Feb 13, 2017

கதியே தாரும் எங்கோனே

கதியே தாரும் எங்கோனே!
நாகூர் இப்னு அப்பாஸ்

இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம்.

இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்ற கருத்துக்கள் இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் எவ்வாறு மார்க்கத்திற்கு முரண்படுகிறது என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அறிந்து வருகிறோம்.

அந்த வகையில், நாகூர் ணி.வி. ஹனிஃபா அவர்கள் பாடிய கதியே தாரும் எங்கோனே எனும் பாடலின் விஷம கருத்துக்களைப் பற்றி இம்மாதம் அறியவிருக்கின்றோம்.

நம்முடைய வாழ்க்கைக்காக, ஆரோக்கியத் திற்காக, குடும்பத்திற்காக இன்னும் பல விஷயங்களுக்காகவும் உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ் ஒருவனிடமே தஞ்மடைந்து பிரார்த்தனைகளை முன்வைக்க வேண்டும்.

அவ்வாறின்றி, படைத்தவனை விட்டுவிட்டு படைப்பினங்களிடம் பிரார்த்திப்பது, தஞ்சம் கேட்பதெல்லாம் இறைவனுக்கு இணைகற்பிக்கின்ற காரியமாகும்; இஸ்லாத்திற்கு எதிரானதாகும்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

உங்களுக்கு வேதனை வந்து, உங்களுக்கு உதவி செய்யப்படாத நிலை வருவதற்கு முன் உங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு அவனிடமே திரும்புங்கள்!
அல்குர்ஆன் 39:53, 54

நோய், வறுமை, கஷ்டம், பிரிவுகள், என்று எவ்விதமான சோதனைகள் இறைவன் புறத்திலிருந்து வந்தாலும் அவனது அருளை விட்டும் நாம் நிராசை அடைந்துவிடக் கூடாது. நமது கோரிக்கைகள் அனைத்தையும், நமது நம்பிக்கை முழுவதையும் அவனிடமே சமர்பிக்க வேண்டும்; சரணடைய வேண்டும். இதுவே இஸ்லாத்தின் அடிப்படை.

இந்த அடிப்படையைத் தகர்த்து விட்டு, இதற்கு நேர்எதிர் பாதையிலே தான் தனது கதியே தாரும் எங்கோனே எனும் பாடலை அரங்கேற்றியிருக்கிறார் எழுத்தர்.

கதியே தாரும் எங்கோனே;
கடல் நாகூர் மீரானே;
குணம் நாடி வந்தேனே;
கதியே தாரும் எங்கோனே.

இவ்வாறு இப்பாடலின் முதல் அடி துவங்குகிறது.

கதி என்ற வார்த்தை ஓரிரு அர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் தஞ்சம் என்ற பொருள்.

கடலோர பகுதியான நாகூரில் அடங்கியிருக்கும் ஷாகுல் ஹமீதே நான் குணம் பெற வேண்டும் என்பதற்காக தங்களிடம் தஞ்சமடைந்துள்ளேன் என்று இம்முதல் அடியில் கூறுப்படுகிறது.

ஒரு மனிதர் எத்தகைய நற்குணத்தைப் பெற்றிருந்தாலும், நல்லடியாராகத் திகழ்ந்தாலும் அவருக்கு மனித தன்மையைத் தாண்டி வேறு எந்த ஆற்றலும் அதிகரிக்காது.

அவர் நல்லடியாரா? இல்லையா? என்பதும் கூட இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அவ்வாறிருக்க ஒரு மனிதரை இவர்களாக நல்லடியார் என்று கற்பனை செய்து கொண்டு, அவர் இறந்து மண்ணோடு மண்ணாக ஆகியிருந்தும் அவர் உயிருடன் இருக்கின்றார் என்று பகல் கனவு கண்டு இறை ஆற்றலை அவருக்கு வழங்குகின்றனர்.
ஒரு மனிதன் இறந்து விட்டால் அத்துடன் அவனது உலகத் தொடர்பு அனைத்தும் முறிந்து விடுகிறது என்பதை இதற்கு முந்தைய தொடரில் குறிப்பிட்டு இருக்கின்றோம்.
ஒரு வாதத்திற்கு தர்காவாதிகள் கூறுவது போல நல்லடியார்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஆற்றல் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், அந்த நல்லடியார் என்ற அந்தஸ்த்திற்கு அதிகம் தகுதி படைத்தவர்கள் நபிமார்கள்.

அந்த நல்லடியார்களான நபிமார்கள் கூட நோயுறும் போது தங்களுக்குத் தாங்களே நிவாரணம் செய்துக் கொள்ள முடியவில்லை. இறைவனின் நிவாரணத்தையே எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். (என்று இப்ராஹிம் கூறினார்)
அல்குர்ஆன் 26:80

இவ்வுலகில் இறைவன் புறத்திலிருந்து எத்தகைய பரீட்சைகள் தனக்கு வந்தாலும் அவற்றில் பொறுமை காத்து வென்று காட்டியவர். இறைவனது உற்ற தோழர் என்று நற்சான்று வழங்கப் பெற்றவர் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.

அத்தகைய ஒரு நல்லடியாரே, தான் நோயுறும் போது அல்லாஹ்வே நிவாரணம் தருகிறான் என்று கூறுகிறார். இவ்வாறு கூறுவதிலிருந்தே தனக்கு அந்த ஆற்றல் இல்லையென்றும் ஒப்புக்கொள்கிறார்கள்.

இப்ராஹீம் நபிக்கே அந்த ஆற்றல் இல்லை எனும் போது, ஷாகுல் ஹமீதுக்கு இருக்கிறது என்று எவ்வாறு கூறுகின்றீர்கள்?

இப்ராஹீம் நபியை விட அவர் உயர்ந்து விட்டாரா? அல்லது இப்ராஹீம் நபியை விட சிறந்த நல்லடியாராக இருக்கின்றாரா?

இப்ராஹீம் நபி மட்டுமல்லாமல் அய்யூப் (அலை) அவர்கள் தான் நோயுறும் போது கூட இறைவனிடம் தான் தஞ்சம் அடைந்தார்கள்.

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்’’ என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
அல்குர்ஆன் 21:83, 84
இன்னும் நபி(ஸல்) அவர்கள் தமது கடைசி காலத்தில் இருவர் அடையும் துன்பம் அளவுக்கு கடுமையான நோயினால் தாக்கப்பட்டு மயக்கமுற்று விழுந்து கொண்டேயிருந்தார்கள்.

நல்லடியார்களால் நோய் நிவாரணம் தர இயலும் என்றால் இந்த நபிமார்கள் தங்களுக்குத் தாங்களே நிவாரணம் அளித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், அனைத்து நபிமார்களும் தங்களுக்கு ஏற்படும் கஷ்டத்தின் போதெல்லாம் அல்லாஹ்விடம் தான் கையேந்தினார்கள்.

ஆனால் இப்பாடலோ இஸ்லாத்திற்கு முரணாக நல்லடியார்கள் நிவாரணம் தருவார்கள் என்று கூறுகிறது.

அல்லாஹ்வை விடுத்து நாகூராரையே தங்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பதற்கு இப்பாடல் சான்றாக இருக்கிறது.

இப்பாடலின் மற்றொரு வரி இதை இன்னும் உறுதிப்படுத்துகிறது.

மதியில்லா மாந்தரை திருத்திய தேவா

இந்த வரியில் தேவா என்று நாகூராரை அழைக்கின்றார்.

தேவன் என்றார் கடவுள் என்று அனைவருக்கும் தெரியும்.

ஷாகுல் ஹமீதை கடவுள் என்று அழைத்து இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் கருத்தை இப்பாடலின் மூலம் தெரிவிக்கின்றார்.
இது இஸ்லாமியப் பாடலா? அல்லது இஸ்லாத்திற்கு எதிரான பாடலா? என்பதை இந்த ஒரு வரியே தெரிவித்த விடுகிறது.

இன்னும் இதற்கு அடுத்த வரிகளை கவனியுங்கள்.

முஹம்மது நபியின் பேரரே
மாணிக்கப்பூர் சீரே
சுகம் தர வாரீரே

மாணிக்கப்பூரைச் சார்ந்த நாகூரார் முஹம்மது நபியின் பேரன் என்றும் அவர் தனக்கு சுகம் தருகிறார் என்றும் கூறுகிறார்.

இவர் நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வழியில் பேரர் ஆனார் என்பதைப் பற்றி சென்ற மாத இதழில் கேட்டிருந்தோம்.

மேலும், சுகம் தருவதற்காக ஷாகுல் ஹமீத் வருகிறார் என்றும் குறிப்பிடுகிறார். குணம், சுகம் தருவதெல்லாம் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்று மேலே கண்டுவிட்டோம்.

எளியவர்க்கிறங்கும் ஈகை உள்ளாளா
எம்மதத்தோர்க்கும் அருளும் தயாளா

ஈகை என்றால் கொடை, அருள் என்று பொருள். தயாளன் என்றாலும் கொடைவள்ளல், அருளாளன் என்று பொருள்.

எளியவர்களுக்கும், அனைத்து மதத்தினருக்கும் அருள் பொழிகின்ற அருளாளராக நாகூர் மீரான் திகழ்வதாக இவ்வரிகளில் கூறி, தான் அல்லாஹ்விற்கு அடிமையல்ல நாகூர் மீரானிற்கே அடிமை என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கின்றார்.

அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்’’ என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 3:73

அருள் புரிதல் என்பது இறைவனது அதிகாரத்திற்குட்பட்ட விஷயம்.
அத்தகைய ஆற்றலை சாதாரண இறந்த பிரேதத்துக்கு வழங்கி, தங்களது கப்ரு பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

 EGATHUVAM DEC 2016