Oct 22, 2016

மட்டம் தட்டாதீர்!

மட்டம் தட்டாதீர்!

 

எம். ஷம்சுல்லுஹா

நண்பர்கள் பலரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு உரையாடிக் கொண்டிருப்பர். அங்கே பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் அவர்களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும். அவ்வாறு கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும் போது. அவர்களில் பொருளாதாரத்தில் குறைந்தவர் ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்வார். உடனே பக்கத்திலுள்ள ஒருவர், "ஆமாம். இவர் பெரிய தத்துவ முத்தை உதிர்த்து விட்டார். நீ எல்லாம் எங்கோ இருக்க வேண்டிய ஆள். இங்கே வந்து உயிரை வாங்குகின்றாய்'' என்று கடித்துக் குதறுவார். அவரை அந்தச் சபையில் வைத்து மட்டம் தட்டுவார்.

இப்படிப் பட்டவர்கள் பணம், அறிவு, அழகு, அரசியல் செல்வாக்கு ஆகிய அம்சங்களில் ஏதேனும் ஒன்றில் மற்றவர்களை விட சிறந்து விளங்குவார்கள். இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும். அதை மற்றவர்களை மட்டம் தட்டுவதற்குரிய கருவியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதாவது பலர் முன்னிலையில் அவமானப் படுத்தி மூக்கறுப்பார்கள். அன்றாடம் திண்ணை சபைகளிலிருந்து ஆலோசனைக் கூட்டம். பொதுக்கூட்டங்கள் வரை இந்த 'நோஸ் கட்' கலாச்சாரம் தொடர்கின்றது. இன்று கல்லூரிகளில் நடக்கும் ராக்கிங் இதனுடைய விரிவாக்கமாகும்.

ஒருவனை கொலை செய்வது அல்லது அவனது பொருளாதாரத்தைப் பறிப்பது போன்ற காரியங்கள் பெரும் பாவங்கள் என்பதை நன்றாகவே விளங்கி வைத்திருக்கின்றனர். ஆனால் நான்கு பேர்களுக்கு மத்தியில் அல்லது நாற்பது பேர்களுக்கு மத்தியில் வைத்து மட்டம் தட்டுவதை, அதனால் அவன் மனம் பாதிக்கப் படுவதை பெரிய தவறு என்பதை உணர்வதில்லை. உடலில் காயம் பட்டு உதிரம் வழிவதைப் பார்க்கும் போது பரிதாபம் ஏற்படுகின்றது. ஆனால் உணர்வுகள் காயப்படுத்தப் படும் போது பரிதாபம் ஏற்படுவது கிடையாது. அதைப் பொருட்படுத்துவது கூட கிடையாது. பாதிக்கப் பட்டவனோ தன் மனதிற்குள்ளேயே நொந்து அழுகின்றான். இதை மனிதர்களின் கண்கள் பார்ப்பதில்லை. ஆனால் மனிதர்களின் மன ஓட்டங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் அதைப் பார்க்கின்றான். அதனால் தான் அவன் தனது இறுதித் தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் நிறைவுறும் தருவாயில் இவ்வாறு பிரகடனப் படுத்துகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இது எந்த நாள்?''என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு வேறொரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மவுனமாக இருந்தோம். "இது நஹ்ருடைய (துல்ஹஜ் மாதம் பத்தாம்) நாள் அல்லவா?''என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என்றோம். அடுத்து "இது எந்த மாதம்?'' என்றார்கள். அந்த மாதத்திற்கு வேறொரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மவுனமாக இருந்தோம். "இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள். நாங்கள் ஆம் என்றோம். அடுத்து. "(புனிதமான) இந்த ஊரில் இந்த மாதத்தில். இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ. அது போல் உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம். மரியாதைகளும் புனிதம் வாய்ந்தவையாகும்'' என்று கூறி விட்டு. "இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறி விட வேண்டும். ஏனெனில் வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளக் கூடிய ஒருவருக்கு அந்தச் செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்''என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி),
நூல் : புகாரி 67

இந்த ஹதீஸின் அடிப்படையில் உயிர், உடைமை, தன்மானம் ஆகிய மூன்றையும் நபி (ஸல்) அவர்கள் சம அந்தஸ்தில் நிறுத்துகின்றார்கள். இம்மூன்றில் முஸ்லிம்கள் உயிர், உடைமை விஷயத்தில் விளையாடுவது கிடையாது. ஆனால் இந்தத் தன்மான விஷயத்தில் சர்வ சாதாரணமாக விளையாடுகின்றனர். கல்லூரிகளில் நடக்கும் ராக்கிங் என்பதும் இதில் அடக்கம். ராக்கிங் செய்யப் பட்டவன் தற்கொலை செய்து கொள்கின்றான் என்றால் அவன் மனம் எந்த அளவுக்கு காயப் படுத்தப் பட்டுள்ளது என்பதை, அதன் அழுத்தத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம். அதனால் இஸ்லாமிய மார்க்கம் இதில் உரிய கவனத்தைச் செலுத்துகின்றது. ஒருவனது தன்மானத்தை இன்னொருவன் களங்கப் படுத்துவதை ஹராம் என்று கூறுகின்றது,

தற்பெருமை
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை மட்டம் தட்டுகின்றார் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று. அவரை விட தன்னை உயர்ந்தவர் என்று கருதுவது. அல்லது அவரை இழிவாகக் கருதுவது ஆகிய இரண்டு காரணங்களுக்காகத் தான் மற்றவரை மட்டம் தட்ட முன் வருகின்றார். எனவே இந்த இரு விஷயங்களைப் பற்றி மார்க்கம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.

கண்ணியம் என்பது எனது கீழாடை. பெருமை என்பது எனது மேலாடை. இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றில் என்னுடன் யார் மோதுகின்றானோ அவனை நான் நரகத்தில் போட்டு விடுவேன் என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).
நூல் : முஸ்லிம்4752, அபூதாவூத் 3567

உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருக்கும் எவரும் நரகத்திற்குச் செல்ல மாட்டார். உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கும் எவரும் சுவனம் செல்ல மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
நூல் : முஸ்லிம் 132

இந்த ஹதீஸ்கள் பெருமையின் விபரீதத்தை உணர்த்துகின்றன. எனவே மட்டம் தட்டுவோர் தங்களுக்குக் கிடைக்கும் தண்டனையை எண்ணிப் பார்த்து இந்தத் தீமையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

இழிவாக எண்ணுதல்
ஒருவர் இன்னொருவரை மட்டம் தட்டுவதற்குரிய காரணம் இவர் அவரை இழிவாகக் கருதுவதாகும். அதனால் தான் பல பேர்களுக்கு மத்தியில் ஒருவரை மட்டம் தட்டுகின்றார்.

"ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவர் இவருக்கு அநீதி இழைக்கக் கூடாது. மோசடி செய்யக் கூடாது. இழிவாகக் கருதக் கூடாது. இறையச்சம் என்பது இங்கு தான்'' என்று தமது இதயத்தைச் சுட்டிக் காட்டி கூறினார்கள். (மேலும் அவர்கள் கூறியதாவது) ஒரு மனிதன் தன்னுடைய முஸ்லிமான சகோதரனை மட்டமாகக் கருதுவதே அவன் தீமையிலிருக்கிறான் என்பதற்குப் போதுமானதாகும். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).
நூல் : முஸ்லிம் 4650

மட்டம் தட்டுவது பாவம் என்பது ஒரு புறமிருக்கட்டும். மட்டமாக நினைத்தாலே அவன் தீயவன் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கு உறுதி படக் கூறுகின்றார்கள் எனும் போது அடுத்தவர்களுடைய சுயமரியாதை விஷயத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இங்கு உணரக் கடமைப் பட்டுள்ளோம். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் மீது எண்ணத்தில் கூட தூய்மையான எண்ணம் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறும் போது நாம் இதையும் தாண்டி ஒருவரை அவமானப் படுத்துகின்றோம் என்றால் அது எத்தகைய பாவம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மட்டம் தட்டுதல் என்ற பாவம் ஏற்படுவதற்கான இரண்டு காரணங்களையும் அதனால் ஏற்படும் விபரீதங்களையும் கண்டோம். இனி மட்டம் தட்டுவதால் ஏற்படும் மற்றொரு விளைவைப் பார்ப்போம்.
அல்லாஹ் தஆலா அடியார்கள் தனக்குச் செய்த பாவங்கள் அனைத்தையும் அவனே மன்னித்து விடுகின்றான். ஆனால் ஓர் அடியான் இன்னோர் அடியானுக்கு துரோகம் இழைத்து விட்டால் அதை அந்த அடியான் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிப்பது கிடையாது. மட்டம் தட்டுபவர்கள் எவ்வளவு நன்மைகளை மலை போல் குவித்திருந்தாலும் அவரால் பாதிக்கப் பட்டவர் மறுமையில் அல்லாஹ்விடம் வழக்கு தொடர்ந்தால் பாதிக்கப் பட்டவரின் பாதிப்புக்கு நீதி வழங்குவதற்காக அவருடைய நன்மைகளைப் பறிக்காமல் விட மாட்டான்.

"திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது. "யாரிடத்தில் பணமும் பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள். "எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான். இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப் படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப் பட்டு இவர் மீது எறியப் பட்டு. பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்''என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 4678

மட்டம் தட்டியதால் பாதிக்கப் பட்டவர் இப்படியொரு இறை நீதிமன்றத்தைச் சந்தித்தே தீருவார். இறுதியில் மட்டம் தட்டியவர் நரகத்தில் போய்ச் சேருவார்.

மட்டம் தட்டுதல் என்ற பாவம் என்ன அப்படியொரு பெரிய பாவமா? என்று நினைப்பவருக்கு அது நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் பாவம் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.
இது மட்டுமல்லாமல் இப்படி மட்டம் தட்டப் படுபவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு,மக்களுக்குச் சொல்ல வேண்டிய சரியான கருத்தைச் சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றார். அதனால் அடையக் கூடிய பலனை மக்கள் இழக்கின்றனர். எனவே எவரது மானத்தையும் வாங்கி அவரது மனதைப் புண்படுத்தாது வாழ்வோமாக!


(EGATHUVAM OCT 2003)