Oct 26, 2016

மவ்லிது ஒரு வணக்கமா?

மவ்லிது ஒரு வணக்கமா?

ஒரு முதலாளியிடம் ஒருவன் வேலை செய்கின்றான். அந்த முதலாளிக்குக் காலையில் 6 மணிக்கு டீ தேவை, 9 மணிக்கு டிபன் தேவை. ஆனால் இந்தப் பணியாளனோ 6 மணிக்கு டிபனையும் 9 மணிக்கு டீயையும் கொண்டு போய் கொடுக்கின்றான். இதுபோலவே அந்த முதலாளிக்குச் செய்ய வேண்டிய காரியங்கள், பணிவிடைகளில் அவரது விருப்பத்திற்குத் தக்க இவன் நடக்காமல் இவனது விருப்பத்திற்குத் தக்க அவருக்குப் பணிவிடைகள் செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். இதை அந்த முதலாளி ஏற்றுக் கொள்வாரா? நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்.

இந்த உதாரணத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ளும் அடிப்படையான விஷயம் முதலாளியின் விருப்பத்திற்குத் தக்க தொழிலாளி தன்னுடைய கடமைகளை வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தொழிலாளி தனது விருப்பத்திற்கு ஏற்ப அவரது கடமைகளை வகுத்துக் கொள்ளக் கூடாது.

நாம் வணங்கும் அல்லாஹ் என்ற அந்த எஜமான் மனிதத் தேவைகளுக்கும் பலவீனங்களுக்கும், இதுபோன்ற உதாரணங்களுக்கும் அப்பாற்றபட்டவன். எனினும் அவன் இன்னின்ன காரியங்களை எனக்குச் செய்யுங்கள் என்று நமக்குச் சில வணக்க வழிபாடுகளைக் கடமையாக்கியுள்ளான். இதுதான் அவனுடைய விருப்பம். அவனுடைய விருப்பத்திற்குத் தக்கவாறு தான் நாம் வணங்க வேண்டுமே தவிர நம்முடைய விருப்பத்திற்குத் தக்க அவனை வணங்கக்கூடாது. இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

இந்த அம்சத்தைப் பொறுத்த வரை மற்ற மதங்கள் அனைத்தும் இஸ்லாத்தை விட்டு வேறுபட்டு நிற்கின்றன. மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் வணங்குவது தான் பிற மதங்களிலுள்ள அம்சமாகும். ஆனால் அல்லாஹ் நினைத்தது போல் மக்கள் அவனை வணங்குவது தான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

வணக்கமாகி விட்ட மவ்லிதுகள்

இப்போது ரபீஉல் அவ்வல் மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலே அல்லாஹ்வின் பள்ளிகளிலும், தங்களின் வீடுகளிலும் மக்கள் மவ்லிதுகளை சங்கையாக ஓதிக் கொண்டிருப்பார்கள். பள்ளிகளானாலும் வீடுகளானாலும் அங்கு மேற்கட்டி கட்டப்பட்டு, அதில் பூமாலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். சந்தனக் கிண்ணம், சாம்பிராணி கிண்ணங்களும் மவ்லிது சபையைக் கலக்கி, சம அளவில் மனமேற்றிக் கொண்டிருக்கும். இன்னொரு பக்கத்தில் ஊதுபத்தியின் நறுமண வாடை கமழ்ந்து கொண்டிருக்கும். இதுபோக அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களும் தங்கள் பங்கிற்கு சுகந்தத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும்.

மவ்லிது கிதாபும் கையுமாக அலையக் கூடிய மவ்லவிகளுக்கு கிராக்கியான மாதம்! இவ்வாறு கிராக்கியான காலத்தில் அவர் மவ்லிது ஓதும் போது தொண்டை காய்ந்து விடக் கூடாது என்பதற்காக இடையிடையே பால், டீ, காபி, பாயாசம் போன்ற குடிபானங்கள்! மவ்லிது முடித்து கிறங்கிப் போய் விடக் கூடாது என்பதற்காக இறைச்சி சகிதம் அடங்கிய உணவுப் படைப்புகள்!

ஜகாத்தைக் கொடுக்க மறந்த சமுதாயம்

மக்கள் மவ்லிதுக்கென்று ஒரு பெருந்தொகையை செலவு செய்கின்றனர். இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் 12 நாட்களும் வீட்டில் ஆட்டிறைச்சி தான்! மறந்தும் இந்த மாதத்தில் மீன் உள்ளே புகுந்து விடக் கூடாது. மீன் மவ்லிதுக்குரிய தூய்மையை மாசுபடுத்தி விடும். ஒரு மாதிரியான நாற்றம் வெளிப்படும் என்பதற்காக மீனுக்கு இப்படி ஒரு தடை, கட்டுப்பாடு! அல்லாஹ் ஹலாலாக்கிய இந்த மாமிச உணவுகளுக்கு மத்தியில் இப்படி ஒரு பாரபட்சம்!

குர்ஆன் ஓதுவதற்கு இந்தக் கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் இருக்குமா என்றால் இருக்காது. காய்ந்த கருவாடு சாப்பிட்டு விட்டும் குர்ஆன் ஓதலாம். ஆனால் காயாத மீனைக் கூட மவ்லிது ஓதும் வீடுகளில் சாப்பிடக் கூடாது என்று நிபந்தனை வைத்துள்ளார்கள்.

இதைவிடக் கொடூர சட்டம் என்னவென்றால், மவ்லிது ஓதப்படும் வீடுகளில் கணவன், மனைவி இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை தான். இந்த அளவுக்கு இதற்குப் புனிதமும் புண்ணியமும் ஏற்றப்பட்டதால் இந்த மக்கள் இஸ்லாம் கொடுக்கச் சொன்ன ஜகாத்தைக் கூட கொடுக்காமல் இந்த மவ்லிதுக்கென்று மலையளவுக்குச் செலவு செய்கின்றனர்.

பெரும்பெரும் தர்ம ஸ்தாபனங்களில், வக்பு சொத்து நிறுவனங்களின் கல்வெட்டுக்களில் மாதாந்திர மவ்லிது செலவுக்கென்று ஒரு தொகையைச் செய்ய வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர். இஸ்லாம் கடமையாக்கிய ஜகாத்திற்கு கதவைச் சாத்தி விட்டனர். இந்த அளவுக்கு சமுதாயத்தில் அந்தஸ்தை இந்த மவ்லிது பெற்றுவிட்டதற்குக் காரணம், இது மக்களிடம் வணக்கம் என்ற தோற்றத்தைப் பெற்றிருப்பது தான்.

மவ்லவிமார்கள் வருவாய்க்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் இதை வணக்க வழிபாடாக ஆக்கி, இதற்காக இதுவரை வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்படி வக்காலத்து வாங்குவதற்கு இந்த மவ்லிதுகள் ஒரு வணக்கமாக இல்லை என்பதை விட மார்க்கத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு பாவத்திற்குத் தான் மவ்லவிகள் பரிந்து பேசுகின்றனர்.

முழுமை பெற்று விட்ட மார்க்கம்

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)

இந்த வசனம் வணக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது. எது எதைச் செய்தால் நன்மை கிடைக்கும் என்ற வணக்கம் தொடர்பான அனைத்தையும், அதாவது தனக்குப் பிடித்தமான வணக்கங்கள் அனைத்தையும் தெளிவாக, அல்லாஹ் தனது தூதருக்குக் காண்பித்துக் கொடுத்து விட்டான்.

எனக்குப் பிடித்த விதத்தில் அல்லாஹ்வை நான் வணங்கப் போகின்றேன் என்று யாரேனும் ஒருவர் கூறி எவராவது வணங்கினால் அந்த வணக்கம் நிராகரிக்கப்படும், தூக்கி முகத்தில் எறியப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 2697, முஸ்லிம் 3242

நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: முஸ்லிம் 3243

மேற்கண்ட ஹதீஸ்களின் படி எந்த ஒரு புது வணக்கத்தையும் எவரும் தன் விருப்பத்திற்கேற்ப நன்மை என்ற பெயரில் தோற்றுவித்தால் உருவாக்கிவன் முகத்திலேயே அதைத் தூக்கி எறிந்து விட வேண்டும். அப்படி மீறி எவராவது அதைச் செய்தால் அந்த அமல் அல்லாஹ்வினால் அவரது முகத்தில் தூக்கி எறியப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னால் சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தோன்றிய இந்த மவ்லிதுகள் நிச்சயமாக ஒரு இபாதத் அல்ல! அது ஒரு பித்அத் ஆகும். இத்தகைய பித்அத்தால் இம்மை மறுமையில் ஏற்படும் நட்டங்கள் இழப்புகள் என்னவென்று மவ்லிதும் ஷஃபாஅத்தும் என்ற தலைப்பில் பார்ப்போம்.

மவ்லிது விமர்சன இதழ்

இது மவ்லிது சீசன் என்பதால் மவ்லிதுகளைப் பற்றி வாசகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக இந்த இதழ் மவ்லிது விமர்சன இதழாக வெளியிடப்படுகின்றது. வழக்கமாக இடம் பெறும் தொழுகை, ஜிஹாத், பிரார்த்தனைகள் ஆகிய தொடர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் வழக்கம் போல் வெளிவரும்

- ஆசிரியர்


மாநில செயற்குழு கூட்டம்

அனைத்துத் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் 20.04.2004 செவ்வாய்கிழமை அன்று திருச்சியில் ரோஷன் மஹாலில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் மாநில தலைவர் மவ்லவி ந.ந.ம.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரம் த.மு.மு.க. வின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று கூறிய கருத்தை இச்செயற்குழு முற்றிலுமாக நிராகரிக்கிறது. த.மு.மு.க. வின் வளர்ச்சிக்காக எல்லா வகையிலும் தியாகம் செய்து உழைத்த ஏகத்துவக் கொள்கை சகோதரர்களை ஊனப்படுத்திய இந்தக் கருத்தை தெரிவித்து ஏகத்துவவாதிகளை உதாசீனப்படுத்திய த.மு.மு.க.வை புறக்கணிப்பது எனவும் இனி த.மு.மு.க.விற்கு எந்த வகையான ஆதரவும் ஒத்துழைப்பும் தருவதில்லை எனவும் தீர்மானிக்கப்படுகிறது.


2. தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் யாரும் த.மு.மு.க.வில் பொறுப்புகளிலோ உறுப்பினராகவோ இருக்கக்கூடாது என்றும் ஏற்கனவே த.மு.மு.க.வில் இருப்பவர்கள் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளையும் உடனடியாக ராஜினாமா செய்து அதை த.மு.மு.க.வுக்கும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமைக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.


3. மருத்துவ முகாம், இரத்த தான முகாம் உள்ளிட்ட அனைத்து சமூக நலப்பணிகளையும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் எல்லாக் கிளைகளிலும் நடத்தவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.


4. தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் ரமலானில் ஸதக்கத்துல் ஃபித்ர் வசூலித்து ஏழைகளுக்கு விநியோகிப்பது என்றும் நன்கொடைகளை திரட்டி ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


5. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள், இலவச பாடப்புத்தகங்கள் வழங்குதல் போன்ற பொதுநலச் சேவைகளை அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.


6. இதுவரை காலியாக உள்ள மேலாண்மைக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு சகோதரர் ந.ங.பாக்கர் அவர்களையும் ஆ.ந.அலாவுத்தீன் அவர்களையும் நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

(EGATHUVAM MAY 2004)