ஜாக்
கூறும் நொண்டிச்சாக்கு
எம்.எஸ். சுலைமான்
கடந்த செப்டம்பர் 2015 அல்ஜன்னத் இதழில் "சரியான அரபாவும் பெருநாளும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதில் உள்ள
அபத்தங்களைத் தோலுரித்துக் காட்டி அக்டோபர் 2015 ஏகத்துவம் இதழில் "பெரும்பான்மையைப் பின்பற்றும் ஜாக்' என்ற மறுப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.
இதைப் பார்த்த மாத்திரத்தில் ஜாக்கினர்
கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். அதனால் தான் "தொண்டியானியின் பிறை
பித்னா' என்று தரம் கெட்ட வார்த்தைகளில் தடுமாற
ஆரம்பித்து விட்டார்கள்.
பொதுவாக, கேட்கப்படும் கேள்விகளுக்கும், வைக்கப்படும் வாதங்களுக்கும் யாரிடம் பதில் இல்லையோ அவர்கள் கோபப்படுவது
இயல்பு தான். இதை நபிமார்களின் வரலாறு தொட்டு இன்று வரை நாம் பார்த்து வருகிறோம்.
போலி சுன்னத் வல்ஜமாஅத் தினரிடம், "மத்ஹபு கூடும் என்று கூறுகிறீர்களே, அதற்குக் குர்ஆன், சுன்னாவிலிருந்து ஒரு ஆதாரத்தை யேனும் காட்டுங்கள்' என்று நாம் கேட்டால் அந்த ஆலிம்களுக்குக் கோபம் பொத்துக்
கொண்டு வருகின்றது. அதேபோல் தான் குர்ஆன், ஹதீஸை விட்டு விலகி, வெகுதூரம் போய் விட்ட ஜாக்கினரிடம், பிறை விஷயத்தில் முரண்பட்டுப் பேசுகிறீர்களே என்று கேட்கும்
போது போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரை விட அதிகமான கோபம் இவர்களுக்கு வருகின்றது.
பதில் இல்லையெனில் கோபம் வரத்தானே செய்யும்?
சரி! இவர்களை இந்தளவிற்கு ஆத்திரமடையச் செய்த
அந்தக் கேள்வி தான் என்ன?
"உலகில் எங்கிருந்து பிறை
பார்க்கப்பட்ட தகவல் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறும் நீங்கள், "ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடும் நாளில் தான் அரபா நோன்பு
நோற்க வேண்டும் என்று சொல்கிறீர்களே! இது முரண்பாடாகத் தெரிய வில்லையா?''
இந்தக் கேள்விக்கு அவர்கள் முறையான பதிலை
அளித்திருக்க வேண்டும். ஆனால் இவர்களது நிலைப்பாட்டைத் தவிடுபொடியாக்கும் இந்தக்
கேள்விக்கு இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. கியாமத் நாள் வரையிலும்
இக்கேள்விக்குப் பதில் அளிக்க இயலாது.
அதனால் தான் ஆத்திரம் தலைக்கேறி கோபத்தில்
வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள்.
இவர்கள் திட்டித் தீர்ப்பதால் தஃவா களத்தில்
இருக்கும் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
மாறாக ஏகத்துவக் கொள்கையில், குர்ஆன் ஹதீஸை உள்ளபடியே சொல்வதில் இன்னும் உறுதியாகத் தான்
இருப்போம் இன்ஷா அல்லாஹ்.
ஜாக்கினர் தங்கள் பத்திரிகையில் "பிறை
பார்த்த தகவல் கிடைத்தால் உடனே தெரியப்படுத்துங்கள்' என்று அகில உலகத்திற்கும் ஒரு அறிவிப்பு செய்வார்கள்.
ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில் தான் அரஃபா
நோன்பு, சவூதி பிறை அறிவிக்கும் நாளில் தான் ஹஜ்
பெருநாள் என்றால் எதற்காக இந்த அறிவிப்பு? யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பை வெளியிடுகிறீர்கள்?
அடுத்து அவர்கள் கோபத்தில் கொட்டிய சில
உளறல்களைப் பார்ப்போம்.
"சென்னையில் பிறை பார்த்த
தகவலை தாம்பரத்தில் ஏற்கக் கூடாது என்றார்கள். பிறகு ஏற்கலாம் என்றார்கள்.
ஊட்டியில் பார்க்கப்பட்ட பிறைச் செய்தியை சென்னையில் ஏற்றுச் செயல்படக் கூடாது
என்று மிகுந்த கொள்கை உறுதியோடு முழங்கினார்கள். பிறகு அந்தர்பல்டி அடித்து
ஏற்றுக் கொள்ளலாம் என்றார்கள்''
இவர்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? ஒரு கருத்தைச் சொன்னால் அது தவறாக இருந்தாலும் அந்தக்
கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும். அதை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது
என்கிறார்கள். என்ன ஒரு அற்புதமான வாதம்? இவர்கள் தான் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றக்கூடியவர்களாம்.
தவறான கருத்தைத் திருத்திக் கொள்ள வேண்டும்
என்று இஸ்லாம் கூறியிருக்க, இவர்களோ தவறான கருத்தைச் சொல்லி விட்டால்
அதிலேயே பிடிவாதமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரின் பாதையை
அப்படியே பின்பற்றி, அவர்களின் வாதத்தையே முன்வைக்கிறார்கள்.
மேலும் இக்கருத்தைச் சொல்வதற்கு இவர்களுக்குக்
கொஞ்சமாவது அருகதை உண்டா?
ஆரம்பத்திலிருந்து ஜாக்கில் இருப்பவர்களும், புதிதாக ஜாக்கில் ஒட்டிக் கொண்டுள்ள அப்துர்ரஹ்மான் என்ற
தொண்டியானியும் பிறந்தது முதல் இன்று வரை பிறை விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான்
இருக்கிறார்களா? இப்போது இருக்கின்ற இதே நிலைபாட்டில் தான்
முப்பது வருடங்களாக இருக்கிறார்களா?
பிறை விஷயத்தில் ஜாக் எத்தனை முறை அந்தர்பல்டி
அடித்துள்ளது என்று இந்தத் தொண்டியானி, தனது அகில உலக அமீரிடம் கேட்டு விட்டு இதை எழுதியிருக்க வேண்டும்.
ஜாக்கின் ஆரம்ப காலத்தில் பிறை விஷயத்தில்
இன்றைக்கு இருக்கின்ற இதே நிலைபாட்டில் தான் இருந்தார்களா?
பிறையைப் பார்க்காமலேயே, கணித்து இந்தத் தேதியில் பெருநாள், இந்தத் தேதியில் நோன்பு என்று முன்கூட்டியே ஒவ்வொரு
கிளைக்கும் கடிதம் அனுப்பவில்லையா?
பெருநாள் தினம் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு
முன்பே, பிறை பார்க்கப்படுவதற்கு முன்பே, இந்த நாளில் தான் பெருநாள் என்று தினமணி போன்ற நாளிதழில்
அறிக்கை கொடுக்கவில்லையா?
அறிக்கை கொடுத்து ஓரிரு நாட்களில் அதை மாற்றிக்
கொள்ளவில்லையா?
இன்றைக்கும் ஜாக்கில் பிறை விஷயத்தில் இரண்டு
பிரிவினர் இருக்கிறார்களே! ஒரு கூட்டத்திற்கு ஒருநாளும், மற்றொரு கூட்டத்திற்கு அடுத்த நாளும் பெருநாள் என்று இரு
பிரிவாக ஜாக் செயல்படுகிறதே!
ஆரம்பித்திலிருந்தே பிறை விஷயத்தில்
சமுதாயத்தைக் கூறு போட்டுப் பிரித்தவர்கள் இந்த ஜாக்கினர் தான் என்பது தொண்டியானி
அப்துர்ரஹ்மான் போன்றோருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அகில உலக
அமீர் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
இந்த லட்சணத்தில், "தொண்டி யானியின் பிறை பித்னா' என்று நம்மைப் பார்த்து எழுதுகிறார்கள் என்றால் இவர்களது பாஷையில்
தண்ணியடித்தவர்களால் தான் இது போன்று எழுத முடியும்.
இன்னொரு அற்புதமான (?) கேள்வியையும் கேட்டிருக்கிறார்கள்.
"துபாயிலும், சவூதி அரேபியாவின் பிறைத் தகவலை ஏற்று அறிவிப்புச் செய்கிறார்கள்.
இவ்வாறு அறிவிப்புச் செய்பவர்களை உங்களால் தடுக்க இயலாவிட்டாலும் அங்கிருக்கும்
உங்கள் ஜமாஅத்தினர் இத்தகைய பிறை அறிவிப்பை ஏற்றுச் செயல்படக் கூடாது என்று
நீங்கள் அறிவித்து இருக்க வேண்டும்.''
முதலில் சவூதியும், துபாயும் இவர்கள் கூறும் பிறைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை.
உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல் வந்தாலும் அதை ஏற்க மாட்டார்கள். சவூதியில்
பார்க்கப்பட்ட பிறை சவூதிக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்கள் இதைப் பின்பற்றி
பெருநாள், நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டாம் என ஃபத்வாவே
கொடுத்துள்ளார்கள்.
உங்கள் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக இருக்கும்
சவூதியை என்றைக்காவது நீங்கள் கண்டித்ததுண்டா?
பல ஆண்டுகள் சவூதியில் இருந்த இந்தத்
தொண்டியானி அப்துர் ரஹ்மானும் சவூதியுடன் அதிகம் தொடர்பு வைத்துள்ள மற்றவர்களும், சவூதி ஜாலியாத்தில் பல வருடங்களாக காசுக்காகப்
பணியாற்றுபவர்களும் பிறை விஷயத்தில் வாயே திறக்கவில்லையே! அந்த மர்மம் தான் என்ன?
சரி! அரசாங்கத்தை உங்களால் கட்டுப்படுத்த
முடியாது என வைத்துக் கொண்டாலும் அந்தக் கருத்து தவறு என்றாவது பிரச்சாரம்
செய்யலாமே! உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்ட பலர் அங்கு இருக்கிறார்களே!
அவர்களுக்காவது பிறை விஷயத்தில் சவூதியின் நிலைப்பாடு தவறு என்று உணர்த்தினீர்களா?
நாங்கள் சவூதியில் பார்க்கப்பட்ட பிறையை
மட்டும் ஏற்கவில்லை. மற்ற நாடுகளில் பார்க்கப்பட்ட பிறைத் தகவலையும் ஏற்றுக்
கொண்டோம் என்றெல்லாம் கூறும் நீங்கள் சவூதியில் வாழும் ஜாக்கினரை லிபியா பிறையை ஏற்று
ஒருநாள் முன்பாகவே பெருநாள் கொண்டாடுமாறு என்றைக்காவது சொல்லியிருக்கிறீர்களா?
உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல்
வந்தாலும் ஏற்று அதைச் செயல்படுத்துவோம் என்று சொல்லி, அதற்காக அறிவிப்பும் செய்யும் நீங்கள், பிறை பார்த்த தகவல் இந்த நாட்டிலிருந்து வந்துள்ளது; அதைப் பின்பற்றி இன்று பெருநாள் என்று என்றைக்காவது மறு
அறிவிப்பு செய்துள்ளீர்களா?
"உலகில் இந்தப் பகுதியில்
பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் இன்று பிறை ஒன்று' என ஒவ்வொரு மாதமும் உங்கள் பத்திரிகையில் அறிக்கை
வெளியிடுகிறீர்களா? அவ்வாறு வெளியிடாவிட்டாலும் அந்தத் தகவலையாவது
சேமித்து வைத்திருக்கிறீர்களா? அப்படியானால்
கடந்த ஐந்து ஆண்டுகளில் 60 மாதங்களுக்கான பிறை பார்த்த பட்டியலை
வெளியிடுங்கள் பார்க்கலாம்.
இதையெல்லாம் நீங்கள் செய்து விட்டு எங்களிடம்
கேள்வி கேளுங்கள்.
"இந்த வருடம் முஹர்ரம் மாத
அறிவிப்பு சவூதி தகவல் படி அறிவிக்கப்படவில்லை. எகிப்தில் அறிவிக்கப்பட்டதையே
எடுத்தோம்'' என்று எழுதியுள்ளீர்களே! இதன்படி சவூதிவாழ்
மக்களுக்கு நீங்கள் கொடுத்த அறிவிப்பு என்ன? அதை எப்போது கொடுத்தீர்கள்? உங்கள்
அறிவிப்பைக் கேட்டு உங்கள் ஜமாஅத்தினர் முஹர்ரம் மாத நோன்பை என்றைக்கு வைத்தார்கள்? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களால் ஒருபோதும்
பதில் சொல்ல முடியாது. இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம்.
"சென்னையில் பிறை பார்த்த
தகவலை தாம்பரத்தில் ஏற்கக் கூடாது என்றார்கள். பிறகு ஏற்கலாம் என்றார்கள்'' இது தான் தொண்டியானி அப்துர்ரஹ்மான் நம்மை நோக்கி
எழுப்பியுள்ள குற்றச்சாட்டாகும்.
இந்தக் கேள்விக்கு 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அல்முபீன் பிறை ஓர் ஆய்வு
சிறப்பிதழிலும், அதன் பின்னர் வெளியிடப்பட்ட "பிறை ஒரு
விளக்கம்' நூலிலும் அப்போதே பதில் கூறியுள்ளோம். அந்தப்
பதிலை இங்கே பதிகிறோம்.
"நீங்கள் நோன்பு என முடிவு
செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும்
நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும்
நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ
நாமே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று இந்த
ஹதீஸ் கூறுகிறது. தீர்மானிக்கும் பொறுப்பை நம்மிடமே ஒப்படைத்துள்ளதால் நமது
விருப்பம் போல் தீர்மானிக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் எவற்றையெல்லாம்
தீர்மானித்து விட்டார்களோ அந்த விஷயத்தில் நாம் தீர்மானிக்க ஒன்றுமே இல்லை.
அவர்களின் தீர்மானத்திற்கு மாற்றமாக நாம் எதையும் தீர்மானிக்க முடியாது.
அல்லாஹ்வும் அவனது தூதரும் தீர்மானிக்காமல்
நம்மிடம் அப் பொறுப்பை விட்டுள்ள விஷயத்தை மட்டுமே நாம் தீர்மானிக்க வேண்டும்.
சவூதியில் காணப்படும் பிறை முழு உலகையும்
கட்டுப்படுத்தும் என்று நாம் தீர்மானித்தால் அந்தத் தீர்மானம் குப்பைக் கூடைக்குத்
தான் போக வேண்டும். ஏனெனில் ஒரே நாளில் அனைவருக்கும் தலைப்பிறை ஏற்படாது என்பது
நிரூபிக்கப்பட்டு விட்டது.
28 நோன்பு முடிந்தவுடன் தலைப்பிறை என்று
தீர்மானிக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது. அது போல் முப்பது முடிந்த பிறகும் அந்த
மாதம் நீடிக்கிறது என்று தீர்மானிக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. ஏனெனில்
மாதம் 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்பது தெளிவான ஹதீஸ் மூலம் முடிவு செய்யப்பட்டு விட்டது.
கண்ணால் பிறையைக் கண்ட பிறகு அல்லது காண்பதற்கு
ஏற்ற நாளில் கண்டவர் சாட்சி கூறிய பிறகு அதை நம் வசதிப்படி மறுக்க முடியாது. தக்க
சாட்சிகள் கூறும் போதும் நாமே கண்ணால் காணும் போதும் ஏற்க வேண்டும் என்று
மார்க்கத்தில் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதை மீறி நாம் தீர்மானிக்க முடியாது.
இது போல் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் அடிப்படையில்
தீர்மானிக்கப்பட்டவை தவிர நாம் தீர்மானிக்க அனுமதிக்கப்பட்ட அம்சமும் இருக்கிறது.
இதை நாமே ஏற்றுக் கொண்டிருக்கிற மற்றொரு
சட்டத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு கிலோ மீட்டர் பயணம் செய்தால் நான்கு
ரக்அத்களை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழலாம் என்று மார்க்கம் அனுமதித்துள்ளது.
காயல்பட்டிணத்திலிருந்து புறப்பட்டு ஒருவர்
தூத்துக்குடி வருகிறார். இவர் கஸ்ர் தொழலாம். ஆனால் இதே அளவு தூரம் ஒருவர்
சென்னையில் பயணம் செய்கிறார். இவர் கஸ்ர் தொழ மாட்டார். ஏனெனில் ஊருக்குள் தான்
இவர் சுற்றுகிறார். பயணம் என்றால் ஊரை விட்டுத் தாண்ட வேண்டும் என்று கூறுவோம்.
ஊர் என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு? என்றெல்லாம் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அதை நாம் தான்
தீர்மானம் செய்கிறோம்.
இது போன்ற தீர்மானம் செய்வது மட்டுமே நம்மிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எந்தக் கிராமத்தில் தெரியும் பிறை நமது
ஊருக்குத் தெரிய வாய்ப்புள்ளது? எந்தக்
கிராமங்களில் காணப்பட்டால் அது நம்மைக் கட்டுப்படுத்தும்? எவ்வளவு தூரத்தை நாம் பொருட்படுத்தாமல் விட்டு விடலாம்? என்பன போன்ற விபரங்களை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
அந்த ஊரில் பார்த்ததாகக் கூறுகிறார்கள். இதை
ஏற்கலாம். இந்த ஊரில் பார்த்ததாகக் கூறுகிறார்கள். இதை ஏற்கக் கூடாது என்று
தீர்மானிக்கும் உரிமை மட்டும் தான் மிச்சமாக உள்ளது.
இதுதான் பிறை ஒரு விளக்கம் நூலில் நாம் எழுதிய
கருத்தாகும்.
இந்த மார்க்க விளக்கத்தின்படி, சென்னையிலோ அல்லது ஊட்டியிலோ பார்க்கும் பிறையை தமிழகம்
முழுவதும் ஏற்று செயல்படுத்துகிறோம்.
துபை மற்றும் வளைகுடா மக்கள் தத்தமது பகுதி
என்று சவூதி வரையிலும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதே நேரத்தில் உங்கள் பிறைக்
கொள்கையை சவூதியோ மற்ற வளைகுடா நாடுகளோ ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மீண்டும்
நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
புகாரி 1909 ஹதீஸில், "மேக மூட்டமாக இருந்தால்
ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்' என்ற பிற்பகுதி ஜாக்குக்கு எதிராக இருப்பதால் அதை மட்டும்
மறைத்து விட்டு ஜாக் வெளியிட்டிருந்தது. இதை நாம் நமது கட்டுரையில்
குறிப்பிட்டிருந்தோம்.
இதைப் பற்றி தொண்டியானி அப்துர்ரஹ்மான் எழுதும்
போது, ஹதீஸின் பிற்பகுதி ஜாக்குக்கு எதிரானது என்றால்
தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எதிரானது தான். ஏனென்றால் திருச்சியில் மேக மூட்டமாக
இருந்தால் சென்னைத் தகவலை எதிர்பார்க்கக் கூடாது என்று எழுதியுள்ளார்.
இதற்கும் மேலே நாம் சொன்ன பதில் தான்.
திருச்சியில் பார்த்ததை தமிழகம் முழுமைக்கும் ஒரே பகுதியாகத் தீர்மானிக்க மேற்கண்ட
ஹதீஸில் அனுமதி உள்ளது.
ஆனால் அதே சமயம் ஜாக் தீர்மானிப்பது போல் உலகம்
முழுவதும் ஒரே நாளாகத் தீர்மானிக்க அனுமதியில்லை என்பதை பிறை ஒரு விளக்கம் நூலில்
திருக்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விரிவாக விளக்கியுள்ளோம்.
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மார்க்கரீதியாக
எங்களிடம் பதில் உள்ளது. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மார்க்கம் சார்ந்த பதில்
உங்களிடம் இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு தனிமனிதன் மீது கொண்ட வெறுப்பும் பொறாமையும்
உங்களை மார்க்க விஷயத்தை விட்டும் திசை திருப்பி விடவேண்டாம் என்று
எச்சரிக்கிறோம்.
இன்றைக்கு பி.ஜே. இருப்பார்; நாளை இறந்து போவார். ஆனால் திருக்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான
ஹதீஸ்களும் கியாமத் நாள் வரைக்கும் இருக்கும்.
பி.ஜே. பிறை விஷயத்தில் இந்தக் கருத்தில்
இருக்கிறார் என்பதற்காக அவரை தரக்குறைவான வார்த்தை களால் விமர்சனம் செய்கிறீர்களே!
இதே கருத்தைக் கொண்ட சவூதி அறிஞர்களை இந்த அளவிற்கு அல்ல... ஒரு சிறு
விமர்சனத்தையாவது நீங்கள் செய்ததுண்டா?
அடுத்து, கட்டுரைக்குச் சம்பந்தமில்லாத சில குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளார்கள்.
ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபா (ரலி)
வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக்
கொண்டிருப்பது அபூ ஹுதைபாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது....
பி.ஜே. தர்ஜுமா, பதிப்பு: 7, பக்கம்: 1309, குறிப்பு: 357
அபூஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியால்
வளர்க்கப்பட்ட ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபாவின் வீட்டுக்குள் வந்து போய்க்
கொண்டிருப்பது அபூஹுதைபா வுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.
பி.ஜே. தர்ஜுமா பதிப்பு: 8, பக்கம்: 1446
இது பி.ஜே. அவர்கள் தனது தர்ஜுமாவின்
குறிப்பில் எழுதிய கருத்துக்களாகும்.
இதில் குற்றம் கண்டுபிடிக்க வந்த தொண்டியானி
அப்துர்ரஹ்மான், "பெரியவர் பால் குடித்தல்
தொடர்பான ஹதீஸை தொண்டியானி நிராகரிக்கிறார். அந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை
நிராகரிப்பதற்காக ஹதீஸிலே எப்படி பித்தலாட்டம் செய்கிறார் என்று பாருங்கள்'' என்றெல்லாம் மேற்கண்ட அல்ஜன்னத் கட்டுரையில் எழுதி தனது
காழ்ப்புணர்வைப் பட்டவர்த்தனமாகக் கொட்டியிருக்கின்றார்.
அதாவது முந்தைய பதிப்பில், வளர்ப்பு மகன் என்பதை விட்டு விட்டாராம். அடுத்த பதிப்பில்
வளர்ப்பு மகன் என்பதைச் சேர்த்துக் கொண்டாராம். இதனால் ஹதீஸில் பி.ஜே. பித்தலாட்டம்
செய்து விட்டாராம். இவர் எடுத்துக்காட்டியுள்ள இரண்டு குறிப்புகளிலும் ஹதீஸ்
தொடர்பான ஒரு கருத்து சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதை எடுத்துப்போட்டு
ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுப்பதாகக் கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்று
பாருங்கள்.
முதல் பதிப்பில், "வளர்ப்பு மகன்' என்று போடாமல் விட்டு விட்டாராம். அடுத்த பதிப்பில் வளர்ப்பு மகன் என்பதைச்
சேர்த்துக் கொண்டாராம். இதனால் ஹதீஸில் பிஜே பித்தலாட்டம் செய்து விட்டார் என்று
தொண்டியானி அப்துர்ரஹ்மான் கூறுகின்றார்.
ஸாலிமுடைய செய்தியில் உள்ள பிரச்சனை என்ன? பருவமடைந்த ஓர் அன்னிய ஆண், ஒரு அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருக்கலாம்; அவளிடத்தில் பால் குடித்து விட்டால் அவ்விருவருக்கும் தாய், மகன் உறவு ஏற்பட்டு விடும் என்பது தான் அந்தச் செய்தியில்
கூறப்படுகின்றது. இது திருக்குர்ஆன் கூறும் சட்டத்திற்கு எதிராக உள்ளது என்று
தவ்ஹீத் ஜமாஅத் கூறுகின்றது.
திருக்குர்ஆனுக்கும், ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணாக இந்த ஹதீஸின்
கருத்து அமைந்துள்ளது என்பதால் இதை நிராகரிக்கிறோம். (இது தொடர்பாக பல முறை
விரிவாக ஏகத்துவம் இதழிலும் தனியாக நூற்களிலும் உரைகளிலும் விளக்கப்பட்டுள்ளது.
மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் விவாதம் செய்தும் நிரூபித்துள்ளோம்.)
அபூஹுதைபாவின் மனைவிக்கு ஸாலிம் வளர்ப்பு மகனாக
இருப்பதால் அப்பெண்ணுக்கு அவர் மகனாக ஆகி விடுவாரா? மஹரமாக ஆகிவிடுவாரா? வளர்ப்பு மகனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்
அப்பெண்ணைப் பொறுத்தவரை ஸாலிம் ஓர் அன்னிய ஆண் தானே! இதில் என்ன பிஜே பித்தலாட்டம்
செய்து விட்டார்?
குர்ஆனுக்கு முரண்படும் கருத்தைக் கொண்ட
ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்று தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் சொல்லவில்லலை.
தொண்டியானி அப்துர்ரஹ்மான் இருக்கும் ஜாக்கும் தான் இந்தக் கருத்தைச்
சொல்லியுள்ளது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருந்தால் உங்கள் அகில உலக அமீரிடம்
கேளுங்கள். அவர் அதை மறுத்தால் அவர்கள் வெளியிட்ட நூலை நாங்கள் தருகிறோம்.
வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் என்ற தலைப்பில் ஜாக்கிற்கு எதிராக ஒரு
கட்டுரையை தொண்டியானி எழுதட்டும்.
தவ்ஹீத் ஜமாஅத் ஹதீஸை நிராகரிக்கின்றது என்பதை
நிரூபிக்க மற்றொரு அவியலை தொண்டியானி அப்துர்ரஹ்மான் ஆதாரமாகத் தருகின்றார்.
"அப்பாஸ் அலீ என்பவர்
இவர்களுடன் இருந்து இப்போது விலகி விட்டார். அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இன்ன
பக்கத்தில், இவர்கள் ஹதீஸில் செய்யும் பித்தலாட்டத்தையெல்லாம்
தோலுரித்துக் காட்டுகின்றார்'' என்று மிகப்
பெரிய ஆதாரத்தை, உலகில் யாரும் காட்ட முடியாத ஆதாரத்தை
தொண்டியானி காட்டியுள்ளார்.
ஒரு குற்றச்சாட்டைக் கூறுகின்றார் என்றால்
அந்தக் குற்றச்சாட்டு என்ன என்பதை விளக்கி, அதற்குத் தாங்களே பொறுப்பேற்றுக் கொண்டு சொல்ல வேண்டும். அவர் அப்படிச்
சொன்னார்; இவர் இப்படிச் சொன்னார் என்றெல்லாம் குற்றம்
சுமத்துவதாக இருந்தால் நாங்களும் அதே போன்று குற்றம் சுமத்த முடியும்.
கோவை அய்யூப் என்ற ஜாக் தலைமை நிர்வாகி எத்தனை
பெண்களை ஏமாற்றியிருக்கிறார்; பெண்கள்
விஷயத்தில் படுமோசமாக நடந்து கொண்டார் என்றெல்லாம் சமூக வளைத்தளங்களில், இன்ன வெப்சைட்டில் எழுதியிருக்கிறார்கள் என்று ஆதாரம் காட்ட
முடியும். இப்படி எழுதுவது ஒரு ஆதாரமா?
சரி! அப்பாஸ் அலீ தான் உங்களுக்கு ஆதாரம்
என்றால் அவர் எழுதிய, பேசிய அனைத்தையும் ஆதாரமாகப் போடுங்கள். அவர்
ஜாக்கையும் தொண்டியானி அப்துர்ரஹ்மான் போன்றவர்களையும் நார் நாராகக் கிழித்து
எழுதியுள்ளாரே! அவற்றையும் ஆதாரமாகக் காட்டுங்கள்.
இவ்வளவு ஏன்? எங்களை விட்டு சென்ற பின்னால் ஜும்ஆவிற்கு இரண்டு பாங்கு சொல்வது சின்ன விஷயம்
என்று அப்பாஸ் அலீ பேசியுள்ளாரே! அதை ஆதாரமாகக் கொண்டு ஜாக் பள்ளிகளில் இரண்டு
பாங்கு சொல்லுங்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் ஜாக்குடனும், தவ்ஹீத் ஜமாஅத் துடனும் இருந்து பிரச்சாரம் செய்த ஹாமித்
பக்ரி இப்போது கப்ருகளை வணங்க வேண்டும், மீலாது விழா கொண்டாட வேண்டும் என்று சொல்- தர்ஹாக்களை வலம் வந்து
கொண்டிருக்கிறார். அவரும் தவ்ஹீத் ஜமாஅத்தைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றார்.
எனவே அவரையும் நீங்கள் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்தையும், பிஜேவையும் ஒருவன் திட்டி விட்டால் போதும். அது தான்
உங்களுக்கு மிகப் பெரிய ஆதாரமாக ஆகிவிட்டது. அந்தோ பரிதாபம்!
"ஏர்வாடி, மதுரை ஆகிய ஊர்களில் நடந்த பிறை விவாதங்களில் இவர்களின்
கருத்துக்கள் தவறானவை என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகி விட்டதால் தான் அந்த
சிடிக்களை, மற்ற சிடிக்களை வெளியிட்டது போல் வெளியிடாமல்
மறைத்து வைத்தார்கள்''
இப்படி ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பையும் மேற்படி
தொண்டியானி எழுதியுள்ளார்.
அந்த விவாதத்தில் ஜாக் தான் வெற்றி பெற்றது
என்றால் அந்த சிடிக்களை நீங்கள் வெளியிட்டு எங்கள் கருத்து தவறானது என்று
நிரூபிக்கலாமே! நீங்கள் அதை மறைத்து வைப்பது ஏன்? எடிட் செய்யப்படாத சிடி இருந்தால் அதை வெளியிட்டு, எங்களுக்கும் ஒரு பிரதி அனுப்பி வையுங்கள். நாங்கள் அதை
இணைய தளத்தில் பதிவேற்றுகிறோம்.
உலகில் எங்கிருந்து பிறை பார்த்த தகவல்
வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்று ஏர்வாடி விவாதத்தில் ஜாக் சார்பாக விவாதித்த
சிராஜ், அபூஅப்துல்லாஹ் போன்றவர்கள் இப்போது பிறை
விஷயத்தில் எந்தக் கருத்தில் இருக்கிறார்கள் என்பது அகில உலகத்திற்கும் தெரிந்த
விஷயம்.
இவ்வளவு ஏன்? அந்த விவாதத்திற்குப் பின்னர் தான் ஜாக்கும் சோதிடக் கணிப்புப் பிறையை ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்ற கொள்கையை பத்து வருடங்களுக்கும் மேலாகப் பின்பற்றியது. அதன்
பிறகு, உலகில் எங்கிருந்து பிறை பார்த்தாலும் ஏற்க
வேண்டும் என்ற கருத்துக்கு மீண்டும் மாறி, சவூதியைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் ஐக்கியமாகி, தற்போது பிறை விஷயத்தில் ஜாக் எந்தக் கருத்தில் இருக்கிறது
என்பது ஜாக்கிற்கும் தெரியாது; இந்தக்
கட்டுரையை எழுதிய தொண்டியானிக்கும் தெரியாது என்பது தான் வேடிக்கை.
ஏர்வாடி பிறை விவாத சிடியை வெளியிட்டால் இந்தக்
குட்டு எல்லாம் வெளிப்பட்டு விடும் என்பதால் தான் அதை வெளியிடாமல் மறைத்து
வைத்திருக்கிறார்கள் போலும். ஆக, தொண்டியானியின்
பிறை பித்னா என்று தலைப்பிட்டு தங்களைத் தாங்களே ஜாக்கினர் திட்டியுள்ள கூத்தைத்
தான் அல்ஜன்னத் அரங்கேற்றியுள்ளது.
EGATHUVAM MAR 2016