May 14, 2017

விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்

விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்

திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான் துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இத்துடன் மார்க்கம் பெண்களுக்கு விதித்திருக்கின்ற புர்கா போன்ற வரைமுறைகளை, வரம்புகளைத் தாண்டி சந்திப்புகளும் சங்கமங்களும் திருமண வீட்டில் நடைபெறுகின்றன.

அண்ணியிடமும், கொழுந்தியாவிடமும் ஆண்கள் இரட்டை அர்த்த வார்த்தைகளில் கிண்டல் செய்வது, பதிலுக்குப் பெண்களும் மச்சான், கொழுந்தன் என்று அதே பாணியில் கிண்டல் செய்கின்ற அநாகரீகக் காரியங்களும் நடக்கின்றன. போதாக்குறைக்கு வீடியோ கேமராக்கள் கல்யாண வீடுகளில் புகுந்து வெறித்தனமாக விளையாடுகின்றன.

கல்யாண வீடு என்றதும் வீட்டிலுள்ள பெண்களும், வெளியிலிருந்து வரும் பெண்களும் தங்களுடைய உயர் ரக பட்டாடைகளை உடுத்தி ஒப்பனை செய்துகொள்வார்கள். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொள்வார்கள். கூந்தலுக்குப் பூச்சூடிக் கொள்வார்கள். கழுத்துகளிலும் காதுகளிலும் விலையுயர்ந்த நகைகளை அணிந்து கொள்வார்கள். மொத்தத்தில் அழகுப் பதுமைகளாகக் காட்சியளிப்பார்கள். அவர்களின் பிம்பங்களை வீடியோ கேமராக்கள் வளைத்து வளைத்துப் படம் பிடிக்கின்றன.

வீட்டுப் பெண்கள் வீதியில் நிற்கும் உணர்வில் இருக்க மாட்டார்கள். மேனியை விளம்பரப்படுத்தும் மெல்லிய சேலைகளில் இருப்பார்கள். சகஜமாகவும், சர்வசாதாரணமாகவும் வீட்டில் அங்கிங்கென்று அலைவார்கள். குனியும் போதும் நிமிரும் போதும் அவர்களுடைய அங்க அவயங்களிலிருந்து ஆடைகள் அடிக்கடி விலகிக் கொண்டிருக்கும். இந்தக் காட்சிகளை வீடியோக்கள் ஒன்று விடாது பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

வீடியோக்காரனின் வேட்டை இத்துடன் நின்று விடுவதில்லை. வீடியோ மையத்தில் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து அதை சி.டி. ஆக்கும் போது அங்குள்ள பணியாளர்களின் பார்வைகளுக்கும் பெண்களின் அழகு மேனிகள் பலியாகின்றன. ஸ்லோமோஸனில் அவர்கள் பெண்களை நிறுத்தி, நிறுத்தி தங்களின் விழிகளால் வேட்டையாடித் தள்ளுகின்றனர்.

வீட்டுப் பெண்களை இப்படி அடுத்தவருக்கு அந்நியருக்கு வேட்டைக் களமாக்கலாமா? விருந்தாக்கலாமா? உடல் கூச வேண்டாமா?

மாப்பிள்ளையின் நண்பர்கள் என்ற பெயரில் அந்நியர், அயலார்களும் உறவினர் என்ற போர்வையில் ஊரார்களும் ஊதாரிகளும் தங்களது மொபைல் போன்களில் மணமகள் உட்பட நமது அக்கா, தங்கைகள் உள்ளிட்ட அனைத்து பெண்களையும் நம் கண் முன்னால் கையோடு கையாக களவாடிச் செல்கின்றனர்; கவர்ந்து செல்கின்றனர்.

இதைவிட மிகக் கொடுமையான விஷயம் அண்ணன் தம்பிமார்களே தங்கள் அக்கா தங்கைகளை, மனைவிமார்களை அந்நியர்களுக்கு இணைய தளத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பில் காட்டுகின்றனர்.

வெளியார் பார்வை வீட்டுக்குள் பாயக்கூடாது, பதியக்கூடாது என்பதற்காக வீட்டுவாசலில் திரைபோடும் இந்த அறிவாளிகள் வானமேறிப் பறக்கும் ஊடகத்தின் வாயிலாக தங்கள் குடும்பப் பெண்களை மானமேறச் செய்கின்றனர்.

வெளியாட்களின் வெறிப்பார்வைக்கும் வேற்றுப் பார்வைக்கும் தங்களின் வீட்டுப் பெண்களை விருந்தாக்குகின்றனர்.

ஆண்களாகிய இவர்களுக்கும் வெட்க உணர்வு, ரோஷ உணர்வு எல்லாம் வெந்து சாம்பாலாகிவிட்டது போல் தெரிகின்றது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரை(க் கண்டிக்காதீர்கள்;) (விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கம் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 24

ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு வெட்கம் என்பது அவனது நாடி நரம்புகளுடன் பின்னிப் பிணைந்தது என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

ஆனால் இவர்களுக்கோ இந்த வெட்க உணர்வுகள் இறை மறுப்பாளர்களைப் போன்று அத்தனையும் மழுங்கி, மாயமானவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது. இத்தகையவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற, விடுக்கின்ற எச்சரிக்கையை இங்கே நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 24:19

அத்துடன் அடுத்தவரின் காம விழிகளுக்குக் காட்சியாகும் பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை இதோ:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.  ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.  இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள்.  அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும்.  ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 3971

இந்தக் காட்சிகளைக் கண்டு ரசிக்கின்ற ரசிகர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை:

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

அல்குர்ஆன் 40:19

முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்


அல்குர்ஆன் 41:20

EGATHUVAM NOV 2013