது.
தஹ்தீப் எனும் நூலில் இந்த அறிவிப்பாளரைப் பற்றிய ஏனைய அறிஞர்களின்
விமர்சனங்களைத் தானே பதிவு செய்து விட்டு அவற்றைக் கண்டுக் கொள்ளாமல் ஹாஃபிழ் இப்னு
ஹஜர் கண்ணை மூடி இருந்து விட்டார்.
அந்த விமர்சனங்கள் வருமாறு:
"அவரிடம் பலவீனம் இருக்கிறது. அவரது ஹதீஸ் எழுதப்படும் ஆனால்
ஆதாரமாகக் கொள்ளப்படாது'' என அபூஹாதம் இமாம் கூறியுள்ளார்.
"இவருடைய சில அறிவிப்புகள் மறுக்கப்படக்கூடியவை. இவை துணைச் சான்றாகவும்
கொள்ளப்படாது. எவரது ஹதீஸ் எழுதப்பட்டு பலவீனமானவர்களுடைய பட்டியலில் சேர்க்கப்படுமோ
அப்படிப்பட்ட தரத்தில் உள்ளவராவார்'' என்று இப்னு
அதீ கூறியுள்ளார்.
இவை தஹதீபில் உள்ள விமர்சனங்களாகும். இவர் உண்மையாளர் அதே சமயம்
தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர் அவர்களே தனது தக்ரீபில் சுருக்கமாகக் கூறியுள்ளார்.
இவ்வாறே அல்பானீ அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும்
அல்பானீ அவர்கள் "காஷிஃப் எனும் நூலில் இந்தக் கருத்தையே தஹபீ இமாமும் சார்ந்திருக்கிறார்.
இது அல்லாத வேறு விமர்சனத்தை அவர் கூறவில்லை'' என தெரிவிக்கிறார்.
(நூல்: அஸ்ஸில்ஸிலத்துஸ் ஸஹீஹா - பாகம் 8, பக்கம் 19)
மேற்கூறப்பட்ட இமாம்களின் விமர்சனங்களைப் பார்க்க: தஹ்தீபுல்
கமால் - பாகம் 17,
பக்கம் 208.
மேலும் இதே அறிவிப்பாளர் மீது புகாரி 6478 ஹதீஸில் இடம்பெறும்
"ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக
(அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின்
அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை
சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர்
நரகத்தில் போய் விழுகிறார் நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்''
என்ற ஹதீஸை விமர்சனம் செய்யும் போது தன்னுடைய ஸில்ஸிலத்துல்
அஹாதீஸுல் ளயீஃபா என்ற புத்தகத்தில் (பாகம் 3, பக்கம் 463) மேலே எடுத்து சொன்ன விமர்சனங்களையும் இன்னும் சில விமர்சனங்களையும்
கூறிவிட்டுப் பின்வருமாறு அல்பானீ கூறுகிறார்.
இவர் விஷயத்தில் இனி
இன்னொரு ஆய்வாளர் ஆய்வு செய்வது அவசியமில்லாத அளவிற்கு மொத்தத்தில் அனைத்து இமாம்களின்
ஒன்றுபட்ட கருத்துப்படி இந்த அறிவிப்பாளர் பலஹீனமாகி விட்டார்.
மேலும் அதே பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அறியாத ஒருவர் அல்லது பொறாமைக்காரர் அல்லது (கெட்ட) உள்நோக்கம்
கொண்டவரோ, அல்பானீ ஸஹீஹுல் புகாரியிலேயே குறை சொல்லிவிட்டார் மேலும் புகாரியினுடைய
ஹதீஸை பலவீனமாக்கி விட்டார் என்று சொல்லாமல் இருப்பதற்காகவும் சுன்னத்தைக் காப்பதற்காகவும்
இந்த ஹதீஸைப் பற்றியும் அதன் அறிவிப்பாளரைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறேன்.
முந்தைய இன்னும் பிந்தைய காலக்கட்டத்தில் மனோ இச்சையைப் பின்பற்றக்கூடியவர்களுடைய
செயலைப் போன்று எனது அறிவைக் கொண்டோ அல்லது என்னுடைய சுயக்கருத்தைக் கொண்டோ (இது விஷயத்தில்)
நான் முடிவு சொல்லவில்லை.
மாறாக, இந்த அறிவிப்பாளர் விஷயத்தில், பலவீனமான ஹதீஸ்களையும் குறிப்பாக நம்பகமானவர்களுக்கு மாற்றமாக
இருக்கும் (ஹதீஸ்களையும்) மறுக்க வேண்டும் என்ற சங்கைமிக்க ஹதீஸ் கலையின் சட்டங்களையும், (ஹதீஸ்கலை)
அறிஞர்கள் கூறியதையும் தான் இங்கே நான் கடைப்பிடித்துள்ளேன்.
மேற்கூறப்பட்ட விமர்சனங்களின் மூலம் அப்துர்ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ்
இப்னு தீனார் என்ற இமாம் புகாரியினுடைய அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று அறிஞர் அல்பானீ
அவர்கள் எற்றுக் கொள்ளவில்லை என்பதும் இவர் விஷயத்தில் அவருடைய விமர்சனம் வெளிப்படையானது
என்பதும் தெளிவாகிறது.
எனவே புகாரியிலும் பலவீனமான ஹதீஸ்கள் இருக்கின்றன என்று தக்க
காரணங்களோடு நாம் விமர்சனம் செய்யும்போது சகட்டுமேனிக்கு நம்மை விமர்சனம் செய்பவர்கள்
அறிஞர் அல்பானீ அவர்கள் புகாரியினுடைய அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்யும் போது அவரையும்
சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்வார்களா? என்பதை நடுநிலைக்
கண்கொண்டு சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
EGATHUVAM JAN 2015