படைத்தவன் ஏற்படுத்தும் பாதிப்பும் படைப்பினங்களால் ஏற்படும் பாதிப்பும்
கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்
அல்லாஹ் ஒருவன்தான் உண்மை யான கடவுள்.
அல்லாஹ்வைத் தவிர உண்மையான கடவுள் வேறு யாரும் கிடையாது என்பதற்குத் திருமறைக்
குர்ஆன் எடுத்து வைக்கும் முதன்மையான ஆதாரங்களில் ஒன்று "அல்லாஹ்வைத் தவிர
வணங்கப்படும் கற்பனைக் கடவுள்களால் நன்மையும் செய்ய முடியாது, தீமையும் செய்ய முடியாது'' என்பதாகும். இதனை திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் எடுத்துரைக்கிறது.
"அல்லாஹ்வையன்றி உங்களுக்கு
எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை
வணங்குகிறீர்களா?'' என்று கேட் பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன்
அல்குர்ஆன் 5:76
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர்.
அல்குர்ஆன் 10:18
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு)
செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
அல்குர்ஆன் 10:106
"அவனையன்றி பாதுகாவலர்
களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள்
தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்''
என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 13:16
"அல்லாஹ்வையன்றி நீங்கள்
கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 17:56
அல்லாஹ்வையன்றி தனக்குத் தீங்கிழைக்காததையும், பயன் தராததையும் பிரார்த்திக்கிறான். இதுவே தூரமான
வழிகேடாகும்.
அல்குர்ஆன் 22:12
அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக்
கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப் படுகின்றனர்.
தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது.
வாழ்வதற்கோ, மரணிப்ப தற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை.
அல்குர்ஆன் 25:3
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்பவன்
தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 25:55
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் அல்லாஹ்வையன்றி
வணங்கப்படும் யாராக இருந்தாலும், எதுவாக
இருந்தாலும் அவர்களால் பயனும், தீங்கும் செய்ய
இயலாது என்பதைத் தீர்க்கமாக அறிவிக்கின்றன.
பயனும் தீங்கும் செய்ய முடியாது என்றால் எப்படி? என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு எத்தனையோ மக்கள் மாட்டைக் கடவுளாக
வணங்கு கின்றனர். மாடு பல பயன்களைத் தரத்தான் செய்கிறது. வயலை உழுது போடுகிறது, பால் தருகிறது, வண்டி இழுக்கிறது. இப்படி எத்தனையோ பயன்களை மாடு தருகிறது.
அது போன்று மாடு ஒருவரை முட்டி அவருக்குத்
தீங்கு இழைப்பதையும் பார்க்கிறோம்.
அப்படியென்றால் அல்லாஹ்வை அன்றி
வணங்கப்படுவைகள் எந்தப் பயனும் செய்ய முடியாது. எந்தத் தீங்கும் செய்ய முடியாது
என்பதன் பொருளை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு படைப்பினமாக இருந்தாலும் அல்லாஹ்
அதற்குக் கொடுத்த சக்தியை வைத்து மற்றொரு படைப்பினத்திற்கு அல்லாஹ்வின் நாட்டப்படி
பயனோ, தீங்கோ செய்ய முடியும். இதைப் பற்றி மேற்கண்ட
வசனங்கள் பேசவில்லை.
மனித இனம், ஜின் இனம், மலக்குமார்கள், விலங்குகள், உட்பட எந்த படைப்பினமாக இருந்தாலும் அவை
மற்றொரு படைப்பினத்திற்கு பயனோ, தீங்கோ
ஏற்படுத்த வேண்டுமென்றால் மூன்று அடிப்படைகளை இறைவன் ஏற்படுத்தியிருக்கின்றான்.
அந்த அடிப்படைகளுக்கு உட்பட்டுத்தான் அவை மற்றொரு படைப்பினத்திற்கு பயனோ தீங்கோ
ஏற்படுத்த முடியும். அந்த அடிப்படைகளாவன.
1. பயனோ, தீங்கோ ஏற்படுத்தும் சக்தியை அந்தப் படைப்பினத்திற்கு அல்லாஹ் வழங்கி யிருக்க
வேண்டும். வழங்கியுள்ளான் என்பதை நமது அறிவைக் கொண்டோ, வஹியைக் கொண்டோ நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
2. ஒரு படைப்பினம் மற்றொரு படைப்பினத்திற்குப்
பயனோ தீங்கோ அளிக்க வேண்டும் என்றால் இரண்டிற்கும் மத்தியில் தொடர்பு இருக்க
வேண்டும். அதாவது பாதிப்பு ஏற்படுத்தும் பொருள், பாதிக்கப் படக்கூடிய பொருளோடு தொடர்பு கொள்ள வேண்டும். பயன் ஏற்படுத்தும்
பொருள், பயனைப் பெறக் கூடிய பொருளோடு தொடர்பு கொள்ள
வேண்டும்.
3. மேற்கண்ட இரண்டு அடிப்படைகளின் மூலம் பயனோ, தீங்கோ ஏற்படுவதற்கு அல்லாஹ் நாட வேண்டும்.
மேற்கண்ட மூன்று அடிப்படைகள் இல்லாமல் எந்த ஒரு
படைப்பினமும் மற்றொரு படைப்பினத்திற்குப் பயனோ, தீங்கோ செய்ய முடியாது. அவ்வாறு செய்ய முடியும் என்று ஒருவன் நம்பினால் அது
அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் காரியமாகும்.
ஒரு பாம்பு மற்றொருவனுக்கு மேற்கண்ட
அடிப்படைகளின் மூலம் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவது தவறு கிடையாது.
ஏனெனில் பாம்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும்
சக்தியை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதற்கு விஷத் தன்மை உள்ளது.
பாம்பிற்கு விஷத்தன்மை உள்ளது என்பதால் மட்டுமே
அது நமக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. மாறாது அது கொத்தினால் மட்டுமே
பாதிப்பு ஏற்படும். அதாவது பாம்பிற்கும் அது பாதிப்பு ஏற்படுத்தும் பொருளுக்கும்
மத்தியில் தொடர்பு இருக்க வேண்டும்.
பாம்பிற்கு விஷத் தன்மை இருந்தாலும், அது ஒருவரைத் தீண்டி னாலும் அதன் மூலம் அவருக்குப் பாதிப்பு
ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருந்தால்தான் பாதிப்பு ஏற்படும். அல்லாஹ்
நாடவில்லை என்றால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க
நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின்
காலை அல்லாஹ் வெட்டமாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே எந்தக் கருவியையும்
பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.
ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை
முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக்கட்டையையோ
எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.
அல்லாஹ் ஒருவனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால்
மனநோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மன நோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு
மனிதன் இன்னொரு மனிதனை மனநோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது
மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை
சிதையும் அளவுக்கு தலையில் தாக்கியே மனநோயாளியாக ஆக்க முடியும்.
இந்த விஷயத்தில் அல்லாஹ் வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.
அவன் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்; உடனே ஆகிவிடும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் 2:117,
3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறான்.
ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு
மட்டுமே உண்டு.
அல்லாஹ் ஏற்படுத்திய வரையறைகளுக்கு
உட்பட்டுத்தான் ஒரு படைப்பினம் மற்றொரு படைப்பினத்திற்குப் பயனோ, தீங்கோ செய்ய முடியும்.
இந்த வரையறைகளைத் தாண்டி பயனோ, தீங்கோ ஏற்படுத்தக் கூடியவன் அல்லாஹ் ஒருவன்தான்.
இதைத்தான் மேற்கண்ட வசனங் கள் அனைத்தும்
எடுத்துரைக்கின்றன.
அல்லாஹ்வைத் தவிர வணங்கப் படக்கூடிய யாராக
இருந்தாலும் அல்லாஹ்வைப் போன்று எந்தவித புற சாதனங்களும் இல்லாமல் பாதிப்பு ஏற்படுத்த
முடியாது என்பதைத்தான் அந்த வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
எந்த வித புறச்சாதனங்களும் இல்லாமல் பயனோ, தீங்கோ ஏற்படுத்தும் இந்த ஆற்றலை அல்லாஹ் கடுகளவு கூட
தன்னைத் தவிர வேறு யாருக்கும் வழங்க மாட்டான். இதைத் திருமறைக் குர்ஆன் மிகத்
தெளிவாக எடுத்துரைக்கிறது.
"அல்லாஹ்வையன்றி நீங்கள்
கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள்.
அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த
உதவியாளரும் இல்லை'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 34:22)
அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனையன்றி
நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.
(அல்குர்ஆன் 35:13)
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 42:11)
அவனுக்கு நிகராக யாருமில்லை.
(அல்குர்ஆன் 112:4)
அல்லாஹ்வைத் தவிர உள்ள எந்தப்
படைப்பினத்திற்கும் அல்லாஹ் வைப் போன்ற சக்தி அணு அளவு கூட கிடையாது என்பதை
மேற்கண்ட வசனம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
சிலை வழிபாடு மாபெரும் இணைவைப்பு ஏன்?
சிலை வழிபாடு செய்பவர்கள் தாங்கள் வணங்கும்
சிலைகள் எவ்வித புறச்சாதனமும் இல்லாமல் தங்களுக்குப் பயனையும், தீங்கையும் ஏற்படுத்தும் என்று நம்பிய காரணத்தினால் தான்
சிலை வழிபாட்டை இஸ்லாம் மாபெரும் இணைவைப்பு என்று எச்சரிக்கிறது.
இப்றாஹீம் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த
காஃபிர்கள் தாங்கள் தெய்வமாக வணங்கும் சிலைகள் எவ்வித புறச் சாதனமும் இல்லாமல்
இப்றாஹீம் நபிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்று அச்சுறுத்தினார்கள். ஆனால்
இப்றாஹீம் (அலை) அவர்கள் அவர்களின் அச்சுறுத்தலுக்கு சிறிதும் அஞ்சவில்லை.
அல்லாஹ்வின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தார்கள். இதைப் பற்றித் திருக்குர்ஆன் மிக
அற்புதமாக எடுத்துரைக்கிறது.
அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர்.
"அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம்
விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன்.
என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர
மாட்டீர் களா?'' "அல்லாஹ் உங்களுக்குச்
சான்றளிக்காதவைகளை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாதபோது நீங்கள் இணை
கற்பித்தவைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க
அதிகத் தகுதி படைத்தவர் யார்?'' (என்றும்
அவர் கூறினார்.) நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல்
இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர்.
(அல்குர்ஆன் 6:80-82)
சக்தியில்லாத கற்சிலைகள் எவ்வித புறச்சாதனமும்
இன்றி பாதிப்பு ஏற்படுத்தும் என்று நம்புவதை மாபெரும் இணைவைப்பு என இந்த வசனங்கள்
எடுத்துரைக்கின்றன.
ஹூது (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயம்
இவ்வாறு தான் அச்சுறுத்தியது.
"எங்கள் கடவுள்களில் சிலர்
உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்'' என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). "நான்
(இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை
கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்!
பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!'' என்று அவர் கூறினார். எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்துள்ளேன். எந்த
உயிரினமானாலும் அதன் முன்நெற்றியை அவன் பிடித்துக் கொண்டிருக்கிறான். எனது இறைவன்
நேரான வழியில் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 11:54, 55,56)
கற்சிலைகள் எவ்விதப் புறச் சாதனமும் இன்றி ஹூது
நபி அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய தாக காஃபிர்கள் நம்பினார்கள். இந்த
நம்பிக்கை இணை வைப்பு என்பதையும், எந்த உயிரினமாக
இருந்தாலும் அதனுடைய கண்ட்ரோல் அல்லாஹ்விடம் தான் இருக்கிறது என்பதையும் மிகத்
தெளிவாக இந்த வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
அல்லாஹ்வைப் போன்று பாதிப்போ, பயனோ ஏற்படுத்தும் ஆற்றல் கடுகளவு கூட இறைவன்
அல்லாதவர்களுக்குக் கிடையாது. அது போன்ற சக்தியை அல்லாஹ் கடுகளவு கூட யாருக்கும்
ஒரு போதும் கொடுக்கவும் மாட்டான்; நாடவும்
மாட்டான்.
இறைவன் அல்லாதவர்கள் இவ்வாறு பாதிப்பு
ஏற்படுத்துவார்கள் என்று நம்புவதும், அதற்கு அஞ்சுவதும், இவ்வாறு பயனளிப் பார்கள் என்று நம்புவதும், அதனை ஆதரவு வைப்பதும் இறைவனுக்கு இணை வைக்கும் காரியமாகும்.
இறைவன் அல்லாதவர்களை கடவுளாகக் கற்பனை செய்வதாகும்.
இதுபோன்ற அச்சத்தை இறைவன் மீது மட்டும்தான்
வைக்க வேண்டும்.
"இரண்டு கடவுள்களைக் கற்பனை
செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!''
என்று அல்லாஹ் கூறுகிறான்.
(அல்குர்ஆன் 16:51)
அல்லாஹ்வைப் போன்று மற்றவர்களுக்கு அஞ்சுவது
இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்வதாகும் என்று மேற்கண்ட வசனம் மிகத் தெளிவாகப்
பறைசாற்றுகிறது.
அல்லாஹ்வைப் போன்று மற்றவர்கள் பாதிப்பு
ஏற்படுத்துவார்கள் என்று பயந்தால் அது அவர்களைக் கடவுளாகக் கற்பனை செய்கின்ற
மாபெரும் இணைவைப்பு என்பதையும் மேற்கண்ட வசனம் விளக்குகிறது.
தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர்.
அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை. அல்லாஹ்
யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை வழிகெடுப்பவன் இல்லை.
(அல்குர்ஆன் 39:36, 37)
இறைவனல்லாதவர்கள் இறைவனைப் போன்று பாதிப்பு
ஏற்படுத்துவார்கள் என்று கூறி மற்றவர்கள் நம்மை அச்சுறுத்தினால் நாம் அதற்கு
அஞ்சக் கூடாது என்றும், அல்லாஹ் மட்டும் நமக்குப் போதுமானவன் என்றும்
அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் நமக்கு ஈமானிய வலிமையை ஊட்டுகின்றான்.
இன்றைக்கு கப்ரு வணங்கிகள் இறந்தவர்களை
இறைவனைப் போன்றுதான் நம்புகிறார்கள். அல்லாஹ் எவ்வாறு பயனோ, தீங்கோ ஏற்படுத்துவானோ அது போன்று அவுலியாக்களும் எவ்வித புறச் சாதனமும் இல்லாமல் நன்மையோ, தீமையோ செய்வார்கள் என்று அச்சுறுத்துகின்றனர். மேலும்
அல்லாஹ் இது போன்ற ஆற்றலை இறந்து போய்விட்ட, அவர்கள் நம்புகின்ற அவுலியாக்களுக்குக் கொடுத்துள்ளதாகவும் வாதிக்கின்றனர்.
இறைவன் தனக்கு மட்டுமே உரிய ஆற்றலைக் கடுகளவு
கூட அடுத்தவருக்கு வழங்க மாட்டான். அதற்கு நாடவும் மாட்டான் என்பதற்கான சான்றுகளை
நாம் மேலே கண்டோம்.
இவ்வாறு இறந்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கின்ற
காரணத்தினால் தான் நாம் தர்ஹா வழிபாட்டை கப்ர் வணக்கம் என்றும், நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற இணைவைப்பு என்றும்
விமர்சிக்கின்றோம்.
தர்ஹாவாதிகளின் இந்த நம்பிக்கையை இணைவைப்பு
என்று ஏற்றுக் கொள்கின்ற ஸலஃபிகளில் பலர் அல்லாஹ் நாடினால் சூனியக்காரன் எவ்வித
புறச்சாதனமும் இன்றி பாதிப்பை ஏற்படுத்துவான் என்றும், அல்லது சூனியம் வைக்கப்பட்ட பொருட்கள் பாதிப்பை
ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை வைக்கின்றனர்.
சூனியக்காரனோ, சூனியம் வைக்கப்பட்ட பொருட்களோ எவ்விதப் புறச்சாதனமும் இன்றி ஒரு போதும்
பாதிப்பு ஏற்படுத்த முடியாது. அல்லாஹ் அதற்கு ஒரு போதும் நாடவும் மாட்டான்.
சூனியக்காரன் அல்லது சூனியம் வைக்கப்பட்ட பொருட்கள் புறச்சாதனம் இன்றி இறைவனைப்
போன்று பாதிப்பு ஏற்படுத்தும் என்று நம்பிக்கை வைப்பதும் அதற்கு அல்லாஹ் நாடுவான்
என்பதும் மாபெரும் இணைவைத்தலாகும்.
இது மட்டுமில்லாமல் சூனியக் காரன் எப்படி
வந்தாலும் ஜெயிக்க முடியாது என்றும், சூனியத்தை அல்லாஹ் அழிப்பான் என்றும், பொய்யான விஷயங்கள் உண்மை யாவதற்கு அல்லாஹ் ஒரு போதும் நாட மாட்டான் என்பதையும்
திருக்குர்ஆன் மிகத் தெளிவாக நேரடியாகவே எடுத்துரைத்துள்ளது.
தாயத்து, தாவீஸ், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், காலத்தைத் திட்டுதல், தாத்து அன்வாத் என்ற புனித மரங்களை ஏற்படுத்துதல், ஜோசியம் பார்த்தல், நட்சத்திரத்தால் மழை பொழியும் என்று நம்புதல், சூனியத்தை நம்புதல், இணை வைக்கும் வாசகங்களால் ஓதிப் பார்த்தல், தாலிகட்டுதல், ஆரத்தி எடுத்தல், திருமணப் பந்தலில் வாழைமரங்களைக் கட்டிவைத்தல்
போன்ற அனைத்திலும் இறைவனைப் போன்று எவ்வித புறச்சாதனமும் இன்றி பாதிப்போ, நன்மையோ செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாலும், இறைவன் வழங்காத சக்தியை அவற்றிற்கு இருப்பதாக நம்புவதாலுமே
அவை இறைவனுக்கு இணைகற்பிக்கும் நம்பிக்கை என்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது.
எனவே அல்லாஹ் கொடுக்காத சக்தியை இருப்பதாக
நம்புவதும். எவ்விதத் தொடர்பும் இல்லாமல் நன்மையோ, தீமையோ செய்ய முடியும் என்று நம்புவதும், அல்லாஹ் தன்னைப் போன்று பயனோ, தீங்கோ
ஏற்படுத்துவதற்கு நாடுவான் என்று நம்புவதும் இணைவைப்பு நம்பிக்கையாகும். இத்தகைய
இணை வைப்பு நம்பிக்கையிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள்புரிவானாக!
EGATHUVAM MAR 2016