May 15, 2017

நித்திய ஜீவனை நினைவுபடுத்தும் நிழல்

நித்திய ஜீவனை நினைவுபடுத்தும் நிழல்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

கோடை வெயில் அனலை அள்ளிக் கொட்டுகிறது. பாதைகளில் பயணிக்கும் மக்கள், அடிக்கடி அதன் ஓரத்தில் நிம்மதி நாடி நிழல் தேடி ஓய்வுக்காக ஒதுங்குகிறார்கள். சாமானியர்கள், செல்வச் சீமான்கள் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் தங்களது சக்திக்கேற்ப, வாட்டியெடுக்கும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வசதிகளின் பக்கம் படையெடுக்கிறார்கள்.

கடைத்தெருக்களுக்கு வழக்கமாக வெளியே வந்து செல்கின்றவர்களை விட அதிகமான மக்கள், வெயிலின் காரணமாக மின்விசிறிகளுக்குக் கீழே முடங்கிக் கிடக்கிறார்கள். நிழலின் அருமை வெயிலிலே தெரியும் எனும் பழமொழியை நாமெல்லாம் தெரிந்து வைத்திருப்போம். இருப்பினும், அதன் உண்மையான விளக்கத்தை அதன் அருமையை இப்போது நாம் அனுபவ ரீதியாக உணர்கிறோம்.

வெயிலின் வெப்பம் வேகமாகத் தாக்குவதால் தேகம் வியர்வையைச் சிந்திச் சிந்தி சோர்வடைந்து விடும். இந்தத் தருணத்தில், நிழல் தொடர்பாக மார்க்கம் கூறும் செய்திகளைத் தெரிந்து கொள்வோம். குர்ஆன் ஹதீஸ் நிழலில் பயணத்தைத் தொடர்வோம்.

நிழலும் அருட்கொடையே!

நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நித்திய ஜீவனான அல்லாஹ்வே இந்த நிழலை ஏற்படுத்தியிருக்கிறான். வெறும் வெயிலை மட்டும் கொடுத்து நம்மை வேதனையில் தள்ளிவிடாமல் அதிலிருந்து இதமளிக்கும் நிழலையும் தந்து அவன் நம் மீது கருணை மழையைப் பொழிந்திருக்கிறான். நமது நலனுக்காக அவன் அளித்திருக்கும் அளவிலா அருட்கொடைகளில் இந்த நிழலும் உள்ளடங்கும்.

இந்த உலகத்தில் தரப்பட்டிருக்கும் இன்பங்களைப் பற்றி மறுமைநாளில் விசாரிக்கும் போது, நிழல் தொடர்பாகவும் நம்மிடம் விசாரிக்கப்படும், அலை அலையாய் வரும் ஆதவனின் அக்னி கதிர்கள் ஆவேசமாக தீண்டும் வேளையில் நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த நிழல் இன்பத்தைப் பற்றியும் நிச்சயமாக நாம் பதில் சொல்லியாக வேண்டும். வெயிலின் போது பல்வேறு விதமான நிழல்களில் இளைப்பாறும் நாம் இதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

தான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான்.

(திருக்குர்ஆன் 16:81)

ஒருநாள் பகல் அல்லது இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் பசியின் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து அன்சாரித் தோழர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்றார்கள். வீட்டிற்கு வந்த மூவரையும்  அந்த அன்சாரித் தோழரான) அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் தமது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்காக அவர் ஒரு பாயை விரித்தார். பிறகு பேரித்தம் மரங்கள் நோக்கிச் சென்று ஒரு குலையை கொண்டு வந்து வைத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "எங்களுக்காக கனிந்த பேரித்தம் பழங்களை பறித்திருக்கக் கூடாதா?" என்று கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! செங்காய் மற்றும் கனிந்த பேரித்தம் பழங்களில் இருந்து தேர்வு செய்யவே நாடினேன்'' என்று கூறினார். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். (அன்சாரித் தோழர் குடிப்பதற்காகக் கொண்டு வந்த) அந்த நீரைப் பருகினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! குளிர்ந்த நிழல், கனிந்த பழம், குளிர்ச்சியான நீர் இதுவும் அருட்கொடைகளில் உள்ளதாகும். இது பற்றியும் மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்'' என்று கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

ஆதாரம்: திர்மிதீ (2292), முஸ்லிம் (4143)

படைத்தவனுக்குப் பணியும் நிழல்

காலையிலும் மாலையிலும் வெவ்வேறு திசையில் நிழல் விழுவதைப் பார்க்கிறோம். எந்தவொரு காரணமும் இல்லாமல் நிழல் விழுவதாக நாம் நினைத்துவிடக் கூடாது. அனைத்துப் படைப்பினங்களும் படைப்பாளனான அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டுப் பணிகின்றன. அவன் விதித்தபடி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் நிழலும் ஒரு அங்கம். எந்த நேரத்தில் எப்படி விழவேண்டும் என்று வல்ல இறைவன் செயல்திட்டம் வகுத்தானோ அதன்படி அங்குலம் மாறாமல் அப்படியே அடிபணிகிறது நிழல்.

இறைவனுக்கு மாறுசெய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும் மனித இனம் இதைப் பற்றிச் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அப்படிச் சிந்தித்தால் நாம் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம். இதோ, இறைவனே இறைமறையில் கேள்வியைத் தொடுக்கிறான் பாருங்கள்.

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

(திருக்குர்ஆன் 13:15)

அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அவர்கள் பார்க்கவில்லையா? அதன் நிழல் வலம் மற்றும் இடப்புறங்களில் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன.

(திருக்குர்ஆன் 16:48)

நிழலை நிலையாக்கும் வல்லவன்

சூரியன் எந்தத் திசையில் இருக்கிறதோ அதற்கு எதிர் திசையில் நிழல் தோன்றும். இதன் மூலம் நிழல் ஏற்படுவதற்கு சூரியனே காரணமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படியான திட்டமிடப்பட்ட கச்சிதமான ஏற்பாட்டிற்குச் சொந்தக்காரன் ஏக இறைவன் ஒருவனே என்பதை எவரும் மறுக்க இயலாது.

தம்மை இறைவன் என்று சொல்பவர்களும் அல்லது தமக்கும் இறைவனின் ஆற்றல் இருக்கிறது என்று வாதிடுபவர்களும் இந்த நிழலுக்குச் சொந்தம் கொண்டாடும் அருகதை அணுஅளவும் அற்றவர்கள் என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள். அந்த இறைவன் நினைத்தால் நிலைமாறும் விதத்தில் வைத்திருக்கும் நிழலை நிலையானதாக ஆக்கிவிடுவான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவன் நினைத்தால் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த உலகையும் நிழல் கொண்டதாக மாற்றமுடியும். இன்னும் ஏன்? ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிழலை நிரந்தரமாக வைக்கவும் முடியும். இதற்கான சான்றுகளைக் காண்போம்.

உமது இறைவன் எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்பதை நீர் அறியவில்லையா? அவன் நினைத்திருந்தால் அதை நிலையானதாக ஆக்கியிருப்பான். சூரியனை அதற்கு ஆதாரமாக ஆக்கினோம். பின்னர் அதை நம்மளவில் இலேசாகக் கைப்பற்றிக் கொள்வோம்.

(திருக்குர்ஆன் 25:45)

(பனூ இஸ்ராயீல் சமுதாயமாகிய) உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். "நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!'' (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

(திருக்குர்ஆன் 2:57)

(பனூ இஸ்ராயீல் சமுதாயமான) அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமுதாயத்தினர் அவரிடம் தண்ணீர் கேட்ட போது "உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!'' என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம். "உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!'' (என்று கூறினோம்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்கே தீங்கிழைத்தனர்.

(திருக்குர்ஆன் 7:160)

உஹுதுப்போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது.  அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன்.  எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்துவிட்டனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன்.  மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிரேதத்தை  தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (பிரேதம்) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் "யார் அந்தப் பெண்?'' என்று கேட்டார்கள். "அம்ருடைய மகள்'' என்றோ  அல்லது "அம்ருடைய சகோதரி'' என்றோ (கூடியிருந்தோர்) கூறினர்.  நபி (ஸல்) அவர்கள் "நீ ஏன் அழுகிறாய்?'' அல்லது "நீ அழ வேண்டாம்''  என்று கூறிவிட்டு, "பிரேதம் தூக்கப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து அதற்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

ஆதாரம்: புஹாரி (1293), (1244), (2816), (4080), முஸ்லிம் (4875), (4876)

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்கüடம், "(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்கüலேயே மிகக் கடுமையானது "அகபா'' (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலüக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். "கர்னுஸ் ஸஆலிப்'' என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, "உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அüத்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடு வதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்கüடம் அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, "முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)'' என்று கூறினார். உடனே, "(வேண்டாம்) ஆயினும், இந்த (நகரத்து) மக்கüன் சந்ததிகüல் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)'' என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

ஆதாரம்: புஹாரி (3231), முஸ்லிம் (3674)

நிழலற்ற நாளில் நிழல் பெறுவோர்

பூமியில் குறிப்பிட்ட காலம் வாழும் நமக்கு, சுட்டெரிக்கும் சூரியனின் செங்கதிர்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு ஏக இறைவன் நிழலைக் கொடுத்திருக்கிறான். ஆனால் ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிந்து, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, அவன் முன்னால் அடிமைகளாய் அனைவரும் மஹ்ஷர் மைதானத்தில் ஒன்றுதிரட்டப்பட்டு நிற்கும் அந்த மறுமை நாளின் போது. அவனது நிழல் தவிர வேறெந்த நிழலும் இருக்காது. மரங்களோ செடி கொடிகளோ கட்டிடங்களோ நிழல் கொடுக்கும் எந்தவொன்றும் இருக்காது.

அப்போது, அந்த அதிபதியின் நிழலில் சில வகையான பண்புகள் கொண்ட மனிதர்கள் மட்டும் இருப்பார்கள். வேறு நிழலற்ற அந்த நாளில் மற்றவர்களின் நிலையை குறித்து யோசிப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது இல்லையா? எனவே. இங்கு நிம்மதியளிக்கும் நிழலைக் கொடுத்ததற்காக நாம் தினந்தோறும் தவறாது ஏக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவன் நம்மீது காட்டும் கருணையை இரக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவனது ஆற்றலை உணர்ந்து அவன் சொன்னபடி வாழ வேண்டும்.

அல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாüல் ஏழு பேருக்கு நிழலில் (அடைக்கலம்) அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்üவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் "நான்      அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்'' என்று கூறியவர். 6. தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

ஆதாரம்: புஹாரி (660), (1423), (6806), முஸ்லிம் (1869)

அல்லாஹ் மறுமை நாளில், "என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்'' என்று கூறுவான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி),

ஆதாரம்: முஸ்லிம் (5015)

உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

...பிறகு அபுல்யசர் (ரலி) அவர்கள் தம் கண்கள்மீது இரு விரல்களை வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: இந்த என்னிரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப் பகுதியில் கையை வைத்து) இந்த உள்ளம் மனனமிட்டது. பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான்.

ஆதாரம்: முஸ்லிம் (5736)

நிழல் நிறைந்த சொர்க்கம்

நம்பிக்கைக் கொண்டு, நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கத்தைத் தருவதாக இறைவன் வாக்குறுதி வழங்கியிருக்கிறான். அத்துடன், அந்தச் சொர்க்கத்திற்கு செல்வதற்கேற்ப செயல்படுவதில் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக அதன் தன்மையை, அதில் இருக்கும் இன்பங்களைத் திருமறையில் வல்ல இறைவன் குறிப்பிட்டுள்ளான்.

ஆறுகள், சோலைகள், கனிகள் என்று அங்கு இருக்கும் இன்பங்களைக் குறிப்பிடும்போது நிழலைப் பற்றிப் பல இடங்களில் பேசுகிறான். இங்கு இருப்பது போன்று இல்லாமல் சொர்க்கத்தில் இருக்கும் நிழலானது நீண்டதாகவும் நிலையானதாகவும் மிகச் சிறந்ததாகவும் இருக்கும் என்று எடுத்துரைக்கிறான். அத்தகைய நிழல்களில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள் என்றும், அவர்களுக்காகவே அந்த நிழல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வல்ல இறைவன் குறிப்பிடுகிறான். இவ்வாறு, சொர்க்கத்தின் இன்பங்களில் நிழல் என்பது முக்கிய ஒன்றாக  இருக்கும் என்பதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.  (திருக்குர்ஆன் 4:57)

(இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதன் உணவும், நிழலும் நிரந்தரமானதாக இருக்கும். இதுவே (இறைவனை) அஞ்சுவோர்க்கான முடிவாகும். (ஏக இறைவனை) மறுப்போரின் முடிவு நரகமே.

(திருக்குர்ஆன் 13:35)

அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள். அவர்களும், அவர்களது துணைகளும்  கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும். ஸலாம்! இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்றாகும்.

(திருக்குர்ஆன் 36:55-58)

(அடுத்தது) வலது புறத்தில் இருப்பவர்கள்! வலது புறத்தில் இருப்போர் என்பது என்ன? அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியிலும், குலைகள் தொங்கும் வாழை மரத்தினடியிலும், நீண்ட நிழல்களின் அடியிலும், ஓட்டி விடப்படும் தண்ணீருக்கு அருகிலும், தடுக்கப்படாத, தீர்ந்து போகாத, ஏராளமான கனிகளுக்கு அருகிலும் உயரமான விரிப்புகளின் மீதும் இருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 56:27-40)

எனவே, அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள். அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும்.

(திருக்குர்ஆன் 76:11-17)


இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM MAY 2014