Oct 16, 2016

பிரார்த்தனைகள் - 1

பிரார்த்தனைகள் - 1
எஸ்.எஸ்.யூ. ஸைஃபுல்லாஹ் ஹாஜா

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அதிகாலைப் பொழுதில் தூக்கம் என்ற மரணப் படுக்கையிலிருந்து எழுகின்றான். இவனை எழ வைத்த இறைவனை எண்ணிப் பார்க்கச் சொல்கிறது இஸ்லாம்.

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வஇலைஹின் நுஷூர்

பொருள் : எங்களை மரணிக்கச் செய்த பின்னர் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரியது. அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவதும் இருக்கின்றது.

என்று படுக்கையை விட்டு எழும் போது கூற வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி),
நூல் : புகாரி 6312, 6314, 6324, 6325, 7394, 7395

அஸ்பஹ்னா வ அஸ்பஹல் முல்க்கு லில்லாஹி வல்ஹம்து லில்லாஹி லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்யின் கதீர். ரப்பி அஸ்அலுக்க ஹைர மா ஃபீ ஹாதல் யவ்ம வஹைர மா பஅதஹு வஅவூது பிக்க மின் ஷர்ரி மா ஃபீ ஹாதல் யவ்ம வஷர்ரி மா பஅதஹு. ரப்பி அவூது பிக்க மினல் கஸலி வ ஸூயில் கிபர். ரப்பி அவூது பிக்க மின் அதாபின் ஃபின்னாரி வஅதாபின் ஃபில் கப்ர்.

பொருள் :
நாங்கள் காலையை அடைந்து விட்டோம். ஆட்சியும் அல்லாஹ்வுக்கே ஆகி விட்டது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. அவனுக்கே ஆட்சி உரியது. அவனுக்கே புகழும் உரியது. அவனே அனைத்திலும் ஆற்றல் பெற்றவன்.

எனது இறைவனே! இந்த நாளில் உள்ள நன்மையையும் அதற்குப் பின்னர் உள்ள நன்மையையும் உன்னிடம் வேண்டுகின்றேன். இந்த நாளில் உள்ள தீமையை விட்டும் அதற்குப் பின்னர் உள்ள தீமையை விட்டும் உன்னிடம் காவல் தேடுகின்றேன். எனது இறைவனே! சோம்பல் மற்றும் கெட்ட முதுமையை விட்டும் உன்னிடம் காவல் தேடுகின்றேன். நரகில் உள்ள வேதனையை விட்டும் கப்ரில் உள்ள வேதனையை விட்டும் உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி)
நூல் : முஸ்லிம் 4901

அல்லாஹும்ம பிக்க அஸ்பஹ்னா வபிக்க அம்ஸய்னா வபிக்க நஹ்யா வபிக்க நமூத்து வஇலைக்கல் மஸீர்.

பொருள் : உன்னைக் கொண்டே காலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே மாலையை அடைந்தோம். உன்னைக் கொண்டு உயிர் பெறுகின்றோம். உன்னைக் கொண்டே மரணம் அடைவோம். உன் பக்கமே உயிர் பெற்று எழுதல் உள்ளது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி 4406

  காலையிலும் மாலையிலும்
அல்லாஹ்வின் தூதரே! நான் காலைப் பொழுதை அடைந்தாலும் மாலைப் பொழுதை அடைந்தாலும் நான் சொல்ல வேண்டியதை எனக்குக் கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) கேட்டார்கள்.

அல்லாஹும்ம ஆலிமல் கய்பி வஷ்ஷஹாதத்தி ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல் அர்ழி ரப்ப குல்லி ஷய்யின் வ மலீக்கஹூ அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்த அவூது பிக்க மின் ஷர்ரி நஃப்ஸீ வமின் ஷர்ரிஷ் ஷைத்தானி வ ஷிர்க்கிஹி

பொருள் :
அல்லாஹ்வே! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிபவனே! வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவனே! அனைத்துப் பொருட்களின் இரட்சகனே! அவற்றின் ஆட்சியாளனே! உன்னையன்றி வணங்கப் படுவதற்குரிய கடவுள் எவனும் இல்லை என்று நான் சான்றளிக்கின்றேன். என் ஆன்மாவின் தீங்கிலிருந்தும்,ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அவனது இணை வைத்தலின் தீங்கிலிருந்தும் உன்னைக் கொண்டே பாதுகாப்பு தேடுகின்றேன்.

என்று நீர் காலைப் பொழுதை அடைந்தாலும் மாலைப் பொழுதை அடைந்தாலும் படுக்கைக்குச் சென்றாலும் சொல்வீராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதி 3314