Feb 19, 2017

நமனை விரட்ட மருந்தொன்றிருக்குது நாகூர் தர்காவிலே!

நமனை விரட்ட மருந்தொன்றிருக்குது நாகூர் தர்காவிலே!

இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் மரணித்தே தீரும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அல்லாஹ் மட்டுமே மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.

அல்குர்ஆன் (55: 26,27)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

அல்குர்ஆன் (3: 2)

"நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.

அல்குர்ஆன் (4: 78)

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் (29: 57)

"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (32:11)

இந்த வசனங்களும், இதுபோன்ற இன்னும் ஏராளமான வசனங்களும் அல்லாஹ்வைத் தவிர அனைவரும் மரணிக்ககூடியவர்கள்தான். மேலும், ஒவ்வொருவருடைய உயிரையும் அவர்களுக்கென்று இறைவனால் நியமனம் செய்யப்பட்ட வானவர் கைப்பற்றுவார் என்ற இந்த அடிப்படையை நமக்கு எடுத்துரைக்கிறது.

அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வைத் தவிர அனைவரும் மரணிப்பவர்களே என்ற இந்த சித்தாந்தத்தை ஆழமாக நம்ப வேண்டும். அவ்வாறு நம்பினால்தான் அவர் இறைநம்பிக்கையாளராகக் கருதப்படுவார்.

அவ்வாறில்லாமல், மனிதனும் மரணிக்காமல் சாகாவரம் பெறலாம் என்று நம்பினால் அது நரகிற்கு அழைத்துச் செல்லும் தெளிவான இணைவைப்பே!

இதுபோன்று இஸ்லாத்திற்கு எதிரான ஒரு அடிப்படையைத்தான் நமனை விரட்டஎன்று துவங்கும் நாகூர் ஹனிபாவின் பாடல் தெரிவிக்கின்றது.

நமனை விரட்ட மருந்தொன்றிருக்குது நாகூர் தர்காவிலே!

அன்பு நாணயம் கொண்டு சென்றால், பெறலாம் குருநாதர் பதப்பூவிலே

விஞ்ஞான பண்டிதர் ஷாஹுல் ஹமீது ஒலி விற்கும் அருமருந்து

அது அஞ்ஞான அந்தகாரத்தை விலக்கும் அருளெனும் மாமருந்து

இதுதான் அந்த பாடலின் ஆரம்ப வரிகளாகும்.

நமன்என்றால் தமிழில் எமன்என்று பொருளாகும். எமன் என்ற வார்த்தை உயிரைக் கைப்பற்றுபவர் என்ற அர்த்தத்தில் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

அன்போடும், பக்தியோடும் நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் ஷாகுல் ஹமீதைத் தரிசித்தால், உயிரைக் கைப்பற்றுவதற்கு இறைவனால் நியமனம் செய்யப்பட்ட வானவரை விரட்டி விட்டு நாம் மரணிக்காமல் இருந்து விடலாம் என்று இந்த வரிகள் கூறுகிறன.

வானவர்கள் என்பவர்கள் இறைவன் கட்டளையிட்ட விஷயத்தை மட்டுமே செய்வார்கள். அவனுக்கு ஒருபோதும் மாற்றம் செய்ய மாட்டார்கள்.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

அல்குர்ஆன் (16: 49, 50)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் (66: 6)

இறைக் கட்டளைப்படியே நடப்பது வானவர்களின் இயற்கை குணம். மனிதர்களின் மீது இரக்கம் அல்லது பாசம் கொண்டு இறைக் கட்டளைக்கு மாறு செய்து விடமாட்டார்கள் என்று மேற்கண்ட வசனங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தப் பாடலோ வானவர்கள் நாகூர் ஷாகுல் ஹமீதுக்குக் கட்டுப்பட்டு அவருடைய பக்தர்களின் உயிரைக் கைப்பற்றாது விட்டுவிடுவார்கள் என்று கூறி இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்றது.

மேலும், நாகூரில் தரிசித்த பின் ஒருவர் சாகாவரம் பெற்று விடலாம் என்ற விஷமக் கருத்தையும் இப்பாடல் தெரிவிக்கின்றது.

இந்தப் பாடல் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு மாற்றமாக இருப்பது ஒரு புறமிருக்க, நிதர்சனத்திறக்கும் கூட மாற்றமாக இருக்கிறது.

யாரிடம் மரணத்தை விரட்டும் மருந்திருக்கிறது என்று இப்பாடல் சொல்கிறதோ அந்த ஷாகுல் ஹமீது கூட மரணித்து அடக்கம் செய்யப்பட்டுத்தான் இருக்கின்றார்.

நாகூராரால் தன்னுடைய மரணத்தையே தடுக்க முடியாதபோது மற்றவர்களின் மரணத்தை எவ்வாறு தடுக்க இயலும்?

இன்னும், இந்த பாடலைப் பாடிய நாகூர் ஹனிஃபா சமீபத்தில் மரணித்தார். அவராலும் மரணப் பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை.

இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் மரணிப்பவர்கள்தான். அவர்கள் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் சரியே!

இந்த உலகிலேயே அல்லாஹ் தனது உற்ற தோழனாக தேர்ந்தெடுத்துக் கொண்ட நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கூட மரணித்து விட்டார்கள்.

மேலும், மனிதர்களிலேயே அல்லாஹ்வை அதிகம் அஞ்சி நடப்பவர்கள் நபிமார்கள். அந்த நபிமார்களும் கூட மரணித்து  விட்டார்கள்.

இப்படி இந்த உலகில் ஒரு மனிதன் எவ்வளவுதான் பக்தியோடு இருந்தாலும் அவன் மரணிப்பதை விட்டும் அது துளியளவும் தடுத்து விடாது.

நபி(ஸல்) அவர்கள் மரணித்த நிகழ்வைக் காணுங்கள்…,

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அபூபக்ர் (ரழி) அவர்கள் (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) "ஸுன்ஹ்' என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் எழுந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான்- நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான்- தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி-ஸல்- அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்'' என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரழி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, "தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டான்'' என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.

(வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) "(நபி -ஸல்- அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்'' என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரழி) அவர்கள் பேசிய போது உமர் (ரழி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

அப்போது, அபூபக்ர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, "எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் "அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்'' என்று சொன் னார்கள். மேலும், "நபியே! நீங்களும் இறக்கவிருப்பவர் தாம்; அவர்களும் இறக்கவிருப்பவர்களே' என்னும் (39:30-ம்) இறை வசனத்தையும், "முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப் பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்' என்னும் (3:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

நூல்: புகாரி  3670

நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது அவர்கள் மீது அளப்பெரிய பாசம் கொண்ட நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்று மறுக்கின்றார்கள். அப்போது, அபூபக்கர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையை, திருக்குர்ஆன் வசனத்தை ஆதாரம் காட்டி தெரியப்படுத்துகின்றார்கள்.

எனவே, எந்த மனிதனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்பவும் முடியாது, யாரையும் தப்பிக்கச் செய்யவும் இயலாது.

இந்த ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி இந்தப் பாடல் இஸ்லாத்திற்கு எதிரானது என்று நாம் கூறிகிறோம்.

அவ்வாறு கூறும் போது, ஒரு சிலர் நமன்என்ற வார்த்தைக்கு எமன்என்பது பொருள் அல்ல. நோய்என்று தான் அர்த்தம் என கூறுகின்றார்கள்.

இவ்வாறு கூறுபவர்கள், தங்களை ஏதோ இஸ்லாத்தின் மூல ஆதராங்களைத் தூக்கி நிறுத்த முன்வருபவர்களைப் போன்று நினைத்துக் கொள்கின்றனர்.

ஆனால் இவர்கள் மீண்டும் இஸ்லாத்தின் அடிப்படையை மறுத்து ஹனிபா பாடலுக்கு உயிர் கொடுக்கின்றார்கள்.

ஏனெனில், எவ்வாறு மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பது அல்லாஹ்விற்கு மட்டும் உள்ள தன்மையோ அதுபோன்று நோய் நிவாரணம் அளிப்பதும் அவனுடைய அதிகாரத்திற்கு மட்டும் உட்பட்ட விஷயமாகும்.

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

அல்குர்ஆன் (26: 80)

மனிதன் எவ்வளவு பெரிய அல்லது சிறிய நோயினால் பாதிக்கப்பட்டாலும், அதற்கான மருந்துகளை அவன் உட்கொண்டாலும், நிவாரணம் அளிப்பது என்பது அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது.

மேலும் இந்தப் பாடலில், இந்த மருந்து குறிப்பிட்ட நோய்க்குத்தான் நிவாரணம் தரும் என்றில்லை. அனைத்து பிணிகளையும் தீர்க்கும் நிவாரணியாக இருக்கிறது. இதை சந்தேகத்துடன் புசிப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது. ஷாகுல் ஹமீது மீதுள்ள முழு பக்தியோடு பருகினால்தான் நிவாரணம் கிடைக்கும் என்றெல்லாம் இந்த மருந்தைப் பற்றி ஏராளமான கப்சாக்களைத் தொடர்ந்து கொண்டே இப்பாடல் முடிவடைகிறது.

நோய் நிவாரணம் தருபவன் அல்லாஹ் ஒருவனே என்ற இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாக ஷாகுல் ஹமீதை நாம் பக்தியோடு அணுகினால் சர்வ நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என்று இப்பாடல் வரிகள் இஸ்லாத்தின் ஆணிவேரை அசைத்து பார்க்கிறது.

இந்த ஷாகுல் ஹமீது நல்லடியாரா? தீயவரா? என்றெல்லாம் நம்மால் அறிந்து கொள்ள முடியாது.

அதே சமயம், அவர் நல்லடியாராகவே  இருந்தாலும் அவரால் நோய் நிவாரணமெல்லாம் தர இயலாது.

ஏனெனில், அல்லாஹ்வின் தூதரும், நல்லடியாருமான அய்யூப் (அலை) அவர்கள் கடுமையாக நோய் வாய்ப்பட்டப்போது கூட அல்லாஹ்விடம் தான் நிவாரணம் தேடினார்கள்.

"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

அல்குர்ஆன்(21: 83, 84)

இன்னும் நபி (ஸல்) அவர்கள் கடைசி காலத்தில் இருவர் அடையும் துன்பம் அளவுக்கு கடுமையான நோயினால் தாக்கப்பட்டு மயக்கமுற்று விழுந்து கொண்டேயிருந்தார்கள்.

நல்லடியார்களால் நோய் நிவாரணம் தர இயலும் என்றால் இந்த நபிமார்கள் தங்களுக்கு தாங்களே நிவாரணம் அளித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், அனைத்து நபிமார்களும் தங்களுக்கு ஏற்படும் கஷ்டத்தின் போதெல்லாம் அல்லாஹ்விடம்தான் கையேந்தினார்கள்.

இந்தப் பாடல் சொல்லும் கருத்து இஸ்லாத்திற்கு முரணானது என்றால் நாம் மருத்துவர்களிடமே செல்லக் கூடாதா? என்று சிலருக்கு சந்தேகம் எழலாம்.

மருத்துவர்கள் என்பவர்கள் அவர்கள் நமக்கு நிவாரணம் தரவில்லை. நாம் நோயில் அவதிப்படும் போது நம்முடைய உடலுக்கு தேவையான வேதியியில் பொருள் எது என்று கண்டறிந்து அதை நமக்கு சிபாரிசு செய்கின்றார்கள்.

அந்த மருந்துகளை உட்கொண்டால் மாத்திரம் நமக்கு நிவாரணம் கிடைத்துவிடாது. இறைவனுடைய நாட்டம் இருக்க வேண்டும்.

ஆனால், ஷாகுல் ஹமீதினுடைய அருளால்தான் நமக்கு நிவாரணம் கிடைக்கிறது என்று இப்பாடல் வரிகளின் கருத்துக்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

இந்த பாடல் இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் உலா வருகிறது.

இது இஸ்லாமியப் பாடல் அல்ல. மாறாக, இஸ்லாத்தின் அடிப்படைகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் பாடல்.


இதை நாவினால் முணுமுணுத்தால் கூட இறைவனுக்கு இணைகற்பித்தல் என்ற பெரும் பாவத்தைச் சம்பாதித்தவர்களாக ஆகி விடுவோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

EGATHUVAM JULY 2016