Feb 18, 2017

யார் தக்லீத் வாதிகள்?

யார் தக்லீத் வாதிகள்?
சபீர் அலீ, எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாம் எனும் வாழ்வியல் ஏகத்துவ நெறியை நமக்கு மார்க்கமாக இறைவன் அருளியிருக்கின்றான்.

இஸ்லாம் என்பது வஹியின் (இறைச் செய்தியின்) அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும்.

வஹி என்பது திருமறைக் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் ஆகும்.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை
அல்குர்ஆன் 53:3,4

மார்க்கம் என்று ஒரு விஷயத்தை நாம் முடிவு செய்ய வேண்டுமேயானால், அது வஹியின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். அவ்வாறின்றி, வஹியைத் தாண்டி ஒரு தனி மனிதரின் கருத்தை எடுப்பது அல்லாஹ்வின் வார்த்தைக்கு இணையாக அம்மனிதரின் வார்த்தையைக் கருதியதற்குச் சமமாகும்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
அல்குர்ஆன் 7:3

இதுவே இஸ்லாம் சொல்கின்ற கொள்கையாகும்.

இதை நாம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றோம்.

நாம் இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவக்கிய காலகட்டத்தில், மக்கள் திருமறைக் குர்ஆனையும், நபிமொழிகளையும் ஓர் சடங்காகக் கருதிக் கொண்டு வந்தார்கள்.
குர்ஆன் மீது சத்தியம் செய்தல், இறந்தவர்களுக்காக யாஸீன் ஓதுதல் போன்ற மார்க்கத்திற்குப் புறம்பான காரியங்களுக்காக மாத்திரம் திருக்குர்ஆன் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மார்க்க விஷயங்களில் தங்களின் சிந்தனைகளை ஆலிம்ஷாக்களிடம் அடைமானம் வைத்து அவர்கள் சொன்னதைத் தாண்டி எதுவும் யோசனை செய்யக் கூடாது என்று அறிவுக்குத் திரை போட்டு வைத்திருந்தார்கள்.

மக்களின் இந்த அப்பாவித்தனத்தையும், பாமரத்தனத்தையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆலிம்ஷாக்கள் தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக மார்க்கத்தில் இல்லாத சடங்கு சம்பிரதாயங்களையெல்லாம் உருவாக்கி அதை நோக்கி மக்களின் கவனத்தைத் திருப்பினார்கள்.

இந்த சமயத்தில் தான், திருமறைக் குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் மாற்றமாக இருக்கும் இந்த வழி நரகத்தை நோக்கி மக்களை அழைத்துச் செல்லும் வழி என்பதை அறிந்த நமது மூத்த தாயிக்களின் உள்ளத்தில் இவற்றைத் தடுக்க வேண்டும் என்ற பிரச்சாரப் பொறி வெடிக்கின்றது.

அப்போது பல இடங்களில் சொற்பொழிவுகளின் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும் நாம் மக்களுக்கு மத்தியில் அதிகமாகக் கொண்டு சென்ற செய்தி, “ஆலிம்கள் சொல்கின்றார்கள் என்பதற்காகக் கண்களை மூடிக் கொண்டு மார்க்கத்தைப் பின்பற்றாதீர்கள், எதை எவர் சொன்னாலும் அதற்கான ஆதாரத்தைக் குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் சமர்பிக்குமாறு கேளுங்கள், ஆதாரம் இருந்தால் நடைமுறைப் படுத்துங்கள், இல்லையெனில் அவற்றைப் புறக்கணியுங்கள்என்ற செய்தியாகும்.

இந்தப் பிரச்சாரத்தின் வாயிலாகத் தமிழகத்தில் மிகப்பெரும் புரட்சி வெடித்தது. ஆலிம்கள் என்ற போர்வையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர்களின் முகத்திரை கிழித்தெறியப்பட்டது.

மார்க்கத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் ஆதாரத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளத் துவங்கிய மக்கள், அலை அலையாக ஏகத்துவத்தில் சங்கமிக்கத் துவங்கினார்கள்.

இறையருளால் இன்றைக்கு ஏகத்துவக் கொள்கை பெரும் ஆல விருட்சமாக வளர்ந்து, இணைவைப்பை கிள்ளுக்கீரையாக மாற்றியதற்குக் காரணம், “கண் மூடிப் பின்பற்றாதேஎன்று அன்றைக்கு நாம் விதைத்த விதை தான். அல்ஹம்துலில்லாஹ்.
எந்தத் தனி மனிதனையும் கண்மூடிப் பின்பற்றாதீர்கள்என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்ற தவ்ஹீத் ஜமாஅத்தைப் பார்த்தே இன்றைக்கு தக்லீத்வாதிகள் (கண் மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள்) என்று சொல்வதுதான் இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாக இருக்கிறது.

ஏனென்றால், மத்ஹபு இமாம்களுக்குப் பின்னாலும், உள்ளூர் இமாம்களுக்குப் பின்னாலும் கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருந்தவர்களை, குர்ஆன் ஹதீஸ் வழியில் மாற்றியமைத்தது தவ்ஹீத் ஜமாஅத் தான். மேலும் ஆரம்பத்தில் செய்த அதே முழக்கத்தைத் தான் தற்போது வரை முழங்கி வருகிறது; நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

இன்னும், தக்லீத் செய்யாதே என்ற அதே முழக்கத்தைத் தான் இக்கட்டுரையின் வாயிலாகவும் அறியத் தருகின்றோம்.

தக்லீத் என்ற அரபு பதத்துக்கு, “ஒருவர் சொல்லுகின்ற சொல்லையோ அல்லது செய்கின்ற செயலையோ அது சரியானதா, ஆதாரத்திற்கு உட்பட்டதா என்று எவ்வித சிந்தனையும் செய்யாமல் பின்பற்றுதல்என்று பொருளாகும்.

உலக ரீதியான ஒரு விஷயத்தில் கூட இவ்வாறல்லாமல், ஒரு தடவைக்குப் பல தடவை சிந்தித்து, விசாரித்து தான் முடிவெடுக்கப்படுகிறது.

உதாரணமாக, ஒரு மனிதனுக்கு ஒரு நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பு தொடர்பாக கடிதமொன்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த கடிதமோ இவன் அறியாத வேற்றுமொழியில் இருக்கின்றது.

அதனால் அவன் தனக்கு நெருக்கமான நபர்களில் இம்மொழியை அறிந்தவர்கள் யார் என்று முதலில் ஆராய்வான். பின்பு அவர்களில் ஒரு நபரிடம் அக்கடிதத்தை மொழிபெயர்க்குமாறு கூறுவான். அவரும் மொழிபெயர்த்துச் சொல்வார்.

ஆயினும், இவனது மனம் திருப்தியடையாது. இவன் சரியாக மொழிபெயர்த்தானா? அல்லது ஏதேனும் கவனக்குறைவாக இருந்திருப்பானா? என்று தனக்குள்ளே கேள்வி கேட்டு சிந்தித்துக் கொண்டேயிருப்பான்.

மேலும், அவன் சொன்ன தகவல் சரிதானா என்பதை உறுதி செய்ய இம்மொழியறிந்த மற்றவர்களிடமும் சென்று தகவலைக் கேட்டறிந்து, அவன் சொன்ன தகவலும், இவர்கள் சொல்லும் தகவலும் முரண்படாமல் அமைந்திருக்கிறதா என்று பார்த்து ஓர் முடிவுக்கு வருவான்.

இவ்வாறு உலக ரீதியாக நமக்கு லாபத்தை ஈட்டித்தரும் பாதையையே ஒரு தடவைக்குப் பல தடவை சிந்தித்துத் தான் தேர்வு செய்கின்றோம்.

அவ்வாறிருக்க, இவ்வுலகில் கிட்டும் லாபங்களை விடப் பன்மடங்கு இன்பமயமான சுவர்க்கம் இறைவனிடத்தில் லாபமாகக் கிடைப்பதற்குப் பாதையாக இருக்கும் கொள்கை சரியானது தானா என்பதை எந்த அளவிற்கு நாம் யோசனை செய்து ஆதாரத்துடன் பின்பற்ற வேண்டும்?

இந்த உதாரணத்தை நமது மார்க்க விடயங்களுக்குப் பொருத்திப் பார்ப்போம். இவ்வுதாரணத்தில் கூறப்பட்ட மனிதனுக்கு வந்த வேற்று மொழிக் கடிதம் தான் நமது மார்க்கம். அக்கடித்தின் மொழியறிந்தவர்கள் தான் ஆலிம்கள். அக்கடிதத்தினால் அம்மனிதனுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு தான் நமக்கு மறுமையில் கிடைக்கப் பெறும் சுவர்க்கப் பூஞ்சோலை.

இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்த வரையில் நமக்கு முன்னால் வாழந்த சமுதாயங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மொழியில் வழங்கப்பட்டிருக்கின்றது. நமக்கு நபி (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதனால், நமது தமிழ் பேசும் சமுதாயத்தில் அரபு மொழியை அறிந்து அதன் மூலம் மார்க்கத்தைக் கற்க வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட சிலர் கல்வி பயின்றிருக்கிறார்கள். இவர்கள் தான் ஆலிம்கள் எனப்படுகிறார்கள்.

எனவே, ஆலிம்கள் அம்மொழியறிந்ததினால் மார்க்க விடயங்களைப்பற்றி அவர்களிடம் மக்கள் வினவ ஆரம்பித்தார்கள். மார்க்கத்தைப் பற்றி ஒருவரிடம் கேட்பது எவ்விதத் தவறும் இல்லை. மாறாக, அது ஆர்வமூட்டப்பட்ட விஷயமே!

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
அல்குர்ஆன் 16:43

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
அல்குர்ஆன் 21:7

அதே சமயம், நாம் அறியாத காரணத்தினால் அவர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்வது சரிதானா என்பதை பல தடவை நாம் விசாரித்து சிந்தித்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?
அல்குர்ஆன் 47:24

ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு கொள்கையினைச் சொல்லும் இக்காலத்தில் அனைவருடைய கொள்கைகளையும், அதற்கான ஆதாரங்கள், வாதங்கள் அனைத்தையும் தீர ஆராய்ந்து, இவற்றுள் எது குர்ஆன் ஹதீஸிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒருவர் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டார் என்பதற்காகவும், சொன்னவர் நம்பகமானவர் என்பதற்காகவும் கண்மூடி ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவர் எவ்வளவு நம்பகமானவராக இருந்தாலும், நெருக்கமானவராக இருந்தாலும் அவர் சொல்லும் செய்தி சரியானதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடுமானால், அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)
நூல்: அஹ்மத் 15478

நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஒரு செய்தி நம்மை வந்தடைந்தால் இது நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருப்பார்களா என்று கவனிக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அதை எவ்வளவு பெரிய ஆலிம் நமக்கு எடுத்துரைத்தாலும் சரியே!
அரபு மொழி அறியாதிருந்தாலும், சிந்திக்கும் திறனை நமக்கு இறைவன் வழங்கியுள்ளான். அதன் மூலம் நபிகள் நாயகம் இவ்வாறு சொல்லியிருப்பார்களா என்று சிந்திக்க வேண்டும்; அல்லது அது பற்றிய விளக்கம் சரியானதா என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

இன்னும், மக்கத்து முஷ்ரிக்கீன்கள் தங்கள் முன்னோர்கள் எந்த வழியில் மார்க்கத்தை அமைத்துக் கொண்டார்களோ அவ்வழியிலே சென்றார்கள். அவர்கள் அவ்வழி சரியானதா என்பதைச் சிந்திக்கத் தவறினார்கள்; கண்மூடிப் பின்பற்றினார்கள்.
இதனால் திருக்குர்ஆன் பல வசனங்களில் அச்செயலை கண்டிக்கின்றது.

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்‘’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
அல்குர்ஆன் 2:170

அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்‘’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?
அல்குர்ஆன் 5:104

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்படும் போது எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்‘’ என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா?
அல்குர்ஆன் 31:21

அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உரிமையற்றவர்களாகவும், விளங்காதவர்களாகவும் இருந்தாலுமா?’’ என்று கேட்பீராக!
அல்குர்ஆன் 39:43

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுபவர்கள்’’ என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.

உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதை விட நேர் வழியை நான் கொண்டு வந்தாலுமா? என (எச்சரிக்கை செய்பவர்) கேட்டார் எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே’’ என்று அவர்கள் கூறினர்.
எனவே அவர்களைத் தண்டித்தோம். பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிப்பீராக!
அல்குர்ஆன் 43:23-25

கண்மூடித்தனமாக ஒரு வழியைத் தேர்வு செய்த தனது தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் ஹுனைன் போருக்குச் சென்றோம். நாங்கள் குஃப்ரிலிருந்து விடுபட்ட புதியவர்களாக இருந்தோம். முஷ்ரிகீன்கள் தங்கிச் செல்லும், தங்கள் ஆயுதங்களை தொங்கவிடும் இலந்தை மரம் இருந்தது, அதற்கு தாது அன்வாத்எனச் சொல்லப்பட்டது.

அந்த இடத்தைக் கடக்க நேரிட்டபோது அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிகீன்களுக்கு தாது அன்வாத் இருப்பது போன்று நமக்கும் ஒரு தாது அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) மூஸாவிடத்தில் பனூ இஸ்ராயீல்கள் கேட்டது போன்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்: மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!’’ என்று கேட்டனர். நீங்கள் அறிவுகெட்ட கூட்டமாகவே இருக்கின்றீர்கள்’’ என்று அவர் கூறினார். (அல்அஃராப் 7:138). என்று கூறினார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறிவிட்டு நீங்கள் முன் சென்றவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவீர்கள்என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுவாகித் அல்லைஸி (ரலி)
நூல்: திர்மிதீ 2180

இணை வைப்பாளர்கள் செய்கின்ற காரியம் சரியானதா? தவறானதா? என்பதை ஆய்வு செய்யாமல் அவர்களைப் போன்றே தங்கள் வழியையும் அமைத்துக் கொள்ள விரும்பியவர்களை அல்லாஹ்வுடைய தூதர் மேற்படி சம்பவத்தில் கண்டிக்கிறார்கள்.
மேலும், ஒருவரிடம் ஒரு செய்தியைக் கேட்டால், அதை நாம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரும், அதை பிறருக்குச் சொல்வதற்கு முன்னரும் அச்செய்தி உண்மையானதா என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 6

ஒருவரிடம் ஒரு செய்தியைக் கேட்டு அச்செய்தி உண்மையானதுதானா என்ற ஆய்வு இல்லாமல் அச்செய்தியை நாம் பிறருக்குக் கூறினால் நாம் பொய்யர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதுர் எச்சரித்துள்ளார்கள்.

அச்செய்தி உண்மையானதாகவே இருந்தாலும், நாம் அதைப்பற்றி விசாரிக்காமல் இருந்தால் பொய்யர்கள் என்ற பட்டியலில் இறைவன் நம்மை இணைத்து விடுவான்.
அச்செய்தி உலக ரீதியாக இருந்தாலும், மார்க்க ரீதியாக இருந்தாலும் சரியே.

இவ்வாறு இஸ்லாத்தின் பல்வேறு ஆதாரங்கள், ஒருவர் எவ்வளவு நம்பகமானவராக இருந்தாலும் அவர் சொல்லும் செய்தி சரியான செய்தியா என்று சிந்தித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதையும், கண்மூடித்தனமாக ஒருவரை நம்பி பின்பற்றக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது.

ஒருவனிடம் எவ்விதத் தவறும் நிகழாது. இவன் சொல்வது சரியாகத் தான் இருக்கும் என்று நம்பினால் அது அல்லாஹ்விற்கு இணையாக அம்மனிதனைக் கருதியதாகும். இந்தப் பிரச்சாரத்தை தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்ப காலத்திலிருந்து சொல்லி வருகிறது.
ஆனால், நம்மீது சொல்லப்படும் அவதூறு, தவ்ஹீத் ஜமாஅத்தினர் சுயமாகச் சிந்திப்பது கிடையாது. சகோதரர் பி.ஜே என்ன கூறுகின்றாரோ அதை அப்படியே ஆமோதித்துச் சென்று விடுவாரகள் என்பதாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரையில் சகோதரர் பி.ஜே உட்பட எந்த தனிமனிதருக்கும் இங்கு முக்கியத்துவம் கிடையாது. கொள்கைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.

மார்க்கத்தில் எந்த விடயத்தைப் பற்றி முடிவெடுப்பதாக இருந்தாலும் ஆய்வு கூட்டம் கூட்டப்பட்டு அத்தனை அறிஞர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படும்.

அந்தக் கருத்துக்களில் எது குர்ஆன் ஹதீஸிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளதோ அதுவே முடிவாக எடுக்கப்படும்.

சில சமயங்களில் எம்.ஐ. சுலைமான் அவர்களுடைய கருத்து, சில நேரங்களில் அப்துந் நாஸிர் அவர்களின் கருத்து அல்லது அப்துல் கரீம் அவர்களுடைய கருத்து அல்லது இன்ன பிற அறிஞர்களின் கருத்து முடிவாக எடுக்கப்படும். சில சமயங்களில் பி.ஜே அவர்களின் கருத்தும் எடுக்கப்படும்.

குர்ஆன் ஹதீஸிற்கு ஒத்த கருத்துத்தான் இந்த ஜமாஅத்திற்கு முக்கியமே தவிர. எந்த தனி மனிதனுடைய கருத்தும் இங்கு மதிப்புபெறாது.

தவ்ஹீத் ஜமாஅத்தில் அனைவருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்படும் என்று சமீபத்தில் இந்த ஜமாஅத்திலிருந்து வெளியேறி ஸலபுக் கும்பலில் ஐக்கியமாகியிருக்கும் ஒருவர் கூட கூறியதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இந்த ஜமாஅத்திற்கு அப்பாற்பட்டவர்களின் நாவிலிருந்து கூட அவர்களையும் அறியாமல் இவ்வுண்மையை அல்லாஹ் கொண்டு வந்து விடுகின்றான்.
தவ்ஹீத் ஜமதஅத் ஒரு போதும் தக்லீதை ஆதரிக்காது. அத்தகைய வழிகேட்டிலிருந்து கடைசி வரை இறைவன் எங்களைக் காப்பாற்ற வேண்டும்.

யாரெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தை தக்லீத் வாதிகள் என்று கூறுகின்றார்களோர் அவர்களே தக்லீத் வாதிகளாக இருக்கிறார்கள்.

மத்ஹப் இமாம்களுக்குப் பின்னால் கண்மூடி சென்று, மத்ஹபிற்கு மாற்றமாக குர்ஆன் சுன்னாவை எடுத்துக் காண்பித்தாலும் அதைப் புறந்தள்ளி விட்டு மத்ஹபைத் தூக்கிப் பிடித்து வருகின்ற மத்ஹபுவாதிகள் ஒரு புறம்.

மார்க்கத்தின் சட்டங்களை நாம் வழங்கும் போதெல்லாம், எந்த அறிஞராவது இவ்வாறு கூறியுள்ளார்களா? இப்னு தைமிய்யா சொல்லியிருக்கின்றாரா? இப்னுல் கைய்யிம் சொல்லியிருக்கின்றாரா? என்று இமாம்களின் பட்டியலை கேட்டு, இமாம்களைத் தாண்டி சிந்திக்க கூடாது என்று சிந்திக்க மறுக்கும் கள்ள ஸலஃபுகள் மறுபுறம்.

திருடன், தான் தப்பிப்பதற்காகத் தன்னைத் துரத்தி வந்தவனைப் பார்த்து, திருடன் திருடன் என்று கூறி தப்பிக்கப் பார்த்தானாம்.

அது போன்று மத்ஹபையும், இமாம்களையும் தக்லீத் செய்யக்கூடியவர்கள் தாங்கள் மக்களின் பார்வையில் தக்லீத்வாதிகள் என்று பெயரெடுத்து விடக்கூடாது என்பதற்காக, அவர்களைக் குர்ஆன் சுன்னா அடிப்படையில் விவாதங்களில் ஓட விடும் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பார்த்து தக்லீத்வாதிகள் என்று கூறுகிறார்கள். யார் தக்லீத்வாதிகள் என்று சிந்திக்க கூடிய மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.


EGATHUVAM SEP 2016