பொய்த்துப்
போன பைபிளின் முன்னறிவிப்புகள்!
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
தவ்ஹீத் ஜமாஅத் அண்மையில் கிறித்தவ மத
போதகர்களுடன் சென்னையில் ஒரு விவாதத்தைச் சந்தித்தது.
பைபிள் இறைவேதமா? குர்ஆன் இறைவேதமா என்பது விவாதத்தின் தலைப்புகள்.
அல்லாஹ்வின் அருளால் குர்ஆன் இறைவேதமே என்பதும், பைபிள் இறைவேதமே அல்ல என்பதும் அடுக்கடுக்கான பல
சான்றுகளுடன் விவாதத்தில் நிரூபிக்கப்பட்டது.
நமது தரப்பிலிருந்து குர்ஆன் இறைவேதமே என்பதை
நிரூபிக்க, குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள் பலவற்றை
அடுக்கினோம்.
மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும்
நரம்புகள் உள்ளன - அல்குர்ஆன் 4:56
படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து
காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன - அல்குர்ஆன் 15:19, 16:15, 21:31, 27:61,
குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது
ஆண்களின் உயிரணுக்களே - அல்குர்ஆன் 75:39
விண்வெளிப் பயணம் மேற் கொள்ளும்போது மனித
இதயம் சுருங்கும் - அல்குர்ஆன் 6:125
விண்வெளியில் எவ்வளவு தொலைவு மனிதனால் செல்ல
முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச்
செல்ல இயலாது - அல்குர்ஆன் 17:37
இவை நாம் நாம் முன்வைத்த ஆதாரங்களில் சில
துளிகளாகும்.
இவற்றைக் குறிப்பிட்டு நாம் முன்வைத்த பிரதான
வாதம் என்னவென்றால்,
தற்போதைய விஞ்ஞான அறிவில் நூற்றில் ஒரு பங்கு
கூட 1400 ஆண்டுகளுக்கு முன்பு
இருந்ததில்லை.
அப்படியிருக்க, தற்காலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த அரிய
விஞ்ஞான உண்மைகள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே
திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பது எப்படி சாத்தியம்?
அனைத்தையும் அறிந்த இறைவன் வழங்கிய வேதமாக, வார்த்தையாக அல்குர்ஆன் இருக்கும் காரணத்தால் தான் இது சாத்தியமானது.
எனவே குர்ஆன் இறைவேதம் என்பது சத்தியமானது.
இவ்வாறு நாம் வாதம் வைத்தோம்.
இதற்கு கிறித்தவ மதபோதகர்களால் மழுப்பலையும், உளறலையும் தவிர வேறு எந்தப் பதிலையும் அளிக்க இயலவில்லை.
அது மட்டுமின்றி பைபிள் இறைவேதமே என்பதையும்
அவர்களால் நிறுவ முடியவில்லை.
ஆதாரம் என்று அவர்கள் முன்வைத்த சிலவற்றைக்
குறிப்பிடுகிறோம். இதிலிருந்தே அவர்களின் தரம் என்ன? திறம் என்ன? என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.
கணவன் மனைவி அன்பாக இருக்க வேண்டும் என்று
பைபிள் சொல்கிறது.
உழைப்பாளிகளுக்கு வார விடுமுறை அளிக்க
வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.
அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்று பைபிள்
சொல்கிறது.
பெண்களை மதிக்க வேண்டும் என்று பைபிள்
சொல்கிறது.
எனவே பைபிள் இறைவேதமே!!!
இவ்வாறு கிறித்தவ மதபோதகர்கள் தங்கள் வாதத்தை
எடுத்து வைத்தனர்.
இதைப் படித்ததும் சிரிப்பு வருகிறதல்லவா? கிறித்தவ மத போதகர்கள் இவ்வாதங்களை வைத்த போது அதே
சிரிப்பொலி தான் விவாத அரங்கிலும் ஒலித்தது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்
போல அவர்களின் வாதத் திறமையை எடுத்துக் காட்ட இது ஒன்றே போதுமானது எனக்
கருதுகிறோம்.
மேலும் விவாதத்தில் முன் வைக்கப்பட்ட நமது
வாதங்கள், எதிர் தரப்பாளர்களின் வாதங்கள், உளறல்கள், கேள்விகள் அதற்கு நமது பதில்கள் என முழுமையாக
அறிந்து கொள்ள நமது இணைய தளத்தையும் உணர்வு வார இதழையும் பார்வையிடுங்கள்.
இந்தக் கட்டுரையில் நாம் விளக்க முற்படுவது
குறிப்பிட்ட ஒரு அம்சத்தைப் பற்றி மட்டுமே!
இறைவேதம் என்று ஒரு புத்தகத்தைச் சொல்ல
வேண்டுமானால் அதற்குப் பல தகுதிகள் இருக்க வேண்டும். அவற்றில் முதன்மைத்
தகுதியானது, வேதம் என்று கருதப்படுவதில் சொல்லப்பட்டுள்ள
முன்னறிவிப்புகளில் எந்த ஒன்றும் பொய்யாகி விடக் கூடாது. எல்லா முன்னறிவிப்புகளும்
நிறைவேறி இருக்க வேண்டும். இதுவே இறைவேதத்திற்கான முக்கிய அளவுகோலாகும்.
இறைவேதத்திற்கான இந்த ஒரு அளவுகோலின் படி
பைபிளை நாம் அணுகினால் அது இறைவேதமல்ல என்பதை தன்னைத் தானே நிரூபிப்பதைக் காணலாம்.
பைபிள் உண்மையிலேயே இறைவனின் வேதம் என்றால்
அதில் சொல்லப்பட்ட முன்னறிவிப்புகள் நிறைவேறியிருக்க வேண்டும் அல்லவா?
ஆனால் பைபிளில் சொல்லப்பட்டுள்ள பல
முன்னறிவிப்புகள் நிறைவேறாமல், பொய்த்துப்
போயுள்ளது. அவற்றில் சிலவற்றை, குறிப்பாக நாம்
விவாதத்தில் மேற்காள் காட்டியதை ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் அறியத் தருகிறோம்.
முன்னறிவிப்பு: 1
விருத்தசேதனம் செய்யாதோர் ஜெருசலத்திற்குள்
செல்வதில்லையா?
எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக் கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில்
வருவதில்லை.
ஏசாயா, அதிகாரம் 52, வசனம் 1
இந்த வசனத்தில் கடவுளாகிய கர்த்தர் ஜெருசலம்
பற்றி ஒரு முன்னறிவிப்பு செய்கிறார்.
விருத்தசேதனமில்லாதவன் மற்றும் அசுத்தமானவன்
எவனும் இனி ஜெருசலத்திற்குள்ளே வரமுடியாது என்பது தான் கர்த்தர் செய்யும்
முன்னறிவிப்பாகும்.
இந்த முன்னறிவிப்பு மெய்யானதா? பொய்யானதா?
இனி விருத்தசேதனமில்லாதவர்கள் யாரும்
ஜெருசலத்திற்குள் வரமுடியாது என்றால் அது சொல்லப்பட்டதிலிருந்து இதுவரையிலும், இறுதி வரையிலும் அப்படிப்பட்ட யாரும் அங்கே செல்லக் கூடாது
என்று அர்த்தம்.
விருத்தசேதனம் (கத்னா) செய்யப்படாதோர் யாரும்
ஜெருசலத்திற்குள் இப்போது பிரவேசிப்பதில்லையா?
ஏன் அங்கிருக்கும் கிறித்தவ மக்களே (அதிகம்)
விருத்த சேதனம் செய்யாதவர்கள் தானே? தமிழக அரசின் சார்பில் ஜெருசலம் செல்ல இலவச ஏற்பாடு செய்யப்பட்டு பலர் அங்கே
சென்று வருகின்றனர். அவர்களில் யாரும் விருத்த சேதனம் செய்தவர்கள் அல்லர்.
அடுத்து அசுத்தமானவர்களும் அங்கே இனி செல்ல
முடியாதாம்.
அசுத்தமானவன் என்பது கொள்கையைக் குறிக்கும்
என்றால் கிறித்தவ கொள்கையை ஏற்காத யாரும் ஜெருசலத்திற்குள் பைபிள் செய்த
முன்னறிவிப்பின் படி செல்ல முடியாமல் இருக்க வேண்டும். ஆனால் நடப்பு நிலவரம்
அவ்வாறல்ல.
விருத்த சேதனம் செய்யாதோர், அசுத்தமானவர்கள் என இரு சாராருமே ஜெருசலத்திற்குள் ஒவ்வொரு
நாளும் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படியிருக்கும் போது இவர்களில் யாரும் இனி உன்னிடத்தில் வர மாட்டார் என்று
பைபிள் சொன்னது என்னவானது?
பைபிள் சொன்ன முன்னறிவிப்பு பொய்த்துப் போனது
என்பதைத் தான் இது படம் பிடித்துக் காட்டுகிறது.
முன்னறிவிப்பு: 2
யூதர்களுக்கென சொந்த தேசம் இருக்குமா?
பைபிள் செய்யும் மற்றொரு முன்னறிவிப்பு
யாதெனில் யூதர்களுக்கு என்று எல்லாக் காலத்திலும் சொந்த தேசம், நாடு இருக்கும். அது அவர்களிடமிருந்து எப்போதும்
பிடுங்கப்படாது என்பதாகும்.
இதோ பைபிள் கூறுவதைப் பாருங்கள்.
என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத்
திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். அவர்களை அவர்கள் தேசத்திலே
நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து
அவர்கள் இனி பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
ஆமோஸ், அதிகாரம் 9, வசனம் 14, 15
யூதர்களுக்கு என்று ஒரு தேசம் கர்த்தரால்
வழங்கப்படும் என்றும் அது ஒருபோதும் அவர்களிடமிருந்து பிடுங்கப்படாது என்றும்
பைபிளின் இவ்வசனங்கள் முன்னறிவிப்பு செய்கிறது.
இதுவாவது நிறைவேறியதா?
அதுவும் இல்லை. இவ்வசனத்தில் சொல்லப்பட்டபடி
யூதர்களுக்கென்று தேசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் அது நிலைத்திருக்கவில்லை.
பல காலகட்டங்களில் அது அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டுள்ளது.
யூதர்களுக்கென்று சொந்தமாக எந்த நாடும் இல்லாத
காலமும் உண்டு என்பதை வரலாறு மெய்ப்பிக்கின்றது. அப்படியானால் பைபிள் செய்த
முன்னறிவிப்பின் கதி என்ன? அதோ கதி தான். இதை தனியாக வேறு சொல்லவும்
வேண்டுமா?
பொய்த்துப் போன முன்னறிவிப்புகளை உள்ளடக்கிய
மனித நூலே பைபிள். அது இறைவேதமல்ல என்பதை இது காட்டுகின்றது.
முன்னறிவிப்பு 3
இயேசு காலத்திலிருந்து இன்று வரை
உயிரோடிருக்கும் நபர்கள் உண்டா?
அடுத்து பைபிள் இன்னொரு விநோதமான முன்னறிவிப்பு
ஒன்றையும் செய்கிறது. வழக்கம் போல் அதுவும் காலத்தால் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.
காலத்தால் மட்டுமல்ல, படிக்கும் போதே இது என்ன முன்னறிவிப்பு? இது முழுக்க முட்டாள்தனம் என்பதை எளிதில் அறிந்து விடலாம்.
இதோ விநோத முன்னறிவிப்பைச் சொல்லும் பைபிளின்
வசனங்கள்.
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின்
மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன்
கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய
ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை
ருசி பார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு, அதிகாரம் 16, வசனம் 27, 28.
இதில் என்ன சொல்லப்படுகிறது என்பதைக் கூர்ந்து
கவனியுங்கள்.
தம் வாழ்நாளில் உள்ள மக்களை நோக்கி இயேசு
முழங்குகிறார்.
இறுதி காலத்தின் நெருக்கத்தில் மீண்டு(ம்)
வருவேன். அப்போது நான் வருவதைப் பார்க்கும் வரை உங்களில் சிலர் உயிரோடு
இருப்பீர்கள். அதுவரையிலும் அந்தச் சிலர் மரணிக்க மாட்டீர்கள் என்கிறார்.
இந்த முன்னறிவிப்பின் படி இயேசுவின்
காலத்திலிருந்து தற்போது வரை ஏதேனும் சில நபர்கள் உயிரோடு, மரணத்தைச் சுவைக்காமல் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
அந்த நபர்கள் யார்?
ஏனெனில் இயேசு தம் ராஜ்யத்தில் இன்னும்
வரவில்லை. நான் ராஜ்யத்தில் வருவதைக் காணாமல் நீங்கள் மரணிக்க மாட்டீர்கள் என்று
தம் காலத்தில் உள்ள சிலருக்கு தீர்க்கதரிசனமாக, முன்னறிவிப்பாகச் சொல்லியுள்ளார்.
பைபிள் கூறிய இந்த முன்னறிவிப்பு நிறைவேற
வேண்டும் என்றால் இயேசுவின் காலத்தில் உள்ள அந்த ஒரு சிலர் தற்போது வரையிலும்
உயிரோடு இருந்திருக்க வேண்டும். இயேசு ராஜ்யத்தில் வரும் வரை மரணிக்காமல் இருக்க
வேண்டும்.
இதை இன்னும் எளிமைப்படுத்துவதாக இருந்தால்
இயேசு இந்த முன்னறிவிப்பைச் சொல்லும் போது ஒருவருக்கு வயது 40 என்றும் இயேசுவுக்கு வயது 40 என்றும் வைத்துக் கொண்டால் இந்நேரம் அவருக்கு வயது 1975. இந்த வயதில் உயிரோடு இருக்க வேண்டும்.
இந்த உதாரணத்தின் படி உலகத்தில் 1975 வயதில் யாராவது ஒரு சிலராவது இருக்க வேண்டும் என்பது
பைபிளின் முன்னறிவிப்பு. அப்படி யாரும் உண்டா?
இருந்தால் பைபிள் இறைவேதம் என்பதற்கு அதுவே
மிகப்பெரிய அத்தாட்சியாக இருந்திருக்குமே.
உலகின் எந்த மூலையில் அவர் இருந்திருந்தாலும்
மீடியாவின் கழுகுப் பார்வைக்கு இரையாகி இந்நேரம் நம் பார்வைக்கு
விருந்தாகியிருப்பாரே!
நம் நாட்டுப் பெண்கள் அவரைக் கடவுளாக்கி ஒரு
மரத்தடியில் அமர வைத்து பூஜை, பரிகாரங்களையெல்லாம்
செய்யத் துவங்கியிருப்பார்களே!
ஊருக்கு ஊர் அவர் பெயரில், அவர் உருவத்தில் சிலைகள் வடித்திருப்பார்களே!
ஆனால் இவற்றில் எதுவும் நடக்கவில்லை. காரணம்
இயேசுவின் காலத்திலிருந்து தற்போது வரையிலும் உயிரோடு வாழும் ஒருவரும் இல்லை
என்பது எல்.கே.ஜி. படிக்கும் சிறுபிள்ளைக்கும் தெரிந்த விஷயம்.
பைபிள் செய்த இந்த முன்னறிவிப்பு பொய்த்துப்
போனது மட்டுமல்ல, கேலிக்கூத்தாகி நிற்பதிலிருந்து பைபிள்
இறைவேதமே அல்ல என்பது இன்னும் தெளிவாகிறது.
குர்ஆனின் முன்னறிவிப்புகள்
பைபிள் செய்த முன்னறிவிப்புகள் வார்த்தைக்கு
வார்த்தை பொய்யாகி அது இறைவேதமல்ல என்பது நிரூபணமாவதால், கூனிக்குறுகி நின்று கொண்டிருக்கும் வேளையில் குர்ஆன்
தன்னைத் தானே இறைவேதம் என்பதை தனது முன்னறிவிப்புகளால் நிரூபித்து, கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதையும் பார்க்கிறோம்.
குர்ஆனில் சொல்லப்பட்ட ஒவ்வொரு முன்னறிவிப்பும்
அச்சரம் பிசகாமல் நிறைவேறியுள்ளது. நிறைவேறிக் கொண்டும் இருக்கிறது.
அவற்றில் ஒரு சிலதை இங்கே சுருக்கமாகக்
காண்போம்.
அபய பூமி கஅபா
உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில்
எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத்
திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.
இந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 2:125
கஅபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே
இருந்து வருகிறது.
14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும்
உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும், அப்படித் தாக்க வந்தால் அவர்களை முறியடிக்கக் கூடியதாகவும் அது இருந்து
வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருகிறது.
யூத, கிறித்தவர்கள் இதை முறியடிக்க என்னென்னவோ செய்து பார்த்தும் கஃபாவின்
பாதுகாப்புத் தன்மைக்கு ஒரு பங்கமும் ஏற்படவில்லை.
இந்த வகையில் தான் செய்த முன்னறிவிப்பை
நிரூபித்து, தான் இறைவேதமே என்று உலக மக்களுக்கு அல்குர்ஆன் கர்ஜனை செய்கிறது.
முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும்
சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான
நிலையிலும் இருந்தபோது பிற்காலத்தில் முஸ்லிம் களின் ஆட்சி அமையும் என்று
திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்தது.
உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடு வோரும் உருவாவார்கள் என்பதை
அவன் அறிந்து வைத்துள்ளான்.
அல்குர்ஆன் 73:20
"உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் பாதையில் போரிடு வோரும் இனிமேல் உருவாவார்கள்
என்பதை அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான்'' என அல்லாஹ் கூறுகிறான்.
நோயாளிகள் உருவாவதை யாரும் சொல்லி விட
முடியும். முஸ்லிம்களாக வாழ்வதே சிரமமாக இருந்த காலகட்டத்தில் இந்தச் சமுதாயத்தில்
அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்கள் உருவாவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்பது ஒரு
ஆட்சியை அமைத்து படைதிரட்டிப் போர் புரிவதைக் குறிக்கும்.
இப்படிப் போர் புரிவோர் உருவாவார்கள் என்பதை
அன்றைய சூழ்நிலையில் கணிக்கவே முடியாது. ஆனாலும் இறைவன் கூறியவாறு மிகச் சில
வருடங்களிலேயே மாபெரும் இஸ்லாமிய ஆட்சி அமைந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர்
உருவானார்கள்.
இவ்வாறு முன்னறிவிப்புச் செய்த படியே
நடந்தேறியது, திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்குரிய
சான்றுகளில் ஒன்றாகும்.
மக்காவின் வறுமை நீங்கும்
நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர்
அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக்
கூடாது. நீங்கள் வறுமையைப் பயந்தால் அல்லாஹ் நாடினால் தனது அருளால் பின்னர்
உங்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 9:28
மக்கா நகரம் அன்றைய அரபுகளின் மிகப் பெரிய
புண்ணியத் தலமாக இருந்தது. பாலைவனமாக இருந்ததால் இந்த ஆலயத்திற்கு வரும் பயணிகள்
மூலமாகவே உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டி வந்தனர். அதிக அளவில் பயணிகள் வந்தால் தான்
அதிக வருவாய் கிடைக்கும் என்று எண்ணி எல்லா விதமான தீமைகளையும் அங்கு
அனுமதித்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வரக்
கூடாது' என்று இவ்வசனத்தின் (9:28) மூலம் இறைவன் தடை செய்தான்.
இந்தத் தடையினால் பயணிகளின் கூட்டம் குறைந்து
அதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மக்காவாசிகள் அஞ்சினார்கள்.
இவர்களது அச்சத்தைப் போக்கும் விதமாகவே
இவ்வசனத்தில் "நீங்கள் வறுமையை அஞ்ச வேண்டாம்; நான் உங்களைச் செல்வந்தர்களாக்குவேன்' என்று இறைவன் புறத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இணை கற்பிப்போர் கஅபாவுக்கு வரக் கூடாது என்ற
கட்டளைக்குப் பின்னர், இறைவன் வாக்களித்தது போல் மக்கள் கூட்டம்
கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர். முன்பிருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாகப் பயணிகள்
கஅபாவுக்கு வரலாயினர். மக்காவாசிகளின் செல்வநிலையும் உயர்ந்து இந்த முன்னறிவிப்பு
நிறைவேறியது. அந்த நிலை இன்றும் நீடித்து திருக்குர்ஆன் இறைவேதமே என்பதை உலகுக்கு
அறிவித்து கொண்டிருக்கிறது.
(இது போன்ற, குர்ஆனின் நடந்தேறிய அனைத்து முன்னறிவிப்புகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பைக் காணவும்)
இப்போது இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
பைபிள் செய்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றும்
பொய்த்துப் போய் விட்டது.
குர்ஆன் செய்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றும்
உண்மையாகியுள்ளது.
இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்
அறிவுஜீவிகள் யாவரும் பைபிள் இறைவேதம் அல்ல என்பதையும் திருக்குர்ஆன் இறை வேதமே
என்பதையும் உறுதியாக ஏற்றுக் கொள்வார்.
EGATHUVAM DEC 2015