Feb 13, 2017

அலட்சியத்தால் ஏற்படும் குழப்பங்கள்

அலட்சியத்தால் ஏற்படும் குழப்பங்கள்
இரண்டாம் ஆண்டு மாணவியர்
கும்பகோணம் அந்நூர் மதரஸா
குழப்பங்கள் சூழ்ந்த காலம் என நம்முடைய மார்க்கம் எதை எச்சரித்ததோ அத்தகைய காலத்தில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம்.
நமக்கு முந்தயை சமுதாயங்கள் எந்தெந்த பாவங்களுக்காக அழிக்கப்பட்டதோ அந்தப் பாவங்கள் அனைத்தும் நம்முடைய சமுதாயத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், கல்வி, சமூகம் உட்பட என அனைத்து விஷயங்களிலும் நாம் குழப்பங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.
எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டாலும் ஓர் இறை நம்பிக்கையாளன் அந்தக் குழப்பங்களிலிருந்து தனது ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள அதிலிருந்து விலகிவிட வேண்டும்.
ஆனால், நம்மில் பலர் ஈமானுக்கு ஊறு விளைவிக்கும் அந்த ஃபித்னாக்களின் விஷயத்தில் அசட்டையாக இருக்கின்றோம்.
குழப்பங்களைக் குறித்து நபிகளாரின் எச்சரிக்கை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மிடையே குழப்பங்கள் மழைத் துளியைப் போல் வந்தடையும் என்று எச்சரித்துள்ளார்கள்.
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி), “நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப்போவதைப் பார்க்கிறேன்’’ என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 5528
இந்த நபிமொழியை உண்மைப்படுத்தும் விதமாக இன்றைக்கு மனிதன் அடுக்கடுக்கான குழப்பங்களைச் சந்திக்கின்றான்.
குடும்பமும் குழப்பங்களும்
குடும்பங்களில் ஏராளமான குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், கணவனின் சகோதரனால் ஏற்படும் குழப்பங்கள்தான் அதிகம்.
ஒருவன் தனது சகோதரனின் மனைவியோடு பழகுவது சர்வ சாதாரணமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இருவரும் சகஜமாக பழகிக் கொண்டு ஒருவரையொருவர் கேலி, கிண்டல் செய்து கொள்ளுதல், விளையாடுதல் போன்ற அபத்தமான காரியங்கள் மார்க்கத் தொடர்பற்ற சில குடும்பங்களில் நடந்தேறுகின்றது.
ஆனால், இஸ்லாம் அந்நிய ஆண்களின் பட்டியலில் தான் கணவனின் சகோதரனையும் சேர்க்கிறது.
மற்ற ஆடவர்கள் முன் பெண்கள் எவ்வாறு இஸ்லாம் கற்றுத்தந்த ஒழுக்கத்தைப் பேண வேண்டுமோ அவ்வாறுதான் கணவனின் சகோதரனுக்கு முன்னாலும் பேணி நடக்க வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது.
இன்னும் சொல்வதென்றால், கணவனின் சகோதரர்களிடம் தான் அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால், அவர்களைத்தான் நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு நிகர் என்று எச்சரித்தார்கள்.
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்’’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5232
ஆனால், இன்றைக்கு மக்கள் இதைக் கருத்தில் கொள்ளாமல் அலட்சியம் செய்வதே இருவருக்குமிடையே தவறான உறவுக்கு வழி வகுக்கிறது. இது குடும்பங்களில் பெரும் குழப்பத்தை அரங்கேற்றி விடுகிறது.
கல்வியும் குழப்பமும்
கல்வி பறிக்கப்படுவதையும், குழப்பங்கள் அதிகரிப்பதையும் மறுமை நாளின் அடையாளம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘(உலக முடிவு நாளின் போது) கல்வி கைப்பற்றப்பட்டுவிடும். அறியாமையும் குழப்பங்களும் வெளிப்பட்டு (பரவி) விடும். கொந்தளிப்பு (ஹர்ஜ்) மிகுந்துவிடும்’’ என்று கூறினார்கள். அப்போது ‘‘கொந்தளிப்பு என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்கப்பட்டது. நபியவர்கள் தமது கையால் இப்படிஎன்று கொலை செய்வதைப் போன்று பாவனை செய்து காட்டினார்கள்.
நூல்: புகாரி 85
கல்வி என்பது மனிதனின் அறிவையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்த உதவ வேண்டும்.
ஆனால் இன்றைக்கு இருக்கின்ற கல்வி முறை மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை வழி காட்டுவதற்குப் பதிலாக ஒழுங்கீனத்தையே புகட்டுகிறது.
குறிப்பாக, கோ எஜுகேஷன் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கின்ற பள்ளி கல்லூரிகள் தான் நாட்டில் ஒழுக்கக் கேடு அதிகரிப்பதற்கு முதற்காரணமாக இருக்கின்றது.
இதனால், இளம் வயதில் கல்வியைத் தொலைத்து விட்டு, காதல் என்ற காமக் களியாட்டங்களில் மாணவ மாணவியவர்கள் ஈடுபட்டு தங்களது கற்பை இழக்கின்ற பெரும் துயரம் ஏற்படுகிறது.
இந்தக் கல்வி முறை, பெரும் குழப்பத்தை விளைவிப்பதோடு கல்வியற்றவர்களாகவே மாணவர்களை உருவாக்குகிறது.
இன்றைய இளைஞர்களே எதிர்காலத் தலைவர்கள் என்று சொல்லப்படும். ஆனால் அந்த இளைய சமுதாயத்தை சரியான முறையில் வார்த்தெடுக்கின்ற கடமையில் தவறு இழைக்கிறார்கள் கல்வியை போதிக்கக் கூடியவர்கள்.
இதுபோல் சமுதாயத்தில் குழப்பங்கள் வலம் வரக் காரணம் அறிவீனர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது தான்.
இந்த நிலையும் மறுமை நாளின் அடையாளம் என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), ‘‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப் பட்டுவிட்டால் மறுமை நாளை நீ எதிர்பார்க்கலாம்’’ என்று கூறினார்கள். அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?’’ என்று கேட்டார். அதற்கு ‘‘(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 6496
குழப்பங்களிலிருந்து விடுபட...
மேற்சொன்ன குழப்பங்களைப் போன்று இன்னும் ஏராளமான குழப்பங்கள் இருள் சூழ்வதைப் போல் நம் சமுதாயத்தைச் சூழ்ந்துள்ளன.
இதுபோன்ற காரியங்கள் நம் மறுமை வாழ்விற்கு ஆபத்தானது, ஈமானை சீண்டிப் பார்க்கக்கூடிய குழப்பங்கள் என்று நமக்கு தெரிந்ததும் அவற்றில் விழிப்படைந்து கொள்ள வேண்டும்; விலகி நிற்க வேண்டும்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘‘ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தை (குழப்பங்களின் வடிவில் வரும்) சோதனைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மலைகளின் உச்சிக்கும் மழை பொழியும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் தனது ஆடுகளை ஓட்டிக்கொண்டு வெருண்டோடுவார். அப்போது ஒரு முஸ்லிமின் செல்வத்திலேயே சிறந்ததாக (அந்த) ஆடுகள்தான் இருக்கும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 19
எனவே, நம்முடைய மார்க்கத்திற்கும் மனசாட்சிக்கும் புறம்பான காரியங்கள், குழப்பங்கள் எதுவாயினும் அதைவிட்டு விலகியிருப்பதுதான் நாம் முஸ்லிமாக நம்முடைய வாழ்வைத் தொடர்வற்கு உகந்த செயலாக இருக்கும்.

 EGATHUVAM DEC 2016