Feb 19, 2017

அருள் மறை வசனங்களின் சிறப்புகளும் அருளப்பட்ட காரணங்களும் அபு அம்மார் தொடர்: 2

அருள் மறை வசனங்களின் சிறப்புகளும் அருளப்பட்ட காரணங்களும் தொடர்: 2
அபூ அம்மார்

தொழுகையை நிறைவாக்கும் சூரத்துல் ஃபாத்திஹா
அல்ஹம்து சூராவை ஃபர்லான, நஃபிலான அனைத்து தொழுகைகளிலும் கண்டிப்பாக ஓத வேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். அல்ஹம்து சூரா ஓதப்படாமல் தொழப்படும் தொழுகை குறை உடையது என்றும், முழுமையற்றது என்றும், அது தொழுகையே கிடையாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது.

அறிவிப்பவர் :  உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), நூல் : புகாரி 756

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவுபெறாததாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் ( 655)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ளதாகும். இதை மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), முஸ்லிம் (658)

அடியார்கள் மீது அல்லாஹ் விதித்துள்ள கடமைகளில் தலையாயது தொழுகை தான். அதற்கு நிகராக எந்தக் கடமையும் இல்லை. அந்தத் தொழுகையே ஃபாத்திஹா அத்தியாயம் ஓதப்படாவிட்டால் தொழுகையாக அங்கீகரிக்கப்படாது என்பதிலிருந்து ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்பு எத்தகையது என்பதை உணர முடியும்.

பாவமன்னிப்பு

ஜமாஅத் தொழுகையின் போது இமாம் கைரில் மஃக்ளுபி அலைஹிம். வலள் ளால்லீன்என்று ஓதியவுடன் பின்னால் தொழுபவர்கள் ஆமீன்என்று சொன்னால் யாருடைய ஆமீன் மலக்குமார்களின் ஆமீன் கூறுகின்ற நேரத்துடன் ஒத்தமைகிறதோ அவருடைய முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில்) இமாம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று ஓதியவுடன் நீங்கள், ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று சொல்லுங்கள். ஏனெனில் எவர் ஆமீன்' கூறு(ம் நேரமா)வது வானவர்கள் ஆமீன்' கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (780)

முதல் வசனத்தின் சிறப்புகள்

சூரத்துல் ஃபாத்திஹாவின் முதலாவது வசனம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்என்ற வசனம் ஆகும். இதுதான் முதல் வசனம் என்று முடிவு செய்வதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருக்குர்ஆன் ஓதுதல் எவ்வாறு இருக்கும்?'' என்று அனஸ் (ரலி) அவர்களிடம் விசாரிக்கப்பட்ட போது, “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீட்டி, நிறுத்தி ஓதுவார்கள்'' என்று கூறிவிட்டு, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான், ரஹீம் என்ற வார்த்தைகளைக் நீட்டி ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா, நூல்: புகாரி 5046

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பு தான் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத் 669

அத்தியாயம் முடிந்ததன் அடையாளமாகப் பின்னால் வந்தவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமைச் சேர்க்கவில்லை என்பதையும், அது அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்பட்டது என்பதையும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் அது எழுதப்பட வேண்டும் என்பது இறைவன் புறத்திலிருந்து வந்த கட்டளையே என்பதையும், எனவே அது குர்ஆனின் ஒரு பகுதி என்பதையும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறங்கிய பின்பு தான்'' என்ற சொற்றொடர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் அல்ஹம்து சூராவை ஓதும் போது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்என்ற வசனத்திலிருந்து ஓதியதாகச் சில ஹதீஸ்களில் வந்துள்ளது. இதிலிருந்து நாம் அவர்கள் பிஸ்மில்லாஹ் ஓதமாட்டார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக அவர்கள் பிஸ்மில்லாஹ்வை சப்தமில்லாமல் ஓதியுள்ளார்கள் என்றே விளங்கிக் கொள்ள வேண்டும். இது தெளிவாகவே ஹதீஸ்களில் வந்துள்ளது.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்என்பதை சப்தமாக ஓதமாட்டார்கள்.

நூல் : இப்னு ஹிப்பான் 1802

பிஸ்மில்லாஹ்வை சப்தமில்லாமல் ஓதிவிட்டு அல்ஹம்து லில்லாஹ்என்பதிலிருந்து சப்தமாக ஓதிக்கொள்ள வேண்டும்.

பிஸ்மில்லாஹ் கூறுவதின் சிறப்புகள்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்ற இறை வசனத்திற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்என்று பொருள்.

முஸ்லிம்கள் தங்களின் எல்லாக் காரியங்களையும் இறைவனின் திருப்பெயர் கூறியே செய்து வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் மட்டுமின்றி, ஏனைய நபிமார்களும் அவர்களின் சமுதாயத்தினரும் இறைவனின் திருப்பெயர் கூறியே தங்கள் காரியங்களைத் துவங்கியுள்ளனர்.

நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் ஏறும் போது அல்லாஹ்வின் திருநாமத்தால் இதில் ஏறுங்கள்!'' என்று கூறியதாக திருக்குர்ஆனின் 11:41 வசனம் குறிப்பிடுகின்றது.

சுலைமான் (அலை) அவர்கள் அண்டை நாட்டு ராணிக்கு எழுதிய மடலில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்என்று எழுதியதாகத் திருக்குர்ஆனின் 27:30 வசனம் குறிப்பிடுகின்றது.

அது போன்று நபி (ஸல்) அவர்கள் ரோமாபுரி மன்னர் ஹிர்கல் அவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்த போதும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்என்று எழுதியே அழைப்பு விடுத்தார்கள்.

ஹிர்க்கல் அந்தக் கடிதத்தை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...  இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமா புரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின் பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.

(நூல் : புகாரி 7)

படைத்த உமது இறைவனின் திருப்பெயரால் நீர் ஓதுவீராக!'' என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனம். முதல் வசனத்திலேயே தனது திருநாமத்தால் ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதிலிருந்து பிஸ்மில்லாஹ்வின் மகத்துவத்தை நாம் தெளிவாக உணரலாம்.

திருக்குர்ஆனை ஓதும் போது மட்டுமின்றி எல்லாக் காரியங்களையும் இறைவனின் திருப்பெயர் கொண்டே நாம் துவக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்என்ற இதே சொல்லைத் தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. ஏனெனில் உண்ணும் போது, அறுக்கும் போது, உடலுறவு கொள்ளும் போது என்று பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) பிஸ்மிக்க (உன் பெயரால்) என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

மிகப்பெரும் ஆயுதம் பிஸ்மில்லாஹ்
பிஸ்மில்லாஹ்என்பது இறையுதவியைப்  பெற்றுத் தருகின்ற அற்புத வாசகம் ஆகும். அது போன்று ஷைத்தானை விரட்டி அடிக்கின்ற அற்புதமான துஆ ஆகும்.

பின்வரும் ஹதீஸ்களிலிருந்து பிஸ்மில்லாஹ்என்று கூறுவதின் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
  
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் மூன்று நாட்களாக எந்த உணவையும் ருசிக்காமல் அவர்கள் அகழ் தோண்டும் பணியிலேயே தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார்கள். அப்போது நபித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இங்கே மலைப் பாறாங்கல் உள்ளதுஎன்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதன் மீது தண்ணீரைத் தெளித்து வையுங்கள்என்று கூறினார்கள். அவர்ளும் தண்ணீரைத் தெளித்து வைத்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்து சம்மட்டி அல்லது கோடாரியை எடுத்து பிஸ்மில்லாஹ்” (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறி மூன்று தடவை அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. ஜாபிர் (ரலி) கூறுகிறார்கள்: நான் தற்செயலாக நபி (ஸல்) அவர்களைத் திரும்பிப் பார்த்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டியிருந்தார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் (14249)

நபியவர்கள் உண்ண உணவில்லாமல் மிகப் பசியுடன் இருந்த போதிலும் கூட பிஸ்மில்லாஹ்என்று கூறி பாறையை உடைத்த போது அல்லாஹ்வின் அற்புதத்தால் அந்தப் பாறை குறுமணலாக மாறியது. பிஸ்மில்லாஹ்என்பதின் சிறப்பை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.


பிஸ்மில்லாஹ்வின் மேலும் பல சிறப்புகளை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

EGATHUVAM JULY 2016