Oct 16, 2016

தொழுகையின் சட்டதிட்டங்கள் (பி. ஜைனுல் ஆபிதீன்) - PART 6

தொழுகையின் சட்டதிட்டங்கள்  (பி. ஜைனுல் ஆபிதீன்) -   PART 6
பி. ஜைனுல் ஆபிதீன்

இது வரை நாம் கூறிய சட்டங்களில் சில விதிவிலக்குகளும் சலுகைகளும் உள்ளன. அவற்றையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்
உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும் என்பதை உரிய ஆதாரங்களுடன் முன்னர் நாம் குறிப்பிட்டோம்.

கால்களில் காலுறை அணிந்திருப்பவர்கள் காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது இந்தச் சட்டத்தில் உள்ள விதி விலக்காகும்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இந்தச் சலுகை கூறப்பட்டிருந்தும், மத்ஹபு நூல்களில் கூட இச்சலுகை பற்றிக் கூறப்பட்டிருந்தும் பெரும்பாலான மக்கள் இதை அறியாமல் உள்ளனர்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி), ]
நூல் : புகாரி 182, 203, 2918, 4421, 5798

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரணமாக முகத்தையும், கைகளையும் கழுவியது பற்றி நபித்தோழர் கூறுகின்றார், இது தொழுகைக்காக உளூச் செய்தது பற்றியது அல்ல என்று கருத முடியாது. ஏனெனில் புகாரி 363, 388 ஆகிய ஹதீஸ்களில் பின்னர் தொழுதார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தொழுகைக்காக உளூச் செய்த போது தான் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்துள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள் என்று ஸஃது பின் அபீவக்காஸ் (ர-) அவர்களும் அறிவித்துள்ளார்கள். (புகாரி 202) அம்ரு பின் உமய்யா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். (புகாரி 204, 205)

இந்தச் சட்டம் மாற்றப்படவில்லை
தொழுகையின் போது உங்கள் முகங்களையும், கைகளையும், கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள் என்ற வசனம் (5:6) அருளப்படுவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்திருக்கலாம். இவ்வசனம் அருளப்பட்டு கால்களைக் கழுவுவது கடமையாக்கப் பட்ட பின்னர் இது மாற்றப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருதக்கூடும். அவ்வாறு கருதினால் அது தவறு என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூச் செய்தார்கள். அப்போது காலுறைகள் மீது மஸஹ் செய்து விட்டு தொழுதார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்'' என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் அறிஞர்களுக்கு மன நிறைவைத் தருகின்ற ஹதீஸாகும். ஏனெனில் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)) அவர்கள் தாம் (நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில்) கடைசியாக இஸ்லாத்தை ஏற்றவர் என்று இப்ராஹீம் கூறுகின்றார்.
(நூல் : புகாரி387)

முஸ்லிம் 401, திர்மிதி 86 மற்றும் பல நூல்களில் மேற்கண்ட வசனம் அருளப்பட்ட பின்பே ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) இஸ்லாத்தை ஏற்றார் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே காலுறையின் மீது மஸஹ் செய்தல் பின்னர் மாற்றப்பட்டிருக்கலாம் என்று கருத முடியாது.

நிபந்தனையுடன் கூடியதே இந்தச் சலுகை
காலுறைகள் மீது மஸஹ் செய்யும் இச்சலுகை பெண்களுக்கும் பொருந்தக் கூடியதே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்த வணக்கமும் இரு பாலருக்கும் உரியது தான். பெண்களுக்கு இல்லை என்றால் அதை நபிகள் நாயகம் சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு ஹதீஸ்களில் எதுவும் கூறப்படாததே இச்சலுகை பெண்களுக்கும் பொருந்தும் என்பதற்குப் போதிய ஆதாரமாகும். காலுறைகள் மீது மஸஹ் செய்ய அனுமதிக்கப் பட்டிருப்பது அதைக் கழற்றுவதால் ஏற்படும் சிரமத்துக்காகவே! அது இரு பாலருக்கும் பொதுவானது என்பதால் இச்சலுகையும் பொதுவானது தான்.

ஆண்களும் பெண்களும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்ற இச்சலுகைக்கு சில நிபந்தனைகள் உள்ளன.
காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், "அவற்றை விட்டு விடு! ஏனெனில் கால்கள் தூய்மையாக இருந்த நிலையில் தான் அவற்றை நான் அணிந்திருக்கிறேன்'' என்று கூறி அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி),
நூல் : புகாரி 206, 5799

காலுறைகள் அணிவதற்கு முன் கால்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

தூய்மையாக இருக்க வேண்டும் என்பது வெளிப்படையான மற்றும் மறைமுகமான (உளூ) ஆகிய இரண்டு வகை தூய்மைகளையும் எடுத்துக் கொள்ளும்.
கால்களில் வெளிப்படையாகத் தெரியும் அசுத்தங்கள் ஏதும் ஒட்டியிருந்து அதன் மேல் காலுறை அணிந்து கொண்டால் மஸஹ் செய்ய முடியாது.

காலுறையை அணியும் போது உளூவுடன் இருக்க வேண்டும்.
ஒருவர் உளூச் செய்து கால்களைக் கழுவுகின்றார். உடனே காலுறைகளை அணிந்து கொள்கின்றார் என்றால் அதன் பின்னர் இவர் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அவர் மலஜலம் கழித்தாலும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம்.

ஒருவர் லுஹர் நேரத்தில் உளூச் செய்கின்றார். அப்போது கால்களையும் கழுவுகின்றார். இதன் பின்னர் அஸர் வரை அவரிடமிருந்து உளூவை நீக்கும் காரியங்கள் ஏதும் நிகழவில்லை. இந்த நிலையில் அஸர் நேரத்தில் காலுறைகளை அணிகின்றார் என்றால் இவரும் இதன் பின்னர் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். காலுறை அணிவதற்குச் சற்று முன்னர் தான் கால்களைக் கழுவ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. காலுறை அணியக் கூடிய நேரத்தில் அவருக்கு உளூ இருக்க வேண்டும் என்பது தான் கட்டாயம்.

சலுகையின் கால அளவு
உளூவுடனும், காலில் அசுத்தம் இல்லாத நிலையிலும் காலுறை அணிந்தவர் காலமெல்லாம் காலுறைகள் மீது மஸஹ் செய்ய முடியுமா? முடியாது.

தினமும் ஒரு தடவையாவது காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இன்று காலை 10 மணிக்கு உளூச் செய்த நிலையில் ஒருவர் காலுறை அணிந்தால் நாளை காலை 10 மணி வரை அவர் எத்தனை தடவை உளூச் செய்தாலும் கால்களைக் கழுவத் தேவையில்லை. காலுறைகள் மீது மஸஹ் செய்வதே போதுமாகும். 24 மணி நேரம் கடந்து விட்டால் கால்களைக் கழுவி விட்டு உளூவுடன் காலுறையை அணிந்து கொள்ள வேண்டும். காலமெல்லாம் ஒருவர் இப்படிச் செய்து கொள்ளலாம். ஆனால் தினசரி ஒரு தடவை கால்களைக் கழுவியாக வேண்டும்.

பயணிகளாக இருப்பவர்களுக்கு இதில் கூடுதல் சலுகை உள்ளது. அவர்கள் உளூவுடன் காலுறை அணிந்தால் காலுறை அணிந்த நேரத்தில் இருந்து மூன்று நாட்கள் (72 மணி நேரம்) காலுறையைக் கழற்றாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். பயணத்தில் இருப்பவர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு தடவை காலுறையைக் கழற்றி கால்களைக் கழுவி உளூவுடன் அணிந்து கொள்ள வேண்டும்.

இதற்கான ஆதாரம் வருமாறு :
காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், "அலீ பின் அபீதாலிபிடம் சென்று அவரிடம் கேள். அவர் தான் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்'' என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் இது பற்றி கேட்டோம். "பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்'' என்று அலீ (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஷுரைஹ்,
நூல்கள் : முஸ்லிம் 414, நஸயீ 129, இப்னுமாஜா 545, அஹ்மத் 741, 863, 905, 920, 1064, 1181, 1212, 23652

குளிப்பு கடமையானால் இச்சலுகை இல்லை
உளூவுடனும், கால்களில் அசுத்தம் இல்லாமலும் உள்ள நிலையில் காலுறைகளை அணிந்து கொண்ட பயணிகள் மூன்று நாட்களும், உள்ளூரில் இருப்பவர்கள் ஒரு நாளும் உளூவை நீக்கும் காரியங்கள் அவர்களிடம் நிகழ்ந்தாலும் கால்களைக் கழுவத் தேவையில்லை. எனினும் குளிப்பு கடமையாகி விட்டால் குளிக்கும் போது காலுறைகளைக் கழற்ற வேண்டும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது உடல் முழுவதும் கழுவி விட்டு காலை மட்டும் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்தால் கடமையான குளிப்பு நிறைவேறாது.
நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும் உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காக காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி),
நூல்கள் : திர்மிதி 89, 3458, 3459, நஸயீ 127, 158, 159, இப்னுமாஜா 471, அஹ்மத் 17396, 17398

மேற்புறத்தில் மஸஹ் செய்தல்
மார்க்கத்தில் சொந்த அறிவைக் கொண்டு முடிவு செய்வதாக இருந்தால் காலுறையின் மேற்புறத்தில் மஸஹ் செய்வதை விட அதன் கீழ்ப்புறத்தில் மஸஹ் செய்வதே பொருத்தமானதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர் : அலீ (ரலி),
நூல்கள் : அபூதாவூத் 140, அஹ்மத் 699, 873, 964

காலுறையின் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் மஸஹ் செய்ததாக சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றின் அறிவிப்பாளர் வரிசையில் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இது சரியானது என்று வைத்துக் கொண்டாலும் மேற்கண்ட ஹதீசுக்கு இது முரணாகாது. மேற்புறத்தில் மட்டும் மஸஹ் செய்யலாம். அல்லது மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் மஸஹ் செய்யலாம் என்று தான் அதிகப்பட்சமாகக் கூற முடியும். ஆனால் கீழ்ப்புறத்தில் மஸஹ் செய்யலாம் என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே காலுறையின் மேல் மஸஹ் செய்வதே போதுமானதாகும்.

அலீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தொடர்பு படுத்திக் கூறுவதை மட்டும் தான் நாம் ஏற்க வேண்டுமே தவிர கீழே மஸஹ் செய்வது தான் அறிவுப்பூர்வமானது என்ற அவரது சொந்தக் கூற்றை நாம் நிராகரித்து விடவேண்டும்.
மேலே மஸஹ் செய்தாலும், கீழே மஸஹ் செய்தாலும் கால் தூய்மையாகாது என்பதால் இரண்டையும் வித்தியாசப் படுத்திக் காட்டுவது தவறாகும். காலில் கீழ்ப்பகுதியில் தான் அழுக்குகள் இருக்கும் என்பதற்காக அவர் அவ்வாறு கூறியிருந்தாலும் அதையும் நாம் ஏற்கத் தேவையில்லை. அழுக்குக்காக நாம் மஸஹ் செய்யவில்லை. மாறாக காற்றுப் பிரிவதன் மூலம் கூட உளூ நீங்கும். அப்போது உளூச் செய்யும் போதும் மஸஹ் செய்வோம். இந்த வகையிலும் அவரது கூற்று ஏற்க முடியாததாகும்.

இன்னும் சொல்வதாக இருந்தால் மேற்புறத்தில் மஸஹ் செய்வது தான் - அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை தான் அறிவுக்கு ஏற்றது. ஏனெனில் ஈரக் கையால் காலுறையின் கீழே தடவும் போது அதில் உள்ள அழுக்குகள் கையில் ஒட்டிக் கொள்ளும். மேலே தடவினால் இந்த நிலை ஏற்படாது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறை தான் அறிவுப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே அலீ (ரலி) அவர்களின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டு, அவர்களின் அபிப்ராயத்தை நாம் தள்ளி விட வேண்டும்.

எவ்வாறு மஸஹ் செய்வது?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தது பற்றி அவர்கள் வழியாக விரிவான செயல் விளக்கம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் காலுறையின் மேற்பரப்பில் மஸஹ் செய்தார்கள் என்று மட்டுமே கூறப்படுகின்றது. எவ்வாறு என்று விளக்கமாகக் கூறப்படவில்லை.

எனவே தான் அறிஞர்கள் பலவிதமாகக் கருத்து கூறியுள்ளனர். ஐந்து விரலால் மஸஹ் செய்ய வேண்டும், மூன்று விரல்களால் மஸஹ் செய்ய வேண்டும்,காலுறையின் அதிகமான - மெஜாரிட்டியான - பகுதிகள் மீது மஸஹ் செய்ய வேண்டும் என்றெல்லாம் பலவிதமாகக் கருத்து கூறியுள்ளனர்.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக இந்த அளவு என்று கூறப்படாததால் மஸஹ் என்று சொல்லப்படும் அளவுக்கு மஸஹ் செய்யலாம் என்று மக்களிடமே அந்த உரிமையை வழங்கி விட வேண்டும். இப்படித் தான் செய்ய வேண்டும் என்று திணிக்கக் கூடாது.
இது தவிர காலுறைகள் தோலில் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் இன்னும் பல ஷரத்துக்களைச் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். அந்த ஷரத்துக்களுக்கு ஆதாரம் ஏதும் இல்லை.

குறைந்த பட்சம் கரண்டை வரை காலை மூடிக் கொள்ளும் காலணிக்கு காலுறை "குஃப்' என்று கூறுவர். அது எந்த மூலப் பொருளால் தயாரிக்கப்பட்டது என்பதில் பிரச்சனை ஏதும் இல்லை.

தோல், பருத்தி, பாலியெஸ்டர், நைலான் மற்றும் எந்த மூலப் பொருளில் தயாரிக்கப்பட்ட "சாக்ஸ்' மீதும் இவ்வாறு மஸஹ் செய்யலாம்.

காலுறை அணிந்தவர்கள் மஸஹ் தான் செய்ய வேண்டும் என்பது கட்டாயக் கடமை இல்லை. அனுமதிக்கப்பட்டது தான். காலுறை அணிந்திருப்பவர் விரும்பினால் காலுறையைக் கழற்றி விட்டு வழக்கம் போல் கால்களைக் கழுவலாம்.

தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல்
காலுறையின் மேல் மஸஹ் செய்யும் சலுகை போலவே தலைப்பாகை அணிந்தவர்களும், தலையை மறைக்கும் துணியை தலையின் மேல் போட்டிருக்கும் ஆண்களும் பெண்களும் தலைக்கு மஸஹ் செய்வதற்குப் பதிலாக தலைப்பாகையின் மீதும் தலைத் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர் : அம்ரு பின் உமய்யா (ரலி),
நூல் : புகாரி 205

தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்வது போல் தலை முக்காட்டின் மீதும் ஆண்கள் தலையின் மேல் போட்டிருக்கும் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

??? அரபி முஸ்லிம் 413
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர்.

அறிவிப்பவர் : பிலால் (ரலி),
நூல் : முஸ்லிம் 413

முக்காடு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில், "கிமார்' என்ற சொல் அரபு மூலத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இச்சொல் ஆண்கள் அணியும் தலைத் துணியையும், பெண்கள் அணியும் தலைத் துணி - அதாவது முக்காட்டையும் குறிக்கும்.

பெண்களின் முக்காட்டைக் குறிக்க இச்சொல் திருக்குர்ஆனில் 24:31 வசனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள "குமுரிஹின்ன'' என்பது "கிமார்'என்பதன் பன்மையாகும்.

புகாரி 5825, 6568, 3321, 3578, 5381, 6688 ஆகிய ஹதீஸ்களிலும் "கிமார்' என்பது பெண்களின் முக்காட்டைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இதை விரிவாக நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் தலைப்பாகை, தலைத் துணியின் மேல் மஸஹ் செய்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது போல் பலரும் எழுதியுள்ளனர். பெண்களுக்கும் இந்தச் சலுகை உள்ளது என்று கூறவில்லை.

காலுறைகள் மீது மஸஹ் செய்வது எவ்வாறு ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய சலுகையோ அதுபோலவே தலையில் போட்டிருக்கும் முக்காட்டின் மேல் மஸஹ் செய்வதும் இருவருக்கும் பொதுவானது தான்.
தலைப்பாகையின் மீது மஸஹ் செய்வதாக இருந்தால் முன் நெற்றியில் ஓரிரு முடிகளிலாவது கை படும் வகையில் மஸஹ் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். பின்வரும் ஹதீஸைத் தங்களுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது முன் நெற்றியிலும், தலைப்பாகை மீதும்,காலுறைகள் மீதும் மஸஹ் செய்தனர்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி),
நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் முன் நெற்றியிலும், தலைப்பாகையிலும் மஸஹ் செய்ததாகக் கூறப்படுவதால் அவ்வாறு செய்யலாம் என்று தான் புரிந்து கொள்ள முடியும். கண்டிப்பாக முன் தலையில் மஸஹ் செய்தாக வேண்டும் என்று கூற முடியாது. ஏனெனில் பல ஹதீஸ்களில் முன் நெற்றியைக் கூறாமல் தலைப்பாகை மீது மஸஹ் செய்தார்கள் என்று வந்துள்ளது. எனவே இரண்டு விதமாகவும் செய்யலாம் என்று முடிவு செய்வதே சிறந்ததாகும்.

மேலும் தலைக்கு மஸஹ் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான், எனவே முன் தலையிலாவது மஸஹ் செய்வதன் மூலம் அந்தக் கட்டளையையும் நிறைவேற்றுவது அவசியம் என்று இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர்.

அல்லாஹ் தலையின் மீது மஸஹ் செய்யச் சொல்வதை நிறைவேற்றுவதாக இருந்தால் தலையை முழுமையாக மஸஹ் செய்ய வேண்டுமே தவிர ஓரிரு முடிகள் மீது மஸஹ் செய்தால் தலையை மஸஹ் செய்ததாக ஆகாது. ஓரிரு முடிகள் தலை என்று சொல்லப் படுவதில்லை.

மேலும் அல்லாஹ், கால்களைக் கழுவுமாறு கட்டளையிடுகின்றான். எனவே காலுறையில் ஓட்டை போட்டு சிறிதளவு கழுவி விட்டு மீதிப் பகுதியில் மஸஹ் செய்ய வேண்டும் என்று இவர்கள் கூறவில்லை. காலுறைகள் மீது மஸஹ் செய்யும் போது, கால்களைக் கழுவச் சொல்லும் கட்டளைக்கு இவர்களிடம் பதில் இல்லை.

இவ்விரண்டுமே சலுகைகள், விதிவிலக்குகள் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

காலுறைகளுக்கு மஸஹ் செய்தவற்குக் கூறப்பட்ட மற்ற விதிகள் ஏதும் இந்த விஷயத்தில் கூறப்படவில்லை.

உளூவுடன் தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும், உளூவுடன் முக்காடு போட்டிருக்க வேண்டும் என்று சட்டம் இல்லை.

மேலும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கழற்ற வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தப்ரானியில் இவ்வாறு ஹதீஸ் உள்ளது. அதை அபூஸலமா மர்வான் அறிவிக்கின்றார். இவர் ஏற்கத்தக்கவர் அல்ல என்று புகாரி, அஹ்மத் பின் ஹம்பல், இப்னு அபீஹாத்தம் மற்றும் பலர் கூறுகின்றனர்.

எனவே காலுறைகளுக்குரிய நிபந்தனைகள் ஏதும் தலைப்பாகை மற்றும் முக்காடுகளுக்குக் கிடையாது.

வளரும் இன்ஷா அல்லாஹ்


(EGATHUVAM AUG 2003)