Mar 3, 2011

அனைவருக்கும் சம நீதி


அனைவருக்கு சம நீதி


ஒரு மனிதனின் நேர்மையை உரசிப் பார்த்திட அனைவரையும் அவன் சமமாகக் கருதுகிறானா? என்பது முக்கியமான உரை கல்லாகும். குறிப்பாக ஆன்மீகத் தலைவர்களை இந்த உரை கல்லால் உரசிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும்.

தாமும் பக்குவப்பட்டு மற்றவரையும் பக்குவப்படுத்துவதாகக் கூறிக் கொள்வோரின் கண்களுக்கு செல்வாக்குமிக்கவனும், சாமான் யனும் சமமாகவே தென்பட வேண்டும். இன்னும் சொல்வதென்றால் பலவீனர்களிடம் அதிகம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த அளவுகோன் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு சதவீதம் தமது நடவடிக்கைகளை அமைத்திருந்தார்கள் என்பதற்கு மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.

குரைஷ் கோத்திரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தார்கள். இந்தக் கோத்திரம் அன்றைய மக்களிடம் மிக உயர்ந்த கோத்திரமாக மதிக்கப்பட்டது.

குரைஷ் கோத்திரத்தின் உட்பிரிவான மக்ஸுமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷ் குலத்தவருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணின் திருட்டுக் குற்றத் திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது) இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்' என்று கருதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உஸாமா (ரலி) இது பற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரைக்கிறீரா?' என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள், 'உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்' எனப் பிரகடனம் செய்தார்கள்.

நூல் : புகாரி 3475, 3733, 4304, 6787, 6788

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பார்வையில் தமது குலத்தைச் சேர்ந்த பெண்மணியும், மற்றவர்களும் சமமாகவே தென்படுகிறார்கள். நபிகள் நாயகத்தின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவின் பரிந்துரையையும் கூட அவர்கள் ஏற்கத் தயாராகயில்லை.

மிகப்பெரிய காரியங்களில் மட்டுமின்றி அற்பமான காரியங்களில் கூட மக்களை அவர்கள் சமமாகவே நடத்தியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாத்திரத்தில் பால் கொண்டு வரப்பட்டது. அதில் சிறிதளவு அவர்கள் அருந்தினார்கள். அவர்களின் வலப்புறத்தில் குறைந்த வயதுடைய ஒரு இளைஞர் இருந்தார். இடப்பக்கம் பெரியவர்கள் பலர் இருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இளைஞரே! பெரியவர்களுக்கு முதலில் கொடுக்க எனக்கு அனுமதி தருகிறீரா?' என்று கேட்டார்கள். அதற்கு இளைஞர் 'உங்கள் மூலம் எனக்குக் கிடைக்கும் பாக்கியத்தை மற்றவருக்கு நான் கொடுக்க மாட்டேன்' என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இளைஞருக்கு முதலில் கொடுத்தார்கள் மற்றவர்களுக்குப் பின்னர் கொடுத்தார்கள்.
நூல் : புகாரி 2351, 2366, 2451, 2602, 2605, 5620

அனஸ் (ரலி) வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்டிலிருந்து பால் கறந்து நபிகள் நாயகத்திடம் கொண்டு வரப்பட்டது. அனஸ் (ரலி) வீட்டில் உள்ள கிணற்று நீர் அத்துடன் கலக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரம் தரப்பட்டது. அதை அவர்கள் பருகினார்கள். அவர்களின் இடப் புறம் அபூபக்ர் (ரலி) இருந்தார். வலப் பக்கம் ஒரு கிராமவாசி இருந்தார். அந்தக் கிராமவாசிக்கு நபிகள் நாயகம் (ஸல்) முதலில் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சிய உமர் (ரலி) 'அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ருக்குக் கொடுங்கள்' என்றார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலப்புறம் இருந்த கிராமவாசிக்கு முதலில் கொடுத்தார்கள். மேலும் 'வலப்புறம் வலப்புறமாகத் தான் கொடுக்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி: 2352

நபிகள் நாயகத்தின் தோழர்களில் முதலிடம் பெற்றவர்கள் அபூபக்ர் (ரலி). தமக்கு அடுத்து அபூபக்ர் தான் என்று பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டினார்கள். இதனால் தான் நபிகள் நாயகத்துக்குப் பின் அபூபக்ர் ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்க முடிந்தது.

நபிகள் நாயகத்துக்கு இடது புறத்தில் நபிகள் நாயகத்தின் உயிர்த் தோழர் அபூபக்ர் (ரலி) இருக்கிறார். வலது புறத்திலோ யாரெனத் தெரியாத கிராமவாசி இருக்கிறார். நபிகள் நாயகத்தின் அருகில் அமரத் தக்கவர்கள் என்ற தர வரிசை ஏதும் நபிகள் நாயகத்தால் வகுக்கப்படவில்லை. யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் நபிகள் நாயகத்தின் அருகில் அமரலாம். எவ்வளவு சாதாரணமானவராக அவர் இருந்தாலும் பிரச்சினையில்லை என்பது தான் அவர்கள் ஏற்படுத்திய நடைமுறை.

அந்த அடிப்படையில் வலது புறத்தில் கிராமவாசி அமர்ந்து கொண்டார். அபூபக்ர் (ரலி) இடது புறத்தில் தான் அமர முடிந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாலை விநியோகம் செய்யும் போது தமது நெருங்கிய தோழர் பக்கத்தில் இருக்கிறாரே என்பதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அபூபக்ருக்கு அடுத்த தகுதியைப் பெற்ற உமர் (ரலி) சுட்டிக் காட்டிய பிறகும் அதை ஏற்கவில்லை. வலது புறத்திலிருந்து தான் எதையும் துவக்க வேண்டும் என்ற மிகச் சாதாரண விஷயமானாலும் அதிலும் நான் எவருக்காகவும் வளைந்து கொடுக்க முடியாது என்று தாட்சண்மின்றி அறிவித்து விடுகிறார்கள்.

வலது புறத்தில் இருந்த கிராமவாசிக்கு அடுத்து அபூபக்ருக்கு கொடுத்தார்களா என்றால் அதுவுமில்லை. வலது புறம் வலதுபுறமாகத் தான் கொடுக்க வேண்டும் என்று கூறிவிடுகிறார்கள். அதாவது அந்தக் கிராமவாசிக்கு பின் அவரை அடுத்திருந்தவர், அதற்கடுத்தவர் என்ற முறையில் தான் கொடுப்பேன் என்கிறார்கள். இவ்வாறு கொடுத்தால் ஆகக் கடைசியில் தான் அபூபக்ருக்குக் கிடைக்கும். இதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை.

'ஒருவர் எதையும் பங்கிடுவதென்றால் தனது வலப்புறத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்; வலப்புறத்தை முடித்து விட்டுத் தான் இடப்பக்கத்தில் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சட்டம் வகுத்திருந்தார்கள்.

வலப் பக்கம் ஒரு இளைஞர் இருக்கிறார். இடப் பக்கமோ பிரமுகர்கள் இருக்கிறார்கள். பிரமுகர்கள் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இடப் பக்கத்தில் உள்ளவர்களுக்கு முதலில் பாலைக் கொடுத்திருக்க முடியும். ஆனாலும் தாம் வகுத்த நல்விதியை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை. அந்த இளைஞரின் அற்பத்திலும் அற்பமான உரிமையைக் கூட மதிக்கிறார்கள்.

நீ அனுமதி தந்தால் பெரியவர்களுக்குக் கொடுக்கிறேன். நீ அனுமதி தராவிட்டால் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று வேண்டுகிறார்கள். அவர் விட்டுத் தர விரும்பவில்லை என்ற போது இந்த அற்பமான விஷயத்திலும் அவரது முன்னுரிமையை நிலை நாட்டுகிறார்கள்.

பத்ருப் போர் அன்று ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் பயணம் செய்தோம். நபிகள் நாயகத்துடன் அபூ லுபாபா, அ பின் அபீதாப் ஆகிய இருவரும் ஒட்டகத் தோழராக இருந்தனர். நபிகள் நாயகத்தின் முறை வந்த போது 'உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம்' என இருவரும் கூறினார்கள். 'நீங்கள் என்னை விட வலிமையானவரும் அல்லர். நான் உங்களை விட (இறைவனின்) கூலியில் தேவையற்றவனும் அல்லன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மத் 3706, 3769, 3807, 3834
இஸ்லாமிய வரலாற்றில் திருப்பு முனை ஏற்படுத்திய போர் பத்ருப் போர். நபிகள் நாயகம் (ஸல்) தலைமை தாங்கி நடத்திய இந்த முதல் போர் மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் நடந்தது. முஸ்லிம்கள் மிகவும் வறுமையில் இருந்த நேரம். எண்ணிக்கையிலும் குறைவாக இருந்தனர்.

சுமார் 300 பேர் தான் நபிகள் நாயகத்தின் படையில் இருந்தனர். எதிரிகளின் படை மூன்று மடங்காக இருந்தது.

முன்னூறு பேருக்கும் சேர்த்து சுமார் நூறு ஒட்டகங்கள் மட்டுமே இருந்ததால் ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் பயணம் செய்தனர்.

ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற விதியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துக் கொண்டிருந்தால் யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இஸ்லாமிய அரசின் தலைவராக இருந்தார்கள். இப்போரில் தளபதியாகவும் இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீகத் தலைவராகவும் இருந்தார்கள்.

இம்மூன்று தகுதிகளுக்காக தமக்கு மட்டும் தனியாக ஒரு ஒட்டகத்தை ஒதுக்கிக் கொள்வதை எந்த முஸ்லிமும் தவறாக நினைக்க மாட்டார்.
ஆனால் இந்த மாமனிதரோ மற்றவர்களுக்கு எவ்வாறு வாகன ஒதுக்கீடு செய்தார்களோ அதையே தமக்கும் ஒதுக்கிக் கொள்கிறார்கள்.

இன்றைக்கும் எத்தனையோ ஆன்மீகத் தலைவர்களைப் பார்க்கிறோம். அவர்கள் தமது ஆசனத்தில் சற்று ஒதுக்கி இன்னெருவருக்கு, இடம் தர மாட்டார்கள். அவர்கள் ஆசனத்தில் மட்டுமின்றி அவர்கள் ஆசனத்திற்குச் சம உயரத்தில் இன்னொருவருக்கு ஆசனம் அளிப்பதில்லை. மாறாக தாம் மட்டும் உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களைத் தாழ்வான இடத்தில் அமரச் செய்து ஆணவத்தைக் காட்டுவார்கள்.

அற்பமான இந்தத் தலைவர்களே இப்படி நடக்கும் போது, உயிரையும் அர்ப்பணிக்கும் தொண்டர்களைப் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு உயரத்தில் அமர வேண்டும்? ஆனாலும் ஒரு ஒட்டகத்துக்கு மூவர் என்ற மற்றவர்களுக்குச் சமமான நிலையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் உள்ளம் பக்குவப்பட்டிருந்தது.
போர்த் தளவாடங்கள், தட்டுமுட்டுச் சாமான்களுடன் ஒரு ஒட்டகத்தில் மூவர் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடியாது. எனவே இருவர் ஒட்டகத்தில் ஏறிச் செல்லும் போது ஒருவர் ஒட்டகத்தைப் பிடித்து வழிநடத்திச் செல்ல வேண்டும் எனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தொலைவு வந்ததும் நடப்பவர் ஒட்டகத்தில் ஏறிக் கொள்ள ஒட்டகத்தில் இருப்பவர் இறங்கிக் கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் முறை வந்த போது, மற்ற இருவரும் அதை ஆட்சேபிக்கின்றனர். 'உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம். நீங்கள் ஒட்டகத்திலிருந்து இறங்க வேண்டாம்' எனக் கூறுகின்றனர். இதை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை. மற்ற இருவரும் தத்தமது முறை வரும் போது எவ்வாறு நடந்தார்களோ அது போல் அவர்கள் இருவரையும் ஒட்டகத்தில் ஏற்றி விட்டு ஒட்டகத்தை வழிநடத்தி நடந்து செல்லும் இந்த அற்புத வரலாற்றைப் பார்க்கும் எந்த முஸ்லிமும் இம்மாமனிதரைத் தலைவராகப் பெற்றமைக்காக பெருமிதம் கொள்வார். இதற்காக மற்றவர்கள் முஸ்லிம்கள் மீது பொறாமைப்படும் அளவுக்கு அற்புதமான தலைவராகத் திகழ்கிறார்கள்.

அவர்கள் நடந்து சென்றது மட்டுமின்றி அதற்கு அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

யார் யார் எவ்வளவு சிரமப்படுகிறார்களோ அதற்கேற்பவே மறுமையில் இறைவனின் பரிசு கிடைக்கும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை.

பொதுவாக ஆன்மீகத் தலைவர்கள் எதை போதிக்கிறார்களோ அதில் மற்றவர்களை விட குறைவான நம்பிக்கையுடையவர்களாகத் தான் இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் ஆன்மீகத்தின் பின்னே சுய லாபம் மறைந்திருக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ எந்தச் சந்தர்ப்பத்திலும் தாம் போதித்த ஆன்மீக நெறியை மற்றவர்களை விட அதிகம் பின்பற்றக் கூடியவர்களாக இருந்தனர்.

மறுமையில் இறைவனிடம் பரிசு பெறும் போது உங்கள் இருவரையும் விட குறைவான தியாகம் செய்தவனாக நான் நிற்க மாட்டேன். எனவே உங்களைப் போலவே என் முறை வரும் போது நானும் நடந்து, உங்களுக்குக் கிடைக்கும் அதே பரிசைப் பெறுவேன் என்பது தான் அவர்கள் கூறிய காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பழுக்கற்ற பரிசுத்த வாழ்க்கை வார்ந்தார்கள் என்பதை அனைவரும் அறிவர். சந்தேகத்தின் சாயல் கூட தம்மீது படியக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

நான் சரியாகத் தான் நடக்கிறேன். எவருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று சாதாரண இயக்கங்களுக்குத் தலைமை தாங்குபவர்களே நினைக்கிறார்கள். மக்களிடம் எது குறித்து சந்தேகம் நிலவுகிறதோ அதை நீக்கும் கடமை தமக்கு இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றி எந்தச் சந்தேகம் வந்தாலும் மக்களிடம் உடனே தெளிவுபடுத்துவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் கடைசி பத்து நாட்களில் பள்ளிவாசலிலேயே தங்கி விடுவார்கள். அப்போது அவர்களைக் காண அவர்களின் மனைவி சஃபிய்யா (ரலி) வந்தார். நபிகள் நாயகத்திடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் புறப்படலானார். அவருடன் நபிகள் நாயகமும் உடன் வந்து பள்ளியின்வாசல் வரை வந்தனர். அப்போது இரண்டு மனிதர்கள் நபிகள் நாயகத்துக்கு ஸலாம் கூறி விட்டு நபிகள் நாயகத்தைக் கடந்து சென்றனர். அப்போது அவ்விருவரையும் நோக்கி 'அப்படியே நில்லுங்கள்' என்று நபிகள் நாயகம் கூறிவிட்டு, 'இவர் என் மனைவி சஃபிய்யா' என்றார்கள். இது அவ்விருவருக்கும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தை விதைத்து விடுவான் என்று அஞ்சியே இதை உங்களிடம் கூறினேன்' என்றார்கள்.
நூல் : புகாரி: 2035

அவ்விருவரும் நபிகள் நாயகத்தைக் கண்டு ஸலாம் கூறிவிட்டுத் தான் சென்றார்கள். அவர்களின் மனதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. பின்னர் ஷைத்தான் தனது வேலையைக் காட்டுவான். நபிகள் நாயகம் பேசிக் கொண்டிருந்தார்களே அந்தப் பெண் யாராக இருக்கும் என்ற எண்ணத்தை விதைத்து விடுவான் என்று அஞ்சி தெளிவுபடுத்தி விடுகிறார்கள்.

சந்தேகத்தின் சாயல் கூட தம்மீது படியக் கூடாது என்பதில் இந்த அளவுக்குத் தூய்மையாக இருந்தார்கள்.

அன்று முதல் இன்று வரை ஆன்மீகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் எந்த அடிப்படையில் மதிக்கப்படுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தினால் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.

ஆணவம் எந்த அளவுக்கு அதிகமாகவுள்ளதோ அந்த அளவுக்கு தலைவர்கள் மதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண மக்களிடம் வெறுக்கத் தக்கதாகக் கருதப்படும் ஆணவமும், மமதையும் தலைவர்களிடம் இருந்தால், வீரமெனவும், துணிச்சல் எனவும் வர்ணிக்கப்படுகிறது.

சாதாரண மக்களிடம் ஏமாற்றும் பண்பு இருந்தால் அதை வெறுக்கின்ற மக்கள், நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் பண்பு தலைவர்களிடம் இருந்தால் அதை ராஜதந்திரம் எனக் கருதுகின்றனர்.

சாதாரண மனிதனிடம் இருக்கக் கூடாது எனக் கருதப்படும் ஆடம்பரமும், படாடோபமும் தலைவர்களிடம் இருந்தால் அதுவே பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.

தலைவர்கள் எதனால் மதிக்கப்படுகிறார்கள் என்று கவனித்தால் தீய பண்புகளால் தான் மதிக்கப்படுவதைக் காணலாம்.

தலைவர்களிடம் காணப்படும் லஞ்சம், ஊழல், விபச்சாரம் போன்ற எந்தத் தீய செயல்களின் காரணமாகவும் தலைவர்கள் வெறுத்து ஒதுக்கப்படுவதில்லை.

தீய செயல்களைச் செய்தாவது நூறு பேருக்குத் தெரிந்த முகமாக ஆவது மட்டுமே தலைவர்களுக்குரிய ஒரே தகுதியாக உள்ளது.

இதில் ஆன்மீகத் தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடு பார்க்கப்படுவதில்லை.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே தமது நற்பண்புகளுக்காவும், நன்னடத்தைக்காகவும் பாராட்டப்படும் தகுதியைப் பெற்றுள்ளார்கள்.

தம்மைப் பாதிக்கும் விஷயமானாலும் நீதியை நிலை நாட்டத் தவறவில்லை. தனது நாட்டின் பிரஜையை ஒட்டகத்தில் ஏற்றி ஒட்டகத்தைப் பிடித்து நடந்து செல்வதற்கு கொஞ்சமும் வெட்கப்படவில்லை. நபிகள் நாயகத்திற்கு நீதி என்றால் நீதி தான். இதில் எந்தச் சமரசமும் கிடையாது என்பதற்கு இது தெளிவான சான்றாக உள்ளது.
  

 நன்றி :
நூல் : மாமனிதர் நபிகள் நாயகம்
எழுதியவர் : பீ.ஜைனுல் ஆபிதீன்