அதிகாரம் அனைத்தும் அவனுக்கே
கவலைக்குப் பிறகு உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத்
தந்தான். உங்களில் ஒரு பகுதியினருக்கு அது மேலிட்டது. இன்னொரு பகுதியினரைக் கவலை பிடித்துக் கொண்டது. அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்கு மாறான அறியாமைக் கால எண்ணம் கொண்டனர். ""நாம் சரியான மார்க்கத்தில் தான் இருக்கிறோமா?’’ என்று அவர்கள் கேட்டனர். ""இம்மார்க்கம் முழுமையாக அல்லாஹ்வுக்கே உரியது’’ என்று (முஹம்மதே) கூறுவீராக! உம்மிடம் வெளிப்படையாகக் கூறாததை தமது உள்ளங்களில் மறைத்துள்ளனர். ""சரியான மார்க்கத்தில் நாம் இருந்திருந்தால் இங்கே கொல்லப்பட்டிருக்க மாட்டோம்’’ என்றனர். ""உங்கள் வீடுகளில் நீங்கள் இருந்திருந்தாலும் உங்களில் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டோர் தமது களத்திற்குச் சென்றிருப்பார்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில் இருப்பதைத் தூய்மைப்படுத்தவும் இவ்வாறு செய்தான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்’’ எனக் கூறுவீராக!
(அல் குர்ஆன் 3:154)
கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்! அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.
(அல் குர்ஆன் 8:39)
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள்.அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.
(அல் குர்ஆன் 6:61)
""உங்களுக்காக எனக்குக் கொடுத்து அனுப்பப்பட்டதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் தர முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்’’ (எனவும் கூறினார்)
(அல் குர்ஆன் 11:57)
அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி .இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியுடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம்.
(அல் குர்ஆன் 3:145)
அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
(அல் குர்ஆன் 31:34)