بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
3:7. (முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை
அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய்.
இரு கருத்தைத் தருகின்ற86 மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு
இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத்
தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன்
விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர
(மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.
3:8. எங்கள் இறைவா! எங்களுக்கு
நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே!81எங்களுக்கு உன் அருளை
வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.
3:13. இரண்டு அணியினர் நேருக்கு
நேர் சந்தித்துக் கொண்டதில்87 உங்களுக்கு தக்க சான்று உள்ளது. ஓர் அணியினர் அல்லாஹ்வின்
பாதையில் போரிட்டனர். (ஏகஇறைவனை) மறுப்போராக மற்றொரு அணியினர் இருந்தனர். தம்மைப்
போல் இரு மடங்காக கண்களால் அவர்களைக் கண்டனர்.466 தான் நாடியோரைத் தன்
உதவியின் மூலம் அல்லாஹ் வலுப்படுத்துகிறான். அறிவுடையோருக்கு இதில் பாடம் உள்ளது.
3:14. பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது
மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள்.
அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.88
3:16. "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே
எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' என்று அவர்கள் கூறுவார்கள்.
3:17. (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத்
தேடுவோராகவும் (இருப்பார்கள்.)
3:19. அல்லாஹ்விடம் மார்க்கம்
என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர்27 தம்மிடம் விளக்கம் வந்த
பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை
ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
3:30. ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும்
நாளில்1"தமக்கும் தமது (தீய) செயல்களுக்குமிடையே
மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும்'' என ஆசைப்படுவர். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு
எச்சரிக்கிறான். அடியார்கள் மீது அல்லாஹ் இரக்கமுள்ளவன்.
3:31 "நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப்
பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான்.
அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!
3:32. "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள்
புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!
3:41. "இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!'' என்று அவர் கேட்டார். "மூன்று நாட்கள்
சைகையாகவே தவிர உம்மால் மக்களிடம் பேச முடியாது என்பதே உமக்குரிய சான்றாகும். உமது
இறைவனை அதிகம் நினைப்பீராக! காலையிலும், மாலையிலும் துதிப்பீராக!''
என்று (இறைவன்) கூறினான்.
3:42. "மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து
தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்'' என்று வானவர்கள் (மர்யமிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!
3:43. "மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச்
செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!'' (என்றும் வானவர்கள் கூறினர்.)
3:57. நம்பிக்கை கொண்டு
நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு அவன் முழுமையாக வழங்குவான். அநீதி
இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
3:68. இப்ராஹீம் விஷயத்தில்
உரிமை படைத்த மக்கள் அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், நம்பிக்கை கொண்டோருமே.
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன்.
3:83. அல்லாஹ்வின் மார்க்கத்தை
விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன.96 அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
3:92. நீங்கள்
விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே
மாட்டீர்கள்.78 நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை
அறிந்தவன்.
3:102. நம்பிக்கை கொண்டோரே!
அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே295தவிர மரணிக்காதீர்கள்!
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும்
சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
3:106. அந்நாளில் சில முகங்கள்
வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கருத்திருக்கும். "நம்பிக்கை கொண்ட
பின் (ஏகஇறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!'' என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்)
3:107. வெண்மையான முகமுடையோர்
அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
3:110. நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட
சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்!
அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர்27 நம்பிக்கை கொண்டிருந்தால்
அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும்
உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
3:115. அவர்கள் எந்த நன்மையைச்
செய்தாலும் அது மறுக்கப்படாது. (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன்.
3:116. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து
அவர்களைச் சிறிதும் காப்பாற்றாது. அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக
இருப்பார்கள்.
3:117. இவ்வுலக வாழ்க்கையில்
அவர்கள் செலவிடுவதற்கு உதாரணம் கடும் குளிர் காற்றாகும். தமக்குத் தாமே
தீங்கிழைத்த கூட்டத்தின் பயிர்களில் அக்காற்று பட்டு அவற்றை அழித்து விடுகிறது.
அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே
தீங்கிழைத்தனர்.
3:122. உங்களில் இரு குழுவினருக்கும்
அல்லாஹ் உதவுபவன் என்ற நிலையில் அவ்விரு குழுவினரும் கோழைகளாகிட எண்ணினர்.196 நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
3:123. நீங்கள் தாழ்ந்த நிலையில்
இருந்தபோது அல்லாஹ் 'பத்ரு'க்களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
3:133. உங்கள் இறைவனிடமிருந்து
கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள்507 மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும்
விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
3:134. அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள்.
கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ்
நேசிக்கிறான்.
3:135. அவர்கள் வெட்கக்கேடானதைச்
செய்தாலோ, தமக்குத் தாமே
தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத்
தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள்
நிலைத்திருக்க மாட்டார்கள்.
3:136. தமது இறைவனிடமிருந்து
மன்னிப்பும், சொர்க்கச் சோலைகளுமே
அவர்களின் கூலி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக
இருப்பார்கள். (நன்கு) செயல்பட்டோரின் கூலி மிகவும் நல்லது.
3:137. உங்களுக்கு முன்னர்
முன்னுதாரணங்கள் சென்றுள்ளன. எனவே பூமியில் பயணம் செய்து (உண்மையைப்) பொய்யெனக்
கருதியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைச் சிந்தியுங்கள்!
3:138. இது மனிதர்களுக்கு
விளக்கமும், நேர்வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்.
3:139. தளர்ந்து விடாதீர்கள்!
கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.
3:140. உங்களுக்கு (போரில்) ஒரு
காயம் ஏற்பட்டால் அந்தக் கூட்டத்திற்கும் அது போன்ற காயம் ஏற்பட்டிருக்கிறது.
காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம். நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அடையாளம்
காட்டவும், உங்களில் உயிர் தியாகிகளை
ஏற்படுத்தவுமே (இவ்வாறு துன்பத்தைத் தருகிறான்). அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப
மாட்டான்.
3:141. நம்பிக்கை கொண்டோரை
அல்லாஹ் தூய்மைப்படுத்தவும் (தன்னை) மறுப்போரை அழிக்கவும் (இவ்வாறு செய்கிறான்.)
3:142. உங்களில் தியாகம்
புரிந்தோரை அல்லாஹ் அடையாளம் காட்டாமலும், பொறுமையாளர்களை அடையாளம் காட்டாமலும் நீங்கள் சொர்க்கத்தில் நுழையலாம் என்று
நினைக்கிறீர்களா?
3:145. அல்லாஹ்வின்
விருப்பமின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி.
இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை
விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியுடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம்.
3:146. எத்தனையோ நபிமார்களுடன்
சேர்ந்து எவ்வளவோ படையினர் போரிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு
ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை.
சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
3:147. "எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு
மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை)
மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!'' என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.
3:148. எனவே இவ்வுலகக்
கூலியையும், மறுமையின் அழகிய
கூலியையும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். நன்மை செய்வோரை அல்லாஹ்
விரும்புகிறான்.
3:149. நம்பிக்கை கொண்டோரே!
(ஏகஇறைவனை) மறுப்போருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் உங்களை வந்தவழியே திருப்பி
விடுவார்கள். இதனால் நட்டமடைவீர்கள்!
3:150. மாறாக அல்லாஹ்வே உங்கள்
அதிபதி. அவனே உதவி செய்வோரில் சிறந்தவன்.
3:157. அல்லாஹ்வின் பாதையில்
நீங்கள் கொல்லப்பட்டாலோ, மரணித்தாலோ
அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், அருளும் அவர்கள் திரட்டிக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது.
3:159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம்
நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம்
உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.
அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில்
அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே
சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.
3:160. அல்லாஹ் உங்களுக்கு உதவி
செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப்
பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
3:162. அல்லாஹ்வின் திருப்தியைப்
பெற்றவன், அல்லாஹ்வின் கோபத்திற்கு
ஆளாகி, நரகத்தை அடைந்தவனைப்
போன்றவனா? (அது) சென்றடையும்
இடங்களில் மிகவும் கெட்டது.
3:174. எனவே அவர்கள் அல்லாஹ்வின்
அருளுடனும், நற்பேறுடனும்
திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின்
திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
3:178. "(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது
அவர்களுக்கு நல்லது'' என்று அவர்கள் நினைக்க
வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம்.
இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு.
3:179. நல்லவரிலிருந்து கெட்டவரை
அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கெட்டவருடன் கலந்து) இருக்கிறீர்களோ
அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டுவிடமாட்டான்.103மறைவானதை அல்லாஹ்
உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான்
நாடியோரைத் தேர்வு செய்கிறான்.104 எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள்
நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.
3:180. அல்லாஹ் தமக்கு வழங்கிய
அருளில் கஞ்சத்தனம் செய்வோர்,
"அது தங்களுக்கு நல்லது" என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது.
அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில்1 கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள்507 மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள்
செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
3:185. ஒவ்வோர் உயிரும்
மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில்1 உங்களின் கூலிகள்
முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு
அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர
வேறில்லை.
3:186. உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள்.484 உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும்,27 இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும்
சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது
உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.
3:188. தாங்கள் செய்தவற்றுக்காக
மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப்
புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று
நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
3:190. வானங்களையும்,507 பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடைய
மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.
3:191. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்களும்507 பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள்.
"எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்;10எனவே நரக வேதனையிலிருந்து
எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள்
கூறுவார்கள்)
3:193. "உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை
நோக்கி அழைத்தவரின் அழைப்பை எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே நம்பிக்கை
கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை
விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!'' (என்றும் கூறுவார்கள்.)
3:194. "எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ
எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில்1 எங்களை இழிவுபடுத்தாதே! நீ வாக்கு மீறமாட்டாய்'' (எனவும் அவர்கள் கூறுவார்கள்.)
3:196. (ஏகஇறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக)
திரிவது உம்மை ஏமாற்றிட வேண்டாம்.
3:197இது அற்ப வசதிகளே. பின்னர் அவர்களின் புகலிடம் நரகமாகும்.
தங்குமிடத்தில் அது கெட்டது.
3:198. எனினும் தமது இறைவனை
அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம்
இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.
3:199. அல்லாஹ்வுக்குப் பணிந்து, அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்டதையும், தமக்கு அருளப்பட்டதையும்
நம்புவோர் வேதமுடையோரில்27 உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்க
மாட்டார்கள்.445 அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அல்லாஹ்
விரைவாகக் கணக்கெடுப்பவன்.
3:200. நம்பிக்கை கொண்டோரே!
சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்!
உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.