Oct 22, 2016

தொழுகையின் சட்டதிட்டங்கள் (பி. ஜைனுல் ஆபிதீன்) - PART 8

தொழுகையின் சட்டதிட்டங்கள்  (பி. ஜைனுல் ஆபிதீன்) -   PART 8

 

தயம்மும் சட்டங்கள்

பி. ஜைனுல் ஆபிதீன்

தொழுவதற்கு முன் உளூச் செய்வது அவசியம் என்பதையும் எவ்வாறு உளூச் செய்வது என்பதையும் இது வரை அறிந்தோம்.

தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. அல்லது தூய்மைப் படுத்தாமல் தொழலாமா? என்றால் அதுவும் கூடாது.

மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்.
உளூவின் மாற்றாக அமைந்துள்ள தயம்மும் பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

தயம்மும் - மாற்றுப் பரிகாரம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம். "பைதா'' என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினார்கள். அவர்களின் அருகில் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை. மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, "(உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபிகள் நாயகத்தையும் மக்களையும் தங்க வைத்து விட்டார். அவர்கள் அருகில் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை'' என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலையை எனது தொடையில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் தடங்கலை ஏற்படுத்தி விட்டாய். அவர்களருகிலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை'' என்று கூறி என்னைக் கண்டித்தார்கள். அவர் எதைக் கூற வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் கூறினார். எனது இடுப்பிலும் தமது கையால் குத்தினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தொடை மீது படுத்திருந்ததால் நான் அசையாமல் இருந்தேன். தண்ணீர் கிடைக்காத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தார்கள். அப்போது தான் தயம்மும் பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பிய போது அதன் அடியில் என் கழுத்து மாலை கிடைத்தது.
நூல் : புகாரி 334, 3672, 4607

தயம்மும் பற்றிய வசனம் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் உள்ளது. அதைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள். அந்த வசனங்கள் வருமாறு:

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:43)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்பு, கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப் படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 5:6)

கடமையான குளிப்புக்கும் தயம்மும் மாற்றுப் பரிகாரமாகும்
உளூச் செய்வதற்குப் பகரமாக மட்டுமின்றி கடமையான குளிப்புக்குப் பகரமாகவும் தயம்மும் செய்யலாம்.

இல்லறத்தில் ஈடுபட்டு, குளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு, குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் குளிப்பதற்குப் பகரமாக தயம்மும் செய்து கொள்ளலாம். குளித்த பின் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் தயம்மும் செய்த பின்னரும் செய்யலாம்.
மலஜலம் கழித்து உளூ நீங்கும் போது எவ்வாறு தயம்மும் செய்யலாமோ அது போல் குளிப்பு கடமையானவரும் தயம்மும் செய்யலாம் என்று மேலே நாம் சுட்டிக் காட்டிய இரு வசனங்களிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

கடமையான குளிப்புக்குப் பகரமாக தயம்முமும் உளூவுக்குப் பகரமாகச் செய்யும் தயம்முமும் ஒரே மாதிரியாகத் தான் செய்ய வேண்டும். இரண்டுக்கும் தனித்தனி முறைகள் இல்லை.

இதையும் மேற்கண்ட இரு வசனங்களிலிருந்து அறியலாம்.

தூய்மையான மண்ணை நாடி உங்கள் முகங்களிலும் கைகளிலும் தடவுங்கள் என்று இரு வசனங்களிலும் கூறப்படுகின்றது.

கடமையான குளிப்புக்காக உடல் முழுவதும் மண்ணைப் பூசிக் கொள்ளுங்கள் என்று கூறப்படவில்லை.

இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "எனக்கு குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை'' என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, "உங்களுக்கு நினைவிருக்கின்றதா? நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, தமது உள்ளங் கைகளால் தரையில் அடித்து வாயால் அதில் ஊதி விட்டு, இரு கைகளால் முகத்தையும் முன் கைகளையும் தடவிக் காட்டி, இப்படிச் செய்வது உமக்குப் போதுமே! எனக் கூறினார்கள்'' என்று தெரிவித்தார்கள்.
(நூல் : புகாரி 338)

கடமையான குளிப்புக்காக தயம்மும் செய்வது என்றால் உடல் முழுவதும் மண் பட வேண்டும் என்று கருதிய அம்மார் (ரலி) அவர்கள் மண்ணில் புரண்டு விட்டு தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது செயலை அங்கீகரிக்கவில்லை. முகத்தையும் முன் கைகளையும் தடவிக் கொள்வதே குளிப்புக்கும் பரிகாரம் என்று தெளிவு படுத்தி விட்டனர்.

ஒரு மனிதர் ஜமாஅத்துடன் தொழாமல் தனியாக இருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரிடத்தில், "நீர் ஏன் ஜமாஅத்துடன் தொழவில்லை?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை'' என்றார். அப்போது, "மண்ணில் தயம்மும் செய்யும்! அது உமக்குப் போதுமானது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் அல்குஸாயீ (ரலி)
நூல் : புகாரி 348, 344

தயம்மும் செய்யும் முறை
தயம்மும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் மேலே நாம் குறிப்பிட்டுள்ள புகாரி338வது ஹதீஸிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
"தமது உள்ளங்கைகளால் தரையில் அடித்து, வாயால் அதில் ஊதி விட்டு இரு கைகளால் முகத்தையும் முன் கைகளையும் தடவினார்கள்'' என்று அந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

இந்த வாசகத்திலிருந்து தயம்மும் பற்றிய பல விதிகளை நாம் அறிந்து கொள்ளலாம்.

முகத்தைத் தடவுவதற்காக ஒரு தடவையும், கைகளில் தடவுவதற்காக ஒரு தடவையும் ஆக இரு தடவைகள் தரையில் அடித்து தயம்மும் செய்கின்றனர். அவ்வாறு செய்யத் தேவையில்லை. ஒரு தடவை அடித்து விட்டு அதைக் கொண்டே முகத்திலும் கைகளிலும் தடவிக் கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

புகாரியின் 347வது ஹதீஸில் இது இன்னும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. "தமது உள்ளங்கையால் ஒரு தடவை தரையில் அடித்து, பின்னர் கைகளை உதறிப் பின்னர் தமது முன் கையின் மேற்பகுதியின் தடவி, பின்னர் அதன் மூலம் முகத்திலும் தடவினார்கள்''என்று அந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

முகமும் முன் கைகளும் போதும் என்று புகாரி 342வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

உளூச் செய்யும் போது இரு கைகளையும் முழங்கை வரை கழுவுவது போலவே தயம்மும் செய்யும் போதும் முழங்கை வரை தடவ வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். மேலே நாம் சுட்டிக் காட்டிய 338வது ஹதீஸில் அவ்வாறு செய்யத் தேவையில்லை. முன் கையில், அதாவது மணிக்கட்டு வரை தடவுவதே போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

"கைகள்' என்று பொதுவாகக் கூறப்படுவது மணிக்கட்டு வரை தான் குறிக்கும். உளூச் செய்யும் போது உங்கள் கைகளை முழங்கை வரை கழுவுங்கள் என்று கூறுவதால் தான் முழங்கை வரை கழுவுகின்றோம். தயம்மும் பற்றிக் கூறும் போது முழங்கை வரை எனக் கூறப்படவில்லை. இதற்கேற்ப நபி (ஸல்) அவர்களின் செயல் விளக்கமும் அமைந்துள்ளது.

தரையில் கைகளை அடித்து அப்படியே முகத்தில் தடவிக் கொள்ளாமல் கைகளில் ஒட்டியுள்ள புழுதியை ஊதி விட வேண்டும் என்பதை மேலே நாம் சுட்டிக் காட்டிய புகாரி338வது ஹதீஸிலிருந்து அறியலாம்.
ஊதுவதற்குப் பதிலாக கைகளை உதறினால் அதுவும் நபிவழி தான். இதை புகாரி 347வது ஹதீஸில் அறியலாம்.

மேலும் உளூச் செய்யும் போது முகத்தையும் கைகளையும் ஒரு தடவை, இரு தடவைகள்,மூன்று தடவைகள் கழுவலாம் என்பதை முன்னர் அறிந்தோம். தயம்மும் செய்யும் போது ஒரு தடவை தடவியதாகத் தான் மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. புகாரி 347வது ஹதீஸின் கடைசியில், "தமது முகத்தையும் முன் கைகளையும் ஒரு தடவை தடவினார்கள்''என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டு தடவை தரையில் அடிப்பது பற்றிய ஹதீஸ்களின் நிலை
புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு தடவை தான் தரையில் அடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அனால் வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள சில அறிவிப்புகளில் இரண்டு தடவை அடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களையும் அதன் தரத்தையும் பார்ப்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலஜலம் கழித்து விட்டு வந்து கொண்டிருந்த போது அவர்களை ஒருவர் வழியில் சந்தித்து, ஸலாம் கூறினார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறவில்லை. அந்த மனிதர் வீதியில் மறைய முயன்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கைகளைச் சுவற்றில் அடித்து அதன் மூலம் முகத்தில் தடவினார்கள். பின்னர் மற்றொரு தடவை அடித்து தமது குடங்கைகளில் தடவினார்கள். பின்னர் அவருக்குப் பதில் ஸலாம் கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூத் 279வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளரான முஹம்மத் பின் ஸாபித் என்பவரை இப்னு முயீன், அபூஹாத்தம்,புகாரி, அஹ்மத் பின் ஹம்பல் ஆகியோர் பலவீனர் என்று விமர்சனம் செய்துள்ளனர். தயம்மும் பற்றிய இந்த ஹதீஸ் "முன்கர்' என்றும் புகாரி இமாம் கூறுகிறார்.

இதே செய்தியில் அய்யூப், உபைதுல்லாஹ் மற்றும் அனேகர் அறிவிக்கும் போது இப்னு உமரின் செயலாக அறிவித்துள்ளனர். முஹம்மத் பின் ஸாபித் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சம்பந்தப் படுத்தி அறிவிக்கின்றார். இந்த ஹதீஸைப் பதிவு செய்த அபூதாவூத் அவர்களே இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல என்று விளக்கியுள்ளனர்.

முகத்திற்காக ஒரு தடவை, கைகளுக்காக ஒரு தடவை தரையில் அடிக்க வேண்டும் என்று ஹாகிம் 1/287, தாரகுத்னீ 1/180, தப்ரானியின் கபீர் 12/367 ஆகிய நூற்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இம்மூன்று நூற்களிலும் அலீ பின் லப்யான் என்பவர் வழியாகவே இந்த ஹதீஸ் பதிவு செய்யப் பட்டுள்ளது. இப்னு முயீன், யஹ்யா அல் கத்தான் மற்றும் அனேகர் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

மற்றொரு ஹதீசும் ஹாகிம் 1/287ல் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளரான சுலைமான் பின் அபீதாவூத் ஏற்கத்தக்கவரல்ல!
மேற்கண்ட கருத்தில் மற்றொரு ஹதீஸ் ஜாபிர் (ரலி) மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஹாகிம், தாரகுத்னீ ஆதிய நூற்களில் அது பதிவு செய்யப் பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர் என்றாலும் உஸ்மான் பின் முஹம்மத் மட்டுமே அதை நபிகள் நாயகத்தின் கூற்றாக அறிவிக்கின்றார். உஸ்மான் பின் முஹம்மத் யார் வழியாக அறிவிக்கின்றாரோ அதே போல் மற்றும் பலர் இதை ஜாபிர் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவிக்கின்றனர். எனவே அதிகமானவர்கள் கூறுவதற்கு இது மாற்றமாக உள்ளதால் "ஷாத்'எனும் பலவீனமான நிலைக்கு இந்த ஹதீஸ் இறங்குகிறது. ஜாபிர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று என்ற அறிவிப்பு தான் சரியானது என்று தாரகுத்னீ கூறுகின்றார்.
இரண்டு தடவை தரையில் அடிக்க வேண்டும் என்பதை இப்னு உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக பைஹகீ அவர்கள் தமது நூலில் (1/207) பதிவு செய்து விட்டு, "நபிகள் நாயகம் அவர்களின் கூற்றாக அலீ பின் லப்யான் அறிவித்திருப்பது தவறாகும்'' என்று கூறுகின்றார். மேலும் சுலைமான் பின் அபீதாவூத், சுலைமான் பின் அர்கம் ஆகிய இருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள். இவர்களது அறிவிப்பை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்றும் பைஹகீ கூறுகின்றார்.

முகத்தில் தடவுவதற்காக ஒரு தடவையும் கைகளில் தடவுவதற்காக மற்றொரு தடவையும் தரையில் அடிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அபூஉமாமா அறிவிக்கும் ஒரு ஹதீஸ் தப்ரானியின் முஃஜமுல் கபீரில் உள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஜஃபர் பின் ஸுபைர் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் நானூறு ஹதீஸ்களை இட்டுக் கட்டியவர் என்று ஷுஃபா கூறுகின்றார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தயம்மும் செய்து காட்டினார்கள் என்று அஸ்லஃ (ரலி) அறிவிக்கும் ஹதீஸிலும் இரண்டு தடவை தரையில் அடித்துத் தயம்மும் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரபீவு பின் பத்ர் என்பார் பலவீனமானவர் என்று பைஹகீ அவர்களே தெளிவு படுத்தியுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) வழியாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸிலும் இரண்டு தடவை அடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பஸ்ஸார் எனும் நூலில் பதிவு செய்யப் பட்டுள்ள இந்த ஹதீஸில் ஹரீஷ் பின் கிர்ரீஷ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவரது அறிவிப்புக்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது, இவர் நிராகரிக்கப் பட்ட ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று அபூஹாத்தம் கூறுகின்றார்.

அம்மார் (ரலி) அறிவிக்கும் ஹதீஸில் முகத்தில் தடவுவதற்காக ஒரு தடவையும் கைகளில் தடவுவதற்காக ஒரு தடவையும் அடிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக தப்ரானியின் முஃஜமுல் கபீர் மற்றும் முஃஜமுல் அவ்ஸத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் இப்ராஹீம் பின் முஹம்மத் பின் அபீயஹ்யா என்பார் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர்.

அம்மார் (ரலி) அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அனைத்திலும் ஒரு தடவை அடிப்பது பற்றித் தான் கூறப்படுகின்றது.

எனவே தயம்மும் செய்யும் போது முகத்திற்காக ஒரு தடவையும், கைகளுக்காக மற்றொரு தடவையும் தரையில் அடிக்க வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக அமைந்துள்ளன.

இரண்டுக்கும் சேர்த்து ஒரு தடவை அடிக்க வேண்டும் என்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளன. அதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
எனவே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஒரு தடவை மட்டும் தரையில் அடித்து தயம்மும் செய்வதே சுன்னத்தான நடைமுறையாகும்.

மேலும் முழங்கை வரை கைகளில் மஸஹ் செய்ய வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களும் பலவீனமானவையாக உள்ளன. இரண்டு தடவை அடிக்க வேண்டும் எனக் கூறுகின்ற ஹதீஸ்களை நாம் மேலே கண்டோம். அந்த ஹதீஸ்களில் பெரும்பாலானவைகளில் முழங்கை வரை என்ற வாசகமும் சேர்ந்து இடம் பெற்றுள்ளது. எனவே அவை பலவீனமானவை என்பதற்கான காரணத்தை மீண்டும் கூறத் தேவையில்லை.

தயம்மும் செய்ய ஏற்றவை
தயம்மும் செய்வது பற்றிக் கூறும் மேற்கண்ட இரு வசனங்களிலும் "தூய்மையான மண்'என்ற வாசகம் பயன்படுத்தப் பட்டுள்ளது.
எனவே மண்ணில் தான் தயம்மும் செய்ய வேண்டும்.

"மண்' எது என்பதில் அறிஞர்கள் பயங்கரமான சர்ச்சைகளில் இறங்கியுள்ளனர்.

பூமியில் உள்ள மரம், இரும்பு மற்றும் உலோகங்கள் உட்பட எதில் வேண்டுமானாலும் தயம்மும் செய்யலாம் என்று சிலர் கூறுகின்றனர். எல்லாம் மண்ணிலிருந்து தான் உருவானவை எனக் காரணம் கூறுகின்றனர்.

மனிதன் கூட மண்ணிலிருந்து உருவானவன் தான்; எனவே ஒருவர் தனது வயிற்றில் அடித்து தயம்மும் செய்யலாம் என்று கூற வேண்டி வரும். மரம் போன்றவை மண்ணிலிருந்து உருவாகியிருந்தாலும் இப்போது வேறு பொருளாக அது ஆகிவிட்டது. அதை மண் எனக் கூற முடியாது.

ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள், மண் என்றால் புழுதி இருப்பது அவசியம். புழுதிகள் கலக்காத கடற்கரை மற்றும் ஆற்று மண்ணில் தயம்மும் செய்யக் கூடாது என்று கூறுகின்றனர். இவர்களின் கூற்றுக்கு குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ எந்த ஆதாரமும் இல்லை. "மண்' என்ற சொல்லில் புழுதி கலந்த மண்ணும் புழுதி கலக்காத மண்ணும் அடங்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த சாதாரண உண்மை!

மேலும் மரப் பலகைகள் மீது புழுதி படிந்திருந்தால் அதன் மேல் தயம்மும் செய்யலாம் எனவும் இவர்கள் கூறுகின்றனர். இதற்கும் ஆதாரம் இல்லை.

மண் என்பது அதன் அனைத்து வகைகளையும் குறிக்கும். களிமண், மணல், இறுகிய மண்ணாங்கட்டி, மண் சுவர் போன்ற அனைத்துமே மண்ணில் அடங்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுவற்றில் அடித்துத் தயம்மும் செய்தார்கள் என்று புகாரி337வது ஹதீஸில் கூறப்படுகின்றது.

இதிலிருந்து மண் என்பது உதிரியாகக் கிடப்பவை மட்டும் அல்ல! ஒன்று சேர்ந்து திரட்டப் பட்டவையும் "மண்' என்பதில் அடங்கும் என விளங்கலாம்.

தூய்மையான மண் என்று தயம்மும் பற்றிய வசனத்தில் கூறப்பட்டுள்ளது. மண்ணில் பெரும்பாலான இடங்கள் மணிதர்களாலும் கால்நடைகளாலும் அசுத்தம் செய்யப்பட்டே உள்ளன. தூய்மையான மண் அரிதாகத் தானே கிடைக்கும் என்று நாம் கவலைப்படத் தேவையில்லை.

அசுத்தமான மண் காய்ந்து விடுமானால் அது தூய்மையான மண்ணாக ஆகி விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களுடைய பள்ளிவாசலில் நாய்கள் சிறுநீர் கழிக்கும், உள்ளே வரும், வெளியே செல்லும். அந்த இடத்தில் நபித்தோழர்கள் தண்ணீர் தெளிக்க மாட்டார்கள் என்று அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல் : புகாரி 174

நாய்கள் பள்ளிக்குள் வந்து சிறுநீர் கழித்திருந்தும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழுவி விட்டதில்லை என்பதை இதிலிருந்து அறியலாம். நாய் சிறுநீர் கழித்தாலும் அந்த மண் காய்ந்து விட்டால் அது தூய்மையாகி விடும் என்பதையும் அறியலாம்.

இதில் அதிகப் பட்சமாக நாம் விளங்குவது என்னவென்றால் அந்த மண் காய்ந்து விட்டிருக்கும் என்பதைத் தான். இந்த ஹதீஸில் அவ்வாறு கூறப்படாவிட்டாலும் ஈரமான சிறுநீர் நம்மீது ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதால் அவ்வாறு கருதலாம்.

கிராமவாசி பள்ளியில் சிறுநீர் கழித்த போது அந்த இடத்தில் ஒரு வாளி தண்ணீரை ஊற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி 220, 221, 6128 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு அசுத்தப் படுத்தப் பட்ட மண்ணைக் கழுவ வேண்டும் அல்லது அதன் மேல் ஒரு வாளி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

நாய்கள் சிறுநீர் கழித்த பிறகும் அந்த இடத்தில் தண்ணீர் தெளிக்க மாட்டார்கள் என்று ஹதீஸ் இருப்பதால் அதற்கு முரணில்லாத வகையில் தான் இந்த ஹதீஸை விளங்க வேண்டும்.

ஈரமாக இருக்கும் நிலையிலேயே தொழுவது என்றால் அந்த இடத்தில் ஒரு வாளி தண்ணீர் ஊற்ற வேண்டும். ஈரமாக இல்லாவிட்டால் அது தேவையில்லை என்று விளங்கினால் இரண்டு வகையான ஹதீஸ்களையும் ஏற்றவர்களாக நாம் ஆக முடியும்.

அல்லது ஒரு வாளி தண்ணீர் தெளிப்பது சிறந்தது. தெளிக்காவிட்டால் குற்றமில்லை என்று விளங்கினாலும் இரண்டு ஹதீஸில் எதையும் நிராகரித்தவர்களாக நாம் ஆக மாட்டோம்.

குளிர் தாங்க முடியாத போது தயம்மும் செய்தல்
தாதுஸ் ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில் குளிராக இருந்த ஒரு இரவில் எனக்கு தூக்கத்தில் விந்து வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன். எனவே தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தேன். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன். "அம்ரே! உமக்குக் குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்கு தொழுவித்தீரா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். குளிப்பதற்குத் தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன். "உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவனாக இருக்கிறான்'' என்று அல்லாஹ் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன் என்று விளக்கினேன். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.
அறிவிப்பவர் : அம்ரு பின் ஆஸ் (ரலி),
நூல்கள் : அபூதாவூத் 283, நஸயீ 430

தொழுது முடிந்த பின் தண்ணீர் கிடைத்தால்...
தண்ணீர் கிடைக்காது தயம்மும் செய்து தொழுத பின்னர் அந்தத் தொழுகையின் நேரம் முடிந்த பின் தண்ணீர் கிடைத்தால் அந்தத் தொழுகையை மீண்டும் தொழத் தேவையில்லை என்பதை அனைத்து அறிஞர்களும் ஒருமித்து கூறுகின்றனர்.

ஆனால் அந்தத் தொழுகை நேரம் முடிவதற்குள் தண்ணீர் கிடைத்து விட்டால் மீண்டும் அத்தொழுகையைத் தொழ வேண்டுமா? என்பதில் இரண்டு கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவுகின்றன.

உதாரணமாக அஸர் தொழுகையின் நேரம் 3:30 முதல் 6:30 வரை என்று வைத்துக் கொள்வோம். தண்ணீர் கிடைக்காத போது ஒருவர் நான்கு மணிக்கு அஸர் தொழுது விடுகின்றார். பிறகு ஐந்து மணியளவில் அவருக்குத் தண்ணீர் கிடைக்கிறது. அஸருடைய நேரம் இன்னும் முடியாததால் உளூச் செய்து மீண்டும் தொழ வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

ஒரு தொழுகையைத் தொழுது முடித்த பிறகு அதை மீண்டும் தொழத் தேவையில்லை என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

இது தான் சரியான கருத்தாகும். இதற்கான ஆதாரம் வருமாறு:

இரண்டு மனிதர்கள் ஒரு பயணத்தில் சென்றனர். அப்போது தொழுகை நேரம் வந்து விட்டது. அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவே தூய்மையான மண்ணில் தயம்மும் செய்து தொழுதனர். பின்னர் அந்தத் தொழுகை நேரம் முடிவதற்குள் தண்ணீர் கிடைத்தது. அவர்களில் ஒருவர் உளூச் செய்து மீண்டும் தொழுதார். மற்றொருவர் திருப்பித் தொழவில்லை. பின்னர் இருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதுபற்றிக் கூறினார்கள். மீண்டும் தொழாதவரை நோக்கி, "நீர் சுன்னத் படி நடந்து கொண்டீர். உமது தொழுகை செல்லும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். உளூச் செய்து மீண்டும் தொழுதவரை நோக்கி, "உமக்கு இரு மடங்கு கூலி உண்டு'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்கள் : அபூதாவூத் 286, தாரமி 737

தயம்மும் செய்து தொழுது முடித்த பின்னர் உடனேயே தண்ணீர் கிடைத்தாலும் அத்தொழுகையை திருப்பித் தொழ வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு தொழுவது குற்றமும் இல்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

ஒரு தயம்முமுக்கு ஒரு தொழுகையா?
லுஹர் நேரத்தில் நாம் தயம்மும் செய்து தொழுகின்றோம். பின்னர் அஸர் நேரம் வருகின்றது. அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. உளூவை நீக்கும் காரியம் எதுவும் நம்மிடம் நிகழவில்லை. இந்த நிலையில் லுஹருக்குச் செய்த அதே தயம்மும் மூலம் அஸரையும் தொழலாமா? என்றால் இதிலும் இரண்டு கருத்துக்கள் உள்ளன.

ஒரு தயம்மும் செய்து ஒரு கடமையான தொழுகை தொழுவது தான் நபிவழி. மற்ற தொழுகைக்கு மீண்டும் தயம்மும் செய்ய வேண்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஹஸன் பின் உமாரா என்பவர் வழியாக இது அறிவிக்கப் படுகின்றது. இவர் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு எடுக்கும் முடிவை ஏற்கக் கூடாது.

ஒரு தடவை தயம்மும் செய்து ஒரு கடமையான தொழுகையைத் தான் தொழ வேண்டும் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் இல்லை.

எனவே ஒரு உளூவைக் கொண்டு எத்தனை தொழுகைகளையும் தொழலாம் என்பது போல் உளூவின் மாற்றாக அமைந்துள்ள தயம்முமையும் கருதுவதே சரியானதாகும். ஒரு தயம்மும் மூலம் ஒரு தொழுகை தொழுத பின் அடுத்த தொழுகை நேரத்திலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் அந்தத் தொழுகையையும் அதே தயம்மும் மூலம் தொழலாம் என்று முடிவு செய்வதே சரியானதாகும். வளரும் இன்ஷா அல்லாஹ்
முற்றும்


(EGATHUVAM AUG 2003)