Feb 13, 2017

அஸ்மா பின்த் அபூபக்ர்

அஸ்மா பின்த் அபூபக்ர்

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர் ஆன் 9:100
மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் ஸஹாபாக்களைப் பற்றி சிறப்பித்துக் கூறுகின்றான்.அப்படி சிறப்பித்துக் கூறும் வகையில் தியாக வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
அவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்களில் ஒருவர் தான் அஸ்மா பின்த் அபூபக்ர்.
அபூபக்ர் (ரலி)யின் மூத்த மகளும், சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட சுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி)யின் மனைவியும், பிரபலமான நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு சுபைரின் தாய் தான் அஸ்மா (ரலி).
ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற அஸ்மா (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் வெற்றிக்காக அரும்பாடுபட்டார்கள். மக்காவில் இஸ்லாத்தின் அழைப்புப் பணி பகிரங்கமாக மேற்கொள்ளப்படத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இணைவைப்பாளர்களான குறைஷிகளின் உள்ளத்தில் முஸ்லிம்களை முற்றிலுமாகத் துடைத்தெறிய வேண்டும் என்ற வெறி மூண்டது.
இக்கொடுமைகளிலிருந்து அல்லாஹ்வின் தூதர் கூட விடுபடமுடியவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் பொறுமையுடன் எதிர்பார்த்திருந்தார்கள். இறுதியில் மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்வதற்கு இறைவன் தன் தூதருக்கு அனுமதி வழங்கினான்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அப்பயணம் வெற்றி பெற அஸ்மா (ரலி) அவர்களின் பங்களிப்பும் அதில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனா புறப்பட்ட இச்சம்பவம் வெளித்தோற்றத்தில் இரு மனிதர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு புறப்பட்டார்கள் எனும் வகையில் ஒரு சாதாரணமான பயணமாகத் தோன்றலாம். ஆனால் அந்த ஹிஜ்ரத் எனும் பயணம் சாதாரணமான பயணம் அல்ல!
மாறாக, ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமான இந்த ஹிஜ்ரத் அன்று தோல்வி அடைந்திருக்குமாயின் இறைத்தூதரின் உயிரே கேள்விக்குறியாகியிருக்கும்.
அஸ்மா (ரலி) அவர்கள், மற்ற சாதாரண பெண்களைப் போல் இல்லாமல் ஹிஜ்ரத் பற்றிய அனைத்து இரகசியங்களும் தனக்குத் தெரிந்திருந்தும் அதை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. மேலும் அல்லாஹ்வின் தூதரும், தனது தந்தை அபூபக்ர் (ரலி)யும் ஹிஜ்ரத் மேற்கொள்வதினால் தங்களுக்கு ஏற்படப் போகின்ற பின்விளைவுகளை உணர்ந்து அதற்கேற்றாற்போல் பொறுப்புடன் செயல்பட்டார்கள்.
மேலும் இஸ்லாத்தின் கட்டளைகளை ஏற்று நடப்பவர்களாகவும் அஸ்மா இருந்தார்கள். கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் தன்னைப் பெற்றெடுத்த தாயாக இருந்தாலும் அவர்கள் விஷயத்தில் மார்க்கம் என்ன கூறுகின்றதோ  அதன்படியே செயல்படக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள்.  நான் அல்லாஹ்வின் தூதரிடம், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்.  என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?’’ என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்’’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 2620
தனது தாய் ஒரு இணைவைப்பாளர் என்றதும் அவரது உறவைக் கூட தியாகம் செய்யத் தயாராக இருந்தார்கள் அஸ்மா (ரலி) அவர்கள். தாயைப் போல பிள்ளை  என்று கூறுவார்கள். அது போல தாய் எந்த மார்க்கத்தில் இருப்பாளோ அந்த மார்க்கத்தில் தான் குழந்தையும் இருக்கும். இந்த சித்தாந்தத்தை உடைத்தவர்கள் தான் அஸ்மா. 
அஸ்மாவின் தாயார் இணைவைப்பாளர். அஸ்மாவோ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருந்தார்கள். இணை வைப்பாளரான தனது தாயிடம் உறவைப் பேண நபியவர்களை அணுகி அனுமதி கேட்கக் காரணம் அவர்களது தாயாரிடத்தில் இருந்த இணை வைப்பு தான். ஒரு வேளை நபிகளார் கூடாது என்று கூறியிருந்தால் உறவை கூட அல்லாஹ்வின் கட்டளைக்காக முறிக்கத் தயாராக இருந்திருப்பார்கள்.
மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைச் செய்யும் படி வலியுறுத்தும் போது தாய்ப் பாசத்தைக் காரணம் காட்டி மார்க்கத்தில் வளைந்து கொடுக்கும் இன்றைய பெண்கள் அஸ்மா (ரலி) அவர்களின் வரலாறு மூலம் படிப்பினை பெறவேண்டும். இந்த விதத்தில் குர்ஆனின் கட்டளைக்கு ஏற்ப அவர்களது நடைமுறை இருந்துள்ளது.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே!
அல்குர்ஆன்  58:22

EGATHUVAM NOV 2016