இணை வைப்பே
தீமைகளின் தாய்!
- எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்
இணைவைப்புக் கொள்கை என்பது மனித வாழ்க்கையின்
நோக்கத்தை, இலக்கை மாற்றிவிடும்; இருளில் தள்ளிவிடும்.
மூடநம்பிக்கைகள், பாவங்கள், தீமைகள், அனாச்சாரங்கள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதும் இதுவே. மனிதர்களுக்குத்
துன்பத்தை தருகின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும், சிக்கல்கலுக்கும் காரணமாக இருப்பதும் இதுவே.
நாமும், மற்றவர்களும் கவலைகள் இல்லாமல் நலமுடன் இருக்கும் வகையில் நமது வாழ்க்கை
தூய்மையாக இருக்க வேண்டும் எனில் ஓரிறைக் கொள்கையின்படி வாழ வேண்டும். இறைவனுக்கு
இணை கற்பிக்கும் நம்பிக்கை மற்றும் நடத்தையை விட்டு நாம் அகன்று விட வேண்டும்.
அப்போது மட்டுமே ஈருலகிலும் வெற்றி பெற இயலும்.
அந்த அடிப்படையில் இணை வைத்தலால் உருவாகும் பல்வேறு தீமைகளைக் கடந்த இதழ்களில்
கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.
ஆளை மயக்கும் ஆன்மீக மோசடிகள்
இறைவனை எளிதில் நெருங்க முடியாது; அவனது அருளை அடைய வேண்டும் என்றால் பரிகாரம் நடத்த வேண்டும்; தேவைகளுக்கு ஏற்ப பூஜைகள் செய்ய வேண்டும்; கணக்குப் பார்க்காமல் காணிக்கை தர வேண்டும் என்று ஆன்மீகம்
முலம் பெரும் மோசடி நடந்து வருகிறது. இதனால், எதையும் யோசிக்காமல் பக்தர்கள் அளிக்கும் கொடைகள் மூலம் குறிப்பிட்ட சிலருடைய
வயிறும் வாழ்க்கையும் நிறைந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கடவுள் பெயரால் நடக்கும் சுரண்டல்களைத்
தடுத்து நிறுத்துவதற்காக, "ஆண்டவன் எங்கும் இல்லை; ஆன்மீகம் என்பது கொள்ளை' என்று சிலர் கோஷம் போட்டு கிளம்பி விட்டார்கள். கொசுவை ஒழிக்க வீட்டையே
எரிக்கத் தயார் ஆகிவிட்டார்கள் இந்த நாத்திகர்கள்.
இந்த நிலை மாற வேண்டுமா? கண்டதை எல்லாம் கடவுளாகக் கருதும் மனநிலை மாறினால் போதும்.
இறைவனுக்குரிய அம்சங்களில் எதுவும் எதிலும் இல்லை; எவரிலும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். அவனை எங்கிருந்தும் எப்போதும்
அழைக்கலாம் எனும் நம்பிக்கை மலர வேண்டும். இதோ திருமறை வசனங்களைப் பாருங்கள்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம்
கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்
திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை
செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்''
(என்பதைக் கூறுவீராக!)
திருக்குர்ஆன் 2:186
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே!
அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ்
மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற
அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
திருக்குர்ஆன் 39:53
இறைவன் பொதுவானவன்; அவனிடம் பிரார்த்தனை செய்வதற்கும், பாவ மன்னிப்புக் கோருவதற்கும்; அவனது அன்பைப் பெறுவதற்கும் ஒருபோதும் இடைத்தரகர் தேவை
இல்லை என்பதே தூய இஸ்லாம். ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் அனைத்துப்
பித்தலாட்டங்களும் ஏமாற்றல்களும் அழிந்தொழிய இந்த இஸ்லாமிய நம்பிக்கையே சிறந்த
தீர்வு தரும்.
தீமைகளும் பாவங்களும்
இறைவன் மனிதனைப் போன்றவன்; மனிதனும் இறைவனாக ஆகலாம் என்பது போன்ற படைத் தவனின்
புனிதத்தைப் பாழ்படுத்தும் நம்பிக்கையே தீமைகளுக்கு அச்சாணியாக இருக்கிறது.
தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் தீங்கு தரும்
அனைத்துப் பாவங்களையும் சிலர் செய்கிறார்கள். பிறகு, குறிப்பிட்ட தொகையை காணிக்கை செலுத்தி விட்டால் அல்லது ஆலயம் கட்டுவதற்குப்
பணம் கொடுத்து விட்டால் இறைவன் பார்வையில் நல்லவனாகி விடலாம் என்று நினைக்கிறார்கள். இந்தத் தைரியம் காரணமாகவும் வட்டி, வரதட்சனை, லஞ்சம், மோசடி என்று ஏகப்பட்ட தீமைகளில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களின் பார்வையில் இறைவனை வணங்குவது என்பது
அவனை வழிபடுவது மட்டுமே. அவ்வாறு தான் இணைவைப்புக் கொள்கையின் இறைநம்பிக்கை
இருக்கிறது. ஆனால் இதற்கு நேர்மாற்றமாக இஸ்லாம்
இருக்கிறது.
"எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே
உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்''
என்றும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:162,
163
"முஃமின் - இறை
நம்பிக்கையாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள்
யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்''
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியுள்ளனர்.
நூல்: திர்மிதி (2551)
தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஏக இறைவனுக்குப் பயந்து அவனது
கட்டளைப்படி நல்ல முறையில் செயல்படுவது வணக்கம் என்று இஸ்லாமிய மார்க்கம்
கூறுகிறது, இதுவே இறை நம்பிக்கையின் உண்மையான அடையாளம்
என்றும் பிரகடனம் செய்கிறது.
சுற்றம் மறக்கடிக்கும் சுயநலம்
"கடவுளை மற! மனிதனை நினை!' என்பது நாத்திகப் பழமொழி. மனிதர்களை மறந்து, அவர்களுக்குச் சேவை செய்வதைத் துறந்து, பக்தியில் மூழ்குவதே இறைவனின் அன்பை அருளை அடையும் வழி
என்று ஆன்மீகவாதிகள் வாழ்ந்ததன் எதிர்விளைவாக இந்தப் பழமொழி பிறந்தது. இது
இணைவைப்பு கொள்கைகளுக்கு பொருந்துமே தவிர ஒருபோதும் இஸ்லாத்திற்குப் பொருந்தாது.
காரணம், பிற மனிதர்களுக்கு உதவுவதும், தேவைகளை நிறை
வேற்றுவதும், ஆதரவு அளிப்பதும் இறைவனை நெருங்குவதற்கான வழி
என்றும் மறுமையில் மகத்தான கூலிகளைப் பெற்றுத்தரும் என்றும் இந்த மார்க்கம்
போதிக்கிறது.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும்
வாழ வைத்தவர் போலாவார்...
திருக்குர்ஆன் 4:32
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், "ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ
என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று
கூறுவான். அதற்கு அவன், "என் இறைவா! நீ அகிலத்தின்
இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ்,
"என்னுடைய இந்த அடியான்
நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ
நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ
எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான்.
அதற்கு அவன், "என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி
என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ்,
"என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு
வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ
உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால்
நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான்.
அதற்கு அவன், "என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி
நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று
கேட்பான். அதற்கு அல்லாஹ், "என்னுடைய இந்த அடியான்
உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை.
அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்''
என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4661)
நல்லறங்களும் வணக்கமே எனும் இஸ்லாமியக்
கண்ணோட்டம் வரும் போது மட்டுமே மனிதன் தீமைகளை விட்டும் பாவங்களை விட்டும்
விலகுவான். மேலும், சக மனிதர்களுக்கு உதவி செய்வது, ஒத்துழைப்பு தருவது போன்ற பொதுநலம் காக்கும் குணம்
உருவாகும். சுயநலம் ஒழியும்.
வேலி தாண்டும் விபச்சாரம்
ஒட்டுமொத்தக் குடும்பங்களின் தொகுப்பே
சமுதாயம். சமுதாயம் சிறப்பாக இருக்க வேண்டும் எனில் ஒவ்வொரு குடும்பமும் சிறந்து
விளங்குவது கட்டாயம். எனவே, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முறையாகத் திருமணம்
செய்து கட்டுக்கோப்பான குடும்பத்தைக் கட்டமைக்க வேண்டும். தங்களுக்குள் உரிமைகளை, கடமைகளை சரிவரப் பேண வேண்டும். முறையான வாழ்க்கை துணையிடம்
மட்டுமே பாலுணர்வுத் தேவையை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய ஒழுக்க விழுமங்களை எல்லாம் விபச்சாரம்
சிதைத்து சேதப்படுத்தி விடுகிறது. நவீன காலத்திலோ இந்த ஒழுக்கக்கேடான காரியம்
வெவ்வேறு விதங்களில் தலைவிரித்து ஆடுகிறது. காம வேட்டைகளும் சேட்டைகளும்
கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அசிங்கம் நிறைந்த அனாச்சாரத்தையும் அடக்கி ஒடுக்கும்
ஆற்றலும் அணுகுமுறையும் ஓரிறைக் கொள்கையிடம் மட்டுமே இருக்கிறது.
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது
வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
(திருக்குர் ஆன் 17:32)
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள்
உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்''
என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால்
அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத்
தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற
அன்புடையோன்.
அல்குர்ஆன் (60:12)
விபச்சாரி, விபச்சாரம் செய்யும் போது மூமினாக இருந்து கொண்டு
விபச்சாரம் செய்வதில்லை. மேலும், ஒருவன் மது
அருந்தும் போது மூமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற
பொழுது மூமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக்
கொண்டிருக்க, கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு
கொள்ளை யடிப்பதில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2475)
ஏக இறைவனை நம்பியவர்கள் விபச்சாரத்தின் பக்கம்
கூட நெருக்கக் கூடாது. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி விபச்சாரம் செய்யும் போது இறை நம்பிக்கையை இழந்து
விடுகிறார்கள் என்று எச்சரிக்கிறது இஸ்லாம். இதையும் மீறி இதில் ஈடுபடும்
நபர்களுக்கு இம்மையிலும் மறுமை யிலும் கடுமையான தண்டனையை நிர்ணயிக்கிறது.
விபச்சாரம் செய்யும் பெண்ணை யும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு
கசையடி அடியுங்கள்! அல்லாஹ் வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில்
அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும்
தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டு
இருக்கட்டும்.
(அல்குர்ஆன் 24:2)
(பொய் கூறித் திரிந்தவர், விபச்சாரம் செய்தவர், குர்ஆனைப் புறக்கணித்தவர், பிறர்
மானத்தில் விளையாடியவர் ஆகியோருக்குத் தண்டனை வழங்கப்படுவதை மிஃராஜில் நபியவர்கள்
பார்த்தார்கள்.)
(மலக்குகளை நோக்கி) "இரவு முழுவதும்
என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!'' எனக் கேட்டேன். அதற்கு (மலக்குகள்) இருவரும் கூறியதாவது:
ஆம், முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும்
பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த
அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட
நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப்
பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு
மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள்
விபசாரத்தில் ஈடுபட்ட வர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி
வாங்கித் தின்றவர்கள்.
அறிவிப்பவர் ஸமுரா பின் ஜுன்துப்,
நூல்: புகாரி (1386)
இணைவைப்புக் கொள்கைகள் விபச்சாரச் செயலுக்கு
எதிராக வாய் திறந்து இருக்கின்றனவா? கிடைக்கும் இடமெல்லாம் இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் ஆட்களுக்கு தண்டனைகள்
தருவதற்கும், திருத்துவதற்கும் சரியான சட்டங்களை
வைத்துள்ளனவா? இதற்கெல்லாம் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கும்.
ஆனால், இப்படி ஓரிறைக் கொள்கை கைகட்டி வேடிக்கைப்
பார்க்கவில்லை என்பதை மேற்கண்ட செய்திகள் மூலமே புரிந்து இருக்கும்.
கொலை ஓர் பெரும்பாவம்
தினந்தோறும் கொலை பற்றிய செய்தி இல்லாமல்
நாளிதழ் வெளி வருவதில்லை எனும் அளவிற்குக் கொலைகள் பெருகி விட்டன. அரசியல், பொருளாதாரம், சுய விவகாரம் என்று பல்வேறு காரணங்களால் இந்தக் கொடுமை சர்வசாதாரணமாக
நடக்கிறது. ஆன்மீகம் குறித்து மட்டும் உரக்கப் பேசும் இணைவைப்புக் கொள்கைகள்
கொலையைத் தடுப்பதற்குத் தீர்வு சொல்வதில் தோற்றுவிட்டன. ஆனால் இஸ்லாம் இதையும்
இரும்புக் கரம் கொண்டு தடுக்கிறது.
காரணம், இஸ்லாம் அமைதியை நாடும் மார்க்கம்; கொலையைக் கொடிய செயல் எனும் கொள்கை கொண்டது இது. உயிர்கள் அனைத்தும்
புனிதமானவை என்று போதிக்கிறது. இறை நம்பிக்கை இருப்பவர்கள் கொலையை விட்டும் விலகி
இருக்க வேண்டும் என்று ஆணை இடுகிறது.
(முஃமின்கள்) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு
கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும்
தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன்
வேதனையைச் சந்திப்பான்.
திருக்குர்ஆன் 25:68
"கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல்
ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா
மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை
வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே
விதியாக்கினோம்.
(திருக்குர் ஆன் 5:32)
நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது "மக்களே! இது
எந்த நாள்?'' எனக் கேட்டார்கள். மக்கள் "புனிதமிக்க
தினம்' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் "இது
எந்த நகரம்?'' எனக் கேட்டதும் மக்கள் "புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் "இது எந்த மாதம்?''
எனக் கேட்டதும் மக்கள் "புனிதமிக்க மாதம்!''
என்றனர். பிறகு நபி (ஸல்) அவாகள்,
"நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு
புனிதம் பெற்று விளங்கு கின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும்
உங்களுக்குப் புனிதமானவையாகும்!'' எனப் பல
தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, "இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?''
என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1739
மனிதர்கள் விட்டொழிக்க வேண்டிய பெரும்பாவங்களை
பட்டியல் போடும் இஸ்லாம், அதில் கொலையைக் குறிப்பிடுகிறது. இந்தக்
குற்றத்தைச் செய்பவர்களுக்கு பழிக்குப் பழி சட்டம் மூலம் கடுமையான தண்டனையை
கொடுக்கிறது. இந்த உலகில் கொலையாளிகள் தப்பித்து கொண்டாலும் மறுமையில் இறை வனின்
கடுமையான வேதனையில் இருந்து எவ்வகையிலும் தப்பிக்க இயலாது என்று எச்சரிக்கை
விடுக்கிறது.
இறைவனுக்கு இணைகற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்,
"பொய் கூறுவதும்' அல்லது "பொய்ச் சாட்சியம் சொல்வதும்' பாவங் களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும் என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி),
நூல்: புகாரி 6871
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை
செய்த) சுதந்திரமானவன், அடிமைக் காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது
உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய)
அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப் படுமானால் நல்ல விதமாக நடந்து
அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன்
எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு
மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. அறிவுடையோரே! பழிக்குப் பழி
வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை
செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.
(திருக்குர் ஆன் 2:178,
179)
ஓரிறைக் கொள்கை கூறும் குற்றவியல் சட்டம்
நடைமுறைப் படுத்தப்படும் இடங்களில் கொலை என்பது அரிதிலும் அரிதாகவே இருக்கிறது.
கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்; உயிருக்கு உயிர் எனும் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தைப் பரிகாசம் செய்பவர்கள், கொலையைத் தடுக்க, தீர்வு சொல்ல இயலுமா? கொலையைக் குறைப் பதற்குக் கூட அவர்களிடம்
தெளிவான வழி இல்லை; அவர்களின் இணைவைப்புக் கொள்கையிலும் முறையான
பதில் இல்லை என்பதே உண்மை.
EGATHUVAM MAR 2016