மறுமைக்காக வாழ்வோம்
அப்துர்ஹ்மான் - இஸ்லாமியக் கல்லூரி
இறைவன் மனிதர்களுக்கு உபதேசிக்கின்ற அறிவுரைகளில் மிக
முக்கியமான அறிவுரை, மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மறுமையை இலக்காகக் கொண்டு
மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக்
கூடியவர்களாக - விரும்பக்கூடியவர்களாக இருந்தால்
அவர்கள் மறுமைக்காகவே வாழ வேண்டும்.
இறைவன் தன்னுடைய திருமறையில், ஓரிரு
இடங்களில் அல்ல திருமறைக் குர்ஆன் நெடுகிலும் மனிதர்கள் மறுமைக்காக மட்டுமே வாழ
வேண்டும் என்பதை அற்புதமான முறையில் நமக்குப் பாடம் நடத்துகின்றான்.
மனிதர்கள் மறுமைக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதைப் பற்றி
இறைவன் வலியுறுத்துகின்ற இறைவனின் போதனைகள், அறிவுரைகள்
ஏராளமாக இருந்தாலும் ஒரு சில அறிவுரைகள் நம்முடைய உள்ளங்களைத் தட்டி எழுப்புபவையாக
உள்ளன.
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட
தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள்
ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்காப்பாட்டுள்ளது. இவை
இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.
இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு சொல்லட்டுமா? என்று
கேட்பீராக! இறைவனை அஞ்சுவோருக்கு தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன, அவற்றின்
கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான
துணைகளும், அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களை
பார்ப்பவன்.
அல்குர்ஆன் 3:13, 14
இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 3:185
ஏக இறைவனை மறுப்போர் ஊர்கள் தோறும் சொகுசாக திரிவது உம்மை
ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதிகளே பின்னர் அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.
தங்குமிடத்தில் அது கெட்டது.
அல்குர்ஆன் 3:196,197
இவ்வுலகின் வசதி குறைவு தான். இறைவனை அஞ்சுவோருக்கு மறுமையே
சிறந்தது.
அல்குர்ஆன் 4:77
மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு
முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
அல்குர்ஆன் 9:38
மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம்
தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 13:26
இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.
அல்குர்ஆன் 40:39
நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கின்றீர்கள்.
மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும்.
அல்குர்ஆன் 87:16,17
இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.
அல்குர்ஆன் 93:4
இது போன்ற ஏராளமான வசனங்கள் திருமறைக் குர்ஆன் நெடுகிலும்
மனிதர்களுக்குரிய அறிவுரைகளாக இறைவன் கூறுகின்றான். நம்முடைய வாழ்க்கையை மறுமையின்
பக்கம் திருப்புவதற்கு இவையே போதுமான வசனங்கள்.
இது மாத்திரமல்லாமல், மறுமையை
நேசித்த, மறுமைக்காகவே வாழ்ந்த ஏராளமான சஹாபாக்களை வரலாறு நெடுகிலும்
நம்மால் பார்க்க முடிகின்றது. அவற்றில் ஒரு சில சம்பவங்களை நாம் காண்போம்.
மறுமைக்காகவே வாழ்ந்த தோழர்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் பல போர்கள்
நடைபெற்றுள்ளன அவற்றில் மிக வித்தியாசமான ஒரு போர் தான்
முஅத்தா என்ற போர்.
இந்தப் போரில் அல்லாஹ்வின் தூதர் கலந்து (ஸல்) கொள்ளவில்லை.
ஆனால் போரில் மக்களைத் தலைமை ஏற்று அழைத்து செல்லக்கூடிய, படையினுடைய
தலைவர்களை நியமித்துப் போருக்கு அனுப்புகிறார்கள். போர் நடைபெறுவதற்கு ஒரு
நாளுக்கு முன்னதாகவே இந்தப் படைத்தளபதிகளை நியமிக்கின்றார்கள். ஒரு நாளுக்கு
முன்னதாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
சொன்ன வார்த்தை கூடியிருந்த அத்தனை தோழர்களையும் மிகுந்த கவலையிலும், வருத்தத்திலும்
ஆழ்த்தியது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு கவலைப்படக்கூடிய
ஒரு நிகழ்ச்சி அந்த இடத்தில் நடக்கின்றது.
அது என்ன நிகழ்ச்சி என்பதைப் பின்வரும் ஹதீஸ்
வர்ணிக்கின்றது.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூத்தா போரின்போது ஸைத் இப்னு
ஹாரிஸா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நியமித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் ‘ஸைத் கொல்லப்பட்டால் ஜஅஃபர் (தலைமையேற்கட்டும்!) ஜஅஃபர்
கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (தலைமையேற்கட்டும்)” என்று
கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 4261
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்தப் போரிலும் பயன்படுத்தாத ஒரு
வார்த்தையாக, ‘கொல்லப்பட்டுவிட்டால்’ என்ற
வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள். இதன் மூலம் பெயர் சொல்லி அறிவிக்கப்பட்ட
அந்தத் தோழர்கள் போர் முடிந்து திரும்புவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை விளங்க
முடிகின்றது.
ஆனாலும், நான்
மறுமைக்காகவே வாழ்கின்றேன், மறுமையைக் காதலிக்கின்றேன் என்பதை அவர்கள் இந்தப் போரில்
மிகத் தைரியமாக நிருபித்துக் காட்டினார்கள்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்;
(மூத்தா போரின்போது போர்கள் நிகழ்ச்சிகளை மதீனாவில்
இருந்தபடியே நேர்முக வர்ணணையாக விவரித்து) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரை
நிகழ்த்தினார்கள். உரையில் ‘‘இப்போது (இஸ்லாமிய சேனையின்) கொடியை ஸைத் இப்னு
ஹாரிஸா எடுத்தார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அதை ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்
எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அப்துல்லாஹ் இப்னு ரவாஹா
எடுத்தார். இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு காலித் இப்னு வலீத் (நம்முடைய)
உத்தரவு இன்றியே (கொடியை) எடுத்தார். அல்லாஹ் அவருக்கே வெற்றி வாய்ப்பை
அளித்துவிட்டான்” என்று கூறிவிட்டு ‘(இப்போது)
அவர்கள் நம்மிடமிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது” என்றோ’
(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது அவர்களுக்கு
மகிழ்ச்சியளிக்காது” என்றோ சொன்னார்கள். மேலும் இதைச் சொல்லும்போது நபி(ஸல்)
அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்தன.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: 3063
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நியமித்த
மூன்று தோழர்களும் வீறுநடை போட்டுப் போரில் கலந்து கொண்டு, நான்
மறுமைக்காக மட்டும் தான் வாழ்கின்றேன் என்பதைப் பறைசாற்றுகிறார்கள்.
‘நாளை உன்னை எதிரிகள் கொன்றாலும் கொன்று விடுவார்கள்’ என்று
சொன்னால், நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும்? வீட்டை
விட்டு வெளியே வர மாட்டோம். பயந்து நடுங்குவோம்.
பாதுகாப்புக்காகப் பல இடங்களை அணுகுவோம். இது தான் நம்முடைய நிலைமை.
ஆனால், நபித்தோழர்களிடம், ‘நாளை
நீ போருக்குப் போ. உன்னை எதிரிகள் வெட்டி வீழ்த்தக்கூடும்’ என்று
சொன்ன பிறகும் கூட கொஞ்சம் கூடப் பின்வாங்காமல், நான்
மறுமைக்காகவே வாழ்கின்றேன் என்பதை உளப்பூர்வமாக நிரூபித்திருக்கின்றார்கள். எனக்கு
உயிரோ, குடும்பமோ, பொருளாதாரமோ, மனைவியோ, பிள்ளைகளோ, பெற்றோர்களோ
இவர்களையெல்லாம் என்னுடைய மறுமையை விடப் பெரிதாக நான் நேசிக்கவே இல்லை என்று கூறி
தங்களது மறுமைப் பற்றை பறைசாற்றியுள்ளது நம் அனைவருக்கும் சிறந்ததொரு
முன்னுதாரணமாகும்.
ஸஹாபாக்கள் மறுமைக்காகவே வாழ்ந்த மற்றொரு அற்புதமான சம்பவத்தை, நம்முடைய
உள்ளங்களையெல்லாம் உருக வைக்கும் சம்பவத்தை வரலாறுகளில் நம்மால் பார்க்க
முடிகின்றது.
இஸ்லாமிய வரலாறுகளில் நடைபெற்ற போர்க் களங்களில் கண் கலங்க
வைக்கும் வித்தியாசமான ஒரு போர்க்களம் தான் அகழ் போர்.
இதை ஹன்தக் போர் என்றும், அஹ்சாப்
போர் என்றும் சொல்லப்படும்.
இந்தப் போரில் கொள்கைக்காக இஸ்லாமியர்கள் பட்ட துன்பங்களை
வார்த்தைகளாலோ, எழுத்துக்களாலோ வர்ணிக்க முடியாது என்று சொல்கின்ற
அளவுக்குக் கடுமையான சோதனை. இந்தப் போரில் ஈடுபட்ட அனைத்து தியாகங்களுக்கும்
காரணம் மறுமைக்காக வாழ்ந்த ஒரே காரணத்தினால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த அளவிற்குக் கடுமையான தியாகங்கள்.
அனஸ் (ரலி) கூறினார்கள்: (அகழ் தோண்டிக் கொண்டிருக்கும்)
அவர்களுக்கு என்னுடைய ஒரு கையளவு வாற்கோதுமை கொண்டு வரப்பட்டு கெட்டுப் போன
கொழுப்புடன் சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும். அப்போது
அவர்கள் எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு
நாற்றமடித்தபடி தொண்டையிலேயே சிக்கிக் கொள்ளும்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 4100
மறுமைக்காகவே வாழ்ந்த காரணத்தினால், சமைக்கப்படாத, கெட்டுப்
போன கடுமையாக நாற்றமடிக்கக் கூடிய கொழுப்பை, தொண்டையிலேயே
சிக்கிக்கொண்ட ஒரு உணவை உண்டிருக்கின்றார்கள்.
கெட்டுப் போன உணவு நம் வீட்டிலே இருந்தால் கூட நம்மால்
அதனுடைய துர்நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் அதை உடனே அப்புறப்படுத்தி விடுவோம்.
ஆனால் கடுமையான பசியின் காரணத்தினால், மறுமைக்காக
வாழும் பொழுது இதுவெல்லாம் பெரிது கிடையாது என்பதை இந்தச் சம்பவம் நமக்குத்
தெளிவாக உணர்த்துகிறது. அதையும் உண்டு விட்டுப் போரில் கலந்து
கொண்டிருக்கின்றார்கள் என்றால் மறுமைக்காக மட்டுமே நபித்தோழர்கள் வாழ்ந்து
மரணித்தார்கள் என்பதற்கு இதை விடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.
இந்த
உலகத்திற்காக வாழாமல் மறுமைக்காகவே வாழ்ந்து மரணிப்பதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக!
EGATHUVAM NOV 2016