Feb 18, 2017

பள்ளிவாசலின் சிறப்புகள் - 1

பள்ளிவாசலின் சிறப்புகள் - 1
எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி மங்கலம்

உலகில் இருக்கும் அனைத்துக் கொள்கைகள், கோட்பாடுகளைக் காட்டிலும் தனித்து விளங்கும் மார்க்கம் இஸ்லாம். இதற்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடலாம். அவற்றுள் முக்கிய ஒன்று, இஸ்லாம் கூறும் சமத்துவம் என்பதை எவராலும் மறுக்க இயலாது.

நிறம், மொழி என்று எண்ணற்ற வேறுபாடுகள் மனிதர்கள் மத்தியில் இருப்பினும் படைத்தவன் பார்வையில் அனைவரும் சமம் என்று இஸ்லாம் உரக்கச் சொல்கிறது. வெறுமனே வாயளவில் இல்லாமல், மனித ஒற்றுமையை, சமத்துவத்தை நடைமுறை வாழ்விலும் சாத்தியமாக்கிக் காட்டுகிறது. இந்தப் புரட்சிக்குரிய முக்கியக் களமாக பள்ளிவாசல் திகழ்வதன் மூலம் அதன் சிறப்பையும், புகழையும் நாமெல்லாம் உணர்ந்து கொள்ள முடியும்.
பள்ளிவாசலைப் பற்றிப் பேசாமல் இஸ்லாத்தை முழுமையாகப் போதிக்க இயலாது எனும் அளவிற்குப் பல்வேறு செய்திகள் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுள்ளன. ஆரம்ப கட்டமாக, அவற்றில் இருக்கும் பள்ளிவாசல் பற்றிய சில அடிப்படைத் தகவல்களையும், சிறப்புகளையும் இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

படைத்தவனுக்குப் பிடித்த இடம்
பூமியிலே விதவிதமான இடங்கள் இருக்கின்றன. ஆறுகள், மலைகள், காடுகள் என்று கண்கவரும் வகையிலான இயற்கைப் பகுதிகள் இருக்கின்றன. கோபுரங்கள், அடுக்குமாடிக் கட்டடங்கள், தொழிற்சாலைகள் என்று பிரமிக்க வைக்கும் செயற்கையான இடங்களும் உள்ளன. இன்னும் சொல்வதெனில், நவீன மனிதனின் தேடல் பார்வையில் அகப்படாத. அவனது கால்தடம் பதியாத பல்வேறு பகுதிகள் இருக்கவே செய்கின்றன. இப்படி இவ்வுலகில் எத்தனையோ இடங்கள், பகுதிகள் இருப்பினும், இவை எல்லாவற்றையும் விட பள்ளிவாசல்கள் தான் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான இடம் என்று மார்க்கம் சொல்கிறது.

ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1190)

உலகின் முதல் பள்ளிவாசல்
மகத்துவமும் மாண்பும் கொண்ட ஏக இறைவனிடம் மதிப்பிற்குரிய இடங்களாக மஸ்ஜித்கள் இருக்கின்றன. எனவே தான், முதல் மனிதரும், இறைத்தூதருமான ஆதம் (அலை) அவர்கள் மூலமாகவே பள்ளிவாசல் நிறுவப்பட்டு விட்டது. ஆதம் நபி அவர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல், மக்காவிலுள்ள கஅபதுல்லாஹ் என்பதையும் இரண்டாவது பள்ளிவாசல் பாலஸ்தீனத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் என்பதையும் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
(திருக்குர் ஆன் 3:96)

நான் (நபியவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?'' என்று கேட்டேன். அவர்கள், "அல்மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்'' என்று பதிலளித்தார்கள். நான், "பிறகு எது?'' என்று கேட்டேன். அவர்கள், "(ஜெரூஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா'' என்று பதிலளித்தார்கள். நான், "அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது'' என்று கேட்டேன். அவர்கள், "நாற்பதாண்டுகள்'' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது). பிறகு, "நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புஹாரி (3366)

பிந்தைய காலகட்டங்களில், இவ்விரண்டு பள்ளிவாசல்களும் மீண்டும் சீரமைக்கப்பட்டன. ஏகத்துவத்தின் தந்தையாக விளங்கும் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள், தமது மகனார் இஸ்மாயீல் நபி (அலை) அவர்களுடன் சேர்ந்து கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பித்துக் கட்டினார்கள். அதுபோல, சுலைமான் நபி (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவைப் புனர்நிர்மானம் செய்தார்கள்.

...பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (மீண்டும் ஒருமுறை இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பார்த்து வர வேண்டும் போல்) தோன்றியது. உடனே அவர்கள் (மக்கா) செல்ல, அங்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குப் பின் பக்கத்தில் தமது அம்பைச் சீர் செய்து கொண்டிருக்கக் கண்டார்கள். "இஸ்மாயீலே! உன் இறைவன் தனக்கு ஓர் இல்லத்தை நான் (புதுப்பித்துக்) கட்ட வேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டுள்ளான்'' என்று சொன்னார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், "நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியுங்கள்'' என்று சொன்னார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், "(அதைக் கட்டுவதற்கு) நீ எனக்கு உதவ வேண்டுமென்றும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்'' என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், "அப்படியாயின் நான் (உதவி) செய்கிறேன்'' என்று சொன்னார்கள். உடனே இருவரும் தயாராகி, இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டத் தொடங்க, இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து தரலானார்கள். இருவரும் (அப்போது), "இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய் (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் கட்டடம் எழும்பியது. பெரியவ(ர் இப்ராஹீம் அன்னா)ருக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே இந்தக் கல் மீது நின்று கொண்டார்கள். அவர்களுக்கு இஸ்மாயீல் (அலை) கற்களை எடுத்துத் தரலானார்கள். இருவரும் "இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்பாயாக! நிச்சயமாக, நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்'' (2:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புஹாரி (3365)

சுலைமான் நபி அவர்கள் பைத்துல் முகத்தஸைக் கட்டிய பிறகு மூன்று நற்பேறுகளை மகத்தவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ்விடம் கேட்டார்கள். (அவை:) உண்மையான ஞானத்தை (பொருத்தமான தீர்ப்பை) கேட்டார்கள். அது வழங்கப்பட்டது. (மேலும், மகத்துவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ்விடம்) தமக்குப் பிறகு யாருக்கும் வழங்கப்படாத ஆட்சியதிகாரத்தைக் கேட்டார்கள். அதுவும் வழங்கப்பட்டது. மஸ்ஜிதைக் கட்டிய பிறகு அல்லாஹ்விடம், எவரும் இங்கு தொழுகையைத் தவிர வேறெந்த வலிமையும் பெறக்கூடாது; அத்தொழுகை மூலம் அவரது தாய் அவரைப் பெற்றெடுத்த தினத்தைப்போன்று அவர் தமது பாவங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: நஸாயீ (693)

பள்ளிவாசலின் முக்கியத்துவம்
மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதுவும் சொற்பத்திலும் சொற்பமாக இருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்துள்ளது. இதற்குப் பின்னணியில் மிக முக்கியக் காரணம் இல்லாமல் இல்லை. அன்றைய காலங்களில் தொழுகை எனும் வணக்கம் கண்டிப்பாகப் பள்ளிவாசலில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் எனும் சட்டம் இருந்தது. இந்தச் சட்டம் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தளர்த்தப்பட்டது.

கடமையான தொழுகை விசயத்தில் முந்தைய சமுதாய மக்களுக்கு இருந்ததை விடவும் நமக்குக் குறைவு செய்யப்பட்டதைப் போன்று இதிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடமையைத் தவறவிட்டுவிடாமல் உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் எனும் அடிப்படையில் நேரம் வரும் போது இருக்கும் இடத்தில் தொழுது கொள்ளும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் நபிமொழி மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

எனக்கு முன்னர் வாழ்ந்த (இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன:

(அவை) 1. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். நான் சிவப்பர் கறுப்பர் (என்ற பாகுபாடின்றி) அனைவருக்கும் தூதராக அனுப்பப் பெற்றுள்ளேன்.

2. போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளன. எனக்கு முன்னிருந்த (இறைத்தூதர்) எவருக்கும் அவை அனுதிக்கப்படவில்லை. 

3.எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கு ஏற்றதாகவும் தூய்மையானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. (என் சமுதாயத்தாரில்) யாரேனும் ஒருவருக்குத் தொழுகை(யின் நேரம்) வந்து விட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தொழுதுகொள்வார். 

4. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் (அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய) அச்சம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப் பெற்றுள்ளேன்.

5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப் பெற்றுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் (905)

இந்த அனுமதி இருந்தாலும், பள்ளிவாசல் கட்டுவது, அதில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவது குறித்து மார்க்கத்தில் நிறைய செய்திகள் போதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழுவது பற்றி அதிகம் வலியுறுத்தி இருப்பதோடு, அதில் அலட்சியமாக இருப்பவர்களைக் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.

ஏனெனில், பள்ளிவாசல் மூலமாக, அதனுடன் தொடர்புள்ள காரியங்கள் மூலமாக நமக்குப் பல்வேறு பாக்கியங்களை அல்லாஹ் கொடுக்கிறான். அளவற்ற அருள் வளங்களை அள்ளித் தருகிறான். அளப்பறிய நன்மைகளைக் கொள்ளையடிக்கும் வாய்ப்பினைக் கொட்டிக் கொடுக்கிறான். இந்தச் சிறப்புகளை பெறுவதற்குப் பள்ளிவாசல் அமைப்பது அவசியம்.

நபிகளார் கட்டிய முதல் பள்ளிவாசல்
பள்ளிவாசல் அமைத்து வணக்க வழிபாடுகளைச் செய்வதிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்த பிறகு நபிகளார் மதீனாவின் வெளியே ஹர்ரா எனும் பகுதியில் மஸ்ஜிதுல் குபாவை முதலில் கட்டினார்கள். பிறகுதான் மதீனா நகருக்குள் சென்று மஸ்ஜிதுன் நபவியை கட்டினார்கள். இதனைக் கீழ்வரும் நபிமொழி விளக்குகிறது.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து வந்த போது அவர்களை மதீனாவிலிருந்த முஸ்லிம்கள் கருங்கற்கள் நிறைந்த புறப்பகுதியான ஹர்ராவிலே சந்தித்தார்கள்.)

அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வலப்பக்கமாகத் திரும்பி ("குபா'வில் உள்ள) பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரி(ன் குடியிருப்புப் பகுதியி)ல் தங்கினார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை நடந்தது. அப்போது மக்களை நோக்கி அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த - நபி (ஸல்) அவர்களைப் பார்த்திராத - அன்சாரிகளில் சிலர் (அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முகமன் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது வெயில் பட்டபோது உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் சென்று தமது துண்டினால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது நிழலிட்டார்கள். அப்போது தான் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அம்ர் பின் அவ்ஃபினரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்து "இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித் குபா) பள்ளிவாசலை' நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாட்களில்) அந்தப் பள்ளியில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். பிறகு தமது வாகனத்திலேறி பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக (அவர்களது) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக் கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது சஅத் பின் ஸுராரா (ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்த சஹ்ல், சுஹைல் என்ற இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலர வைக்கப்படும்) களமாக இருந்தது. அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் இது தான் (நமது) தங்குமிடம்'' என்று கூறினார்கள். பிறகு அந்த இரு சிறுவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அந்தக் களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், "இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களிடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும் போது அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செங்கல்  சுமக்கலானார்கள்.
அறிவிப்பவர்: சுராகா பின் மாலிக் (ரலி), நூல்: புஹாரி (3906)


EGATHUVAM 2016 - JULY