Feb 27, 2017

இணை (ஷிர்க்) ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?

இணை (ஷிர்க்) ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?

ஏப்ரல் 27, 2015 அன்று ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக் குழுவில் ஜனவரி 31, 2016 அன்று திருச்சியில் மாநில அளவிலான ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அனைத்து வேலைகளும் ஊக்கத் துடனும், உற்சாகத்துடனும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த வேளையில், வடகிழக்குப் பருவ மழை, சென்னை, கடலூர் பகுதிகளில் பேரிடரையும், பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தி விட்டது. இது, நம்முடைய சகோதரர்களின் மாநாட்டுப் பயணத்தில் ஒரு மாற்றுப் பாதையை ஏற்படுத்தி விட்டது.
மாநாட்டுக்காக வசூல் செய்ய இருந்த கொள்கைச் சகோதரர்கள் வெள்ள நிவாரண மனிதநேயப் பணியிலும், அதற்கான நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட வேண்டியதாயிற்று. மாநிலம் முழுவதிலிருந்தும் நம்முடைய மாவட்ட, கிளை நிர்வாகிகள், மாணவர் அணியினர் உள்ளிட்ட தொண்டர்கள் தீவாகக் கிடந்த தலைநகர் சென்னைக்கும், கடலாகவே மாறிப் போன கடலூருக்கும் தேனீக்களாகப் புறப்பட்டுச் சென்று  களப்பணி ஆற்றினர்.
கோபுரங்களாக  எழும்பி நின்ற குப்பைக் கூளங்களை வெள்ளம் தனது நினைவுச் சின்னமாக விட்டுச் சென்றது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடைக்கு அடுத்து உடனடியாகத் தீர்க்க வேண்டிய முதல் பிரச்சனை கோபுரமாகக் குவிந்து கிடந்த இந்தக் குப்பை மேடுகளும், குமட்டலைத் தந்த கழிவுகளும் தான்.
இராணுவத்தையும் மிஞ்சிய கட்டுக் கோப்புமிக்க படையைக் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது பல்லாயிரக்கணக்கான படையினரை  சென்னையில் களமிறக்கியது. "தெருத் தெருவாய் கூட்டுவது பொது நலத்தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடிப்பார் சுயம் நலம் உண்டு' என்ற பாடல் வரிகள் சொல்வது போன்று படம் காட்டாமல் மாநபி வழியில் மற்றவர்களுக்குப் பாடமாகவே ஆனார்கள். பம்பரமாகச் சுழன்று துப்புரவுப் பணியாளர்களாக மாறி, நகரத்தை குப்பைக் கூள நரகத்திலிருந்து மீட்டெடுத்தார்கள். அவர்களின் அந்தக் களப்பணி அனைத்து அரசியல் கட்சிகளையும் துடைப்பங்களைத் தூக்கி வரச் செய்து துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வைத்தது என்றால் அது மிகை அல்ல! அந்த அளவுக்கு அவர்கள் ஆற்றிய பணி அரும்பணியாக அமைந்து விட்டது.
மாநாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த தளர்வு அறியா இந்தத் தன்னார்வலர்களை, தன்னலமில்லாத தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்களை இடைமறித்த வெள்ள நிவாரணப் பணிகள்,  அதற்காக வசூல் செய்து முடித்து அந்த நினைவு கூட மாறவில்லை, அதற்குள்ளாக  மாநாட்டுக்குப் பொருள் திரட்ட முடியுமா? என்ற இயற்கையாக எழுகின்ற மலைப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து மாநாட்டைக் கொஞ்சம் தள்ளி வைத்தால் என்ன என்ற எண்ண ஓட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையின் ஆரம்பப் படிக்கட்டுகளில் அடியெடுத்து வைத்திருக்கின்ற, ஏகத்துவத்தின் பிடிமானம் இன்னும் வேர் பிடிக்காத சில புதுமுகங்களின் அடி மனதில் கூட "இவ்வளவு பெரிய செலவில் இப்படி ஒரு மாநாடு தேவை தானா?' என்ற வினாக்குறிகளும், வியப்புக் குறிகளும் எழுந்து நிற்கின்றன. அதற்குரிய விடையையும் விளக்கத்தையும் இப்போது பார்ப்போம்.
கோவையில் போக்குவரத்துக் காவல் துறையினர் திடீரென்று போக்குவரத்தை ஓரிரு நிமிடங்கள் நிறுத்துகின்றனர். ஷைரன் அலறலுடன் சர்ரென்று ஒரு கார் காற்றை மிஞ்சிய வேகத்தில்  சாலையில் பறக்கின்றது. யாரோ அமைச்சர் வருகின்றார்; அரசியல் தலைவர் வருகின்றார்; அல்லது எங்கோ தீப்பற்றி எரிகிறது அதனால் தீயணைப்பு வாகனம் விரைகிறது என்று வியப்புடன் விழிப் புருவங்களை உயர்த்தி பார்க்கின்றனர்.
ஆனால், அவர்களின் எண்ணங் களுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் நேர் எதிராக ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்து செல்வதைப் பார்க்கின்றார்கள். விடை தெரியாமல் அங்கிருந்து விடை பெற்று வீட்டுக்குச் சென்று விடுகின்றனர்.
சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் மூளைச் சாவு காரணமாக  முடங்கிக் கிடந்த ஒருவரின் இதயம், விமான மூலமாக இரண்டு மணி நேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட ஒருவருக்குப் பொருத்துவ தற்காக எடுத்துச் செல்லப்பட்ட போது போக்குவரத்து ஒரு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.  உரிய நேரத்தில் நோயாளிக்கு உறுப்பு பொருத்தப் பட்டு, அவரும் உயிர் பிழைத்துக் கொண்டார்.
கோவையில் போக்குவரத்து ஏன் நிறுத்தப்பட்டது என்று நேற்று எழுந்த வினாவுக்கு விடிந்ததும் வீட்டுக்கு வந்த செய்தித் தாள் விடை சொன்னது. நாம் தாமதித்த ஒரு சில நிமிடங்கள் ஒரு மனித உயிர் காப்பதற்கு பயன்பட்டிருக்கின்றது. இந்த நல்ல காரியத்திற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது என்றால் நாம்  ஒரு மணி நேரம் அதிகமாகக் கூட நின்றிருக்கலாம் என்று அந்தச் செய்தியைப் படித்தவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.
ஒரு மனித உயிர் காக்கப்பட வேண்டும் என்பதற்காக விமானம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டு அவசர உதவி அளிக்கப்படுகின்றது. டெல்லியில் ஒரு பெண் கற்பழிக்கப் பட்டு கோரத் தாக்குதலுக்குள்ளான போது அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பதற்காக மருத்துவ சிகிச்சைக்காக மலேஷியாவுக்கு விமானம் மூலம் அவர் அனுப்பப்பட்டார்.    இதற்காக கோடிக்கணக்கான பணத்தை மத்திய அரசு செலவழித்தது. கடைசியில் அந்தப் பெண் உயிர் பிழைக்காமல் போனார் என்பது வேறு விஷயம். ஆனால், இதற்காகச் செலவு செய்ததை யாரும் வெறுப்பாகப் பார்க்கவில்லை.  மாறாக, மனிதாபிமான முறையில், அந்தச் செயலை வாழ்த்தி வரவேற்றார்கள். ஓர் உயிருக்கு முன்னால் கோடான கோடி ரூபாயெல்லாம் ஒரு துரும்புக்குச் சமம் என்ற கண்ணோட்டத்தில் தான் இது பார்க்கப்பட்டது.
மனித உயிரின் அருமை கருதித் தான் சென்னை, கடலூர் வெள்ளத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்கள் தங்கள்  உயிர்களைப் பணயம் வைத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள். பல்லாயிரக்கான ரூபாய்கள் செலவழித்தாலும் பரவாயில்லை மனித உயிர் காக்கப்பட வேண்டும் என்ற இலட்சியம் ஒன்று மட்டும் தான் இங்கு முதன்மையாகவும், முக்கிய மாகவும் பார்க்கப்பட்டது.  ஒரு மனித உயிரைக் காப்பதற்கும், மீட்பதற்கும்  கோடான கோடி பொருளாதாரம் செலவு செய்யப்பட்டாலும் அதை ஒரு  பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. இது இந்த எடுத்துக் காட்டில் நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயமாகும்.
இரண்டாவது நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இது போன்ற பேரிடர்களில் நாம் காட்டக்கூடிய அவசரமாகும். ஒரு நிமிடம் தாமதித்தாலும், அருமையான ஒரு மனித உயிரை இழக்க நேரிடும் என்பதால் நாம் இப்படிப்பட்ட அவசரத்தைக் காட்டுகின்றோம்.
ஒருவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி! முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் சரி! அவர் அல்லாஹ் வுக்கு இணை வைத்த நிலையில் இறந்து விட்டால் அவர் நிச்சயமாக நிரந்தர நரகத்தைத் தான் அடைவார். அந்த நரகத்திலிருந்து அவர் ஒரு போதும் இவ்வுலகத்திற்குத் திரும்ப வரவே முடியாது. அப்படிப்பட்ட நரகத்திலிருந்து அவரை எப்பாடு பட்டாயினும் காப்பாற்றியாக வேண்டும்.
வெள்ள நிவாரணத்தில் நாம் காட்டிய அவசரத்தை விட அதிகமான அவசரத்தை நாம் இதில் காட்டியாக வேண்டும்.
இந்த வெள்ளப் பிரளயப் பேரிடரில் நம்முடைய  உயிரைப் பணயம் வைத்து நாம் களப் பணியாற்றினோம். நாளை மறுமை நாள் அப்படி அல்ல! இதோ அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்:
(மக்கள்) அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும். பின்வாங்கிப் புறக்கணித்த வனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும்.
அல்குர்ஆன் 44:11-18
ஆம்! அந்த உலகத்தில்  ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பணயம் வைத்து, அடுத்தவரை அந்த நரகத்திற்குப் பலி கொடுத்து விட்டு தன்னைத் தப்புவித்துக் கொள்ளவும், தன்னை தற்காத்துக் கொள்ளவும் நினைப்பான்.
மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டு வரப்பட்டு "உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகை யாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாயல்லவா?'' என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் "ஆம்' என்று பதிலளிப்பான். அப்போது "இதைவிட சுலபமான ஒன்றே (-அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)'' என்று கூறப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி வந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 6538 
அந்த நரகத்தின் கொடுமையை இதை விட வேறு வார்த்தையில் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. மழை முடிந்தது; வெள்ளமும் வடிந்தது. ஆனால் நாளை நரகம் அப்படி அல்ல!  
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனையன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காண மாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத் நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்கு மிடம் நரகம். அது தணியும்போதெல் லாம் தீயை அதிகமாக்குவோம்.
அல்குர்ஆன் 17:97
அந்த நெருப்பு அணையவே அணையாது என்று சொல்கின்றான். அது சதாவும் சாஸ்வதமாக எரிந்து கொண்டே இருக்கும். மாடி அளவு வந்த வெள்ளத்திற்கே இவ்வளவு பெரிய முயற்சி எடுத்தோமே! மலை அளவுக்கு எழுகின்ற நெருப்புக்கு எவ்வளவு முயற்சியை எடுக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இதோ அல்லாஹ் நரக நெருப்பின் பன்மடங்கு பரிமாணத்தை விவரித்துச் சொல்கின்றான்.
அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.
அல்குர்ஆன் 77:32
இணை வைத்தவர்களும் அதில் எரிந்து கொண்டே இருப்பார்கள் அதில் குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டே இருப்பார்கள்.
"எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்'' என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். "படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித் திருக்கவில்லையா? எச்சரிக்கை செய் பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவி யாளரும் இல்லை'' (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் 35:37
அந்த நரகத்தை விட்டு வெளியேற நினைத்தாலும் வெளியே வரமுடியாது.
அவர்கள் நரகிலிருந்து வெளி யேற விரும்புவார்கள். (ஆனால்) அதிலிருந்து அவர்கள் வெளியேற முடியாது. அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.
அல்குர்ஆன் 5:37
அப்படியே அவர்கள் வெளியே வந்தாலும் அவர்கள் திரும்ப அனுப்பப்படுவார்கள்.
கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! (எனக் கூறப்படும்).
அல்குர்ஆன் 22:22
வெள்ள நேரத்தில் நாம் மக்களை மீட்க  முடிந்தது. ஆனால் இணை வைத்தவர் எவரையும் அந்த உலகத்தில் மீட்கவே முடியாது.
நபி (ஸல்) அவர்களால் கூட முடியாது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால், அல்லாஹ்விடமிருந்து வரும் (வேதனை) எதிலிருந்தும் உங்களைக் காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான்  பசுமையாக்குவேன் (இந்த உலகில் உங்களுடைய உறவைப் பேணி நடந்து கொள்வேன்)'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 303
மீட்க முடியாத அந்த வேதனையிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக நபி (ஸல்) அவர்கள் கடுமையான அவசரத்தைக் காட்டியுள்ளார்கள். இதைக் கீழ்க்காணும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
எனக்கும், என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது, ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று "நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், நிர்வாணமாக (ஓடி வந்து) எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன் ஆவேன். ஆகவே, (ஓடுங்கள்;) தப்பித்துக் கொள்ளுங்கள்; தப்பித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். அப்போது ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல வெளியேறித் தப்பிவிட்டனர். ஆனால், இன்னொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர். பிறகு அதிகாலையில் அப்படை யினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர் என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: அபூமூஸல் அஷ்அரீ(ரலி) 
நூல்: முஸ்லிம் 6482
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தம்மை நிர்வாணமான  எச்சரிக்கையாளன் என்று சொல்வதன் மூலம் இந்த விஷயத்தின் விபரீதத்தையும் விவகாரத்தையும் விவரிக்கின்ற அதே வேளையில் அதற்கு அவர்கள் காட்டுகின்ற அவசரத்தையும் தெளிவாக விளக்கி விடுகின்றார்கள்.
எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதரப் பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைக் (தீயில் விழாமல்) தடுத்துக்கொண்டிருந்தார். (ஆனால்,) அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்தி-ருந்து (உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்,) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக் கிறீர்கள் என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அறிவிப்பவர்; அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 6483 
இந்த ஹதீஸ் மக்கள் எவ்வளவு விரைவாக ஷிர்க் என்னும் நரகத் தீயில் போய் சாடி, ஓடி விழுகின்றனர் என்பதையும், நாம் அதற்காகக் காட்ட வேண்டிய அவசரத்தையும், அவசியத் தையும் விளக்கி விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்து விடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து "எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப் போகின்றனர்' என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்'' என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1435
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், தமக்கும் மறுமை நாளுக்கும் இடைவெளி இல்லை என்பதைச் சொல்லி அழைப்புப் பணியின் அவசரத்தை உணர்த்துகின் றார்கள்.  நபி (ஸல்) அவர்கள் தமது காலத்திலேயே இவ்வளவு அவசரப்பட்டிருக்கின்றார்கள் என்றால் அவர்களை விட மறுமை நாளுக்கு மிக அருகில் இருக்கக் கூடிய நாம் எவ்வளவு அவசரப்பட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் நமக்கு எடுத்துச் சொல்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேர விருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டது'' என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளைய மிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் "அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமா'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்; தீமை பெருகி விட்டால்...'' என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர்: ஸைனப் பின்த்    ஜஹ்ஷ் (ரலி),
நூல்: புகாரி 3346 
நபி (ஸல்) அவர்களின் இந்தக் கருத்து, நெருங்கி வரும் மறுமை நாளை மேலும் தெளிவுபடுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்நாளில் யாரேனும் ஒருவர் நோயாளியாகி விட்டால் அவரைச் சந்தித்து, அவருக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு அறிவுரை வழங்குவார்கள். இதற்குப் பின்வரும் செய்தியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப்(ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், "என் பெரிய தந்தையே! "லா இலாஹ இல்லல்லாஹ்'- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்'' என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், "அபூதாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், "(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)'' என்று அவர்கüடம் சொன்னார். எனவே, நபி (ஸல்) அவர்கள், "நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; (அவ்விதம் பாவ மன்னிப்புக் கோரக் கூடாது என்று) எனக்குத் தடை விதிக்கப்படும் வரை'' என்று சொன்னார்கள். அப்போது தான், "இணை வைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெüவாகி விட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கை யாளர்களுக்கும் உரிமையில்லை'' என்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், "(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர் வழியில் செலுத்தி விட முடியாது'' என்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.
நூல்: புகாரி 3884
அபூதாலிப், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அது நபி (ஸல்) அவர்களைப் பெரிய அளவில் பாதித்தது. இருப்பினும், நபி (ஸல்) அவர்கள் அந்த வழிமுறையைக் கைவிடவில்லை. தன்னிடம் பணிபுரிந்த ஒரு யூதச் சிறுவன் மரணப் படுக்கையில் கிடக்கும் போது அவரிடம் போய் இஸ்லாத்தை ஏற்குமாறு அறிவுரை வழங்குகிறார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார். நபி (ஸல்) நரகத்திலிருந்து இவரை பாதுகாத்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று சொல்லி வெளியேறு கின்றார்கள் என்றால்  நரகத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றுவதற்கு எவ்வளவு ஆர்வமும் அவசரமும் காட்டியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஷிர்க்கிற்கு எதிரான பிரச்சாரத்தில் எவ்வித கால தாமதமும் இல்லாமல் தொடர்ந்து துரிதமாக தொய்வில்லாமல் கடமை ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள்  தெளிவுபடுத்துகின்றன.
இந்த அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் தனது உயிர் மூச்சுக் கொள்கையான தவ்ஹீத் பிரச்சாரத்தை வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணியைப் போன்று இடைக்காலப் பணியாக அல்லாமல், தனது முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கின்றது.
தற்போது, நம்மை இடைமறித்த வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணி போன்ற இந்த இடைக் காலப் பணிகளுக்காக நமது முழு நேரப் பணியை தள்ளிப் போடக்கூடாது என்று விளங்கிக் கொள்ளலாம்.
தீப்பற்றி எரியும் போது தீயணைப்புப் படை வரும். சுனாமி, பெருவெள்ளம் பொன்ற பேரிடர் ஏற்படும் போது இராணுவம் வரும். தீ அணைந்ததும், பேரிடர் முடிந்ததும், தீயணைப்புப் படை, இராணுவம் திரும்பப் போய் விடும். நம்முடைய ஜமாஅத்தின் பணி அது மாதிரி அல்ல!
நம்முடைய ஜமாஅத்தின் பணி இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக் களின் பணியைப் போன்றதாகும். நான் இன்ன நேரத்தில்  தான் எனது வேலையைச் செய்வேன்; இன்ன நேரத்தில் செய்ய மாட்டேன்; இன்ன நேரத்தில்  ஓய்வு எடுத்துக் கொள்வேன்; இன்ன நேரத்தில் உழைப்பேன் என்று வெள்ளை அணுக்கள் இஷ்டத்திற்கு வேலை செய்ய முடியாது. அப்படி வேலை செய்தால், உடல் தீவிர நோய்த் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழக்க நேரிடும்.
நம்முடைய ஜமாஅத்தைப் போன்று தவ்ஹீதுப் பணியை நூற்றுக்கு நூறு  தூய வடிவில் முழு நேரப் பணியாக வேறெந்த அமைப்பும் கொண்டிருக்க வில்லை. நாம் மட்டும் தான் அவ்வாறு முழு நேரப் பணியாகக் கொண்டிருக் கின்றோம். அதனால் நாம் நமது ஏகத்துவ  பயணத்தில் இப்ராஹீம் நபியின் பாதையில் வெள்ளை அணுக்கள் போன்று ஓய்வின்றி பணியாற்றுவோமாக!  
இங்கே நமக்கு ஒரு கேள்வி எழலாம்.
தவ்ஹீத் பிரச்சாரத்தை செய்து கொண்டு தானே இருக்கின்றோம். இந்த மாநாடு அப்படி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுமா? என்பது தான் அந்தக் கேள்வியாகும்.
பொதுவாக சத்தியப் பிரச்சாரம் ஒரே நாளில் வளர்ந்து விடாது. அதன் வளர்ச்சியே படிப்படியான பரிணாம வளர்ச்சி தான். நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் சரி! அதற்கு முந்தைய காலத்திலும் சரி! சத்தியத்தின் வளர்ச்சி அப்படித் தான் இருந்தது. ஆட்கள் கொஞ்சமாக இருக்கும் போது மக்களின் வரத்து அதன் பக்கம் கொஞ்சமாகவே இருக்கும். இன்னும் ஆட்கள் சேரட்டும்! அதன் பிறகு நாம் சேர்வோம் என்று ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும். மக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது மக்களின் வரத்தும் அதிகமாக இருக்கும். இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வை வைத்தே இவ்வாறு நாம் குறிப்பிடுகின்றோம்
நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்கüடம், "மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?'' என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், "அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார்'' என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், "அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)'' என்று சொன்னார்கள். மக்கா வெற்றி நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத் தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார்....
அறிவிப்பவர்: அம்ர் பின் சலிமா (ரலி)
நூல்: புகாரி 4302
அல்லாஹ்வின் அருளால், தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர வேறெந்த இஸ்லாமிய அமைப்பு நடத்துகின்ற பொதுக்கூட்டம், மாநாட்டுக்கு மக்கள் அலைகடலாகத் திரண்டு வருவதில்லை. அதிலும் குறிப்பாக, அல்லாஹ்வின் மகத்தான கருணையினால், வெள்ள நிவாரண மும், மீட்புப் பணியும் மக்களிடம் நன் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுத் தந்திருக்கின்றது.
இந்த நேரத்தில் வந்து கூடுகின்ற, குவிகின்ற மக்கள் கூட்டம், பார்க்க வந்த மக்களின் இதயங்களை நிச்சயம் ஈர்க்கும். இதற்கு முன்னால் நடந்த மாநாடுகள் அப்படிப் பலருடைய இதயங்களை ஈர்த்திருக்கின்றது.
தவ்ஹீத் கொள்கைவாதிகள் என்றால் ஊருக்கு ஒரு நான்கு பேர்கள் இருப்பார்கள் என்று எண்ணி, இதுவரை ஏகத்துவத்தின் பக்கம் வராமல் இருந்த மக்களை, இவர்கள் ஒரு பெரும் சமுதாயம் என்று ஏகத்துவத்தின் பக்கம் அவர்களின் இதயங்களை பிணைப்பதற்கு இந்த மாநாடு இன்ஷாஅல்லாஹ் வழி வகுக்கும்.
மாநாட்டுக்கு வருகின்ற பெரு வாரியான மக்கள் தொகை மட்டும் ஈர்க்கும் என்று  நினைத்து விடக்கூடாது. மாநாட்டுத் திடலில் நபிவழி அடிப்படையில் நடைபெறு கின்ற தொழுகை, ஆற்றப்படுகின்ற உரைகள், விற்கப்படுகின்ற நூல்கள், சிடிகள், விவாத சிடிகள் என்று நாம் அறியாத எத்தனையோ அம்சங்கள் ஒருவரை ஈர்த்து விடலாம். அதை அல்லாஹ்வே அறிந்தவன்.
மொத்தத்தில், இந்த மாநாடு என்பது அழைப்பு பணிக்கான ஓர் யுக்தி! மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற ஒரு வியூகம்!  வளரும் தலை முறையிடம் ஏகத்துவக் கொள்கையை விதைக்கின்ற விளை நிலம்! தமிழகத்தில் இதுவரை  தவ்ஹீத் கண்ட வளர்ச்சியின் பரிமாணம்! தவ்ஹீத் கொள்கை வாதிகளின் பழைய புதிய தலைமுறையினரின் சங்கமம்!
தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேயப் பணிகளால் ஈர்க்கப்பட்ட பிறமத சமுதாய மக்களை இந்த மாநாட்டின் மக்கள் வெள்ளம் இன்ஷாஅல்லாஹ் இஸ்லாத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும்.
இந்த மாநாடு ஏன்? எதற்கு? என்று இப்போது தெளிவாகப் புரிந்திருக்கும். இதில் பங்கேற்கவும் அதற்காகப் பணியாற்றவும் இனியும் தாமதிக்கலாமா?

EGATHUVAM JAN 2016