May 15, 2017

தனி முத்திரை பதித்த தவ்ஹீத் ஜமாஅத்

தனி முத்திரை பதித்த தவ்ஹீத் ஜமாஅத்

ஏப்ரல் 2014 ஏகத்துவ இதழ், "வாழ்வுரிமைக்கே வாக்குரிமை' என்ற தலையங்கத்தைத் தாங்கி வெளிவந்தது. அதிமுக அரசு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காகப் பரிந்துரைக்குமாறு பிற்பட்டோர் நல வாரியத்திற்கு ஆணையிட்டிருந்தது. இடஒதுக்கீடு என்பது முஸ்லிம்களின் வாழ்வுரிமையாகும், அதனால் தனது வாக்குரிமையை வாழ்வுரிமைக்காக வழங்க வேண்டும் என்று சமுதாயத்தை அந்தத் தலையங்கம் கேட்டுக் கொண்டிருந்தது.

அந்த ஏகத்துவம் இதழ் வெளிவந்து, ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. அதற்குள்ளாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக்குழு 12.04.2014 அன்று கூடி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அதிமுகவிற்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது.

இதற்குக் காரணம், ஏப்ரல் 7ஆம் தேதியன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இவ்வாறு பாஜக வெளியிடும் போது முதல்கட்டமாக அஸ்ஸாமிலும் திரிபுராவிலும் தேர்தல் துவங்கிவிட்டது. தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் ஏற்பட்ட இந்தக் கால தாமதம் தற்செயலாக நடந்ததல்ல. கூட்டணிக் கட்சிகள் விழித்துக் கொண்டு தன்னை விட்டுப் பிரிந்து சென்று விடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டே இந்தத் தாமதம். இதை அந்தத் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கின்றது.

1. பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது.

2. ராமர் கோவில் கட்டுவது.

3. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்வது.

இவையே பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாகும்.

முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்த்து, நாட்டில் மதக் கலவரத்தைத் தோற்றுவிக்கும் இந்த அம்சங்களை மதச்சார்பின்மை கொண்ட அத்தனை கட்சிகளும் எதிர்த்து, கடுமையான கண்டனக் குரல்களை எழுப்பின!

திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். ஆனால் ஜெயலலிதா மட்டும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை. காங்கிரஸையும் திமுகவையும் ஊர் ஊராக, நார் நாராகக் கிழித்த ஜெயலலிதா, பாஜகவையும் அதன் தேர்தல் அறிக்கையையும் கண்டுகொள்ளவில்லை.

இதைப் பற்றி ஓ. பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி வைத்தியலிங்கம் ஆகியோர் அடங்கிய அதிமுக தேர்தல் பணிக் குழுவினரிடம் திரும்பத் திரும்ப நமது ஜமாஅத் வலியுறுத்தி, ஜெயலலிதாவை இதுகுறித்துப் பேசச் சொல்லுங்கள் என்றோம். அது செவிடன் காதில் ஊதிய சங்கானது.

இடஒதுக்கீடு என்பது நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமையாகும். இதை அனுபவிக்க வேண்டுமென்றால் நமது சந்ததிகள் உயிருடன் வாழ வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். முஸ்லிம்களை அழிக்கும் திட்டத்தை பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கொண்டுவந்துள்ளது. உயிரா? உரிமையா? என்றால் உயிர் தான் முக்கியம்.

இந்த அடிப்படையில் அதிமுகவுக்கு அளித்த ஆதரவை 12.04.2014 அன்று திரும்பப் பெற்றோம். பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சிக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளிக்காது என்பது பொதுக்குழுவின் ஏகமனதான முடிவு என்பதால் உயர்நிலைக் குழு கூடி இந்த முடிவை எடுத்தது.

அடுத்து ஆதரவு யாருக்கு? என்பதைத் தீர்மானிப்பதற்காக 15.04.2014 செவ்வாய்கிழமையன்று திருச்சி ரோஷன் மஹாலில் அவசர செயற்குழு கூடியது. அந்த செயற்குழுவில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு கன்னியாகுமரி, தேனி, மயிலாடுதுறை ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பது என்றும், மீதமுள்ள 36 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவளிப்பது என்றும் ஏகமனதாக முடிவானது. புதுவை மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி தவிர மற்ற கட்சிகளுக்கு மனசாட்சி அடிப்படையில் வாக்களிப்பது என்று ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு உறுதி செய்யப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த முடிவு சமுதாயத்தின் ஒட்டுமொத்த வரவேற்பையும் பெற்றது. அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒருபக்கம் செய்தியாகவும் மறுபக்கம் விவாதப் பொருளாகவும் ஆனது. மின்னணு ஊடகங்களைப் போலவே அச்சு ஊடகங்களிலும் இந்தத் தாக்கம் பதிவானது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதி, ஸ்டாலின், ப. சிதம்பரம், கம்யூனிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன், தா. பாண்டியன் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் அனைவரும் கேள்வி எழுப்பிய பிறகும் பாஜகவைப் பற்றி வாய் திறக்காமல் இருந்த ஜெயலலிதா, தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு வாய் திறந்தார். பாஜகவை விமர்சித்துப் பேச ஆரம்பித்தார்.

திமுகவை ஆதரிப்பதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த மறுநாளே ஜெயலலிதா, காவிரிப் பிரச்சனையில் பாஜக துரோகம் செய்துவிட்டது என்று குற்றம் சாட்டிப் பேசினார். இது கொஞ்சம் கொஞ்சமாக வலுத்து, மோடியா? இந்த லேடியா? என்று அவர் கேட்கும் அளவுக்குச் சென்றது.

குஜராத்தை விட தமிழகம் தான் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் புள்ளிவிபரத்துடன் ஜெயலலிதா எடுத்து வைத்த வாதத்திற்குப் பின்னணியில் இருந்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் என அனைத்து ஊடகங்களிலும், குறிப்பாக செய்தி சேனல்களில் நடைபெற்ற விவாதங்களிலும் தெரிவிக்கப்பட்டது. பிரபல செய்தி இணையதளம் இதற்கென தனியாகக் கருத்துக் கணிப்பே நடத்தியது. அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் திமுக சேராது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று செயற்குழு உறுப்பினர்களில் பலர் கேள்வியெழுப்பினர். பாஜகவுடன் சேரமாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி வாங்கிவிட்டுத் தான் திமுகவை ஆதரிக்கவேண்டும் என்ற கருத்தை செயற்குழுவில் பதிவுசெய்தனர்.

அதற்குப் பதிலளித்த மாநிலத் தலைவர் பி.ஜே., "திமுக தலைவர்கள் வாழ்வா? சாவா? என்ற நிலையில் தேர்தல் கள பயணத்தில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த உறுதிமொழியைப் பெறுவதற்கான கால அவகாசம் அறவே இல்லை. அப்படியே அரசியல்வாதிகள் எழுத்துப்பூர்வமாகத் தந்தாலும் அதையெல்லாம் அப்பட்டமாக மீறி கூட்டணி வைக்கத் தயங்க மாட்டார்கள். நாம் இப்போதைய வெளிப்படையான நிலையை மட்டுமே பார்க்க வேண்டும். இப்போதைக்கு ஜெயலலிதா பாஜகவுடன் நெருங்கி வருகிறார். திமுக தலைவர்கள் பாஜகவை, அதன் தேர்தல் அறிக்கையைக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள். எனவே இதை மையமாக வைத்தே நாம் தீர்மானிக்க வேண்டும். ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் திமுகவை இஸ்லாமிய சமுதாயத்தின் துரோகி என்று அடையாளப்படுத்துவோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் திமுகவுக்கு எதிராக அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை உடனேயே ஆரம்பித்துவிடுவோம்'' என்று தெரிவித்தார். இதை செயற்குழுவும் பலத்த தக்பீர் முழக்கத்துடன் ஆமோதித்தது.

ஆனால் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நமது ஆதரவை அறிவித்தவுடனேயே கருணாநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தின் மூலமாகவும், அறிக்கையாக வெளியிட்டு எழுத்துப்பூர்வமாகவும் இந்த உறுதிமொழியை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அளித்தார். இத்தனைக்கும் நாம் கருணாநிதியையோ, ஸ்டாலினையோ இந்த ஆதரவு தொடர்பாக நேரில் சந்திக்கவில்லை. அப்படியிருந்தும் கருணாநிதி ஓர் உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக முரசொலியில் வெளியான செய்தியை வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.

திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன், "ஜெயலலிதா அனைத்துக் கட்சிகளையும் விமர்சனம் செய்யும் போது பாஜகவை மட்டும் விமர்சிப்பதில்லை' எனக் குற்றம் சாட்டினார். தேர்தலுக்குப் பின் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஜெயலலிதா செயல்பட்டு வருவதால் அதிமுகவிற்கு அளித்து வந்த ஆதரவைக் கடந்த சனிக்கிழமை திரும்பப் பெற்றதாகவும் தெரிவித்தார். சிறுபான்மையினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் மயிலாடுதுறை, கன்னியாகுமரி, தேனி ஆகிய 3 தொகுதிகளைத் தவிர 36 தொகுதிகளில் திமுகவை ஆதரிப்பதாக பி. ஜைனுல் ஆபிதீன் தெரிவித்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தி.மு.கழக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்பதாக கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் அவசரச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்று, அந்தக் கூட்டத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 36 தொகுதிகளில் தி.மு.கழகத்தை ஆதரிப்பதாக அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்; நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சைப் பொதுக்கூட்டத்திலேயே நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரை வரவேற்பதாக அறிவித்திருக்கிறேன்.

மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 36 தொகுதிகளில் மட்டும் தி.மு.கழக அணியினரை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அந்த மூன்று தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியிலும் தி.மு.கழகத்தின் அணியினரை ஆதரித்து உதவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.கழகம் ஏற்கனவே தெரிவித்திருப்பதைப் போல, மத்தியில் மதச்சார்பற்ற ஓர் அரசு அமைவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடும் என்ற உறுதியையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

(முரசொலி 17.04.2014)

இது அனைத்தும் உணர்த்துவது ஒன்றே ஒன்று தான். இந்தப் பேரியக்கம் தன்னலம் பாராமல் சமுதாய நலத்தை மட்டும் அல்லாஹ்வுக்காகக் கையில் எடுத்திருப்பதால் தான் இந்தக் கண்ணியம் கிடைக்கின்றது. பதவிக்காகவோ, பணத்திற்காகவோ எந்தவொரு முடிவையும் இந்த இயக்கம் எடுப்பதில்லை. அதனால் இப்படி ஒரு மரியாதையையும் மதிப்பையும் அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.

இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி முதலில் அதிமுகவுக்கு ஆதரவளித்தபோது, பெட்டி வாங்கிவிட்டதாகக் கூறியவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த அதிரடி அறிவிப்பால் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனார்கள்; அரண்டு போனார்கள். பத்து பைசா வாங்கியிருந்தால் கூட இதுபோன்ற துணிச்சலான முடிவை எடுக்க முடியாது, தவ்ஹீத் ஜமாஅத் ஒரு தூய்மையான அமைப்பு என்பதற்கு இது ஒரு சான்று என சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே தெரிவித்தார்கள்.

எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் கூட்டணியில் இருப்பவர்களால் இப்படி ஒரு உறுதிமொழியை, உத்தரவாதத்தைக் கருணாநிதியிடம் கேட்டுப் பெறுவது ஒருபுறமிருக்கட்டும். வாய் திறந்து சொல்லக் கூட முடியாது. ஏகத்துவவாதிகளால் மட்டுமே இது சாத்தியம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

பொதுவாக அரசியலில் சில விதிமுறைகள் இருக்கின்றன. காங்கிரஸை திமுக ஆதரித்தால் அந்தக் கூட்டணியில் அதிமுக இருக்காது. அதிமுக ஆதரித்தால் அதனுடன் திமுக சேராது. இதைப் போன்றே ம.ம.க. இருக்கும் இடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேராது என்ற தவறான கண்ணோட்டம் சிலரால் பரப்பப்பட்டு வருகின்றது.

2007ல் திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்தது. அதன் அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தது. மமக அப்போது திமுகவுடன் தான் இருந்தது. இடஒதுக்கீடு தந்தால் ஆதரவளிப்போம் என்று ஏற்கனவே அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் திமுகவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆனால் அப்போது திமுக கூட்டணியில் இருந்த மமக, தாங்கள் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்பதால் கூட்டணியிலிருந்து வெளியேறி தனியாகப் போட்டியிடுவதாக அறிவித்தது. இந்த உண்மை பலருக்கும் தெரியவில்லை.


அதுபோன்றே இந்தத் தேர்தலிலும் திமுகவுடன் மமக கூட்டணி வைத்திருப்பது தெரிந்து தான் திமுகவை ஆதரிக்கின்றோம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை எப்போதும் சமுதாய நலனையே முன்னிறுத்திப் பார்க்குமே தவிர இதுபோன்ற குறுகிய கண்ணோட்டத்தில் செயல்படாது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

EGATHUVAM MAY 2014