Mar 20, 2017

ஏகத்துவம் தொடர் 04 - கடவுளை மறுப்பவன் மூடன்

ஏகத்துவம் தொடர் 04 - கடவுளை மறுப்பவன் மூடன்
அபூராஜியா

பகுத்தறிவு என்றால் ஐந்து புலன்களால் அறியக் கூடிய செய்திகளைச் சிந்தித்து அதன் மூலம் ஒரு விஷயம் சரியா தவறா? உண்மையா பொய்யா? என்பதைத் தீர்மானிப்பதாகும். அந்த அடிப்படையில் இறைவன் இருக்கின்றானா? என்பதை அறிய இவ்வுலகின் மற்ற அம்சங்களை நாம் சிந்திக்க வேண்டும்.

இப்போது கம்ப்யூட்டரை எடுத்துக் கொள்வோம். இதை நாம் பார்க்கிறோம். இதில் வேலை செய்கின்றோம். இதன் ஆற்றலைப் பார்த்து வியக்கின்றோம். இதை ஒருவர் கண்டுபிடித்தார் என்று சொன்னதால் அதை நாம் நம்புகின்றோம். இதைக் கண்டுபிடித்தவனின் அறிவுத் திறனை மெச்சுகின்றோம். ஆனால் அதைச் செய்யும் போது நாம் பார்க்கவில்லை. ஐந்து புலன்களால் எந்தவிதத்திலும் அவருக்கும் நமக்கும் தொடர்பில்லை. ஆனாலும் இந்தப் பொருளை வைத்து அவரது ஆற்றலைத் தீர்மானிக்கின்றோம். இதைப் பகுத்தறிவுக்கு எதிரானது என்று யாரும் வாதிடுவது கிடையாது.

கண்டுபிடித்தவரைப் பார்க்காமலேயே அவரது ஆற்றலைத் தீர்மானிப்பது மூட நம்பிக்கை என்று கூறுவது கிடையாது. இன்னும் சொல்வதென்றால் இப்படி விளங்குவதற்குப் பெயர் தான் பகுத்தறிவு என்று அனைவருமே ஒப்புக் கொள்வார்கள். இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு கடவுள் இருக்கின்றானா? என்ற வாதத்துக்கு வருவோம்.

இந்த உலகில் எத்தனையோ பொருட்களை நாம் பார்க்கிறோம். வானம், பூமி மற்றும் அவற்றுக்கிடையில் கணக்கிலடங்காத அற்புதங்கள் அன்றாடம் நிகழ்கின்றன. இவை எப்படி நிகழ்கின்றன? இந்தப் பொருட்களைப் படைத்தவன் யார்? என்று நாம் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கும் போது, கம்ப்யூட்டர் என்ற ஒரு பொருளுக்குப் பின்னால் அதை உருவாக்கியவனின் ஆற்றல் தெரிவது எப்படி பகுத்தறிவுக்கு உட்பட்டதோ அதே போன்று இந்த அற்புதங்களுக்குப் பின்னால் அதைப் படைத்தவன் இருக்கின்றான் என்று நம்புவதும் பகுத்தறிவுக்கு உட்பட்டது என்பது தெளிவாகும்.

கண்ணை மூடிக் கொண்டு எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. கடவுள் இல்லை என்று வாதிடக் கூடிய கூட்டம் ஆரம்பத்திலிருந்தே இருக்கத் தான் செய்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இத்தகையவர்கள் இருந்தார்கள். இவர்களுக்குத் தான் இறைவன் தன் திருமறையில் பதிலளிக்கின்றான்.

உறுதியாக நம்புவோருக்கு பூமியிலும், உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?
(அல்குர்ஆன் 51 – 20,21)

கடவுள் இருக்கின்றான் என்பதை அறிய இந்தப் பூமி முழுவதும் ஏராளமான சான்றுகளை வைத்திருப்பதாக அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான். பூமி முழுவதிலும் உள்ள சான்றுகளை சிந்தித்துப் பார்த்தால் அவற்றிற்குப் பின்னால் ஒரு மிகப் பெரும் சக்தி இருப்பதை அறிய முடியும் என்கின்றான்.

பூமியில் மட்டுமல்ல, உன்னையே நீ சிந்தித்துப் பார் என்றும் அல்லாஹ் கூறுகின்றான். நமக்குள்ளே இருக்கும் அற்புதங்களை நாம் ஆய்வு செய்து பார்த்தாலே போதும். நிச்சயமாக இறைவன் இருக்கின்றான் என்று நம்முடைய பகுத்தறிவு எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி தீர்ப்பளித்து விடும்.

செயற்கையான பொருட்களை தானாக உருவானவை என்று சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஒரு குண்டூசியைக் கூட அதை யாரும் தயாரிக்காமல் தானாகவே உருவாகி விட்டது என்று சொன்னால் கட்டுக் கதை என்று சொல்லி விடுவோம்.

ஒரு மனிதன் தான் அணிந்துள்ள சட்டையைப் பற்றி, “திடீரென்று எனக்கருகில் பஞ்சு வந்தது. அது தானாகவே நூலாக மாறியது. பின்னர் அது துணியாக மாறி, துண்டு துண்டாகக் கிழிந்து ஒரு சட்டையாக உருவாகி விட்டதுஎன்று கூறினால் அவனை என்னவென்போம்? ‘நேற்று வரை நன்றாக இருந்தான். இன்றைக்கு இப்படிப் பேசுகின்றான். பாவம், பைத்தியம் பிடித்து விட்டதுஎன்று கூறி விடுவோம். அதாவது ஒரு பொருள் தானாக உருவானது என்று கூறுவது பகுத்தறிவுக்கு மாற்றமானது என்பதை விளங்கி வைத்துள்ளதால் இவ்வாறு கூறுகின்றோம்.

சட்டை என்பது அற்பமான ஒரு பொருள். எந்த இயக்கமோ ஆற்றலோ அறிவோ இல்லாத ஒரு பொருளைக் கூட தானாக உருவானது என்று சொல்வதை பகுத்தறிவு ஒப்புக் கொள்ள மறுக்கின்றது. அப்படியென்றால் அறிவு, ஆற்றல், இயக்கம் அனைத்தும் அடங்கிய மிகப் பெரிய அற்புதமாகத் திகழ்கின்ற மனிதன்என்ற படைப்பு தானாக உருவானது என்று கூறுவதை எவ்வாறு பகுத்தறிவு என்று வாதிட முடியும்?

 வானம், பூமி, கோள்கள் என இந்தப் பேரண்டத்திலுள்ள எண்ணிலாப் பொருட்களை யாரும் படைக்காமல் தானாக உருவானது என்று கூறுவது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று நாத்திகர்கள் கூறுவர். ஆனால் உண்மையில் கடவுளை மறுப்பவர்கள் தாம் முட்டாள்களாக இருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கின்றான் என்பதை நிரூபிப்பதற்கு, அவன் எடுத்து வைக்கும் ஏராளமான சான்றுகளில் இது ஒன்று. இந்தப் பேரண்டத்தைப் பார். இவை எப்படி இயங்குகின்றன என்று சிந்தித்துப் பார். அப்படி சிந்தித்தால் உனது பகுத்தறிவு அவற்றின் முன்னே மண்டியிடுவதை அறிய முடியும் என்று நமக்கு உணர்த்துகின்றான்.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM MAY 2003