அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா?
இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைப் காண முடியாது
அல்லாஹ் கூறுகிறான் :
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான்.
(அல்குர்ஆன் 6:103)
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ”என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். அதற்கு (இறை வன்) ”என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்” என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது ”நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” எனக் கூறினார் (அல்குர்ஆன் 7:143)
நபி(ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா? என்று கேட்கப்பட்டபோது அவனோ ஒளியானவன் நான் அவனை எப்படிப் பார்க்கமுடியும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : முஸ்லிம் (261)
மறுமையில் நல்லடியார்கள் இறைவனைக் காண்பார்கள்.
அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
(அல்குர்ஆன் 75:22,23)
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் சிலர் அல்லாஹ்வின்தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் ஆம்! காண்பீர்கள். மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரையொருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் இல்லை என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மேகமே இல்லாத பவுர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவினைப் பார்ப்பதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டனர். மக்கள் (அப்போதும்) இல்லை என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் முண்டியடித்துச் செல்லாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைக் காணவும் முண்டியடிக்க மாட்டீர்கள்.அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல் : புகாரீ (4581)
காஃபிர்கள் மறுமையில் இறைவனைப் பார்ப்பதை விட்டும் திரையிடப்படுவார்கள்.
அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.
(அல்குர்ஆன் 83:15)