May 14, 2017

கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா?

கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா?

ஸீனத், அல்இர்ஷாத் மகளிர் கல்வியகம், மேலப்பாளையம்

தமிழகத்தில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஏகத்துவம் என்ற ஜோதி சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கின்றது. எங்கு நோக்கினும் ஆர்ப்பரிக்கும் ஏகத்துவ சொந்தங்கள்.

அறியாமை காலம் என்ற இருட்டிலிருந்து சத்திய கொள்கையின் பக்கம் நம்மை இழுத்துக்கொண்டு வந்த இந்த ஏகத்துவம் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்திய விஷயங்கள் ஏராளம். இணைவைப்பு என்ற மாபெரும் அக்கிரமத்திலிருந்தும் வட்டி, வரதட்சணை போன்ற பெரும் பாவங்களிலிருந்தும் நம்மை வெளியேற்றி தொழுகை, நோன்பு, தர்மம்  மற்றும் சமுதாய பணிகள் போன்ற பல சிறப்பம்சங்களுடன் தனக்கே உரிய பாணியில் சமுதாயத்தில் இந்த ஏகத்துவம் தனி மதிப்பைப் பெற்றுத் திகழ்கின்றதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

மேலும் ஆர்ப்பாட்டக் களத்தில் ஆர்ப்பரிக்கும் கோஷங்களை எழுப்புவோரும், வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசல்களின் அனைத்து மூலைகளையும் நிரப்பி தெருக்களிலும், ரோடுகளிலும் நின்று தொழுவோரும் பள்ளிவாசல்களே கதி என்று முழுக்க முழுக்க பள்ளிவாசலில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோரும் என சிறுவர்கள் முதல் 60 வயதுக்கும் மேற்பட்டோர் வரையிலான ஏகத்துவவாதிகளை அன்றாடம் சந்திக்கின்றோம். இவர்களின் செயல்பாடுகள் நம்மை அறியாமலேயே நம்மை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றது என்றால் அது மிகையல்ல!

இக்கட்டத்தில் நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் தங்களுடைய அந்தரங்கமான மற்றும் வெளிப்படையான சுயவாழ்க்கையை ஏகத்துவத்தின் அடிப்படையில் தான் கொண்டு செல்கின்றார்களா? தங்களுடைய அனைத்துக் காரியங்களிலும் மார்க்கத்திற்கு முன்னுரிமை அளிகக்கின்றார்களா? என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம். நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வோம்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனுக்குத் திருப்புமுனையாக அமைவது அவனுடைய திருமணம் தான். அவன் சத்தியத்தில் இருக்கின்றான் என்பதை மற்றவர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டக் கூடியதும் திருமணம் தான். இந்தத் திருமண விஷயத்தில தான் ஒரு ஏகத்துவவாதிக்கு ஏற்படக்கூடிய சோதனைகள் எத்தனை? அவையனைத்தையும் அவன் தாண்டி, தன்னை ஏகத்துவவாதியாக நிரூபிப்பது இந்தச் சமுதாயத்தில் சிரமமான நிலையாகிவிட்டது.

கொண்ட கொள்கையில் கடுகளவும் தயவு தாட்சண்யமில்லை என்று கூறியவனை, திருமணத்திற்குப் பின் பள்ளியிலோ, மார்க்க நிகழ்ச்சிகளிலோ அல்லது ஆர்ப்பாட்டங்களிலோ காண முடியவில்லை. காரணம் அந்தத் திருமணத்தில் சறுக்கி விழுந்தவன் தான். இன்னும் எழவில்லை.

கொண்ட கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு மஹர் கொடுக்க வேண்டிய மணமகன் வரதட்சணை வாங்கிக் கொண்டு, பெண் வீட்டாரின் சகல விருந்துகளிலும் கலந்து கொண்டு, அனைத்து அன்பளிப்புகளையும் பெற்றுக் கொண்டு தன்னுடைய வெட்கம், மானம் அனைத்தையும் அடகு வைத்து விட்டு இணை வைக்கும் பெண்ணைக் கரம் பிடிக்கின்றான். இவர்களும் தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

இன்னும் சிலர், அந்த அளவிற்கு மோசமாக இறங்க மாட்டோம் என்று சவடால் பேசிக் கொண்டு, மஹர் கொடுத்து, பெண் வீட்டு விருந்துகளைப் புறக்கணித்து, பணக்கார வீட்டில் பெண் எடுத்து, கேட்காமலேயே நகைகளையும் இன்னபிற பொருட்களையும் சீதனமாகப் பெற்று, தான் விரும்பிய இணை வைக்கும் பெண்ணைக் கரம்பிடிக்கிறார். இப்படி தன் கணவன் தன்னைத் திருமணம் முடித்ததினால் அப்பெண் திருமணத்திற்குப் பிறகு தன்னை ஏகத்துவவாதியாகப் பிரகடனப்படுத்துவதில்லை.

"நீ உன் விருப்பப்படி மஹர் கொடுத்து, விருந்துபச்சாரமில்லாமல், வரதட்சணை வாங்காமல் திருமணம் முடித்துக் கொள். ஆனால் எவளையோ ஒருத்தியை மருமகளாகக் கொண்டு வருவதை விட என் அக்கா தங்கையின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் முடித்துக்கொள். இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டால் உன் விருப்பப்படி திருமணத்தை நடத்துவதற்கு, நடத்தி வைப்பதற்கு சம்மதிக்கின்றேன்'' என்ற பெற்றோர்களின் கட்டளைக்கு இணங்கி நம் கொள்கைச் சகோதரர்கள் இறைக் கட்டளைக்கு மாறுசெய்து முஷ்ரிக்கான பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்கின்றனர். இத்திருமணத்திற்கும் மக்களால் சூட்டப்பட்ட பெயர் தவ்ஹீத் (நஜாத்) திருமணமாம். மணமகன் தவ்ஹீத்வாதியாம்.

மணமகன் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்து விருந்துபச்சாரங்களை, அன்பளிப்புகளை புறக்கணிப்பது மட்டும் தான் இஸ்லாமியத் திருமணம் என்று இவர்கள் எண்ணுகின்றனர். அஸ்திவாரமே ஆட்டங்கண்டு இருக்கும் போது அடுக்குமாடி வீடுகளைக் கட்டுவதில் என்ன பயன்? மணமகளே ஏகத்துவவாதியாக இல்லாமல் அது எப்படி இஸ்லாமியத் திருமணமாகும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

இந்த இறைக் கட்டளையை இவர்கள் அறியவில்லையா? அல்லது அறியாதது போல் நடிக்கின்றார்களா?

குர்ஆன் ஹதீஸ் கூறும் ஒழுக்க மாண்புகளை மறந்து, காதல் எனும் வலையில் விழுந்து, அப்பெண் தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்பு பெண் பேசி மதரஸாக்களில் சேர்த்துவிட்டு, ஒரு சில மாதங்களுக்குப் பின் தவ்ஹீதுப் பெண்ணை நான் திருமணம் முடிக்கப் போகின்றேன் என்று தனது திருமணத்திற்கு தவ்ஹீது திருமணம் என்று தானே பெயர் சூட்டிக் கொள்கிறான். அப்பெண்ணின் ஈமானிய உறுதியை அல்லாஹ்வே அறிவான்.

இவர்கள் திருமணத்திற்குப் பிறகு அவளைத் திருத்திவிடலாம் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர். இது தவறானதாகும். ஏனெனில் நபிமார்களாலேயே தங்களது மனைவியர்களையும், பிள்ளைகளையும், பெற்றோர்களையும், உற்றார், உறவினர்களையும் ஏகத்துவத்திற்குக் கொண்டு வர இயலாது என்பதே குர்ஆன் ஹதீஸிலிருந்து கிடைக்கும் பாடமாகும், பதிலாகும். இதற்குக் குர்ஆன் ஹதீஸிலிருந்து பல ஆதாரங்களைக் காட்டலாம். உதாரணமாக நூஹ் மற்றும் லூத் நபியின் மனைவிமார்களை பற்றிக் குர்ஆன் கூறுவதைப் பாருஙகள்.

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. "இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!'' என்று கூறப்பட்டது.

அல்குர்ஆன் 66:10

அசத்தியவாதியுடன் திருமணத்திற்குப் பின்பும் கூட இணைந்திருக்கக் கூடாது என்பதற்காக ஃபிர்அவ்னின் மனைவி சத்தியத்திற்கு வந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றான்.

"என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை  நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

அல்குர்ஆன் 66:11

இவையெல்லாம் நமக்கு எதை உணர்த்துகின்றது? அசத்தியவாதியுடன் நமக்கு எந்த ஒட்டும் உறவும் இருக்க்கூடாது என்பதைத் தானே! நம்மில் எத்தனை பேர் இந்த வசனத்திற்கு மதிப்பளித்தனர்?

ஆனால் இந்த வசனத்திற்கு நபித்தோழர்கள் உயிரூட்டினர். இது தொடர்பாகப் புகாரியில் இடம்பெறும் செய்தியைப் பார்ப்போம்.

...(சமாதான ஒப்பந்தம் அம-ல் இருந்த காலகட்டத்தில்) இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் நபி (ஸல்) அவர்கüடம் வந்தனர். உடனே, "நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள்'' என்னும் (60:10) இந்த வசனத்தை அல்லாஹ் அருüனான். உடனே, உமர் (ர-) அவர்கள், இணைவைக்கும் மார்க்கத்தி-ருந்த காலத்தில் தமக்கிருந்த இரு மனைவிமார்களை அன்று தலாக் (விவாகரத்து) செய்து விட்டார்கள். அவ்விருவரில் ஒருவரை முஆவியா பின் அபீ சுஃப்யான் அவர்களும் மற்றொரு வரை ஸஃப்வான் பின் உமய்யா அவர்களும் மணமுடித்துக் கொண்டார்கள். பிறகுநபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள்.

நூல்: புகாரி 2731

அல்லாஹ்வால் மட்டுமே நேர்வழியில் செலுத்தமுடியும்; இது அல்லாஹ்வின் அதிகாரம் என்ற பார்வையுடன் மட்டும் இந்த ஹதீஸ் மற்றும் வசனங்களைப் பார்க்கும் இவர்கள், தாங்கள் செய்யும் தவறிலிருந்து அவர்கள் தவிர்ந்திருக்க வேண்டும் என்ற கண்டனமும் இதில் இருக்கின்றது என்பதையும் உணர வேண்டும்.


(வளரும் இன்ஷா அல்லாஹ்)

EGATHUVAM JAN 2014