Feb 27, 2017

எத்தி வைக்கும் யுக்தி - DEC 15

எத்தி வைக்கும் யுக்தி    - DEC 15

 

வீரியமுள்ள பிரச்சாரம் வீழ்கின்ற தருணங்கள்

எம்.எஸ். ஜீனத் நிஸா, ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்
மார்க்கத்தை எத்திவைப்பதற்கு வெட்கம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பது பற்றிக் கடந்த இதழில் கண்டோம். மேலும் நமது பிரச்சாரங்களுக்கு இழுக்கை ஏற்படுத்தக் கூடிய பயிற்சியின்மை பற்றி இவ்விதழில் நாம் காண இருக்கின்றோம்.
சொற்பொழிவுகளில் ஏற்படும் தவறான வார்த்தைப் பிரயோகத்தினால், முறையான பயிற்சியின்மையினால் சிலரது பிரச்சாரம் சில நேரங்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இது குறித்து பேச்சாளர்கள் அறிந்து கொள்வதும், இவற்றில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.
உரையில் பயன்படுத்துகின்ற குர்ஆன் வசனங்களிலோ, ஹதீஸ்களிலோ தவறிழைத்து விடக் கூடாது. அதற்கேற்றாற் போல் முறையாக குர்ஆன் மற்றும் ஹதீஸ் வாசகங்களைப் பயிற்சி எடுத்த பின்னரே சொற்பொழிவாற்றுவதற்குச் செல்ல வேண்டும்.
சிலர் குர்ஆன் வசனங்களை, ஹதீஸ் என்றும் ஹதீஸ் வாசகங்களை இது குர்ஆனில் இடம் பெறுகின்றது என்றும் தவறுதலாகப் பயன்படுத்தி விடுகின்றனர்.
மேலும் குர்ஆன், ஹதீஸ் மற்றும் துஆக்களை அரபியில் பயன்படுத்தும் போது தப்பும், தவறுமாகப் பயன்படுத்தி விடுகின்றனர். இது மார்க்க அடிப்படையில் தவறாகும். பேச்சாளர்களுக்குரிய அழகும் கிடையாது
அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் அருகில் உரையாற்றினார். அப்போது "யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர் நேர்வழி அடைந்துவிட்டார். யார் அவர்கள் இருவருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் வழிதவறி விட்டார்'' என்று குறிப்பிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் ஒரு மோசமான சொற்பொழிவாளர். "யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கின்றாரோ' என்று (பிரித்துக்) கூறுவீராக!'' என்றார்கள். 
நூல்: முஸ்லிம் 1578
"அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும்' என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தும் போது "அவ்விருவருக்கும்' என்று நபித்தோழர் பேசியதற்குத் தான் இவ்வளவு   பெரிய கண்டனத்திற்கு அவர்கள் ஆளானார்கள். இந்த இடத்தில் இவர்கள் செய்த தவறு தான் என்ன என்று உற்று நோக்கும் போது தான் அல்லாஹ்வின் அந்தஸ்தில் அல்லாஹ்வின் தூதரை வைத்துப் பயன்படுத்தி விட்டார்கள் என்ற கருத்து இதில் அடங்குகின்றது.
இந்த ஒரு சான்றே நாம் சொற்பொழிவில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், நாம் பயானில் எவ்வளவு தவறுகளைச் செய்கின்றோம் என்பதையும் சிந்திக்கத் தூண்டுகின்றது.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத் தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கி விடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் "நபி'யை நான் நம்பினேன்'' என்று பிரார்த்தித்துக் கொள்! (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!
இந்நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையை திரும்ப ஓதிக் காண்பித்தேன். "நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்' என்ற இடத்தை அடைந்ததும் ("உன் நபியை' என்பதற்கு பதிலாக) "உன் ரசூலை' என்று (மாற்றிச்) சொல்லிவிட்டேன். (உடனே) நபி (ஸல்) அவர்கள், "இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) "நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்' என்று சொல்'' என (எனக்குத் திருத்திச்) சொன்னார்கள்.
நூல்: புகாரி 247
நபி என்ற வார்த்தைக்கும், ரசூல் என்ற வார்த்தைக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே ஒரே பொருள் தருகின்ற இரு வார்த்தைகளாகும். ஆனாலும் கற்றுக் கொடுத்த அந்த துஆவை அப்படியே வார்த்தை பிசகாமல் பயன்படுத்துமாறு அந்த நபித் தோழருக்கு நபியவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். எனவே உரையில் வார்த்தைகளை பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளைக் கூட நாம் செய்துவிடக்கூடாது.
எதையேனும் ஒன்றை பேசித் தான் ஆகவேண்டும் என்பதற்காக இட்டுக் கட்டப்பட்ட செய்திகளைப் பேசிவிடக் கூடாது. மேலும் சொற்பொழிவாற்றுவதற்கு முன்பு நாம் பேசுவதற்கு எடுத்துள்ள ஹதீஸ்கள் சரியான செய்தியா? அல்லது பலவீனமான செய்தியா? என்பதை ஆய்வு செய்த பிறகே சொற்பொழிவாற்ற வேண்டும்.
அரபு மூலத்துடன் வாசித்து பொருள் செய்து உரையாற்றும் ஆற்றலுள்ளவர்கள் குர்ஆன் வசன எண்ணையோ, ஹதீஸ் எண்ணையோ குறிப்பிடாமல் பேசலாம். மூலத்தை வாசித்துக் காட்டுவதால் அதில் மக்களின் நம்பிக்கைக்குப் பாதகம் ஏற்படாது.
ஆனால் அரபு மூலத்தை வாசித்துப் பொருள் செய்ய இயலாதவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைப் பயன்படுத்தும் போது அத்தியாய எண், மற்றும் வசன எண்களையும், ஹதீஸ்கள் எந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவற்றையும் ஹதீஸ்களின் எண்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதுவே நமக்கும், மற்ற அமைப்பினருக்கும் உள்ள வித்தியாசமாகும்.
வசன எண்களையும், ஹதீஸ் எண்களையும் நாம் தவறாகப் பயன்படுத்தினால் அது நமது உரையில் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி விடும்.
பாமர மக்களிடமும் குர்ஆன், ஹதீஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு, அவற்றுக்கான மொழிபெயர்ப்புகள் வெளிவந்துவிட்ட இந்தக் காலத்தில் நாம் கூறும் வசனத்தையோ, ஹதீஸ்களையோ உடனடியாகச் சென்று அதன் மொழிபெயர்ப்புகளில் தேடிப் பார்க்க விழைவார்கள். நாம் குறிப்பிட்ட எண்களில் அந்த வசனம் இல்லாத பட்சத்தில் நமது மொத்த உரையையும் அது சந்தேகத்திற்குரியதாக ஆக்கிவிடும்.
சொற்பொழிவாற்றும் போது நாம் சொல்கின்ற தகவல்கள் உண்மையான செய்திகள் தானா? என்பதை ஆய்வு செய்யாமல் கண்மூடித்தனமாக பேசிவிடக் கூடாது. ஏனெனில் அது வதந்தியைப் பரப்புவதாக அமைந்துவிடும்
பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள் வார்கள். அல்லாஹ்வின் அருளும், அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.
அல்குர்ஆன்: 4:83
மார்க்கத்தை மென்மையான முறையில் பிறருக்கு எத்திவைக்க வேண்டும்
"அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது (என்னை) அஞ்சலாம்'' (என்றும் கூறினான்.)
அல்குர்ஆன் 20:44
தன்னையே கடவுள் என்று கூறிக் கொண்டு தனது ஆட்சிப் பீடத்திற்கு எவரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பனூ இஸ்ரவேலர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்று குவித்து, அவர்களை அடிமைப்படுத்தி, சித்ரவதை செய்து கொண்டிருந்த கொடுங்கோல் மன்னனான பிர்அவ்னிடம் கூட மென்மையான முறையில் எடுத்துச் சொல்லுங்கள் என்றே மூஸா நபியவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகின்றான்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி எழுந்து பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைக் கண்டித்தனர். நபி (ஸல்) அவர்கள் "அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் செல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 220
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு "நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்'' என்று தொடங்கி, "உங்களிலுள்ள நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார் செய்துள்ளான்'' என்று முடியும் (33:28,29) இந்த வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன. இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு, "நான் கூறியதைத் தாங்கள் மற்ற துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்க மாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ள வனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறை நெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்'' என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 2946
நன்மை மற்றும் சொர்க்கத்தின் பக்கம் ஆர்வமூட்டி மக்களின் தவறுகளைத் திருத்த வேண்டுமே தவிர அவர்களைப் பயமுறுத்தி மார்க்கத்தை விட்டுமே விரண்டு ஓடச் செய்துவிடக் கூடாது
அபூ புர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களையும், முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்கு அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்கள், "யமன் இரு மாகாணங்களாகும்'' என்று சொன்னார்கள். பிறகு, "(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி கூறுங்கள். வெறுப்பேற்றி விடாதீர்கள்'' என்று (அறிவுரை) கூறினார்கள்.
நூல்: புகாரி 4341
தர்மம் செய்தல், மென்மையைக் கடைபிடித்தல் போன்ற நம் செயல்களாலும் மார்க்கத்தைப் பிறருக்கு எத்திவைக்கலாம். ஏனெனில் நபிகளாரின் செயல்களினாலும் பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்'' என்று கூறினார்.
நூல்: முஸ்லிம் 4630
நம்முடைய செயல்கள் இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் சரியான முறையில் இருக்குமானால் அதைப் பார்த்து முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முன்வருவார்கள்.
ஒரு மனிதர் உலக ஆதாயத்திற்காக இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும், இஸ்லாத்தைத் தழுவிய சிறிது காலத்திற்குள் அவருக்கு இஸ்லாம் இந்த உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விட மிகவும் உவப்பானதாக ஆகிவிடும்.
அல்லாஹ்வின் தூதருடைய நடவடிக்கைகளைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சுமாமா (ரலி) அவர்களின் சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "நஜ்த்' பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் "பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே?'' என்று கேட்டார்கள். அவர், "நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்'' என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறு நாள் வந்தபோது அவரிடம், "ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியதுதான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்'' என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, "நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், "நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன்'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்'' என்று சொன்னார்கள். உடனே ஸுமாமா, பள்üவாசலுக்கு அருகில் இருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், "முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்'' என்று மொழிந்துவிட்டு, "முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்று வரை) உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்'' என்று சொல்லிவிட்டு, "மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ராச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், "நீ மதம் மாறிவிட்டாயா?'' என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், "இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 4372

EGATHUVAM DEC  2015