Feb 27, 2017

தூதரின் பக்கம் திரும்புவோம்


தூதரின் பக்கம் திரும்புவோம்
- எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்
எந்தவொரு செய்தியாக இருந்தாலும் எல்லோரும் அதை ஒரே விதமாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சிலர் விளங்கிக் கொள்வதில் கூடுதல் குறைவு இருக்கும். சிலர் சரியாகப் புரிந்து கொள்வார்கள்; சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். இதனால்தான், சில விஷயங்களில் மக்களிடையே பல்வேறு விதமான கருத்துகள் வருகின்றன. இதுவே யதார்த்தம்.
எனவே இதை மனதில் நிறுத்திக் கொண்டு எந்தச் செய்தியையும் சரியான முறையில் அணுக வேண்டும். அது உலகம் தொடர்பாக இருந்தாலும் சரி; மார்க்க தொடர்பாக இருந்தாலும் சரி!
நமக்கு மத்தியில் மார்க்க ரீதியான முடிவுகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில், எவ்வாறு மார்க்கச் செய்தியை அணுக வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மார்க்கத்தில் வழிமுறை சொல்லப்பட்டு உள்ளது.
எந்த விவகாரமாக இருந்தாலும், இறைத்தூதரின் வழிகாட்டுதல்படி முடிவெடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே அந்த வழிமுறையின் சுருக்கம். இது தொடர்பாக சில முக்கியச் செய்திகளை இப்போது காண்போம்.
இறைத்தூதருக்குக் கட்டுப்படுங்கள்
முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக அனுப்பி, அல்லாஹ் நமக்கு அருள் புரிந்து இருக்கிறான். வாழ்க்கை எனும் கலையை நபிகளார் நமக்கு முழுமையாகக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
வழிகேடு எனும் இருளில் இருந்து தப்பித்து நேர்வழி எனும் ஒளிமிக்க பாதையில் பயணிக்கும் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அனைவருக்கும் அனைத்து விஷயத்திலும் அண்ணலாரிடமே அழகிய முன்மாதிரி இருக்கிறது.
ஆகவே, மார்க்க வழிகாட்டி எனும் தூதருக்குரிய இடத்தை வேறு யாருக்கும் கடுகளவும் கொடுத்துவிடக் கூடாது. அவரின் சொல், செயல், அங்கீகாரத்தின் அடிப்படையில்தான் மார்க்கத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
திருக்குர்ஆன் 59:7
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 24:51
தூதரைப் புறக்கணிப்பது வழிகேடு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆணைக்கு அடிபணிந்து வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அவர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்வது அவசியம் என்று மட்டுமல்ல, அதற்கு மாறு செய்வது மிகப் பெரும் குற்றம் என்றும் எச்சரிக்கிறது.
இதற்குப் புறம்பாக, தூதருடைய தீர்ப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு மற்ற மனிதர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அப்பட்டமான வழிகேடு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற பண்பு ஒருபோதும் முஃமின்களிடம் இருக்கவே கூடாது.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.
திருக்குர்ஆன் 33:36
(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 4:65
மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர்பாய்ச்சி வந்த "ஹர்ரா' (என்னும் இடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், "தண்ணீரைத் திறந்து ஓட விடு'' என்று கூறினார். ஸுபைர் (ரலி) அவர்கள் (தண்ணீரைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள். (இந்தத் தகராறையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி (ஸல்) அவர்கள், "ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்'' என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, "உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?'' என்று கேட்டார்.  இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து) விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, "உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். (என்னிடம்) இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர் (ரலி) அவர்கள், "இறைவன் மீதாணையாக! "(முஹம்மதே!) உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு, பின்னர், நீங்கள் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்' என்னும் (4:65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: புஹாரி 2359, 2360
தூதரின் தீர்ப்பே தீர்வு தரும்
இறைத் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை மேற்கண்ட செய்திகள் மூலம் விளங்க முடிகிறது. அவர்களின் நெறிமுறைக்கு மாற்றமாகச் செயல்படுவதன் விபரீதத்தைப் புரிந்து கொள்ள இயலுகிறது.
ஆதலால்தான், அன்றைய கால மக்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இருக்கும் கண்ணியத்தை நினைவில் கொண்டு செயல்பட்டார்கள். தங்களுக்கு மத்தியில் ஏதேனும் மார்க்க ரீதியாகப் பிணக்குகள் வந்தால் தூதரிடம் கொண்டு சென்றார்கள். அவரின் தீர்ப்புக்கு மதிப்பளித்து வாழ்ந்தார்கள். அவரின் ஆலோசனைகள், அறிவுரைகளை ஏற்றுக் கொண்டார்கள்.
நபியின் தோழமை நமக்கு இருக்கிறது எனும் காரணத்திற்காகத் தங்களுக்குள் சுயமாக முடிவெடுத்து கொண்டு மனம்போன போக்கில் நடக்கவில்லை. அல்லாஹ்வின் தூதரிடமே அழகிய முன்மாதிரி இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அவர்களின் வாழ்க்கை இருந்தது. இதற்குரிய சான்றாக சில சம்பவங்களை மட்டும் காண்போம்.
இறைவேதம் தொடர்பான பிரச்சனை
திருக்குர்ஆனை ஓதுவது, அதை அணுகுவது, அதன் வசனங்களைப் பயன்படுத்துவது, அதற்கு கண்ணியம் கொடுப்பது போன்ற பல்வேறு விசயங்களில் பல வகையில் கருத்துகள் இருப்பதை மறுக்க இயலாது. இது மாதிரியான நேரங்களில், நபித்தோழர்கள் தங்கள் பிரச்சனையை நபிகளாரிடமே எடுத்துச் சென்றார்கள். அவர்களிடமே அதற்குரிய தீர்ப்பை எதிர்பார்த்தார்கள். அதன் மூலம் எளிதாகத் தெரிந்து கொண்டார்கள்.
அன்சாரிகளில் (குல்ஸும் பின் ஹித்ம் எனும்) ஒருவர் குபா பள்ளிவாசலில் மக்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிப்பவராக (இமாமாக) இருந்தார். (அல்ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பின்) ஓதப்படும் அத்தியாயத்தை ஓதி மக்களுக்கு அவர் தொழுவிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு முன் "குல் ஹுவல்லாஹு அஹத்' (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தை ஓதியே ஆரம்பிப்பார்; (அதாவது "குல்ஹுவல்லாஹு அஹத்' அத்தியாயத்தை ஓதிய) பிறகுதான் மற்ற அத்தியாயத்தை ஓதுவார். ஒவ்வொரு ரக்அத்திலும் அவர் இவ்வாறு செய்வது வழக்கம். இது குறித்து அவரிடம் மக்கள், "நீங்கள் இந்த (குல் ஹுவல்லாஹு அஹத்) அத்தியாயத்தை ஓத ஆரம்பிக்கின்றீர்கள். பிறகு அது போதாதென்று மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுகிறீர்களே! ஒன்று இந்த அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள்! அல்லது இதை விட்டுவிட்டு மற்றோர் அத்தியா யத்தை மட்டும் ஓதுங்கள் (இரண்டையும் ஓதாதீர்கள்)'' என்று கூறினார்கள். அதற்கு அவர், "நான் இ(ந்த அத்தியாயத்)தை ஓதுவதைக் கைவிடமாட்டேன். நீங்கள் விரும்பினால் இவ்வாறு (ஓதி தலைமை தாங்கித் தொழுவிக்கும் பணியைச்) செய்கிறேன். (இதை) நீங்கள் வெறுத்தால் நான் உங்களை  விட்டுவிடுவேன் (உங்களுக்குத் தொழுவிக்க மாட்டேன்)'' என்றார். அம்மக்கள் அவரைத் தங்களில் சிறந்தவராகத் கருதிக் கொண்டிருந்தனர். அவரல்லாத மற்றொருவர் தங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் வந்த நேரத்தில் இந்தச் செய்தியை அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), "இன்னாரே! உங்கள் தோழர்கள் உங்களைப் பணிப்பது போன்று நீங்கள் ஏன் செய்யக்கூடாது? என்ன காரணத்தால் ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த அத்தியாயத்தை கட்டாயப்படுத்திக் கொண்டீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நான் இந்த அத்தியாயத்தை நேசிக்கிறேன்'' என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அ(ந்த அத்தியாயத்)தை நீர் நேசிப்பது உம்மைச் சொர்க்கத்தில் சேர்க்கும்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புஹாரி 774
குர்ஆனை உளூ இல்லாமல் ஓதலாமா? நோயுற்றவர்களுக்கு ஓதி காசு வாங்கலாமா? இறந்தவர்களுக்கு குர்ஆனை ஓதி நன்மை சேர்க்க இயலுமா? என்று பல்வேறு கேள்விகள் பலருக்கும் இருக்கும்.
இவற்றில் சரியான கருத்தைத் தெரிந்து கொள்ள முஃமின்கள் குழப்பம் அடைய அவசியமே இல்லை. இவற்றுள் எதற்கெல்லாம் நபிகளாரின் வழிகாட்டுதல் இருக்கிறது? எப்படி இருக்கிறது? என்று கவனித்துப் பாருங்கள். திருக்குர்ஆன் தொடர்பாக சமூகத்தில் இருக்கும் சடங்குகள் பெரும்பாலும் ஆதாரமற்றவை என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை
பொருளாதாரம் சம்பந்தமாக எப்போதும் ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. அனுமதி இருக்கும் வியாபாரம், தடையாக இருக்கும் வியாபாரம், லாபத்தை பெற்றுக் கொள்வது, செலவழிக்கும் வகை, தொழில் நடத்தும் விதம் என்று செல்வம் ரீதியாக எண்ணற்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.
இம்மாதிரியான வினாக்களுக்கும் விடையை நபிகளாரிடம் தேடிச் செல்ல வேண்டும். இதை முஸ்லிம் சமுதாயத்தின் முதல் தலைமுறையினர் நன்கு விளங்கி வைத்து இருந்தார்கள். நபிகளார் கொடுத்த பதிலை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.
நானும் என் தந்தையும் என் பாட்டனாரும் நபி (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்தும் வைத்தார்கள். அவர்களிடம் நான் ஒரு தடவை ஒரு பிரச்சினையைக் கொண்டு சென்றேன்.  அதாவது, என் தந்தை யஸீத் தர்மம் செய்வதற்காக சில தீனார்களை எடுத்துக் கொண்டு சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த ஒருவருக்கு அருகில் வைத்துவிட்டார். நான் சென்று அதை எடுத்து வந்துவிட்டேன். உடனே என்  தந்தை, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த தர்மம் உனக்கல்லவே'' என்றார்கள். உடனே நான் அவரை அழைத்துக்கொண்டு  நபி (ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்டேன். அதற்கவர்கள் " யஸீதே! உமது (தர்ம) எண்ணத்திற்கான நற்பலன் உனக்கு உண்டு; மஅனே! நீர் எடுத்த (பொருளான)து உமக்கே!'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஅன் பின் யஸீத் (ரலி),
நூல்: புஹாரி 1422
எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த கடன் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்து திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு)  எங்கள்  இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். (இதற்காக)  தமது அறையின் திரையை விலக்கி, "கஅப் பின் மாலிக்! கஅப்!''  என்று அழைத்தார்கள். உடனே நான், "இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். அப்போது அவர்கள் "உன் கடனிலிருந்து பாதியைத் தள்ளுபடி செய்வீராக' என்று சைகை செய்தார்கள். "அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று நான் கூறினேன். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத்தை நோக்கி), "எழுந்து சென்று கடனைச் செலுத்துங்கள்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)
நூல்: புஹாரி 471
வட்டி, வரதட்சனையை வாங்கலாமா? அதை ஆதரித்து துணை போகலாமா? குத்தகை, அடமானம் ஆகியவற்றை எப்படிக் கையாள்வது? என்றெல்லாம் பொருளாதாரம் பற்றிய சிக்கல்களை தீர்ப்பதற்குரிய போதனைகள் திருத்தூதரின் வாழ்விலே இருக்கின்றன.
முஸ்லிம் சமுதாயத்தில் எத்தனை பேர் இதை நினைவில் வைத்து செயல்படுகிறார்கள்? மனோ இச்சைக்கு இசைவாக நடந்து கொள்வதைக் கைவிட்டு அனைவரும் மாமனிதர் பாதையில் பயணம் செய்ய முன்வர வேண்டும்.

EGATHUVAM DEC 2015