மலக்குமார்களை நம்புதல்
மலக்குமார்கள் இறைவனின் கண்ணியமிக்க அடியார்கள் ஆவார்கள். அவர்கள் இறைவனை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபடக் கூடியவர்கள்.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். அவர்கள் சோர்வடையவும் மாட்டார்கள். இரவிலும், பகலும் துதிப்பார்கள். சலிப்படைய மாட்டார்கள்.
(அல் குர்ஆன் 21 :19,20)
தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள்.கட்டளையிடப்பட்டதை செய்வார்கள்.
(அல் குர்ஆன் 66 :6)
மலக்குமார்களுக்கு இறை தன்மையோ மனிதத் தன்மையோ கிடையாது. அவர்கள் இறைவனின் பிள்ளைகளும் கிடையாது.
மலக்குமார்களின் தோற்றம்
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி), நூல் : முஸ்லிம் (5314)
வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் 35:1)
நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீல்(அலை) அவர்களை 600 இறக்கை உடையவர்களாகக் கண்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி), நூல் : புகாரீ (4857)
மலக்குமார்கள் சில நேரங்களில் இறைவனின் கட்டளைப்படி மனித உருவிலும் வருவார்கள்.