Oct 26, 2016

தொழுகையின் சட்டதிட்டங்கள் (பி. ஜைனுல் ஆபிதீன்) - PART 10 உளூவை

தொழுகையின் சட்டதிட்டங்கள்  (பி. ஜைனுல் ஆபிதீன்) -   PART 10

 

பி. ஜைனுல் ஆபிதீன்

உளூவுடன் இருப்பவர் மலஜலம் கழித்தாலோ, அவரிடமிருந்து காற்று பிரிந்தாலோ உளூ நீங்கி விடும். அதன் பின்னர் அவர் தொழுவதாக இருந்தால் மீண்டும் உளூச் செய்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பதைச் சென்ற இதழில் நாம் அறிந்தோம்.

சமைத்த உணவுகளை உண்பது உளூவை நீக்குமா?

பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதால் உளூ நீங்காது என்பதில் மாறுபட்ட ஹதீஸ்கள் எதுவும் இல்லை. எனவே இவற்றை உண்பதால் உளூ நீங்காது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை.

சமைத்த பொருட்களை உண்பதால் உளூ நீங்குமா என்பதில் மாறுபட்ட கருத்துக்களைத் தரும் ஹதீஸ்கள் உள்ளன.

நெருப்பு தீண்டியவற்றின் காரணமாக (சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதன் காரணமாக) உளூச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா, ஸைத் பின் ஸாபித் (ரலி),

நூல்:முஸ்லிம்528,529

சமைக்கப் பட்ட உணவுகளை உட்கொள்வதால் உளூச் செய்ய வேண்டும் என்று இந்த ஹதீஸ்கள் தெளிவாகக் கூறினாலும் இந்தச் சட்டம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பின்னர் ரத்து செய்யப் பட்டு விட்டது.

சமைத்த பொருட்களைப் சாப்பிட்ட பின் (உளூச் செய்தல், உளூச் செய்யாமல் விட்டு விடுதல் ஆகிய) இரு காரியங்களில் உளூவை விட்டு விடுவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதியாக நடைமுறைப் படுத்தியதாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல்: நஸயீ 185

சமைக்கப்பட்ட பொருட்களை உண்பதால் உளூச் செய்ய வேண்டும் என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்ததையும் பின்னர் அது மாற்றப்பட்டு விட்டதையும் மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.

இதை உறுதி செய்யும் வகையில் ஏராளமான சான்றுகளும் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடையைத் திருத்திக் கொண்டு தொழுகைக்குப் புறப்படலானார்கள். அப்போது ரொட்டியும், இறைச்சியும் அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பப்பட்டது. அதில் மூன்று கவளம் சாப்பிட்டு விட்டு, தண்ணீரைத் தொடாமலேயே மக்களுக்குத் தொழுவித்தார்கள்.
(முஸ்லிம் 538)


சமைக்கப் பட்ட ரொட்டியைச் சாப்பிட்டு விட்டு உளூச் செய்யாமலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்டிறைச்சியை சாப்பிட்டு விட்டு உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.

(நூல்: 207, 210, 208, 2963, 5408, 5422, 5462, 5405, 675)


சமைக்கப்பட்ட இறைச்சியைச் சாப்பிட்டாலும் உளூ நீங்காது என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மாவு கொண்டு வரப்பட்டது. அதைத் தண்ணீரில் குழைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் வாய் கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். அவர்கள் உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.

(நூல்: புகாரி 209, 215, 2981, 4195, 5384, 5390, 5455)


ஒட்டகத்தின் இறைச்சியை உண்பது உளூவை நீக்கும்

எதைச் சாப்பிட்டாலும் உளூ நீங்காது என்றாலும் ஒட்டகத்தின் இறைச்சியைச் சாப்பிடுவது உளூவை நீக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரத்தியேகமாகக் கூறியுள்ளனர்.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "ஆட்டிறைச்சியை உண்பதால் உளூச் செய்ய வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் உளூச் செய்து கொள்! விரும்பினால் உளூச் செய்யாமல் இருந்து கொள்'' என்று கூறினார்கள். "ஒட்டகத்தின் இறைச்சியை உண்பதால் நாங்கள் உளூச் செய்ய வேண்டுமா?'' என்று அவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம்! ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளூச் செய்'' என்று கூறினார்கள். "ஆடுகள் கட்டப்படும் இடங்களில் தொழலாமா?'' என்று அவர் கேட்டார். "தொழலாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். "ஒட்டகம் கட்டப்படும் இடங்களில் தொழலாமா?'' என்று அவர் கேட்டார். "கூடாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி),

நூல்: முஸ்லிம் 539

ஒட்டகத்தின் இறைச்சியைச் சாப்பிடுவது உளூவை நீக்கும் என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.

ஆனாலும் பெரும்பாலான அறிஞர்கள் ஒட்டகத்தின் இறைச்சியைச் சாப்பிட்டாலும் உளூ நீங்காது என்று கூறுகின்றனர்.

இதற்கு அவர்களிடம் நேரடியான எந்த ஆதாரமும் இல்லை. சமைத்த பொருட்களைச் சாப்பிட்ட பின் உளூச் செய்யத் தேவையில்லை என்பது தான் நபிகள் நாயகத்தின் கடைசி நிலையாக இருந்தது என்ற ஹதீஸைத் தான் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

சமைக்கப் பட்ட உணவு என்ற அளவு கோலை அடிப்படையாக வைத்து மேற்கண்ட (முஸ்லிம் 539) ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளிக்கவில்லை. ஆட்டிறைச்சி, ஒட்டகத்தின் இறைச்சி ஆகிய இரண்டுமே சமைக்கப்படும் உணவு வகையைச் சேர்ந்ததாக இருந்தும், ஆட்டிறைச்சிக்கு ஒரு நிலையும் ஒட்டகத்தின் இறைச்சிக்கு மற்றொரு நிலையும் எடுக்கின்றார்கள். இரண்டு இடங்களில் தொழுவது பற்றிக் கேட்ட போதும் மாறுபட்ட இரண்டு பதில்களைக் கூறுகின்றார்கள்.

எனவே ஒட்டகத்தின் இறைச்சி சாப்பிட்டால் உளூ நீங்கும் என்பது ஒட்டகத்தின் இறைச்சி என்பதற்காகக் கூறப்பட்ட சட்டமே தவிர சுமைக்கப் பட்டது, சமைக்கப் படாதது என்பதற்காக கூறப்பட்ட சட்டம் அல்ல! எனவே பெரும்பாலான அறிஞர்களின் வாதம் ஏற்புடையதல்ல!

"
மதீ' வெளியானால் உளூ நீங்கும்

ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் "மதீ - இச்சை நீர்' எனப்படும். (இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல)

மலஜலம் கழித்தல், காற்றுப் பிரிதல் ஆகியவை உளூவை நீக்குவது போலவே இந்த "மதீ' எனும் இச்சை நீர் வெளிப்படுவதும் உளூவை நீக்கும்.

அதிக அளவில் "மதீ' வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாக் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். "உளூச் செய்ய வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி),

நூல்: புகாரி 132, 178

"ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி 269வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.


வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா?

வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் முரண்பட்ட இரண்டு கருத்துக்கள் உள்ளன.

வாந்தி எடுத்தால் உளூ நீங்கி விடும் என்று கூறுவோர் தமது கருத்துக்கு ஆதரவாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள். உடனே நோன்பை முறித்தார்கள். உளூச் செய்தார்கள்'' என்று அபுத்தர்தா (ரலி) கூறினார். நான் டமாஸ்கஸ் நகரின் பள்ளிவாசலில் ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றிக் கூறினேன். அதற்கவர்கள், "அபுத்தர்தா உண்மையே கூறினார். நான் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீரை ஊற்றியவன்'' என்று விடையளித்தார்கள்.


அறிவிப்பவர்: மஃதான் பின் அபீதல்ஹா (ரலி)

நூல்கள்: திர்மிதி 80, அபூதாவூத் 2033, அஹ்மத் 26261

வாந்தி எடுத்தால் உளூ நீங்கி விடும் என்று முடிவு செய்வதற்கு, இது ஆதாரமாக ஆகாது.

வாந்தி எடுத்தால் உளூச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டால் அதிலிருந்து இவ்வாறு சட்டம் வகுக்கலாம். அப்படி எந்தக் கட்டளையும் இந்த ஹதீஸில் இல்லை. வாந்தி எடுத்தால் உளூச் செய்வது விரும்பத்தக்கது என்று தான் இதிலிருந்து சட்டம் வகுக்க முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஸலாம் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறாமல் ஒரு சுவற்றின் அருகே சென்று தயம்மும் செய்து விட்டுப் பதில் கூறினார்கள் என்று புகாரி 337வது ஹதீஸ் கூறுகின்றது.

இதிலிருந்து ஸலாமுக்குப் பதில் கூறுவதற்கு உளூவோ, தயம்முமோ அவசியம் என்று யாரும் முடிவு செய்ய முடியாது.

வாந்தி எடுத்தால் உளூ நீங்கி விடும் என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

"யாருக்காவது சிறிய அளவிலான வாந்தியோ, அதிகமான வாந்தியோ ஏற்பட்டால் அல்லது மூக்கிலிருந்து இரத்தம் கொட்டினால் அல்லது மதீ வெளியானால் தொழுகையை விட்டு விட்டு உளூச் செய்து விட்டுத் தொழுகையை விட்ட இடத்திலிருந்து தொடரட்டும். இடையில் யாரிடமும் பேச வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: இப்னுமாஜா 1121

இதை இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பார் இப்னு ஜுரைஜ் வழியாக அறிவிக்கின்றார். இவர் நம்பகமானவர் தான். இவர் செவியுறும் ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்வார்.

*ஹிஜாஸ் வாசிகள் வழியாகக் கிடைத்தவை.


*இராக் வாசிகள் வழியாகக் கிடைத்தவை.


*சிரியா வாசிகள் வழியாகக் கிடைத்தவை


என்று தலைப்பிட்டு பதிவு செய்து கொள்வார்.

இதில் ஹிஜாஸ் வாசிகள் வழியாகக் கிடைத்த ஹதீஸ் ஏடு அவரிடமிருந்து தொலைந்து விட்டது. எனவே தனது நினைவாற்றல் மூலம் தப்பும் தவறுமாக அறிவிக்கலானார். எனவே இவர் ஹிஜாஸ் வாசிகள் வழியாக அறிவித்தால் அந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் கூறியதாகத் தான் இவர் அறிவித்துள்ளார். இப்னு ஜுரைஜ் ஹிஜாஸ் வாசியாவார்.

எனவே பலவீனமான இந்த ஹதீஸின் அடிப்படையில் வாந்தி எடுத்தால் உளூ நீங்கும் என்று கூற முடியாது.

தாரகுத்னீயிலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதைப் பதிவு செய்த தாரகுத்னீ அவர்கள், "அப்பாத் பின் கஸீர், அதா பின் அஜ்லான் ஆகிய இருவர் வழியாக இது அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த இருவருமே பலவீனமானவர்கள்'' என்று குறிப்பிடுகின்றார்கள். (நூல்: தாரகுத்னீ, பாகம்:1, பக்கம் 154)

இதை சுலைமான் பின் அர்கம் என்பாரும் அறிவித்துள்ளார். இவரும் ஏற்கத்தக்கவர் அல்லர் என்று அதே பக்கத்தில் தாரகுத்னீ குறிப்பிடுகின்றார்கள்.

வாந்தி எடுத்தால் உளூ நீங்கும் எனக் கூறும் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல என்று இமாம் நவவீ கூறுகின்றார்.

எனவே அதிக அளவிலோ, குறைந்த அளவிலோ வாந்தி எடுப்பதால் உளூ நீங்காது.

வளரும் இன்ஷா அல்லாஹ்
(EGATHUVAM FEB 2004)