குர்ஆன் வழி நடந்த கோமான் நபி - 2
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
நபி
(ஸல்) அவர்களது வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன்
தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.
ஆலோசனை
செய்!
முஹம்மது
(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்தாலும் அவர்களும் தம் சகாக்களிடம் பல விஷயங்களில்
ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் நபியவர்களுக்குக் கட்டளையிடுகிறது.
காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு
செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ்
நேசிக்கிறான்.
திருக்குர்ஆன் 3 : 159
ஒரு
இறைத்தூதர் தனக்கு இறைவனின் புறத்திலிருந்து வஹியாக அருளப்படுபவை குறித்து மக்களிடம்
ஆலோசனை கேட்கத் தேவையில்லை. வஹீச் செய்தியை மற்றவர்களை விட நபியே நன்கறிந்தவர்கள் ஆவார்கள்.
அப்படியென்றால்
ஆலோசனை செய்வீராக என்று அல்லாஹ் கட்டளையிடுவது வஹியல்லாத இதர விஷயங்கள் குறித்து தான்
என்பதைத் தெளிவாக அறியலாம்.
இறைவனின்
இவ்வசனத்திற்கும் நபிகள் நாயகம் அழகாய் செவிசாய்த்துள்ளார்கள்.
நான்
அல்லாஹ்வின் தூதராயிற்றே,
சமூகத்தில் பெரும் அந்தஸ்து மிக்கவனாயிற்றே, நான்
போய் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதா? என்ற கர்வம் துளியும் இல்லாமல்
பல விஷயங்கள் குறித்து நபிகள் நாயகம் மற்றவர்களிடம் ஆலோசனை செய்திருக்கிறார்கள்.
ஆலோசனை
கேட்பது மட்டுமின்றி மற்றவர்களின் கருத்துக்களைச் சரியெனக் கருதும் போது அதற்கு மதிப்பளித்தும்
உள்ளார்கள்.
பத்ருப்
போர்க்களத்தில் வெற்றி வாகை சூடி முக்கிய எதிரிகளை கைதிகளாய்ப் பிடித்து வைத்துக் கொண்டு
அவர்களை என்ன செய்யலாம் என்று தம் சகாக்களுடன் நபிகளார் ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.
ஆலோசனையில்
சொல்லப்பட்ட கருத்துக்களைச் சீர்தூக்கி பார்த்தே அதில் ஒரு முடிவை எடுக்கிறார்கள்.
முஸ்லிம்கள்
எதிரிகளைச் சிறை பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர்
(ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் "இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள்
என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?'' என்று (ஆலோசனை) கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின்
சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே! அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத்
தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான
பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே
நான் கருதுகிறேன்'' என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?'' என்று கேட்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக!
(இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின்
கருத்தைப் போன்றதன்று. மாறாக, அவர்களை எங்களிடம்
ஒப்படைத்து விடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்து விடுகிறோம். அக்கீலை
அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம்
குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான்
அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)'' என்று (ஆலோசனை) கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை.
மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! நீங்களும், உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை
வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!'' என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து
விடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது
எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும்
தகாது'' என்று தொடங்கி, "நீங்கள் அடைந்த போர்ச் சொல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே
(கருதி) உண்ணுங்கள்'' (8:67-69) என்பது வரை (மூன்று
வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.
நூல்: முஸ்லிம் 3621
அதே
போல ஒரு கட்டத்தில் தம் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்களை, ஸஃப்வான்
பின் முஅத்தல் எனும் நபித்தோழருடன் இணைத்து விஷமிகள் அவதூறு பரப்பினர்.
இச்சம்பவம்
நபியவர்களுக்கு மனக்கவலையை அளித்த போது தம் சொந்தக் குடும்ப விவகாரமாக இருந்த போதிலும்
அலீ, உஸாமா,
பரீரா ஆகியோரை அழைத்து அவர்களிடம் இது குறித்து ஆலாசனை நடத்தியுள்ளார்கள்.
கருத்து கேட்டறிந்து கொண்டார்கள் என்று வரலாறு சான்றளிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து
விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது "வஹீ' (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில்
நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான்
அறிய மாட்டேன்'' என்று அவர்கள் கூறினார்கள்.
அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களோ (நபி (ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல்
கூறும் நோக்குடன்), "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்
உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றி பெண்கள் நிறையப்
பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்'' என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, "பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்)
எதையாவது பார்த்திருக்கின்றாயா?'' என்று
கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி), "தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர்
(குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக்
குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை'' என்று பதில் கூறினார்.
நூல் : புகாரி 2661
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவைத் தரிசிக்க நபித்தோழர்களுடன் புறப்பட்டுச் சென்ற போது
ஹுதைபிய்யா எனுமிடத்தில் எதிரிகளால் தடுக்கப்படுகிறார்கள்.
பிறகு
அங்கேயே இணை வைப்பாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் நிறைவேறுகிறது.
ஒப்பந்தம் எழுத்தாகி விட்ட போது முஸ்லிம்களிடம் முடியை மழித்துக் கொள்ளுங்கள் என்று
நபிகள் நாயகம் கூறுகிறார்கள். ஆனால் இணைவைப்பாளர்கள் விதித்த பல நிபந்தனைகளை ஏற்றுக்
கொண்டு ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிவானதால் இணை வைப்பாளர்களுக்குப் பணிந்து போய் விட்டோமே
என்ற ஆதங்கத்தில் நபித்தோழர்கள் யாரும் நபியின் கட்டளைக்கு செவி சாய்க்கவில்லை.
இப்போது
நபி ஸல் அவர்கள் தம் கட்டளைக்கு செவிசாய்க்காத தோழர்கள் குறித்து தம் மனைவி உம்மு ஸலமா
(ரலி) அவர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் படியே நடந்தார்கள். நபியவர்களின் பிரச்சனையும்
தீர்ந்தது என்பதை வரலாற்றில் அறிகிறோம்.
உம்மு சலமா அவர்கள் அப்படி என்ன ஆலோசனை வழங்கினார்கள் என்பது
பின்வரும் செய்தியில் இடம்பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு
தம் தோழர்களை நோக்கி, "எழுந்து சென்று குர்பானி கொடுத்து
விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்)
உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியை(யும், அதனால் அவர்கள் தமக்குக் கீழ்ப்படியாமலிருப்பதையும்) சொன்னார்கள்.
உடனே உம்மு சலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடி
களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி களையப்) புறப்படுங்கள்.
நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி ஒட்டகங்களை
அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும்
பேசாதீர்கள்'' என்று (ஆலோசனை) கூறினார்கள்.
உடனே, நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி
கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை
அவர்களில் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை
அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள்.
ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு (தியாகப் பிராணிகளை அறுக்கவும்
முடி களையவும்) சென்றனர்.
நூல்: புகாரி 2732
பொதுவாக
ஆண்கள் ஆலோசனை கேட்பதென்பதே அரிது. அதிலும் பெண்களிடம், மனைவியிடம்
ஆலோசனை கேட்பது அரிதிலும் அரிது.
தான்
ஓர் இறைத்தூதராக இருந்தும்,
இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்தும் தன்னிகரற்ற தலைவராக இருந்தும்
நெருக்கடியின் போது தம் மனைவியிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆலோசனை பெற்றிருப்பது
நபியவர்களின் வாழ்க்கையில் ஆலோசனைகளுக்குப் பெரும் பங்கிருப்பதைச் சந்தேகமற உணர்த்தி
விடுகிறது.
இறைத்தூதராகவும், சிறந்த
அறிவாளியாகவும்,
போர் வியூகராகவும் திகழ்கிற நபிகள் நாயகம் மற்றவரிடம் ஆலோசனை
கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
இருப்பினும்
ஆட்சித்துறை சம்பந்தமாகவும், குடும்ப தொடர்பாகவும் ஆலோனை கேட்டிருக்கிறார்கள்
என்றால் குர்ஆன் வசனங்களையே தம் வாழ்க்கையாக ஏற்று நடந்துள்ளார்கள் என்பதும், குர்ஆனின்
கட்டளைகளுக்கு அப்பால் நபியின் வாழ்க்கை இருக்கவில்லை என்பதுமே நாம் இவற்றிலிருந்து
அறிய வேண்டிய முக்கிய பாடமாகும். காரணம், நபியின் வாழ்க்கை குர்ஆனாகவே
இருந்தது.
அல்லாஹ்வை
அஞ்சுவீராக!
குர்ஆன்
நபிகளாருக்கு இட்ட கட்டளைகள் என்று பார்த்தால் அதில் முக்கியமானதாக இந்த வசனமும் இடம்
பெறுகிறது.
நபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! (ஏகஇறைவனை) மறுப்போருக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்! அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 33:1
இறைத்தூதரும்
இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்பதை நாசூக்காக அல்லாமல் நேரடியாகவே அல்லாஹ் இவ்வசனத்தில்
கட்டளையிட்டுவிட்டான்.
நபிகள்
நாயகம் அவர்களும் தம் வாழ்க்கை முழுக்க இக்கட்டளைக்கு உயிர் கொடுப்பவர்களாகவே இருந்தார்கள்.
இன்னும்
சொல்வதானால் நபிகளார் தம் வாழ்க்கை முழுவதையும் குர்ஆனைக் கொண்டு அழகுபடுத்தியதற்கு
முக்கிய காரணியே அவர்களுக்கிருந்த அல்லாஹ்வின் பயம்தான்.
இறைபயத்தை
தம் உள்ளத்தில் ஆழமாக இருத்திக் கொண்டதாலேயே ஓர் ஒப்பற்ற, பரிசுத்த
வாழ்க்கையை நபியினால் வாழ முடிந்தது.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் நிற்கும் போதும், நடக்கும் போதும், உண்ணும்
போதும், உறங்கும் போதும் எதிரிகளிடத்திலும் குடும்பத்தார்களிடத்திலும் என எல்லா நிலையிலும்
இறை அச்சத்தைக் கொண்டே செயல்பட்டுள்ளார்கள்.
நபியவர்களின்
இறைபயத்திற்குச் சான்று பகர்பவையாக அவர்களின் முழு வாழ்க்கையும் இருந்தாலும் உதாரணத்திற்கு
ஓரிரு சான்றுகளை அறியத் தருகிறோம்.
மரத்தின்
அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஜகாத், நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு
வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது
பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே
விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம்
வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு முஹம்மதின்
குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா? எனக்
கேட்டார்கள்.
அறிவிப்பவர்
: அபூஹுரைரா (ரலி)
நூல்
: புகாரி 1485
தர்மப்
பொருள்களை நபியின் குடும்பத்தார் உண்ணக் கூடாது என்பது இறைச்சட்டமாகும். ஆனால் தர்மப்பொருளான
பேரீச்சம் பழத்தை நபியின் பேரப்பிள்ளை ஒருவர் எடுத்து உண்டுவிட்டார்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் விளையாட்டுப் பிள்ளை தானே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல்
தமது கண்டனத்தையும்,
கோபக்கனலையும் அந்தச் சிறுவரிடம் நபிகளார் பதிவு செய்கிறார்கள்.
பேரப்பிள்ளையின்
வாய்க்குள் விரலை விட்டு அதை வெளியேற்றுகிறார்கள் என்றால் என்ன காரணம்?
தம்
கண்முன்னே தம் குடும்பத்தார் இறைவன் தடுத்ததைச் செய்து விடக்கூடாது என்ற இறை அச்சமே
காரணமாகும் என்பதை எவரும் அறியலாம்.
அதே
போன்று இன்னொரு சம்பவத்தை பாருங்கள்.
நபி
(ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை தொழுவித்துவிட்டு உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல்
வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன்; அல்லது கேட்கப்பட்டது
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் எனது வீட்டில் தர்மப் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன்; அப்பொருளுடன்
இரவைக் கழிக்க விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்துவிட்டேன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்
: உக்பா பின் ஹாரிஸ் (ரலி)
நூல்
: புகாரி 1430
இச்சம்பவத்தில்
சொல்லப்படுவதென்ன?
தர்மப்
பொருள்களுடன் ஒரு நாள் இரவைக் கழிப்பதைக் கூட நபிகளார் விரும்பவில்லை. தாமதமின்றி அதை
உரியவர்களிடத்தில் ஒப்படைத்து விட வேண்டும் என்ற நபியின் பேரார்வத்திற்கு இறை அச்சத்தைத்
தவிர வேறு காரணம் எதுவுமில்லை.
இவ்வாறாக
நபிகள் நாயகத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கை நிகழ்வுகளினூடே இறை அச்சம் கொப்பளிப்பதை உணரலாம்.
குர்ஆன் வேறு,
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வேறல்ல. குர்ஆன் ஒளியே நபிகளாரின்
வழி என்பதை அறியலாம்.
EGATHUVAM JULY 2016