நபித்தோழர்கள் இறைத்தூதர்கள் அல்லர் - 1
எம்.எஸ். ஜீனத் நிஸா, மேலப்பாளையம்.
இணைவைப்பை வேறோடும் வேறடி மண்ணோடும் தகர்த்தெறிய வேண்டும்
என்ற நமது மாநிலத் தலைமையின்
பிரகடனத்தை ஏற்று, அதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டு, தடைகளைத்
தகர்த்தெறிந்து, மக்களின் முழுமையான ஆதரவோடு இணைவைப்புக்
கொள்கைக்கு எதிரான ஷிர்க் ஒழிப்பு மாநாடு இனிதே நடந்து முடிந்தது.
லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை கூறியதோடு நமது கடமை
முடிந்துவிட்டது என்றில்லாமல் அழைப்புப் பணியை
உயிர் மூச்சாகக் கொண்ட இந்த ஜமாஅத் இஸ்லாத்தின் மற்றுமொறு அடிப்படைக் கோட்பாடான
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற பிரகடனத்தை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரப் பொருளாக
முன்வைத்துள்ளது.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற அடிப்படைக் கோட்பாடு
எட்டுத்திக்கும் ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நபிகளாரை
உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும், அவர்களது சொல்
செயலை நமது வாழ்வின் நெடுகிலும் கடைபிடிக்க வேண்டும் என்பதை பசுமரத்தாணி போல மக்களின் மனதிலே பதியவைக்க வேண்டும் என்பதே நமது அடுத்த
இலக்காகும். இதற்குக் கொள்கை அடிப்படையிலேயே பலர் முட்டுக்கட்டையாக இருப்பதைக்
காண்கின்றோம்.
இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் குர்ஆன் மற்றும்
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற சத்தியக் கொள்கையைப் பறைசாற்றிக் கொண்டிக்கும் ஜமாஅத்
தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
குர்ஆன் ஹதீஸ் மட்டுமில்லாமல் நபித்தோழர்களின்
சொல், செயல் மற்றும் அவர்களின் கருத்துக்களும் இஸ்லாத்தின்
அடிப்படை என்று சிலர் கூறித்திரிகின்றனர்.
அல்லாஹ்வின் வார்த்தையான குர்ஆனும் நபிகளாரின்
சொல், செயல், அங்கீகாரமான
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் எதனைக் கூறுகின்றனவோ அதற்கே இஸ்லாமிய சமுதாயம்
கட்டுப்பட வேண்டும். திருமறை குர்ஆனின் பல இடங்களிலும் அல்லாஹ் தனக்கும் தன்
தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்படவேண்டும் என்றும், நபி (ஸல்) அவர்களைப்
பின்பற்றுமாறும், அவர்களை உயிரினும் மேலாக நேசிக்க வேண்டுமென்றும், அவர்கள்
மக்களுக்கு உதாரணப் புருஷராகத் திகழ்ந்துள்ளார்கள் என்றும் சிறப்பித்து
கூறியுள்ளான்.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்!
அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால்
(தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன்: 3:31 32
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
உரைகளில் சிறந்தது
அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மது (ஸல்)
அவர்களின் நடத்தையாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய்
உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளான)து வந்தே
தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது.
நூல்: புகாரி 7277
எவரைப் பார்த்து நாம் படிப்பினை பெற வேண்டும், நம்மைச் சீர்படுத்திக் கொள்ளவேண்டும் என்று இறைவன்
குறிப்பிட்டானோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் தூதரும் நமக்கு இது குறித்து
உபதேசிக்காமலில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "என்
சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 7280
அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ
அதற்கும் எடுத்துக்காட்டாகிறது, ஒரு மனிதரின்
நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று "நான் (இன்ன பெரும்)
படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை
எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், நிர்வாணமாக (ஓடிவந்து) எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன்.
ஆகவே தப்பித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
அப்போது அவருடைய சமூகத்தாரில் ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு
இரவாக மெல்ல நடந்து தப்பி விட்டனர். ஆனால், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர்; தமது இடத்திலேயே தங்கிவிட்டனர். ஆகவே, அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு
அழித்தனர். இதுதான் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் கொண்டு வந்த (மார்க்கத்)தைப் பின்பற்றி நடந்தவருக்கும், எனக்கு மாறு செய்து, நான் கொண்டுவந்த சத்தியத்தை ஏற்க மறுத்தவருக்கும்
உதாரணமாகும்.
நூல்: புகாரி 7283
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின்
நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதரப்
பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைக் (தீயில் விழாமல்)
தடுத்துக்கொண்டிருந்தார். (ஆனால்,) அவை
அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்(தில் விழுவ)திலிருந்து
(உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்,) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில்
நுழைந்துகொண்டிருக்கிறீர்கள்.
நூல் : புகாரி:6483
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த கூற்றுகளுக்கெல்லாம் மாற்றமாக நபித்தோழர்களின்
கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற வாதம் அமைந்துள்ளது. மனிதர்கள் என்ற
அடிப்படையில் அவர்கள் செய்த தவறுகளையும், மார்க்க
விவகாரங்களில் அவர்களுக்குத் தெரியாமல் இருந்த பல செய்திகளையும் நினைவுபடுத்துவதே
இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நபிகளாரின் வாழ்க்கை வரலாறு, நபிகளாரின் நற்குணங்கள், அவர்களின் ஒழுக்கம், நேர்மை, நீதம், அவர்கள்
அனைத்து விஷயங்களிலும் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தது இது போன்ற நபிகளாரைப்
பற்றிய எண்ணற்ற தலைப்புகளின் கீழ் நமது கொள்கைச் சகோதரர்கள் வீரியமாகப் பிரச்சாரம்
மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை வலியுறுத்துவது
எவ்வளவு அவசியமோ அது போல நபிகளாரின் அங்கீகாரம் இல்லாத விஷயங்களில்
நபித்தோழர்களைப் பின்பற்றுவது கூடாது என்பதை வலியுறுத்துவதும் அவசியமாகும்.
இது போன்ற பல கட்டுரைகளை பல்வேறு களங்களில்
வெவ்வேறு முறைகளில் நாம் கூறியிருந்தாலும் தங்கள் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல்
வழிகேட்டிலேயே பல
அமைப்புகள் இருப்பதை நம்மால் காணமுடிகின்றது.
எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.
அல்குர்ஆன்: 88:21
இவ்வசனத்திற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்
என்ற ஒரே நோக்கத்திற்காகவே திரும்ப திரும்ப இக்கருத்துக்களை முன் வைக்கின்றோம்.
மறுமையில் எவரும் கைசேதம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக மக்கள் மீது அதிக அக்கறை
கொண்டு அவர்கள் தம் மீது காட்டிய வெறுப்புகளையெல்லாம் மறந்து விட்டு, தன் எதிரி கூட நரகத்திற்குச் சென்று
விடக்கூடாது என்று எண்ணிய உத்தம நபியை உயிரிலும் மேலாக நேசித்த காரணத்தினால் தான்
மீண்டும் இந்த எழுச்சிமிக்க பிரச்சாரம்.
இவர்களுக்கும் நமக்கும் என்ன பிரச்சனை? சொத்துப் பிரச்சனையா? அல்லது கொலை, கொள்ளை போன்றவற்றுக்காகப் பழிதீர்க்கும் பிரச்சனைகளா? இல்லையே?
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை
கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும்
தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டுவிட்டார்.
அல்குர்ஆன்: 33:36
தவறு என்று தெரிந்த பின்னும் என் கொள்கையை விட்டுக்
கொடுக்கமாட்டேன் என்று கூறினால் நமக்கும் யூதர்களுக்கும் வித்தியாசமில்லாமல்
போய்விடும். தெளிவான நயவஞ்சகத்தனமாகிவிடும்.
ஒரு கருத்தை மக்களுக்கு மத்தியில் வைக்கும் போது அதை யார்
கூறினார் என்று பார்க்காமல், அது
அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கருத்தைப் பிரதிபலிக்கிறதா? குர்ஆன் ஹதீசுக்கு உட்பட்டுள்ளதா? அல்லது மாறுபட்டுள்ளதா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவர்கள்
வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத்
தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத்
தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள்
நிலைத்திருக்கமாட்டார்கள்.
அல்குர்ஆன்: 3:135
நாம் சொல்வது தான் சரி என்ற நிலை மார்க்க அடிப்படையில் சரி
கிடையாது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதரே தன்னிச்சையாகப் பேசிய வார்த்தையைக் கூட
இறைவன் தன் திருமறையில் வன்மையாகக் கண்டித்துள்ளான்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போர் நாளில்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்
புறப்பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, "தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டிக்கிறார்''என்று கூறலானார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை'' (3:128) எனும் வசனத்தை அருளினான்.
நூல்: முஸ்லிம் 3667
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கே இந்நிலையென்றால்
ஸஹாபாக்களெல்லாம் எம்மாத்திரம்? என்று நாம் ஒரு
கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
EGATHUVAM AUG 2016