Feb 18, 2017

நகர மறுக்கும் நகரா கலாச்சாரம்

நகர மறுக்கும் நகரா கலாச்சாரம்
கடந்த காலங்களில் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் தொழுகை அழைப்பிற்காக நகரா அடிப்பார்கள். ஐந்து வேளை தொழுகைகளுக்குத் தலா ஒரு தடவையும், ஜும்ஆவிற்கு இரண்டு அல்லது மூன்று முறைகளும் நகரா அடிப்பார்கள். தொழுகைகு மட்டுமல்லாமல், நோன்பு திறப்பதற்காகவும், சஹர் வைப்பதற்காகவும் நகரா அடிப்பார்கள்.

பெருநாள் பிறை பார்த்ததும் பெருநாள் தொழுகை முடிந்ததும் முஅத்தின் மட்டுமல்லாமல் பள்ளிவாசலுக்குத் தொழ வந்தவர்கள் அத்தனை பேர்களும் நகராவைப் போட்டு சாத்துவார்கள். இது மட்டுமல்லாமல் ஊரில் வேண்டாதவர்கள் புகுந்து பிரச்சனை ஏற்பட்டு விட்டாலும் இதுபோல் நகரா அடித்து மக்களைத் திரட்டுவார்கள். இது ஏதோ இஸ்லாமியக் கலாச்சாரம் போல் முஸ்லிம்கள் நம்பியிருந்தனர். அதனால் இதைப் பற்றி பெருமையாகவும் பேசிக் கொள்வார்கள். இப்போது நகரா கலாச்சாரம் நூற்றுக்கு தொன்னூறு சதவிகிதம் தமிழகத்திலும் இல்லை. அண்டை மாநிலமான கேரளத்திலும் இல்லை.


அண்மையில் ஜூன் 15, 2016 இந்து நாளிதழில் “No loudspeakers in this Kerala mosque - கேரளாவின் இந்த பள்ளியில் இதுவரையில் ஒலிபெருக்கிகள் இல்லைஎன்று கேரளா மலப்புறம் வண்டூர் பள்ளிவாசலில் இதுவரை ஒலிபெருக்கிகள் மூலம் பாங்கு சொல்லாமல் நகரா அடிக்கின்றார்கள் என்று நகரா கலாச்சாரத்தைப் பற்றிப் புகழ்ந்து எழுதியிருந்தது.

ஆட்டுத் தோலினால் உருவாக்கப்பட்ட வட்ட வடிவ நகராவில் வளைந்த இரண்டு கம்புகளை வைத்து தாளம் தப்பாமல் முஅத்தின் அடிக்கின்ற போது அந்த கொட்டு முழக்கம் அந்தப் பள்ளியைச் சுற்றிலும் வாழ்கின்ற எட்டு திசை மக்களின் காதுகளிலும் தேன் சொட்டுகளாகப் பாயும் என்று அதை எழுதிய நிருபர் அப்துல் லதீஃப் நாகா புகழ்ந்து தள்ளியிருந்தார்.

நவீனமயமான நாகரீக காலத்தில் ஊரில் பள்ளிகளெல்லாம் ஒலிபெருக்கிகளில் பாங்கோசை எழுப்பிக் கொண்டிருக்கையில் இந்தப் பள்ளி மட்டும் தங்களது இருநூறு ஆண்டு கால நகரா பாரம்பரியத்தை விட முடியாது என்று மறுத்து விட்டதாக பெருமைப்பட அந்த நிருபர் பாராட்டியிருந்தார்.

இத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இதற்கு மார்க்கச் சாயம் வேறு பூசியிருந்தார். மக்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு விடுக்கின்ற அறிவிப்பு என்ற அதான் (பாங்கு) இஸ்லாமிய மார்க்கத்தில் அறிமுகமாவதற்கு முன்னால் நாகூஸ் என்ற இசைக் கருவியைத் தான் நபித்தோழர்கள் அறிமுகப்படுத்த நினைத்திருந்தார்கள் என்று அதற்கு மார்க்கச் சாயத்தையும் பூசியிருந்தார். மவ்லானா நஜீப் மவ்லவி இவ்வாறு சொன்னார் என்று ஒரு பரேலவிய மவ்லவியையும் குறிப்பிட்டிருந்தார்.

நபித் தோழர்கள் நினைத்தது எப்படி மார்க்கமாக ஆக முடியும் என்று அரைவேக்காடு பரேலவிக்கு விளங்கவில்லை. நபித்தோழர்கள் அப்படி நினைத்தது உண்மை தான். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதை மாற்றி விட்டார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது ஓரிடத்தில் ஒன்று கூடி தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது; அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒருநாள் அவர்கள் (கலந்து) பேசினர். அப்போது அவர்களில் சிலர், “கிறிஸ்தவர்களின் (ஆலயங்களில் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள்'' என்று கூறினர். வேறு சிலர், “யூதர்களிடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக அழைத்)திடுங்கள்'' என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “தொழுகைக்காக அழைக்கின்ற ஒரு மனிதரை நீங்கள் அனுப்பக் கூடாதா?'' என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பிலால்! நீங்கள் எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்!'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 604

நாகூஸ் என்பது கிறிஸ்தவர்களின் பொது வழிபாட்டு முறை என்று அந்த நிருபரும் குறிப்பிடுகின்றார்.

நபி (ஸல்) அவர்கள் யூத, கிறிஸ்துவ கலாச்சார அடிப்படையில் எந்த ஒரு வணக்க வழிபாட்டையும், தான் கொண்டு வந்த மார்க்கத்தில் வணக்கமாகத் தொடர்வதைக் காண சகிக்காதவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3462

இதை உதாரணத்திற்காக மட்டும் கூறுகின்றோம். யூத, கிறிஸ்தவர்களுக்கு மாற்றமாக நடக்கச் சொல்லி நபி (ஸல்) அவர்கள் போட்ட உத்தரவுகள் ஏராளமாக உள்ளன. எடுத்துக் காட்டிற்கு இந்த ஓர் உதாரணம் போதும்.

அதான் என்ற தொழுகைக்கான பிரதான அழைப்பிற்கு நபி (ஸல்) அவர்கள் பிற மதக் கலாச்சாரத்தின் சாயல் கூடப் படியாமல் பார்த்திருக்கின்றார்கள். அப்படியிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் மறுத்த இந்தக் கலாச்சாரம் எப்படி இஸ்லாமியக் கலாச்சாரமாக இருக்க முடியும்?

அல்லாஹ்வும், அவனது தூதரும் அங்கீகரிக்காத வரை நபித்தோழர்களின் எண்ணங்கள், விருப்பங்கள் மார்க்கமாக ஆக முடியாது. அதிலும் குறிப்பாக நபியவர்கள் மறுத்த பின்பு அறவே மார்க்கமாக முடியாது. பாங்கு விஷயத்தில் இது தான் நடந்துள்ளது. இதைப் புரியாமல் இந்த பரேலவி உளறிக் கொட்டியுள்ளார். இந்து பத்திரிகையின் நிருபரும் நகராவை இஸ்லாமியச் சின்னம் போல் பூதாகரமாக்கிக் காட்டியுள்ளார்.
ஆனால் இஸ்லாத்திற்கும் நகராவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுடன் இப்படித் தான் இஸ்லாத்தில் நுழைந்த பிற மதக் கலாச்சாரங்கள் இஸ்லாமிய மார்க்க வணக்கங்களாகப் பார்க்கப்பட்டும் பாவிக்கப்பட்டும் வருகின்றன. தவ்ஹீத் ஜமாஅத் அவற்றை அடையாளங்காட்டி மார்க்கத்தை அதன் தூய வடிவில் நிலை நிறுத்தி வருகின்றது.

EGATHUVAM AUG 2016