Feb 18, 2017

நபித்தோழர்கள் இறைத்தூதர்கள் அல்லர் - 2

நபித்தோழர்கள் இறைத்தூதர்கள் அல்லர் - 2
எம்.எஸ். ஜீனத் நிஸா, மேலப்பாளையம்.

அல்லாஹ்வின் வார்த்தையான குர்ஆனும் நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் எதனைக் கூறுகின்றனவோ அதற்கே இஸ்லாமிய சமுதாயம் கட்டுப்பட வேண்டும் என்பதையும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட சுயமாக எதையும் கூறிவிடமுடியாது; அவ்வாறு கூறியதை இறைவன் தன் திருமறையில் கண்டித்துள்ளான் என்பதையும் கடந்த இதழில் கண்டோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கே இந்நிலையென்றால் ஸஹாபாக்களெல்லாம் எம்மாத்திரம்? என்று நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபிகளாரின் மரணத்திற்குப் பிறகு பல நபித்தோழர்கள் திசை மாறிய காட்சியை பல ஹதீஸ்களில் நம்மால் காணமுடிகின்றது. எந்தப் பதவி ஆசை கூடாது என்று நபிகளார் தடுத்தார்களோ அந்தப் பதவி ஆசை நபித்தோழர்களின் மனதிலும் நுழைந்ததை நாம் காண்கின்றோம்.

நீங்கள் உலக ஆசைக்காக உங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வதைத் தான் உங்களிடத்தில் நான் அஞ்சுகின்றேன் என்று நபிகளார் கூறிய நிகழ்வுகளும் நபிகளாரின் மரணத்திற்குப் பிறகு நடந்தேறின.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்’’ என்று என்னிடம் கூறினார்கள். (அமைதி திரும்பிய பினனர்) எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)’’ என்று சொன்னார்கள். 
நூல்: புகாரி 6869

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடை மீதேறி (உரை நிகழ்த்தி)னார்கள். அது உயிரோடுள்ளவர்களிடமும், இறந்தவர்களிடமும் விடை பெறுவது போலிருந்தது.

அவ்வுரையில் அவர்கள், “நான் (அல்கவ்ஸர் எனும்) தடாகத்தினருகில் உங்களுக்(கு நீர் புகட்டுவதற்)காகக் காத்திருப்பேன். அத்தடாகத்தின் பரப்பளவு அய்லாவிலிருந்து ஜுஹ்ஃபாவரையுள்ள தொலைதூரத்தைப் போன்றதாகும். எனக்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டு, சண்டையிட்டுக் கொண்டு, உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிந்துவிடுவீர்களோ என்றே நான் அஞ்சுகிறேன்’’ என்று சொன்னார்கள். இதுவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இறுதியாகச் சொற்பொழிவு மேடை மீது பார்த்த நிகழ்வாக அமைந்தது.
நூல்: முஸ்லிம்:4603

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களிடமிருந்து அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் (நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், “அபுல் ஹசனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?’’ என்று விசாரிக்க, அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் அருளால் நலமடைந்து விட்டார்கள்’’ என்று சொன்னார்கள்.

உடனே அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு அவர்களிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு, (பிறரது) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப் போகிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரைவில் தமது இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். மரணத்தின் போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாளம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?’’ என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்து கொள்வோம். அது பிறரிடத்தில் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்து கொள்வோம். அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்’’ என்று சொன்னார்கள்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் நமக்கு அதைத் தர மறுத்து விட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்’’ என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 4447

நபித்தோழர்களும் மனிதர்களே!
நபித்தோழர்களிடத்திலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன என்று கூறிய உடனே பலருக்கு ஆத்திரம் அளவு கடந்து வருவதைப் பார்க்கின்றோம்.

எவ்வாறு நபிகள் நாயகம் இறை அந்தஸ்தை அடைய முடியாதோ அது போல நபித்தோழர்களும் அல்லாஹ்வின் தூதர் ஆக முடியாது. நபிகளார் மக்களோடு வாழ்ந்த கால கட்டத்தில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சிறு சிறு சலசலப்புகள், பிரச்சனைகளுக்கு அவர்கள் சமாதானத்தையும், தீர்வையும் ஏற்படுத்தி வைத்தார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு போரில் இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி அன்சாரிகளே! (உதவுங்கள்.)’’ என்று கூறினார். அந்த முஹாஜிர் முஹாஜிர்களே! உதவுங்கள்!’’ என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியேற்று, “இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?’’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார்’’ என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். இவை நாற்றம் பிடித்தவை’’ என்று கூறினார்கள்.

அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்’’ என்று கூறினான்.
நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், உமர் (ரலி) அவர்கள் எழுந்து, “என்னை விடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன்’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது’’ என்று சொன்னார்கள். மக்காவாசிகள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளை விட அதிகமாகிவிட்டனர்.
நூல்: புகாரி 4905

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வஹீ’ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்’’ என்று அவர்கள் கூறினார்கள்.
அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களோ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்’’ என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, “பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா?’’ என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி), “தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை’’ என்று பதில் கூறினார்.

உடனே, அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று, அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலை தண்டிப்பதற்கு  உதவும்படி கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் வீட்டார் விஷயத்தில் எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் ஒரு மனிதரை தொடர்புபடுத்தி  கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் வந்ததில்லை’’ என்று கூறினார்கள்.

உடனே, சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகின்றேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகின்றோம்‘’ என்று கூறினார்கள்.

உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்ல மாட்டீர். அது உம்மால் முடியாது’’ என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குல மாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டி விட்டது. உடனே, உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, உபாதா (ரலி) அவர்களை நோக்கி, “நீர் தாம் பெய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால் தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகின்றீர்’’ என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமாகிவிட்டார்கள்.
நூல்: புகாரி 2661

எப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்களோ அப்போதே நபித்தோழர்களின் மனதிலிருந்த மனக்கசப்புகளும், கொள்கை ரீதியிலான பிரச்சனைகளும் அதிகமானது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள்  ஸுன்ஹ்என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் - நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான் - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்’’ என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, “தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்ய மாட்டான்’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.

(வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) “சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்’’ என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்என்று சொன்னார்கள்.

மேலும், ‘‘(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே’’ என்னும் (39:30-ம்) இறை வசனத்தையும், ‘‘முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்’’ என்னும் (3:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.
நூல்: புகாரி 3667, 3668

நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களுக்கு இறைச் செய்தி அருளப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் இறைத்தூதருக்கு நிகராக முடியாது என்பதை மேற்கண்ட செய்திகள் நமக்குத் தெளிவாக விளக்குகின்றன.


EGATHUVAM SEP 2016