May 22, 2017

ஆய்வுக்கூடம் - மத்ஹபை இழிவுபடுத்தும் மவ்லானாக்கள்

ஆய்வுக்கூடம் - மத்ஹபை இழிவுபடுத்தும் மவ்லானாக்கள்

கடந்த டிசம்பர் மாத மனாருல் ஹுதா இதழைப் பார்க்க நேர்ந்தது. அதில் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பகுதியான மௌலானா பதில்கள் எனும் பகுதியைப் படிக்கும் போது கேள்விகளுக்குப் பதிலளிப்பது மௌலானாக்கள் தானாஎன்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அந்த அளவு அதில் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் குர்ஆன், சுன்னா ஒளியில் பதிலளிக்கப்படுவதில்லை என்பதோடு பதில்கள் அனைத்தும் கோமாளித்தனமானதாகவும், மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளன.

இதுநாள் வரை அவர்கள் அளிக்கும் பதில்கள் யாவும் மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் தான் இருந்தன என்றால் மௌலானா வெளியிட்டிருக்கும் இந்த அரிய மார்க்க தீர்ப்பு அவர்கள் கொண்டிருக்கும் - ஆதரிக்கும் மத்ஹபையே இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. அந்தத் தீர்ப்பு வருமாறு:

கேள்வி: ஷாஃபியி மத்ஹபினர் ஹஜ், உம்ரா செல்லும் போது எந்த நிய்யத்தில் செல்ல வேண்டும்? ஏனெனில் அங்கு கூட்ட நெரிசலில் பெண்கள் மீது கைப்பட்டு ஒளூ முறிய வாய்ப்புள்ளதே விளக்கம் தரவும்?

பதில்: எல்லா சமயத்திலும் தத்தமது மத்ஹபை உறுதியாகப் பின்பற்றுவதே சிறந்ததாகும். எனினும் ஹஜ், உம்ரா போன்ற காலங்களில் கூட்ட நெரிசலில் பெண்கள் மீது கை பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பட்டால் ஷாஃபி மத்ஹபின் படி உளூ முறிந்து விடும். இது மிகவும் சிரமம் என்பதால் அப்போது வேறு மத்ஹப் படி அமல் செய்து கொள்ள அனுமதி உண்டு.

ஒருவர் பெண்ணைத் தொட்டால் அல்லது தன்னையும் அறியாமல் அவரது கை பெண்ணின் மீது பட்டு விட்டால் அவரது உளூ முறிந்து விடும் என்பது ஷாஃபி மத்ஹபின் சட்டம். ஹனஃபி மத்ஹபின் படி உளூ முறியாது.

இந்நிலையில் ஷாஃபி மத்ஹப்காரர் ஹஜ்ஜில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர் எந்த நிய்யத்தில் ஹஜ் செய்ய வேண்டும் என்று ஒருவர் எழுப்பும் வினாவிற்கு மௌலானா அளித்த பதில் தான் இது.

பொதுவாக தாம் கொண்ட மத்ஹபில் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் இது போன்ற சூழ்நிலையில் மத்ஹபு மாற வேண்டியது தான் வேறு வழியில்லை என்ற பாணியில் (மௌலானாவிற்கும் வேறு வழியில்லாததால்) பதில் அளித்துள்ளார்.

பெண்களைத் தொட்டால் உளூ முறிந்து விடும் என்பது குர்ஆன், ஹதீஸிற்கு எதிரான, தவறான நிலைப்பாடாகும். அவ்வாறு எங்கும் சொல்லப்படவில்லை. மேலும் நபிகள் நாயகம் அவர்கள் உளூவுடன் பெண்ணை (தம் மனைவியை) தொட்டு விட்டுப் பிறகு உளூ செய்தார்கள் என்று எந்தச் செய்தியும் கிடையாது. மாறாக தொழுகையிலேயே அன்னை ஆயிஷா அவர்களைத் தொட்டிருக்கிறார்கள் என்பதற்குத் தான் ஆதாரப்பூர்வமான பல செய்திகள் உள்ளன.

(பார்க்க: புகாரி 382)

பெண்ணைத் தொடுவதால் உளூ முறியாது என்பது தொடர்பாக முன்னரே விரிவாக நாம் எழுதியுள்ளோம். இதுதொடர்பான ஆய்வுகளை கீழ்க்கண்ட இணையதள முகவரிகளில் காணலாம்.

 http://www.onlinepj.com/Quran#pj#thamizakkam#thawheed/vilakkangal#new/363_pengalai_thottal_uloo_neenguma

 http://www.onlinepj.com/books/tholugai

இது பன்னெடுங்காலமாக நாம் பிரச்சாரம் செய்துவரும் ஒன்று தான்.

இதில் கூடுதலாக கவனிக்க வேண்டிய அம்சம், தங்களது இந்த மார்க்கத் தீர்ப்பு மூலம் அவர்கள் தங்கள் மத்ஹபையே கேலிப்பொருளாக்கி உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

பெண்ணைத் தொட்டால் உளூ முறியுமா என்பதில் ஷாஃபி மத்ஹபினருக்கு ஒரு சட்டமாம். ஹனஃபி மத்ஹபினருக்கு ஒரு சட்டமாம்.

உளூ முறியும் என்பதும் முறியாது என்பதும் முரண்பாடான இரு சட்டங்களாகும். இரண்டில் ஒன்று தான் சரியானதாக இருக்கும். மற்றொன்று தவறானதாக இருக்கும்.

பெண்ணைத் தொட்டால் உளூ முறிந்து விடும் என்ற கருத்து தவறானது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் நபிவழியில் நிறைந்துள்ளன.

அப்படி என்றால் மௌலானா (?) என்ன பதிலளித்திருக்க வேண்டும்?

இது சரி, இது தவறு என வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்பது போன்று அவரது பதில் அமைந்திருக்க வேண்டும். அதற்குரிய குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆதாரங்களாக அடுக்கியிருக்க வேண்டும்.

ஆனால் அவரோ நீங்கள் ஷாபி மத்ஹபா? அப்படி என்றால் ஹஜ், உம்ராவின் போது மட்டும் ஹனபி மத்ஹபுக்குக் கட்சி மாறிக் கொள்ளுங்கள் என்கிறார்.

இது என்ன கோமாளித்தனமான தீர்ப்பு? பொதுவாக மத்ஹபில் உறுதியாக இருக்க வேண்டுமாம். அதேவேளை ஹஜ், உம்ராவின் போது மட்டும் கொள்கையற்று மத்ஹபிலிருந்து மாறிக் கொள்ள வேண்டுமாம். பிறகு மறுபடியும் தன் மத்ஹபிற்குத் திரும்பி வந்து, மீண்டும் அதில் உறுதியாக இருக்க வேண்டுமாம்.

இந்தத் தீர்ப்புக்கு அடிப்படையாக இருந்த குர்ஆன், மற்றும் ஹதீஸ்களைக் குறிப்பிடுவாரா?

அப்படியே நபிகள் நாயகம் எந்த மத்ஹபின் அடிப்படையில் ஹஜ், உம்ரா செய்துள்ளார்கள் என்பதையும் சேர்த்து மௌலானா விளக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறோம்.

அதேவேளை ஹஜ்ஜின் போது பெண்கள் மீது நம்மையும் அறியாமல் கை படாமல் இருப்பது சாத்தியமானது அல்ல என்பதையும் குறிப்பிடுகிறார்.

யாருக்கும் சாத்தியமில்லாத ஒன்றை நபிகள் நாயகம் எப்படிப் போதித்திருப்பார்கள் என்பதையும் சிந்திக்கத் தவறிவிட்டார்.

இப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு கேலிக்கூத்தாக பதிலளிப்பதையே அன்றாட வழக்கமாக்கியுள்ள இந்நிலையில் மனாருல் ஹுதா இதழ் மற்ற பத்திரிக்கைகள் போன்று கிடையாதாம். அதில் இடம் பெறும் அனைத்து தகவல்களையும் மக்கள் உண்மையாகப் பார்க்கும் உன்னத நிலையில் மனாருல்ஹுதா இருக்கிறதாம். இப்படி கிச்சுகிச்சு வேறு மூட்டுகின்றனர்.

இவர்கள் இது போன்ற கேலிக்கூத்தான தீர்ப்புகளை அளிப்பதற்கு அடிப்படைக் காரணம் குர்ஆன், ஹதீஸ் என்ற இறைவனின் வழிமுறையை விட்டும் விலகி இமாம்களின் வழிமுறையைப் பின்பற்றுவதே ஆகும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

திருக்குர்ஆன் 4:59

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு சொல்ல முன்வந்தால் எல்லாவற்றுக்கும் தெளிவான, குழப்பமற்ற பதில்களைச் சொல்ல இயலும். அதைவிடுத்து மனிதர்களின் கருத்தை நாடினால் இப்படி குழப்பங்கள் தான் மிஞ்சும்.


இவர்களும் நாமும் மதிக்கும் இமாம்களும் அதையே போதித்துள்ளார்கள் என்பதை மனாருல் ஹுதா மௌலானாவிற்கு (?) நினைவூட்டிக் கொள்கிறோம்.

EGATHUVAM JAN 2015