தெரிந்து கொள்வோம் – தொழுகையில்
தொழுவதால் ஏற்படும் நன்மைகள்
'உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு)
இருக்கிறது; அதில்
அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும்
எஞ்சியிருக்குமா? எனக்
கூறுங்கள்' என்று
நபித்தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித்தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம்
அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071
'ஐவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ
ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 394
வீட்டில் உளூச் செய்தல்
வீட்டில் உளூச் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள்
வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். ஒருவர் உளூச் செய்த
நிலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக்
கருதப்படும்.
'ஒருவர் தமது வீட்டிலும், கடை வீதியிலும் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது
இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர்
பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்கு ஒரு
படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். ஒரு பாவத்தை அவரை விட்டும் நீக்குகின்றான்.
தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது அவர் தொழுபவராகவே
கருதப்படுவார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள்
பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்குத் தொல்லை அளிக்காத
வரையில் இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!' என்று வானவர்கள் கூறுகின்றனர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரீ 477, முஸ்லிம் 1059
எத்தனை
தடவை கழுவ வேண்டும்?
தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற
காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோ, அல்லது இரண்டிரண்டு தடவையோ, அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம். பார்க்க:
நூல்கள்:: புகாரீ 157, புகாரீ 160 புகாரீ 185, முஸ்லிம் 346
மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது
உளூவின் போது ஒவ்வோர் உறுப்பையும் அதிகப்பட்சமாக மூன்று
முறை கழுவலாம் என்பதைக் கண்டோம். மூன்று தடவைக்கு மேல் கழுவுவதற்குத் தடை உள்ளது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து உளூச் செய்யும்
முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி
உளூச் செய்து காட்டி விட்டு, 'இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட
அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார்' எனக் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுஐப்
(ரலி), நூல்கள்: நஸயீ 140, அஹ்மத் 6397
காற்றுப்
பிரிதல் உளூவை நீக்கும்
மலஜலம்
கழிப்பதால் உளூ நீங்குவது போலவே காற்றுப் பிரிவதாலும் உளூ நீங்கி விடும்.
'
ஹதஸ் ஏற்பட்டவனின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள
மாட்டான்' என்று
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த்' என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் 'அபூஹுரைராவே! ஹதஸ் என்றால் என்ன?' என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா
(ரலி), 'சப்தத்துடனோ, அல்லது சப்தமின்றியோ காற்றுப்
பிரிவது தான்' என்று
விளக்கமளித்தார்கள்.
நூல்:
புகாரீ 135, 176
காற்றுப்
பிரிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டால்...
சிலருக்குக்
காற்றுப் பிரியாவிட்டாலும் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது
சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ஆடையில்
அதற்கான எந்த அடையாளமும் இருக்காது. இவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
திட்டவட்டமாகத் தெரிந்தால் மட்டுமே உளூ நீங்கி விட்டதாக முடிவு செய்து கொள்ள
வேண்டும்.
'தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகிறது' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம்
முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், '(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல்
தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), நூல்கள்:
புகாரீ 137, முஸ்லிம் 540
மதீ' வெளியானால் உளூ நீங்கும்
ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ'
- இச்சை நீர் எனப்படும். இது
இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல.
மலஜலம் கழித்தல், காற்றுப் பிரிதல் ஆகியவை உளூவை நீக்குவது போலவே இந்த
மதீ' எனும் இச்சை நீர்
வெளிப்படுவதும் உளூவை நீக்கும்.
அதிக அளவில் மதீ' வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபி
(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். 'அதற்காக உளூச் செய்ய வேண்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்கள்: புகாரீ 132, முஸ்லிம் 458
'ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 269வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
உளூ அடிக்கடி நீங்கும் நோயாளிகள்
அடிக்கடி சிறுநீர் சொட்டுக்கள் விழுதல், அடிக்கடி காற்றுப் பிரிதல், தொடர் உதிரப் போக்கு போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு
உளூவை நீக்கும் காரியங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
இத்தகைய உபாதைகள் உடையவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு
தடவை உளூச் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்த பின் அவர்களிடமிருந்து மேற்கண்ட
உபாதைகளின் வெளிப்பாடு இருந்து கொண்டே இருந்தாலும் அதனால் உளூ நீங்காது. அடுத்தத்
தொழுகை நேரம் வந்தவுடன் மீண்டும் உளூச் செய்ய வேண்டும்.
தொடர் உதிரப் போக்குடைய ஃபாத்திமா என்ற பெண்மணி நபி
(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்.'அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக
இருக்கின்றேன். நான் தூய்மையாவதேயில்லை. எனவே தொழுகைகளை நான் விட்டு விடலாமா?' என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'கூடாது! அது மாதவிடாய் அல்ல! மாறாக ஒரு நோயாகும். எனவே
(வழக்கமான) மாதவிடாய் நேரம் வந்ததும் தொழுகையை விட்டு விடு! அது நின்றவுடன்
இரத்தத்தைக் கழுவி விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து தொழு' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ 228
இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட உபாதைகள் உள்ளவர்கள்
ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ள வேண்டும்.
தூக்கத்தில் விந்து வெளிப்படுதல்
பெரும்பாலும் ஆண்களுக்கும் மிகச் சில பெண்களுக்கும்
தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவதுண்டு. சில நேரங்களில் விந்து வெளிப்படுவது
போன்ற கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான
எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது.
விந்து வெளிப்பட்டது உறுதியாகத் தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம் இருந்தால் குளிப்பது கடமையாகி
விடும். குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும்.
விந்து வெளிப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான
எந்த அடையாளமும் தெரியாவிட்டால் குளிப்பது கடமையில்லை.
'அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசுவதில் அல்லாஹ் வெட்கப்பட
மாட்டான். ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் அவள் குளிப்பது
அவசியமா?' என்று
உம்மு சுலைம் (ரலி) என்ற பெண்மணி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'விந்து வெளிப்பட்டதை அவள் கண்டால் குளிப்பது அவசியம்' என்று விடையளித்தார்கள். இதைக் கேட்ட உம்மு ஸலமா (ரலி)
அவர்கள், 'பெண்களுக்கும்
விந்து வெளிப்படுமா?' என்று
கேட்டு விட்டுச் சிரித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'சில நேரங்களில் தாயைப் போல் குழந்தை எப்படிப்
பிறக்கின்றது?' என்று
திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்கள்: புகாரீ 3328, முஸ்லிம் 471
நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு
ஸலமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு அருகில் நான் வசித்தேன். அவர்களின் வீட்டுக்கு
அடிக்கடி சென்று வருவேன். நபி (ஸல்) அவர்கள் உள்ளே வந்த போது, 'அல்லாஹ்வின் தூதரே! தன் கணவன் தன்னுடன் உடலுறவு கொள்வது
போல் ஒரு பெண் கனவு கண்டால் அவள் குளிக்க வேண்டுமா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'விந்து வெளிப்பட்டதைக் கண்டால் அவள் குளிக்க வேண்டும்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சுலைம் (ரலி), நூல்: அஹ்மத் 25869
விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பது கடமை என்பதையும், விந்து வெளிப்படுவது போல் தோன்றினால் குளிப்பது
கடமையில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
சுத்ரா - தடுப்பு
இமாமும், தனியாகத் தொழுபவரும் தமக்கு முன் தடுப்பு வைத்துக்
கொள்வது அவசியமாகும்.
'சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்!
உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன்
சண்டையிடுங்கள்! அவருடன் ஷைத்தான் இருக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: இப்னுஹுஸைமா 800, இப்னுஹிப்பான்2362, ஹாகிம் 921, பைஹகீ 3261
தடுப்பாக ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ளலாம். இன்ன
பொருள் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தூணோ அல்லது சுவரோ இருந்தால்
அதைத் தடுப்பாக்கிக் கொண்டு தொழலாம். தடுப்பாக வைத்துள்ள பொருளுக்கு நெருக்கமாக
இருந்து தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே
ஒரு ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத்
(ரலி), நூல்கள்: புகாரீ 496, முஸ்லிம் 786
... பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து
நாட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாகி
அந்தக் கைத்தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத்கள் மக்களுக்குத்
தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் ஆடு, மாடுகளும் குறுக்கே செல்வதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி), நூல்கள்: புகாரீ 376, முஸ்லிம் 778
'நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி
அதை நோக்கித் தொழுவார்கள்' என்று
இப்னு உமர் (ரலி) கூறினார்கள். 'ஒட்டகம் மிரண்டு ஓடி விட்டால்?' என்று கேட்டேன். 'ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து
அதைத் தமக்கு நேராக வைத்துக் கொண்டு அதை நோக்கித் தொழுவார்கள்' என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிவு, நூல்: புகாரீ 507
தடுப்பு வைத்துக் கொண்டு தொழுபவருக்கு குறுக்கே செல்வது
குற்றமாகும்.
'தொழுபவருக்குக் குறுக்கே
சொல்பவர், அதனால்
தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே
செல்வதற்குப் பதில் நாற்பது (நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள்) நின்று
கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தேன்றும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஜுஹைம் (ரலி)), நூல்கள்: புகாரீ 510, முஸ்லிம் 785
ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களைக் கேட்கலாம்
ஒருவர் ஸஜ்தாவில் இருக்கும் போது, தான் விரும்பிய துஆவை தாய்மொழியிலேயே கேட்கலாம்.
'...ஸஜ்தாவில்
அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும்
தகுதியானதாகும்'என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 824
இமாமை முந்தக் கூடாது
இமாமைப் பின்பற்றித் தொழுபவர், தொழுகையின் எந்தச் செயலையும் இமாமை விட முந்திச்
செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.
'இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து
தொழுங்கள்' என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரீ 688, முஸ்லிம் 623
'உங்களில் ஒருவர் தொழுகையில்
இமாமை முந்தித் தமது தலையை உயர்த்துவதால் (மறுமையில்) அவருடைய தலையை கழுதையின்
தலையாகவோ, அல்லது
அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரீ 691, முஸ்லிம் 647
ரக்அத்தை அடைவது...
இமாம் ருகூவில் இருக்கும் போது ஒருவர் தொழுகையில்
இணைந்தால் அந்த ரக்அத்தைத் திரும்பத் தொழத் தேவையில்லை. அவர் அந்த ரக்அத்தை
அடைந்தவராகக் கருதப்படுவார்.
'தொழுகையில் இமாம் முதுகை உயர்த்துவதற்கு முன்னதாக யார்
ருகூவை அடைந்து கொள்வாரோ அவர் அந்த ரக்அத்தை அடைந்து கொண்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: இப்னு ஹுஸைமா 3/45
இமாமின் தவறைச் சுட்டிக் காட்டுதல்
தொழுகையில் இமாம் ஏதேனும் தவறு செய்து விட்டால் ஆண்கள்
ஸுப்ஹானல்லாஹ்' என்று கூறுவதன் மூலமும்,பெண்கள் கை தட்டுதல் மூலமும் சுட்டிக் காட்ட வேண்டும்.
'(தொழுகையில் ஏற்படும்
தவறுகளைச் சுட்டிக் காட்ட) தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரீ 1203, முஸ்லிம் 641
குர்ஆன் ஓதுதலில் தவறு ஏற்பட்டால்...
இமாமிற்கு திருக்குர்ஆன் ஓதுதலில் தவறு ஏற்பட்டால்
பின்னால் தொழுபவர் அதைத் திருத்திக் கொடுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத்
தொழுவித்தார்கள். அதில் ஓதினார்கள். அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. தொழுகை
முடித்தவுடன் உபை (ரலி) அவர்களிடம், 'நம்முடன் நீர் தொழுதீரா?' என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்போது '(தவறைத் திருத்திக் கொடுப்பதற்கு) உம்மைத் தடுத்தது எது?' என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூத் 773
நோயாளியின் தொழுகை
சிலர் உடல் நலக் குறைவால் குறிப்பிட்ட முறையில் தொழ
முடியாமல் போகலாம். அவர்களுக்கு இஸ்லாம் சில சலுகைகளைத் தந்துள்ளது. நின்று தொழ
முடியாதவர் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாதவர்
படுத்தும் தொழலாம்.
எனக்கு மூல நோய் இருந்தது. 'எவ்வாறு தொழுவது?' என்று
நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு!
அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு' என்று
விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன்
(ரலி), நூல்: புகாரீ 111
ஜுமுஆ பாங்கு
ஐவேளைத் தொழுகைக்கு உள்ளது போல் ஜுமுஆ தொழுகைக்கும் ஒரு
பாங்கு சொல்லப்பட வேண்டும். அந்த பாங்கு இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்பட
வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த
பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது
கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை
பெற்று விட்டது.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத்
(ரலி), நூல்: புகாரீ 916
உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்
சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கைப் போன்றது அல்ல! மக்கள்
அதிகமானதால் உஸ்மான் (ரலி) அவர்கள் ஸவ்ரா என்ற இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்லச்
சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள ஒரு வீடாகும் (இப்னுமாஜா 1125)
உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பைக்
கூட பள்ளிவாசலில் செய்யவில்லை. எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாம் பாங்கை
ஏற்படுத்தவில்லை என்பதே சரியானதாகும்.
ஒரு வேளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டாவது
பாங்கைத் தான் ஏற்படுத்தினார்கள் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழியைத் தான்
முஸ்லிம்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்களது நடைமுறைக்கு முரணாக
யார் செய்திருந்தாலும் அது மார்க்கமாகாது. எனவே ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு சொல்வதே
நபிவழியாகும்.
குத்பாவின் போது பேசக் கூடாது
ஜுமுஆத் தொழுகையில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது
அவரது சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பேசக் கூடாது.
'இமாம்
சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு' என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரீ 934, முஸ்லிம் 1404
தொழக் கூடாத நேரங்கள்
சூரியன் உதிக்கத் துவங்கியதிலிருந்து முழுமையாக
வெளிவரும் வரை, சூரியன் உச்சத்திற்கு வந்து
மேற்கின் பக்கம் சாயும் வரை, சூரியன் மறையத் துவங்கியதிலிருந்து முழுமையாக மறையும்
வரை ஆகிய மூன்று நேரங்களில் தொழுவதும், அடக்கம் செய்வதும் கூடாது.
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம் எனவும் இறந்தவர்களைப்
புதைக்க வேண்டாம் எனவும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை
சூரியன் உச்சிக்கு வந்தது முதல்
சாயும் வரை
சூரியன் அஸ்தமிக்கத்
துவங்கியதிருந்து நன்கு மறையும் வரை
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்
(ரலி) நூல்: முஸ்லிம் 1511
SOURCE:
தொழுகையின்
சட்டங்கள் என்ற நூலிலிருந்து...
ஆசிரியர் : எம்.ஐ.சுலைமான்
தொகுப்பு : இஸ்மத்