Mar 20, 2017

திட்டாதீர்! தீய சொற்களைக் கொட்டாதீர்

திட்டாதீர்! தீய சொற்களைக் கொட்டாதீர்

ஏனடா இவ்வளவு சேட்டை செய்கின்றாய்? நீ நாசமாகப் போக மாட்டாயா? தொலைந்து போ, கொள்ளையில் போய் விடுவாய், வாந்தியில் போய் விடுவாய் இப்படி படுபாதகமான இந்த நோய்களில் அழிந்து போக வேண்டும் என்று யாரைப் பார்த்து யார் சாபமிடுகின்றார்கள் தெரியுமா? பெற்ற தாய் தான் தனது பிள்ளைகள் மீது இந்த அனல் தெறிக்கும் வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சிக்கின்றாள்.

பிள்ளை இல்லை என்று ஏங்கி ஏங்கி கண்ணீர் சொரிகின்ற தாய்மார்கள் எத்தனை பேர்கள். ஆனால் மக்கள் செல்வத்தைப் பெற்ற இந்தத் தாயோ தனது பிள்ளைகளை இப்படி திட்டித் தீர்க்கின்றாள். இது ஏதோ ஒரு தடவை, இரு தடவை என்று சொல்வதற்கில்லை எடுத்ததற்கெல்லாம் சரம் தொடுத்தாற்போல் இந்த சாபக் கேட்டைத் தரும் சாட்டைச் சொற்களை மழையெனப் பொழிகின்றாள்.

தாயை மட்டும் இங்கு குறிப்பிடுவதால் தந்தை இதிலிருந்து விதிவிலக்கு பெற்றவர் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. அவரும் தன் துணைவியாருக்குத் தக்க சேர்ந்திசை பாடுவதில் சளைத்தவரல்ல. சகட்டு மேனிக்கு அவரும் சரளமாக அளந்து விடுகின்றார். அதிலும் ஆபாச வார்த்தைகளை அள்ளித் தெளிப்பதில் அவரை மிஞ்சியவர் எவருமில்லை என்று சொல்லலாம்.

வேசி மகன் என்ற பொருட்களைத் தரும் தே…..மகனேவார்த்தையை தாயும் தந்தையும் சேர்ந்தே தன் பிள்ளைகளை நோக்கிக் கூறுகின்றார்கள். ஒரு தாய் தன் பிள்ளையை நோக்கி இவ்வாறு கூறும் போது அதன் பொருள் என்ன? உன்னை நான் ஈன்றெடுத்தது நேர்வழியில் அல்ல என்று தன் பிள்ளையிடமே தாய் வாக்குமூலம் அளிக்கின்றாள் என்று தானே இதற்குப் பொருள்? இந்த வார்த்தைகளை தகப்பனும் சொல்லி பக்கப் பாட்டு பாடுகின்றார் என்றால் அவர் அதற்கு சாட்சி என்று தான் பொருள்.

தகப்பனார் தன் மகனைப் பார்த்து, ‘தா……..ழிஎன்றும் ஒக்……..ழிஎன்றும் தாயுடன் சகோதரியுடன் விபச்சாரம் செய்என்ற பொருளைத் தரக் கூடிய, எழுதுவதற்குக் கூசுகின்ற விஷம் தோய்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது தான் இதில் வேதனைக்குரிய விஷயம். இது முஸ்லிம்களிடம் அன்றாடம் காணப்படும் அவமான நிகழ்வுகளாகும்.

பெற்ற மகனிடமே பெற்றோர் இப்படிப் பேசுகின்ற பேச்சுக்கள் தீய பாதிப்புகளை ஏற்படுத்தி அவை தீப்பதிப்புகளாக அக்குழந்தைகளின் தூய உள்ளங்களில் பதிந்து விடுகின்றன்.

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள். அது வெட்கக் கேடானதாகவும் தீய வழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் 17 - 32) என்று அல்லாஹ் கூறுகின்ற இந்தத் தீமையை தகப்பனே தன் பிள்ளைகளிடத்தில் மட்டப்படுத்தி மலிவாகக் காட்டுகின்றார்.

அல்லாஹ் தடுத்திருக்கும் ஒரு மிகப் பெரும் தீமையை சர்வ சாதாரணமாக தாயிடமும், சகோதரியிடமும் செய் என்று சொல்வது கொடுமையிலும் கொடுமையாகும். அல்லாஹ்வின் சட்டத்தை மிகத் துச்சமாக மதிப்பாகும். அல்லாஹ்வின் தடைகளைக் கேலிக் கூத்தாக்கி, அதை மீறுகின்ற இந்தக் கேடு கெட்ட போக்கு, வார்த்தை அளவில் கூட வாயில் வரக்கூடாது.

இவ்வாறு திட்டுவது பிள்ளைகளின் உள்ளங்களில் உளவியல் ரீதியாக ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மேலும் இப்படிப் பேசுவோரின் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளிடம் பேசும் போது இத்தகைய வார்த்தைகளைக் கூச்ச நாச்சமின்றி சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். புற்று நோயான இது தொற்று நோயாக சமுதாயம் முழுவதும் பரவி தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.

எனவே இத்தகைய ஒரு தீய பாதிப்பை பிள்ளைகளின் உள்ளங்களில் ஏற்படுத்தியதற்காகவும் அந்தத் தீமைகளைப் பரவ விட்டதற்காகவும் அதாவது யார் யாரெல்லாம் இந்தத் தீய வார்த்தைகளைச் சொல்கின்றார்களோ அவற்றிற்குரிய பாவங்களையும் சேர்த்து இந்தத் தாய் தந்தையர் சுமக்க நேரிடும். அல்லாஹ் காப்பானாக.

ஆபாச வார்த்தைகளால் ஏற்படும் தீய விளைவுகளைக் கண்டோம். இப்போது, நாசமாகப் போ என்பது போன்ற வார்த்தைகளைக் கொண்டு திட்டுவதால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பார்ப்போம்.

நீங்கள் உங்களுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய குழந்தைகளுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய பணியாளர்களுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். உங்களுடைய பொருளாதாரங்களுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் (பிரார்த்தனை) ஒப்புக் கொள்ளப்படும் நேரம் ஒன்று உள்ளது. அவ்வாறு ஒப்புக் கொள்ளப்படும் நேரத்தில் நீங்கள் ஏதுவாகப் பிரார்த்தித்து, அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளக் காரணமாகி விடாதீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி),
நூல் அபூதாவூத் 1309

இதே கருத்தைத் தாங்கிய ஹதீஸ் முஸ்லிமிலும் 5328 என்ற எண்ணைக் கொண்ட ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.

இந்தச் சமுதாயத்தின் மீது கருணை கொண்ட நபி (ஸல்) அவர்கள் எப்படியெல்லாம் நாம் நாசத்தில் விழுந்து விடாது காக்கின்றார்கள் என்று பாருங்கள்.

அல்லாஹ் இன்னும் என்னைச் சாகடிக்காமல் வைத்திருக்கின்றான் என்பது போன்ற படு மோசமான வார்த்தைகளைக் கொண்டு நம்மீது நாம் சலிப்படைகின்றோம். இது போல் பிள்ளைகளைப் பார்த்து, நம்மிடம் பணிபுரியும் பணியாளர்களைப் பார்த்து தொலைந்து போஎன்று திட்டித் தீர்க்கிறோம். பாழாய்ப் போன வயல் விளைச்சலைத் தரவில்லை என்று அல்லாஹ் தந்த சொத்துக்களை நம்முடைய தீய வார்த்தைகளால் சுட்டுப் பொசுக்குகின்றோம். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இது போன்று திட்டாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.

இன்று தமது பிள்ளைகளைத் திட்டித் தீர்ப்பது போல் பணியாட்கள் மீதும் சுடு சொற்களைச் சொல்லி சுட்டுத் தீர்ப்பதைப் பார்க்கிறோம்.

நான் அபூதர் (ரலி)யை ரபதா என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மேல் ஒரு ஜோடி ஆடையும் அவருடைய அடிமையும் மேல் (அதைப் போன்ற) ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியத்துடன்) அதைப் பற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்.

நான் ஒரு மனிதரை ஏசி விட்டு, அவரது தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள், “அபூதரே, அவரையும் அவரது தாயையும் சேர்த்துக் குறை கூறிவிட்டீரே. நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடிகொண்டிருக்கும் மனிதராகவே இருக்கின்றீர். உங்கள் அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கின்றான். எனவே ஒருவருடைய சகோதரர் அவரது அதிகாரத்தின் கீழ் இருப்பாரேயானால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் உண்ணக் கொடுக்கட்டும். தாம் உடுப்பதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரம்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்என்று கூறினார்கள். இதனால் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடையளித்தேன்.

அறிவிப்பவர் மஃரூர்,
நூல் புகாரி 30

தாய் பெயரைச் சொல்லி, தந்தை பெயரைச் சொல்லி திட்டி பழகிக் கொண்டோருக்கு இதில் உரிய பாடம் அமைந்திருக்கின்றது. அவ்வாறு திட்டினால் உன்னிடம் இஸ்லாம் இல்லை. அறியாமைக் காலம் தான் உன்னிடம் குடி கொண்டிருக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

சுடுசொல் சொல்லாத தூதரும் தோழர்களும்

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகளுக்குப் சேவகம் புரிந்தேன். அவர்கள், “சீஎன்றோ ஏன் (இப்படிச்) செய்தாய்?” என்றோ நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?” என்றோ கூறியதில்லை.

அறிவிப்பவர் அனஸ் (ரலி),
நூல் புகாரி 6038

பணியாளரிடத்தில் பத்தாண்டுகளாக சீஎன்ற வார்த்தையைக் கூட அவர்கள் சொன்னதில்லை. அவர்களிடம் பாடம் பயின்ற தோழர்களும் தங்கள் வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்தார்கள்.

உஹதுப் போர் நடந்த போது இணை வைப்பவர்கள் தோற்கடிக்கப் பட்டார்கள். உடனே இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே, உங்களுக்குப் பின்னால் பாருங்கள்என்று கத்தினான். முஸ்லிம்களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று தமது பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள். அப்போது அங்கு தமக்கருகேயிருந்த தம் தந்தை யமான் (ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்து விட்டு, “அல்லாஹ்வின் அடியார்களே, இது என் தந்தை, இது என் தந்தைஎன்று கூறினார்கள். ஆனால் அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் அவரை விட்டு வைக்கவில்லை. இறுதியில் அவரைக் கொன்று விட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாகஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி),
நூல் புகாரி 3290

தந்தை கொல்லப்பட்ட அந்தச் சோதனையான கட்டத்தில் மகனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹுதைஃபா (ரலி) யிடம் முன் மாதிரியாக நின்று பொன்னாக மிளிர்கின்றார்கள். இதுபோல் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்மிடமும் முன்மாதிரியாக மின்னிடும் வகையில் நமது வாழ்க்கையை அமைப்போம்.

EGATHUVAM MAY 20003